மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
செவ்வாய்கிழமை ஒரு பெடரல் நீதிபதி, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் தடுப்பதற்காக அரசின் சட்டரீதியான நிர்பந்தங்களின் சமீபத்திய பிரயோகமாக கொண்டு வரப்பட்ட ஒரு புதிய வருகைப்பதிவு கொள்கையை எதிர்த்து 17,000 BNSF இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும் ஒரு தீர்ப்பை வழங்கினார்.
அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு “மனித உரிமைகள்' மற்றும் 'ஜனநாயக' மீறல்கள் குறித்து உபதேசம் செய்வதில் ஒருபோதும் ஓய்வதில்லை என்கின்ற அதேவேளையில், தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமை மற்றும் பாதுகாப்பான ஆரோக்கியமான வேலையிட சூழலுக்கான அவர்களின் உரிமை உட்பட தொழிலாளர்களின் உரிமைகளை அமெரிக்க அரசு மிதித்து நசுக்குகிறது. அமெரிக்காவில் எல்லா சமூக முடிவுகளும் எந்தளவுக்கு செல்வவளம் மிக்க ஒரு சிறிய சிறுபான்மையினரின் இலாப நலன்களுக்கு அடிபணிய செய்யப்படுகிறதோ அந்தளவுக்கு அது ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்குப் பொருத்தமற்றதாக ஆகிறது.
அமெரிக்காவின் மிகப் பெரிய சரக்கு போக்குவரத்து இரயில்வேத்துறையான BNSF இன் தொழிலாளர்கள், பெப்ரவரி 1 இல் இருந்து நடைமுறைக்கு வரவிருக்கும், புள்ளிகள் அடிப்படையிலான புதிய வருகைப்பதிவு முறையை நிர்வாகம் தன்னிச்சையாக திணிப்பதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய அண்மித்து ஒருமனதாக வாக்களித்திருந்தனர். உத்தியோகபூர்வமாக Burlington Northern Santa Fe என்றறியப்படும் BNSF, முழுமையாக பில்லியனர் வாரென் பஃபெட்டின் பெர்க்ஷேர் ஹேத்வேக்குச் சொந்தமாக ஒரு துணை நிறுவனமாகும்.
அந்த இரயில்வே தொழிலாளர்கள் கடுமையான வேலை நேரத்தை முகங்கொடுப்பதுடன், பணிமுறைகளுக்கு இடையில் உள்ள மிகக் குறைந்த கால அவகாசம் மற்றும் நிரந்தரமான நிச்சயமற்றத்தன்மை ஆகியவை இதை இன்னும் மோசமாக்கி, பின்னர் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நேத்தைச் செலவிடவோ அல்லது மருத்துவர்களைக் கண்டு வரவோ கூட நேரம் ஒதுக்க முடியாமல் செய்து விடுகிறது. இந்த பெருந்தொற்றின் கீழ் மோசமடைந்துள்ள இத்தகைய நிலைமைகள், தொழிலாளர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்தமாக அவர்களின் சமூகங்களுக்கும் அபாயகரமான பாதுகாப்பு சூழலை உருவாக்கி வருகின்றன.
இந்த புதிய முறை, நடைமுறைப்படுத்தப்பட்டால், தொழிலாளர்களை அது இன்னும் நெருக்கமாக நிர்வாகத்தின் இறுக்கிப்பிடியில் பிணைக்கும், அது வேலையிடத்திற்கு வெளியே வாழ்க்கையே இல்லை என்றளவுக்கு அவர்களைத் தொழில்துறை அடிமைகள் மட்டத்திற்குக் கீழிறக்கும். வேலைக்கு வராத ஒரு சில நாட்களை ஒன்றுதிரட்டி, பல ஆண்டுகள் பணியாற்றி உள்ள பணியாளர்கள் புதிய விதிமுறைகளின் கீழ் பணிநீக்கம் செய்யப்படுவதை முகங்கொடுப்பார்கள்.
ஆனால் அவரின் நான்கு பக்கம் எழுதப்பட்ட அறிக்கையில், வடக்கு டெக்சாஸ் மாவட்டத்தின் அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி மார்க் பிட்மன் ஒரு வேலைநிறுத்தத்திற்கு எதிராக தற்காலிக தடை உத்தரவைப் பிறப்பித்தார். புள்ளிகள் அடிப்படையிலான இந்த புதிய முறை வெறுமனே ஒரு 'சிறிய பிரச்சினை' தான் என்றும், இது சம்பந்தமாக இரயில் பாதை மற்றும் விமானச் சேவை தொழில்துறைகளில் வேலைநிறுத்தங்களைக் கூட்டாட்சி சட்டம் தடை விதிக்கிறது என்ற நிறுவனத்தின் வாதத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.
பிட்மனின் தீர்ப்பு ஒரு சட்டப்பூர்வமான அல்லது வரையறைகளின்படி வழங்கப்பட்டதில்லை, இது அரசியல்ரீதியில் உள்நோக்கம் கொண்ட ஒரு முடிவாகும். அதில் அவர் அறிவிக்கையில், “ஒரு வேலைநிறுத்தம் இப்போதைய நம் வினியோக-சங்கிலி நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் — அது வெறுமனே BNSF ஐ மட்டுமல்ல பொதுமக்களையும் பாதிக்கும் என்பதையே முன்வரலாறு கூடுதலாக எடுத்துக்காட்டுகிறது. ஆகவே ஒரு தற்காலிக தடை உத்தரவு மோசமானதில்லை, மாறாக மக்கள் நலனுக்கு சேவையாற்றும்,” என்றார். உண்மையில் 'மக்கள் நலன்' என்பது ஒரு சிறிய பெருநிறுவன உயரடுக்கின் நலன்களையே அர்த்தப்படுத்துகிறது.
இந்த புதிய முறை மீதான பிரச்சினை தொழிலாளர்களுக்கு 'சிறிய' பிரச்சினையில்லை. அது அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரங்களையும் பாதிக்கும். இப்போதிருக்கும் முறையிலேயே கூட, தொழிலாளர்களால் அவர்களின் குடும்பங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை, அவர்களின் ஒட்டுமொத்த உயிர்பிழைப்பும் நிர்வாகத்தின் இறுக்கிப்பிடிக்கு அடிபணியச் செய்யப்படுகிறது.
முதலாளித்துவ வர்க்கத்திற்கு வருகைப்பதிவு என்பது 'சிறிய' பிரச்சினை அல்ல. உலகளாவிய வினியோக சங்கிலி பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்க வாகனத் தொழில்துறை, வெறும் ஐந்து நாட்களுக்கான முக்கிய மைக்ரோசிப்களை மட்டுமே கையிருப்பில் வைத்துள்ளது, கிழக்கு ஆசியாவிலிருந்து வரும் இத்தகைய உதிரிப்பாகங்களின் வருகையில் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், அவற்றை அமெரிக்க ஆலைகளுக்கு அனுப்புவதில் சரக்கு கையாளும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அல்லது உற்பத்தி மூடல்கள் ஏற்பட்டால், அது நாடெங்கிலும் உற்பத்தியை நிறுத்திவிடும். தோற்றப்பாட்டளவில் மற்ற ஒவ்வொரு தொழில்துறையிலும் இம்மாதிரியான நிலைமைகளே நிலவுகின்றன.
பங்குச் சந்தையைப் பாரியளவில் அதிகரிப்பதற்குத் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பிலிருந்து இலாபங்களைத் தொடர்ந்து வர வைத்துக் கொண்டே இருப்பது தான் பெருநிறுவன உயரடுக்கின் பிரச்சினையாகும். “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' படுபாதக மூலோபாயத்தின் கீழ் பரவ அனுமதிக்கப்பட்டுள்ள இந்த பெருந்தொற்றை, அவை தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொள்ளவும் மற்றும் இன்னும் மேற்கொண்டு தொழிலாளர்களைச் சுரண்டவும் மிகப் பெரியளவில் பயன்படுத்தி உள்ளன.
இந்த பெருந்தொற்றின் போது பெடரல் நெறிமுறைகள் தளர்த்தப்பட்டதில் இருந்து, BNSF அதுவே கூட, இரயில்களின் நீளத்தை அதிகரித்தும் மற்றும் அவற்றில் பணியாற்றும் பொறியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தும், ஆதாயமடைந்துள்ளது. இதற்கிடையே, வலையமைப்பில் எந்தவொரு கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏறக்குறைய முற்றிலும் இல்லாமல் இருப்பது என்பது அதன் இரயில்கள் நாடெங்கிலும் சரக்குகளை மட்டுமே வினியோகிக்கின்றன என்றில்லாமல், மாறாக உயிராபத்தான வைரஸ்களையும் வினியோகிக்கின்றன என்பதையே அர்த்தப்படுத்துகிறது.
அமெரிக்க முதலாளித்துவம், இத்தகைய உள்நோக்கங்களுடன், அதன் முக்கிய விரோதிகளான ரஷ்யா மற்றும் சீனாவுடன் புதிய பேரழிவுகரமான போர்களுக்கான தயாரிப்புகளையும் இணைத்துள்ளது. வர்த்தகத் துறை செயலர் ஜினா ரைய்மொன்டொ கூறுகையில் இந்த மைக்ரோசிப் பற்றாக்குறையைத் தீர்ப்பது ஒரு 'தேசிய பாதுகாப்பு நிர்பந்தம்' என்றார். இது அமெரிக்க தொழில்துறை சீன வினியோகஸ்தர்களைச் சார்ந்திருப்பதைக் குறித்த ஒரு குறிப்பாகும், சீனாவில் குறிப்பிட்ட இடங்களில் சமூக அடைப்புகள் மற்றும் நோயின் தடம் அறிதல் போன்ற உடனடியான பொது சுகாதார நடவடிக்கைகள் மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றி உள்ளன ஆனால் இவை சகிக்கவியலாதவையாக கருதப்படுகின்றன ஏனென்றால் இவை அமெரிக்க உற்பத்தியின் அடிமடியைப் பாதித்துள்ளன, இங்கே அந்த நடவடிக்கைகளுக்கு நிகரான நடவடிக்கைகள் ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பெருந்தொற்றின் ஆரம்ப மாதங்களில், ட்ரம்ப் இறைச்சிப் பதப்படுத்தும் ஆலைகளைத் திறந்து வைக்க உத்தரவிடுவதற்குப் பனிப்போர் காலத்திய சட்டமான பாதுகாப்புக்கான உற்பத்தி சட்டத்தைக் கையிலெடுத்தார், அந்த ஆலைகளில் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நோய்தொற்றுக்கு உள்ளானதுடன், சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிர்வாக ஆணை பைடென் பதவியேற்றதற்குப் பின்னரும் நடைமுறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில், இவர் தெற்கு கலிபோர்னியாவில் துறைமுகங்களைச் செயல்பாட்டில் வைக்க தேசிய பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்த அச்சுறுத்தியதுடன், அவற்றை 24/7 மணி நேரமும் செயல்பாட்டில் வைக்க தொழில்துறை நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஓர் உடன்பாட்டை பேசி முடித்தார்.
அதே நேரத்தில், பெருநிறுவனங்களோ தொழிலாளர்களின் எதிர்ப்பை முறிக்க 1980 களின் வேலைநிறுத்த உடைப்பு அணுகுமுறைகளை மீட்டமைத்து வருகின்றன. கெல்லாக்'ஸ் மற்றும் பல கிளைகளைக் கொண்ட மளிகை அங்காடியான கிங் ஸ்கூப்பர்ஸ் ஆகியவற்றில் நடந்த சமீபத்திய வேலைநிறுத்தங்களில் மறியல் செய்வதற்கு எதிராக நிறுவனங்களால் தடை ஆணை பெறப்பட்டது. கெல்லாக்'ஸ் நிர்வாகம் ஒரு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர கும்பலாக அதன் தானியப் பிரிவின் ஒட்டுமொத்த தொழிலாளர் சக்தியையும் வேலையிலிருந்து நீக்கி வேறு நபர்களைக் கொண்டு பிரதியீடு செய்ய பகிரங்கமாக அச்சுறுத்தியது, ஆனால் ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை முன்நகர்த்த BCTGM சங்கம் சூழ்ச்சி செய்ததனால் அவர்கள் அதை செய்யவில்லை.
பள்ளிகளை மீண்டும் திறப்பதை எதிர்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்புக்கு இரண்டு பிரதான கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சி மற்றும் மாநில அரசாங்கங்கள் ஆக்ரோஷமாக விடையிறுத்து வருகின்றன. சிகாகோவில், ஜனநாயகக் கட்சி நகரசபை தலைவர் லோரி லைட்ஃபுட் நேரடி வகுப்புகளில் கற்பிக்க மறுப்பதற்காக ஆசிரியர்களைக் கோபமாக கண்டித்ததுடன், அவர்களுக்குக் கதவடைப்பு செய்து பழிவாங்கினார். புளோரிடா ஜேக்சன்வில்லில் உள்ளாட்சியின் அதிகாரிகள் பள்ளிகளில் அதிகரித்தளவில் பொலிஸை நிறுத்தி அடைக்கக் கோரிய ஒரு மாணவரின் வெளிநடப்பைத் தடுத்தனர். ஆக்லஹோமாவில், பொலிஸ் அதிகாரிகளே மாற்று ஆசிரியர்களாக வேலையில் இருத்தப்பட்டு வருகின்றனர்.
மிகவும் மூர்க்கமான சம்பவங்கள் ஒன்றில், ஒரு விஸ்கான்சின் நீதிபதி, மருத்துவத்துறை தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக ஒரு உள்ளாட்சி மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு வேலை மாறுவதைத் தடுக்க, மீண்டும் 'பொது நலன்' என்ற பெயரில், சமீபத்தில் தடை விதித்தார். மேல்முறையீட்டில் பின்னர் இரத்து செய்யப்பட்ட இந்த தீர்ப்பு, தொழில்துறை அடிமைமுறையின் பேராபத்தை அதிகரிக்கிறது, தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளில் கட்டப்பட்டு, அவர்களின் பெருநிறுவன எஜமானர்களின் அனுமதியில்லாமல் வேலையிலிருந்து வெளியேற முடியாது.
தொழிலாளர்கள் உரிமைகள் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த தாக்குதல், 1926 இல் நிறைவேற்றப்பட்ட பிற்போக்குத்தனமான இரயில்வே தொழிலாளர் சட்டம் உட்பட, பல தசாப்தங்களாக வேலைநிறுத்த-தடை சட்டத்தின் மீது கட்டமைக்கப்படுகிறது. பின்னர் 1936 இல் விமானச் சேவை தொழில்துறைக்கு விரிவாக்கப்பட்ட அந்த சட்டம், 1877 இன் மாபெரும் இரயில்வே வேலைநிறுத்தம் மற்றும் 1894 இல் புல்மான் (Pullman) வேலைநிறுத்தம் உட்பட அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிகவும் சக்தி வாய்ந்த தொழில்துறை போராட்டங்கள் சிலவற்றின் மையத்தில் இருந்திருந்த இரயில்வே துறையில் வேலைநிறுத்தங்களைக் கிட்டத்தட்ட முழுமையாக சட்டவிரோதமாக்கியது.
இத்தகைய வேலைநிறுத்தங்களில், தொழிலாளர்கள் அவர்களின் சம்பளங்கள் மற்றும் வேலையிட நிலைமைகள் பற்றிய உடனடி பிரச்சினைகளையும் கடந்து, முதலாளித்துவ இலாப அமைப்புமுறையையே சவால் விடுக்கத் தொடங்கினர். 1877 வேலைநிறுத்தத்தின் மையமாக விளங்கிய செயின்ட் லூயிஸில், சோசலிச தொழிலாளர்கள் 1871 பாரீஸ் கம்யூனை முன்னுதாரணமாக கொண்டு சிறியளவில் ஒரு கம்யூனை நிறுவினார்கள். புல்மான் வேலைநிறுத்தத்தின் தலைவராக இருந்த ஒய்கன் டெப்ஸ் (Eugene Debs), பெடரல் அரசாங்கத்தால் அந்த வேலைநிறுத்தம் நசுக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் படைப்புகளை வாசித்ததும், அமெரிக்காவில் மிகவும் நன்கறியப்பட்ட பிரபல சோசலிச தலைவர் ஆனார்.
முக்கியமாக, நீதிபதி பிட்மன் அவரது தீர்ப்பின் ஒரு பின்குறிப்பு நீட்சியில் ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் குறிப்பிட்ட ஒரு மேற்கோளை பெரும் விருப்பத்துடன் குறிப்பிடுகிறார். 1945 இல் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மரணித்ததால் பதவிக்கு வந்த ட்ரூமன், வேலை முடக்கங்கள் கொரியாவில் ஏகாதிபத்திய போரைப் பாதிக்கும் என்ற அடித்தளத்தில் வேலைநிறுத்தங்களுக்குத் தடைவிதிக்க அந்த புதிய பாதுகாப்புக்கான உற்பத்தி சட்டத்தை வழமையாக பயன்படுத்தி இருந்தார்.
அரசு என்பது ஒரு நடுநிலையான அரங்கம் அல்ல மாறாக வர்க்க ஆட்சிக்கான ஒரு கருவி என்பதை செவ்வாய்க்கிழமை தீர்ப்பு புதிதாக உறுதிப்படுத்துகிறது. தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் எந்த முன்னோக்கிய பாதையும் வழங்குவதாக இல்லை. நீதிமன்றங்கள் என்ன மாதிரியான நிறுவன-சார்பு தீர்ப்பு வழங்கினாலும் தொழிற்சங்கங்கள் வளைந்து கொடுத்து சந்தேகத்திற்கிடமின்றி கீழ்படியும்.
தொழிற்சங்கங்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே நிர்வாகத்தின் எடுபிடிகள் என்பதற்கு சற்று மேலாக மாறியுள்ளன, இவை தொழிலாளர்கள் மீது விட்டுக்கொடுப்புகளை அமுலாக்ககும் ஆறு-இலக்க சம்பளம் பெறும் தனிச்சலுகை கொண்ட அதிகாரத்துவவாதிகளால் ஆளப்படுகின்றன. அவர்கள் 'பேரம்பேசல்கள்' என்ற கேலிக்கூத்துக்கள் மூலமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு இணைந்து பொறுப்பாகின்ற ஜனநாயகக் கட்சிக்கு பலனின்றி முறையீடுகள் செய்வதன் மூலமும் தொழிலாளர்களின் முன்முயற்சிகளை நிலைகுலைக்கின்றனர்.
விஷயங்களை தொழிலாளர்களே அவர்களின் சொந்த கரங்களில் எடுப்பதே முன்னிருக்கும் பாதை என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. தகர வேலைகள் துறை, விமானச் சேவை, இரயில்வே மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம்-போக்குவரத்துத்துறை பிரிவு, இரயில் பெட்டி பொறியாளர்கள் மற்றும் இரயில்வே தொழிலாளர்களின் சகோதரத்துவம் (BLET) சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, BNSF தொழிலாளர்கள் அவர்களே ஒரு சாமானிய தொழிலாளர் குழுக்களை ஒழுங்கமைத்து, அவர்களின் சொந்த சுயாதீனமான முன்முயற்சியை அபிவிருத்தி செய்து, மற்ற தொழில்துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பிற இரயில்வே தொழிலாளர்களிடையே சாத்தியமானளவுக்குப் பரந்தளவிலான ஆதரவுக்கு முறையிட வேண்டும்.
ஆனால் இந்த போராட்டம் நிறுவனத்திற்கு எதிரான ஒரு பொருளாதார போராட்டம் அல்ல, மாறாக முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான ஓர் அரசியல் போராட்டமாகும். உடல்நலம் மற்றும் பாதுகாப்பைத் தனியார் இலாபத்திற்காக தியாகம் செய்யாமல், சமூகத்தின் உள்கட்டமைப்பை ஜனநாயக முறையில் மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுத்த வேண்டுமென போராட, இதற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வது அவசியமாகும்.