மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கிழக்கு ஐரோப்பாவிற்கு 8,500 துருப்புக்களை அனுப்புவதற்கான மிகவும் ஆத்திரமூட்டும் முடிவை அமெரிக்கா அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், அது உக்ரேனுக்கு சுமார் 300 டாங்கி-எதிர்ப்பு ஜவெலின் (javelin) ஏவுகணைகள் ஒவ்வொன்றும் 600,000 முதல் 1.4 மில்லியன் டாலர்கள் மதிப்புடையது, அத்துடன் தோளில் இருந்து ஏவப்படும் தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் பதுங்கு குழிகளை உடைக்கும் ஆயுதங்களும் அனுப்பப்பட்டன.
உக்ரேனில் உள்ள உயர்மட்ட அமெரிக்க தூதர் கிறிஸ்டினா ஏ. கெவியென், வழங்கப்பட்ட ஆயுதங்களுக்கு அருகில் நின்று தோற்றமளித்தபோது, உக்ரேனிய துருப்புக்கள் 'நன்கு ஆயுதபாணியாக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன' என்று கூறினார். ரஷ்யாவிற்கு ஒரு எச்சரிக்கையாக, போர் ஏற்பட்டால் 'ரஷ்யா கடுமையான உயிரிழப்புகளை எதிர்பார்க்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்த நடவடிக்கைகளை கண்டனம் செய்தார்: 'அமெரிக்கா பதட்டங்களை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் இந்தச் செயல்களை ஆழ்ந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” திங்களன்று, ரஷ்யாவின் முன்னணி வணிகச் நாளிதழான கொம்மர்சன்ட் “போருக்கு முந்தைய நிலைமை” பற்றி வெளிப்படையாகப் பேசியது.
செவ்வாயன்று ரஷ்யா, உயர்மட்ட பராட்ரூப்பர் (paratrooper) பிரிவுகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை உள்ளடக்கிய தொடர்ச்சியான இராணுவ பயிற்சிகளை நடத்தியது.
சைபீரியா, தூர கிழக்கு பகுதி, பால்டிக் கடல், உக்ரேனுக்கு அருகில் மற்றும் கருங்கடலில் உள்ள தீபகற்பமான கிரிமியா உள்ளிட்ட ரஷ்யாவின் பரந்த எல்லைப் பகுதியில் பயிற்சிகள் நடத்தப்பட்டன. மேலும், பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும் கூட்டு இராணுவப் பயிற்சிகளையும் ரஷ்யா பெலாரூஸூடன் சேர்ந்து தொடங்கியுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, 8,500 அமெரிக்க துருப்புக்கள் 82வது மற்றும் 101வது பராட்ரூப்பர் பிரிவுகளின் சில உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்கும், மேலும் மேலும் சேர்க்கப்படலாம். இந்த பிராந்தியத்திற்கு 50,000 துருப்புக்களை அனுப்புவது குறித்து வெள்ளை மாளிகை ஏற்கனவே விவாதித்துள்ளது.
உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அமெரிக்கா அனுப்பாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடென் செவ்வாய்கிழமை தெரிவித்தார். அதே நேரத்தில், பிரெஞ்சு, ஜேர்மன், ரஷ்ய மற்றும் உக்ரேனிய அரசாங்கங்களின் பிரதிநிதிகள் பாரிஸில் 'நோர்மண்டி வடிவத்தில்' பேச்சுவார்த்தைகளுக்காக சந்தித்தனர் - பெரும்பாலான ரஷ்ய ஊடகங்களால் அர்த்தமற்றதாக நிராகரிக்கப்பட்ட இராஜதந்திர தீர்வுக்கான அரை மனதுடனான கடைசி முயற்சியாகும்.
அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே கடுமையான பதட்டங்களை சுட்டிக்காட்டும் பல அறிக்கைகளைத் தொடர்ந்து, குறிப்பாக அமெரிக்க ஊடகங்கள் பைடென் நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ 'ஐக்கிய முன்னணியை' கட்டியெழுப்ப தனது ஆற்றலின் பெரும்பகுதியை செலவழிப்பதைப் பற்றி பேசுகிறது. Nord Stream 2 எரிவாயு குழாய் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அமெரிக்க முயற்சிகளை ஜேர்மன் அரசாங்கம் இதுவரை நிராகரித்துள்ளது. ஐரோப்பாவின் எரிவாயுவில் 40 சதவீதத்தை ரஷ்யா வழங்குகிறது, மேலும் போர் அச்சம் காரணமாக சமீபத்திய நாட்களில் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவால் அச்சுறுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகள் ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும், ஏனெனில் அது அமெரிக்கப் பொருளாதாரத்தை விட ரஷ்யப் பொருளாதாரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. SWIFT மற்றும் Nord Stream-2 க்கு எதிரான இரண்டு தடைகளையும் தற்போதைக்கு ஒதுக்கி வைத்து, வெள்ளை மாளிகை இந்த வாரம் ரஷ்யாவிற்கு எதிராக “முன்நிகழ்ந்திராத வகையிலான ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை” எடுக்க தயார் செய்வதாக அறிவித்தது.
திங்கள் மாலை ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகளுடனான ஒரு நீண்ட சந்திப்பின் போது, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் ரஷ்யாவிற்கு 'பாரிய விளைவுகள் மற்றும் அதிக பொருளாதார செலவுகளுக்கான தயாரிப்புகள்' மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ துருப்புக்களை மேலும் வலுப்படுத்துவது பற்றி விவாதித்தார். கூட்டத்திற்குப் பின்னர், பால்டிக் கடலுக்கு ஒரு போர்க் கப்பலையும், லித்துவேனியாவுக்கு நான்கு F-16 போர் விமானங்களையும் அனுப்புவதாக டென்மார்க் அறிவித்தது. ஸ்பெயின் மத்தியதரைக் கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளுக்கு போர்க்கப்பல்களை அனுப்புகிறது, கருங்கடல் மற்றும் உக்ரேன் எல்லையில் உள்ள நேட்டோ அங்கத்துவ நாடான ருமேனியாவிற்கு துருப்புக்களை அனுப்ப பிரெஞ்சு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கு மேலும் 1.3 பில்லியன் டாலர்கள் நிதியுதவியை அறிவித்தது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்களில் அதிகம் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் அரசாங்கம், உக்ரேனுக்கு அதன் கடற்படையை நவீனப்படுத்த 1.5 பில்லியன் டாலர்கள் கடன் வழங்குகிறது.
உக்ரேனில் போருக்கான தயாரிப்புகள் நன்கு முன்னேறியுள்ளன. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்களன்று அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். போர் நெருக்கடி தொடர்பில் அரசாங்கத்திற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் மூடிய கதவு சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கியேவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ ஜனவரி 28 அன்று உக்ரேனிய மேயர்களின் மாநாட்டை அறிவித்து, போரின் போது உக்ரேனிய நகரங்களின் 'பிராந்தியப் பாதுகாப்பு' பற்றி விவாதித்தார்.
அமெரிக்க தூதரகம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஆகியவை கியேவில் இருந்து குறைந்தது சில தூதரக பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெளியேற்றுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. லுஃப்தான்சா உட்பட பல முக்கிய விமான நிறுவனங்கள், எந்த நேரத்திலும் ஒரு இராணுவ மோதல் வெடிக்கலாம் என்று நம்புகின்றன, எனவே கியேவுக்கு இரவு நேர விமானங்களை நிறுத்திவிட்டன.
ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கடந்த வாரம் மாஸ்கோ சிந்தனைக் குழுவான Valdai Club இல் ஆற்றிய உரையில் ஐரோப்பிய பாதுகாப்பு நிலைமை இப்போது 'முக்கியமானது' எனக் கூறினார். டிசம்பரில் நேட்டோவிடம் ரஷ்யா எழுத்துபூர்வமாக சமர்ப்பித்த மிக முக்கியமான கோரிக்கைகளையும் அவர் பெயரிட்டார்: நேட்டோவை விரிவுபடுத்தக் கூடாது என்ற உத்தியோகபூர்வ உத்தரவாதங்கள், 1997 எல்லைகளுக்கு நேட்டோ திரும்புதல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணைகளை நிறுத்த தடை.
ரியாப்கோவ் அறிவித்தார்: “எப்போதைக்கும் காத்திருக்க நாங்கள் தயாராக இல்லை. சிறந்த வடிவமைப்பைக் கண்டறிவதற்கான வழக்கமான இராஜதந்திர மற்றும் அதிகாரத்துவ செயல்முறைக்குள் நம்மை இழுக்க அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களுக்கு நேரடியான மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய பதில் தேவை, அது எழுத்துபூர்வமாக இருக்க வேண்டும்.
நேட்டோவும் அமெரிக்காவும் புதன்கிழமை ரஷ்யாவின் கோரிக்கைகளுக்கு தங்கள் பதிலைச் சமர்ப்பித்தன. பிளிங்கென் மற்றும் நேட்டோ பொதுச்செயலர் Jens Stoltenberg தங்களின் அறிக்கைகளில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை, மாஸ்கோவின் முழுமையான சரணடைதலுக்குக் குறைவான எதையும் கோரவில்லை என தெரிவித்தனர், இது போரின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது.
ரஷ்யாவின் முன்னணி வெளியுறவுக் கொள்கை சிந்தனைக் குழு பத்திரிகையான Russia in Global Affairs க்கு அளித்த பேட்டியில், ரஷ்யாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை கவுன்சிலின் நிலைக் குழுவின் கௌரவத் தலைவரான சேர்ஜி கரகனோவ், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்காமலிருக்க உத்தரவாதம் அளிக்காமலும் மற்றும் அவற்றை சுமத்தும் பட்சத்திலும், அதற்கு கிரெம்ளின் கடுமையாக பதிலளிக்கும் என்று எச்சரித்தார்.
“அமெரிக்காவின் நம்பகத்தன்மையை மிகவும் கடினமான முறையில் அச்சுறுத்தக்கூடிய ஆயுத அமைப்புக்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றுதான் என்னால் சொல்ல முடியும்,” என்று Russia in Global Affairs இடம் கரகனோவ் தெரிவித்தார். மேலும், “வாஷிங்டனுக்கு உண்மையான கனவாக மாறக்கூடிய சீனாவுடனான [எங்கள்] இராணுவ-அரசியல் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது போன்ற ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன”. அமெரிக்கர்கள் நம்மை 'பேரழிவு தரும்' பொருளாதாரத் தடைகள் மூலம் அச்சுறுத்தும் போது, அது போர்ப் பிரகடனத்திற்கு சமம், ரஷ்யாவும் சீனாவும் மேற்கத்திய பொருளாதாரத்தையும் சமூகத்தையும் சைபர் போர் போன்ற [வழிமுறைகள் மூலம்] அழிக்கும் திறனைக் கொண்டுள்ளன என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பாவில் இப்போது வெளிப்படும் ஆபத்தான போர் நெருக்கடியானது பல தசாப்தங்களாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகள் மற்றும் ஆத்திரமூட்டல்களின் விளைவாகும். 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்புக்குப் பின்னர், நேட்டோ ரஷ்யாவின் எல்லைகளுக்கு நெருக்கமாக நகர்ந்துள்ளது. இது 'யூரேசிய நிலப்பரப்பு', அதாவது ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க உத்தியின் ஒரு பகுதியாகும். 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில், உக்ரேனிய தன்னலக்குழுவின் மேற்கத்திய சார்பு பிரதிநிதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரேனில் சதிகளை ஏற்பாடு செய்தன.
2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலிருந்து, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் அடுத்தடுத்த ஆத்திரமூட்டலுக்கான கருவியாக கியேவ் இருந்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யா மீது இராணுவ அழுத்தத்தை அதிகரித்து இராணுவ விரிவாக்கத்திற்கான நிலைமைகளை வேண்டுமென்றே உருவாக்கியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள மருத்துவமனைகள் மூழ்கிப்போன நிலையில் கோவிட்-19 நோயால் தினமும் ஆயிரக்கணக்கானோர் மடிகின்ற நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும் மிகக் கொடிய இராணுவ மோதலுக்கு தயாரிப்பு செய்வதில் பெரும் சமூக வளங்களை வீணடித்து வருகின்றன. இந்த பகுத்தறிவற்ற கொள்கைகளுக்கான ஒரு மைய நோக்கம், அவர்களின் சொந்த நாடுகளில் வர்க்க பதட்டங்களின் வெடிக்கும் வளர்ச்சியில் இருந்து திசைதிருப்புவதற்கான அவநம்பிக்கையான முயற்சியாகும்.
2014ல் இருந்து கிழக்கு உக்ரேனில் உள்நாட்டுப் போரில் முக்கிய பங்கு வகித்த கியேவ் ஆட்சி மற்றும் பாசிச சக்திகளுக்கு ஏற்கனவே பில்லியன் கணக்கான டாலர்கள் நிதியளிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய துருப்புக்கள் -சில நேரங்களில் முழுப் பிரிவுகளும்- அவர்கள் சண்டையிட விரும்பாததால், முன் வரிசையை விட்டு வெளியேறினர். உக்ரேனிய தேசிய பாதுகாப்புப் படையில் உத்தியோகபூர்வ அங்கமான பாசிச அசோவ் படைக்கு பீரங்கிகள் மற்றும் பிற நவீன ஆயுதங்களுக்கு நிதியளிக்க அமெரிக்கப் பணம் பயன்படுத்தப்பட்டது.
அசோவ் படையும் மற்ற தீவிர வலதுசாரி துணை இராணுவக் குழுக்களும் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் படுகொலைகள், மற்றும் பிற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளன. உக்ரேனில் டஜன் கணக்கான முகாம்களை நடத்த அதிகாரிகள் அனுமதிக்கின்றனர், அங்கு குழந்தைகள் -சில ஒன்பது வயதுக்குட்பட்டவர்கள்- ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி பெறுவதோடு, உக்ரேனிய தேசியவாதம் மற்றும் பாசிச சித்தாந்தத்தில் கற்பிக்கப்படுகிறார்கள்.
இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட முக்கிய இடங்களில் ஒன்றான உக்ரைனுக்கு இஸ்ரேலிய அரசும் பல ஆண்டுகளாக ஆயுதங்களை அனுப்பி வருவதாக ஹாரெட்ஸ் செய்தித்தாள் திங்களன்று தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி சியோனிசத்தின் வர்க்கத் தன்மையை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான ஒரு போரில், ஏகாதிபத்திய சக்திகளும் உக்ரேனிய அரசாங்கமும் முக்கியமாக இந்த நவ-பாசிச சக்திகளை நம்பியுள்ளனர். ஐரோப்பாவிலும் உலகிலும் தொழிலாள வர்க்கத்திற்கு இத்தகைய மோதலின் விளைவுகள் பேரழிவுகரமானவை. ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீட்டின் மூலம் மட்டுமே அத்தகைய போரைத் தடுக்க முடியும்.