மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்க கருவூலத் துறையின் தேசியக் கடன் $30 டிரில்லியனைத் தாண்டியுள்ளது என்ற அறிவிப்பு அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் வரலாற்று நெருக்கடியில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2008 நிதியியல் உருகுதலுக்குப் பின்னர், ஆளும் வர்க்கமும் அதன் அரசு அமைப்புகளும் கணினி பொத்தானை அழுத்துவதால் உருவாக்கிய பணத்தை நிதிய அமைப்புமுறைக்குள் பாய்ச்சுவதன் மூலம் இந்த நெருக்கடியை மூடிமறைக்க முயன்றுள்ளன. ஆனால் இந்த நெருக்கடியோ தன்னை தொடர்ந்து வெளிப்படுத்துவதுடன், இன்னும் அதிகமாக கொடிய வடிவங்களை ஏற்று வருகிறது.
கடன் அளவு மீதான அதன் அறிக்கையில், நியூ யோர்க் டைம்ஸ் விவரிக்கையில், “விலை உயர்வுகள் மற்றும் வட்டி விகித உயர்வுக்கான சாத்தியக்கூறால் வளைக்கப்பட்டு, நாட்டின் நீண்டகால பொருளாதார நலத்தின் பலவீனமான தன்மையை எடுத்துக்காட்டும் அச்சுறுத்தலான நிதிய மைல்கல்லாக' இதை விவரித்தது.
மிகப்பெரும் இந்த கடன் அளவு கிட்டத்தட்ட சாதாரணமாக கற்பனையில் கூட கிரகித்துக் கொள்ள முடியாது என்றாலும், இதை முன்னோக்கில் கூறுவதானால், 30 ட்ரில்லியன் டாலர் கடன் இப்போது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விடவும், அதாவது ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை விடவும் 7 ட்ரில்லியன் டாலர் அதிகமாக உள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $23 ட்ரில்லியனாக உள்ளது.
இந்த கடன் அதிகரிப்பு வேகம் விரைவாக அதிகரித்து வருகிறது. 2020 இன் ஆரம்பத்தில், அது சுமார் 2025 வாக்கில் தான் $30 ட்ரில்லியனைத் தொடும் என்று உத்தேசிக்கப்பட்டது. இந்த வேகம், பெருந்தொற்றின் விளைவாக செலவுகள் அதிகரித்ததன் கீழ் கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஆனால் இத்தகைய ஒரு பகுப்பாய்வு இரண்டு முக்கிய உண்மைகளைப் புறக்கணிக்கிறது.
முதலாவதாக, அர்த்தமுள்ள பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தால் அது எதிர்விதமாக பங்குச் சந்தையைப் பாதிக்கும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டு, குறிப்பாக இந்த பெருந்தொற்றின் தொடக்கத்தில் இருந்தே —ட்ரம்ப் மற்றும் பைடெனின் கீழ் ஒன்றுபோல— அரசாங்கம் அவற்றை மேற்கொள்ள குற்றகரமாக மறுத்ததால், அமெரிக்க பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் வழங்கிய அதிர்வு பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது, அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தொடக்கத்திலேயே இந்த வெடிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதற்கும் மேலாக, இந்த பெருந்தொற்றுக்கான செலவுகளில் பெரும்பான்மை முன்னணி பெருநிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கான டாலர்களைக் கையளிக்க அர்ப்பணிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நேரத்தில் கூடுதலாக வரி குறைப்புகளும் அவற்றுக்கு வழங்கப்பட்டன.
இரண்டாவதாக, பல தசாப்தங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தால், இந்த கடன் அதிகரிப்பானது சமூக சேவைகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டதன் விளைவல்ல. இவை தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்துள்ளன. அதற்கு மாறாக, இது இராணுவச் செலவுகள் அதிகரிக்கப்பட்டதன் விளைவாகும் —தற்போதைய இராணுவ வரவு-செலவுத் திட்டக்கணக்கு $770 பில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது— இதனுடன் சேர்ந்து மிகப் பெரும் செல்வந்தர்களும் மற்றும் பிரதான பெருநிறுவனங்களும் குறைவாகவே வரி செலுத்துகின்றன அல்லது சுத்தமாக வரி செலுத்துவதில்லை என்பதை பல ஆய்வுகள் எடுத்துக்காட்டி உள்ள நிலையில், அவ்வாறிருந்தும் அவற்றுக்கு தொடர்ந்து வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்தகைய கொள்கைகள் புஷ், ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் நெடுகிலும் தொடர்ந்து தொடரப்பட்டன.
இதற்கும் மேலாக, தேசிய கடன் அதிகரிப்பானது அமெரிக்க பொருளாதார இலாபத் திரட்சி முறையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு மாற்றத்தில் வேரூன்றிய ஆழமான நிகழ்ச்சிப்போக்கின் விளைவாகும்.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் நிதியமயமாக்கலின் அதிகரிப்பைக் கண்டுள்ளது — இந்த நிகழ்ச்சிப்போக்கினால் இலாபங்களைப் பங்குச் சந்தை மூலமாக நிதியியல் செயல்பாடுகள் திரட்டிக் கொள்கின்றன. இது கடந்த இரண்டாண்டுகளாக வேகமெடுத்துள்ளது, வோல் ஸ்ட்ரீட் புதிய உச்சங்களை எட்டி வருகிறது, இதன் விளைவாக பெருந்தொற்று பில்லியனர்களின் கஜானாக்களுக்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் சென்றுள்ளன. இதே நிகழ்ச்சிப்போக்குகள் தான் உலகெங்கிலுமான ஒவ்வொரு முதலாளித்துவ பொருளாதாரத்திலும் செயல்படுகின்றன, அமெரிக்காவில் இவை மிகவும் அதீத வடிவத்தை ஏற்றுள்ளன.
இந்த கடனை எப்படி திரும்பச் செலுத்துவது மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீது அதன் தாக்கங்கள் என்ன என்ற அடிப்படை கேள்விகள் எழுகின்றன.
கடந்த மாதம் உலக பொருளாதார பேரவையின் இணையவழி கூட்டத்தில் பேசுகையில், அமெரிக்க நிதித்துறைச் செயலர் ஜெனெட் யெலென் கூறுகையில், “வட்டிவிகித சூழல் உள்ளடக்கத்தில் கடனைத் தாங்கக்கூடிய அளவை மதிப்பிடுவது முக்கியம்', வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால் அமெரிக்க கடன் சுமை 'சுலபமாக கையாளக்கூடியதே' என்றார்.
தேசியக் கடனைக் 'கையாளுவது' என்பது அமெரிக்க அரசு வெளியிடும் அமெரிக்க நிதித்துறை பத்திரங்களுக்கான சந்தை மூலமாக நடக்கிறது, இவற்றை நிதிய முதலீட்டாளர்கள் வாங்குகிறார்கள். ஆனால் மார்ச் 2020 இல், வோல் ஸ்ட்ரீட் மூழ்கிய போது, இந்த நிகழ்முறை முற்றிலுமாக முறிந்து போனது அப்போது அங்கே அரசு கடனில் இருந்து வெளியில் வருவதற்கான ஓர் ஓட்டம் இருந்தது. அந்த நெருக்கடியின் உச்சத்தில், உலகின் மிகவும் பாதுகாப்பான மற்றும் நிலையான நிதிய சொத்தாக கருதப்படும் நிதித்துறை பத்திரங்களை யாரும் வாங்குவார் இல்லை.
அமெரிக்க மற்றும் உலகளாவிய நிதியச் சந்தைகளின் சரிவுக்கு அச்சுறுத்திய அந்த நெருக்கடி, பெடரல் ரிசர்வ் மத்திய வங்கியின் மிகப் பெரிய தலையீட்டால் மட்டுமே தவிர்க்கப்பட்டது, அது ஒரு தருணத்தில் ஒரு நொடிக்கு 1 மில்லியன் டாலர் செலவிட்டு, நிதிய அமைப்புமுறையின் எல்லா துறைகளையும் ஆதரித்தது. இதன் விளைவாக, 2008 இல் அதன் கணக்கில் $800 பில்லியன் சொத்திருப்புகளை வைத்திருந்த பெடரல், இப்போது $9 ட்ரில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை அதன் கணக்கில் ஏற்றுள்ளது.
கடந்த தசாப்தத்தில், தேசியக் கடனுக்காக அதிகரித்தளவில் சுழற்சிமுறையில் மாறி மாறி நிதி வழங்கப்பட்டுள்ளது, இதில் நாட்டின் ஓர் அங்கமாக அரசு, நிதித்துறை பத்திரங்களின் வடிவில் கடன் வழங்குகிறது, அதேவேளையில் மற்றொரு அங்கமாக மத்திய வங்கி அதை கொள்முதல் செய்கிறது.
2010 இல் பெடரல் ரிசர்வ் இரண்டாவது முறையாக பணத்தை அச்சடித்து புழக்கத்தில் விடும் அதன் திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, அதன் நிதித்துறை கடன் கொள்முதல்கள் மொத்த அரசாங்க கடன் தேவைகளில் 60 இல் இருந்து 80 சதவீதத்திற்கு இடையே நிதியளித்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வட்டிவிகிதங்கள் வரலாற்றில் இல்லாதளவில் குறைவாக வைக்கப்பட்டுள்ளன, இது பங்கு விலைகள் அவற்றின் உச்சபட்ச உயரங்களை எட்டுவதற்கு எரியூட்டி உள்ளது.
ஆனால் ஒரு பழைய பொருளாதார பழமொழி உள்ளது: ஒரு நிகழ்ச்சிப்போக்கு இயல்பாகவே நீடிக்க முடியாததாக இருந்தால், அது நிறுத்தப்பட வேண்டும். அப்படியானால், எப்படி இந்த நிதி வெறிக்கு முற்றுப்புள்ளி வைப்பது?
இதற்கான பதிலை நிதி மூலதனத்தின் இயல்பிலேயே காணலாம். அது முக்கியமாக சூறையாடும் தன்மையில் உள்ளது. எல்லா நிதிய சொத்திருப்புகளும் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்தும் மதிப்பை உள்ளடக்கி இல்லை; அவை மதிப்பின் உரிமைகோரலாக உள்ளன, குறிப்பாக உற்பத்தி நிகழ்வுபோக்கில் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரிமதிப்பை உறிஞ்சுவதில் தங்கியுள்ளன.
கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டவாறு, நிதி மூலதனத்தின் சாரமே 'உற்பத்தி மூலமாக அல்ல மாறாக இருக்கும் ஏனைய செல்வவளங்களைக் குறிவைப்பதன் மூலமாக பணத்தைப்' பெறும் அதன் முனைவாக உள்ளது.
இப்போது அமெரிக்க முதலாளித்துவத்தின் அனைத்து கட்டமைப்புகளிலும் ஆழமாக உள்ளார்ந்து ஊடுருவி உள்ள இந்த முனைவு, இரண்டு வடிவங்களை ஏற்கிறது: வெளிநாடுகள் மீதான போர் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூக எதிர்புரட்சி.
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக பைடென் நிர்வாகம் தீவிரப்படுத்தி வரும் ஆத்திரமூட்டல் பெரும்பாலும் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களைப் வெளிப்புறமாக திருப்புவதற்கான முயற்சியால் உந்தப்படுகிறது.
1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தைக் கலைத்ததில் இருந்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரிவுகள் மற்றும் அதன் பிரதிநிதிகள்—ஜனநாயகக் கட்சியின் காலஞ்சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்னீவ் பிரிஜேஜென்ஸ்கி இவர்களில் ஒருவர்—அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார வீழ்ச்சியைக் கடந்து வருவதற்கான வழிவகையாக ரஷ்யாவின் பரந்த ஆதாரவளங்களைச் சூறையாடப் பார்க்கின்றனர்.
முன்னர் கற்பனையும் செய்திராத பரிமாணங்களுக்குத் தேசியக் கடன் தீவிரமடைவதில் எடுத்துக்காட்டப்படும் இந்த நிதிய அமைப்புமுறையின் நெருக்கடி, சாராம்சத்தில் மதிப்பு நெருக்கடியாகும். முதலாளித்துவ பொருளாதாரத்தில் தொழிலாள வர்க்கமே மதிப்பின் ஒரே ஆதாரமாகும். தொழிலாள வர்க்கத்தின் சுரண்டலைப் புதிய மட்டங்களுக்குத் தீவிரப்படுத்துவதன் மூலமாக மட்டுமே மலையளவிலான இந்த ஊக மூலதனத்திற்குள் மதிப்பைத் திரும்ப செலுத்த முடியும், இந்த ஊக மூலதனத்தில் தேசிய கடனும் ஓர் அம்சமாக உள்ளது.
சிறிய சம்பவங்களும் சில வேளைகளில் பரந்த அபிவிருத்திகள் மீது உள்ளார்ந்த பார்வையை வழங்குகின்றன. அதுதான் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் ஒரு சமீபத்திய கட்டுரையின் முக்கியத்துவமாகும், தொழிலாளர்களின் ஆரம்ப மட்ட கூலியை ஒரு மணி நேரத்திற்கு $15லிருந்து $16 மற்றும் $18 க்கு இடையே உயர்த்த நிர்பந்திக்கப்பட்ட அது ஒரு நிறுவன பொது மேலாளரின் ஒரு கருத்துரையை வெளியிட்டது, “உழைப்பின் இந்த உயர்பணவீக்க செலவுகள் எப்போது தீரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை,” என்று அவர் கவலையை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையே, புளூம்பேர்க் அறிக்கையின்படி, அமசன் தலைவர் ஜெஃப் பெஸோஸ் போன்ற பெருந்தொற்று பில்லியனர்கள் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான மிகநவீன சொகுசு படகுகள் வாங்குவதில் ஒருவரை ஒருவர் முந்த முயல்கிறார்கள், இதற்கான உத்தரவாணைகள் ஓராண்டுக்கு முன்னரை விட 77 சதவீதம் அதிகரித்துள்ளன.
வர்க்க போராட்டத்திற்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆளும் வர்க்கம் ஒரு தெளிவான திட்டநிரலைக் கொண்டுள்ளது: அதாவது, சூறையாடலுக்கான போர்கள் நடத்துவது மற்றும் இன்னும் கூடுதலாக தன்னைச் செல்வசெழிப்பாக்கிக் கொள்ள மக்களின் சமூக நிலைமைகள் மற்றும் கூலிகள் மீது பாரியளவில் தாக்குதல் நடத்துவது.
தொழிலாள வர்க்கம் இதற்கு அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தைக் கொண்டு விடையிறுக்க வேண்டும்: அதாவது, சோசலிசத்திற்காக போராடுவது, முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவது, இந்த வாழ்வா-சாவா போராட்டத்திற்கு தலைமையை வழங்க புரட்சிகர கட்சியைக் கட்டமைப்பதாகும்.
மேலும் படிக்க
- "சமத்துவமின்மை கொல்கிறது": முதலாளித்துவமும் கோவிட்-19 தொற்றுநோயும்
- அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்துவது போருக்கு இட்டுச் செல்கிறது
- இரு கட்சி அமைப்புமுறையின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க ஜனநாயகக் கட்சியினருக்கு உதவுவதற்காக ஜாக்கோபின் ஆசிரியர் பாஸ்கர் சங்கரா ஒரு மிதமான முன்மொழிவை செய்கிறார்