ரஷ்யாவைக் கண்டிக்க ஆஸ்திரேலியாவில் நடந்த நாற்கர கூட்டத்தை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் அமெரிக்கா தூண்டிய போரின் பெருகும் அபாயத்தின் மத்தியில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கூட்டணியான Quadrilateral Security Dialogue அல்லது நாற்கர (Quad) வெளியுறவு மந்திரிகள் நேற்று மெல்பேர்னில் சந்தித்தனர்.

ரஷ்ய 'ஆக்கிரமிப்பு' குற்றச்சாட்டுகளின் மூடுதிரையின் கீழ், பைடென் நிர்வாகம் கிழக்கு ஐரோப்பாவிற்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்புவதையும் உக்ரேனிய அரசாங்கத்திற்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்குவதையும் துரிதப்படுத்துகிறது. அதே நேரத்தில், சீனப் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் கடற்படை போர்ப் பயிற்சிகளை நடத்துவது உட்பட அமெரிக்கா சீனாவை அச்சுறுத்துவதைத் தொடர்கிறது.

உக்ரேன் மீது உடனடி ஆக்கிரமிப்புக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக மீண்டும் குற்றம்சாட்ட, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கென் நாற்கர கூட்டத்தைப் பயன்படுத்தினார். கூட்டத்திற்குப் பின்னர் ஒரு கூட்டு ஊடக மாநாட்டில், அவர் உக்ரேன் 'பாதி உலகிற்கு அப்பால்' உள்ள போதிலும் இந்த நான்கு தரப்பிற்கும் தொடர்புபட்டதாகவும் மற்றும் ரஷ்யாவின் இராணுவ அச்சுறுத்தல்களை விதிமுறைகளின் அடிப்படையிலான அமைப்புமுறைக்கு ஒரு சவாலாக முத்திரை குத்தினார்.

2021மார்ச் 19, 2021 வெள்ளியன்று அலாஸ்காவில் உள்ள அங்கரேஜில் அமெரிக்க-சீனா பேச்சுவார்த்தைகளின் மூடிய கதவு அமர்வுக்குப் பிறகு வெளியுறவுத்துறை செயலர் அன்டனி பிளிங்கென் ஊடகங்களுடன் பேசுகிறார் [Credit: Frederic J. Brown/Pool via AP]

பிளிங்கென் பாசாங்குத்தனமாக, தான் 'ஒரு நாடு' மற்றொரு நாட்டிற்கு அதன் தேர்வுகள், அதன் கொள்கைகள், [அல்லது] அது யாருடன் தொடர்புகொள்ள வேண்டும் என்று கட்டளையிட முடியாது.' என்ற மிக அடிப்படைக் கொள்கைகளுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று அறிவித்தார். தனது நலன்களுக்காக, உலகளாவிய விதிகளை வாஷிங்டன் கட்டளையிட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய 'விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கு' முட்டுக் கொடுப்பதற்காக கடந்த மூன்று தசாப்தங்களாக இராணுவ பலத்தையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் திரும்பத் திரும்ப நாடியது அமெரிக்க ஏகாதிபத்தியமே தவிர ரஷ்யாவோ அல்லது சீனாவோ அல்ல.

இந்த கூட்டு அறிக்கையில் உக்ரேன் பற்றி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பெய்ன் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி யோஷிமாசா ஹயாஷி போலல்லாமல், ரஷ்யா மீதான பிளிங்கெனின் தாக்குதலை ஆதரிக்க இந்திய வெளியுறவு மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மறுத்துவிட்டார்.

ஜெய்சங்கர் நாற்கர கூட்டு 'ஏதோ ஒன்றுக்காக இருக்கின்றதே தவிர யாரோ ஒருவருக்கு எதிரானது அல்ல' என்று அறிவித்து பிரச்சனையை தடுத்தார். இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கவனம் செலுத்துவதாகவும், இந்த மாத தொடக்கத்தில் ஐ.நா பாதுகாப்பு சபையில் விரிவாகக் கூறப்பட்ட இந்தியாவின் நிலைப்பாட்டை குறிப்பிடுவதாகவும் அவர் கூறினார். ஐ.நா.வில், இந்தியா அனைத்து நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் —அதாவது ரஷ்யா உட்பட— உக்ரேன் மீதான மோதலுக்கு சமாதானமான முறையிலான தீர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது.

ரஷ்யாவின் எல்லையில் நேட்டோவை நிலைநிறுத்தி வைத்து, உக்ரேன் நேட்டோவில் சேர அனுமதிக்கப்படக்கூடாது என்று மாஸ்கோ பலமுறை தனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா அத்தகைய உத்தரவாதத்தை வழங்க மறுத்துவிட்டதுடன் மற்றும் அதற்குப் பதிலாக கிழக்கு ஐரோப்பாவில் அதன் இராணுவ பலப்படுத்தலை நியாயப்படுத்த இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்கிறது.

உக்ரேன் மீது நாற்கர கூட்டு உடன்பாடு காணத் தவறியது, இக் குழுவானது யாருக்கும் 'எதிராக' இல்லை என்று இந்திய மந்திரி கூறியுள்ள போதிலும், நான்கு சக்திகள் சீனாவை குறிவைப்பதை நிறுத்தவில்லை. பெய்ஜிங்கிற்கு எதிரான அமெரிக்க கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பரில் வாஷிங்டனில் முதன்முதலாக தலைவர்களின் உச்சிமாநாட்டைக் கூட்டுவதன் மூலம் பைடென் நிர்வாகம் நான்கு தரப்பின் நிலையை உயர்த்தியது.

Australian பத்திரிகை உடனான ஒரு நேர்காணலில் பிளிங்கென், அமெரிக்காவை சீனா ஒதுக்கிவைத்துவிடும் என்ற அச்சத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினார்: “காலப்போக்கில் சீனாவின் நோக்கம் இப்பிராந்தியத்தில் மட்டும் அல்லாமல், இந்த உலகத்தில் முன்னணி இராணுவ, பொருளாதார, இராஜதந்திர மற்றும் அரசியல் சக்தியாக இருக்க வேண்டும் என விரும்புவதில் சிறிதும் சந்தேகமில்லை' என்றார். ஆனால், நாற்கர கூட்டத்தில் வாஷிங்டனின் நோக்கங்களை எடுத்துக்காட்டி, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வளர்ந்து வரும் சீனா-ரஷ்ய கூட்டணியை விட வலிமையான கூட்டணியாக இருந்தன என்று அவர் மேலும் கூறினார்.

சீனா மற்றும் ரஷ்யாவின் 'தாராளவாத எதிர்ப்பிற்கு' எதிராக 'தாராளவாத விழுமியங்களின்' பாதுகாவலராக காட்டிக்கொண்டிருக்கும் அதே வேளையில், வாஷிங்டனின் உண்மையான குறிக்கோள், 'நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம், பாதுகாப்புக்கும் கூட்டுழைப்புக்குமான ஐரோப்பிய அமைப்பு மற்றும் நேட்டோ மூலம் உண்மையில் டஜன் கணக்கான கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளை ஒன்றிணைப்பதே' என்று பிளிங்கென் வெளிப்படுத்தினார். அதேபோல் இங்கே பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவிற்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியாவாக இருந்தாலும் சரி, நிச்சயமாக, இந்தோ-பசிபிக் பகுதியில் நமது நெருங்கிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குவதாகும் என்றார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், 'அது Quad அல்லது AUKUS ஆக இருந்தாலும் சரி நாங்கள் தொடர்ந்து புதிய கூட்டணிகள், புதிய கூட்டுழைப்புகளை ஒன்றாக இணைத்து வருகிறோம்' என்று பெருமையாக கூறினார். அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா கடந்த செப்டம்பரில் சீனாவிற்கு எதிரான மற்றொரு நடவடிக்கையில் AUKUS உடன்படிக்கையை உருவாக்குவதாக அறிவித்தன. இது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் ஆஸ்திரேலியாவை ஆயுதமாக்குவதை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாகும்.

நீர்மூழ்கிக் கப்பல்களை பெறுவது தொடர்பாக பல தசாப்த காலம் எடுக்கும் என்ற நிலையில், பிளிங்கென் தனது நேர்காணலில், ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான வழியைக் கண்டறிய பைடென் நிர்வாகம் உறுதியாக இருப்பதாகக் கூறினார். அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா வாங்குவதில் தற்காப்பு எதுவும் இல்லை. சீனாவிற்கு எதிரான ஒரு போர் அல்லது முற்றுகையின் போது அமெரிக்க கடற்படையுடன் இணைந்து பணியாற்றுவதே அவர்களின் ஒரே நோக்கமாகும்.

நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்பானதை விட AUKUS மிகவும் அதிகம் முக்கியமானது என்று பிளிங்கென் மேலும் கூறினார். இது முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பது மற்றும் 'பலம்வாய்ந்த விநியோகச் சங்கிலியைக் கட்டியெழுப்புதல்' போன்ற போரின் போது முக்கிய விநியோகங்களை உறுதி செய்தல் ஆகியவை அடங்கும். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே AUKUS க்கு முன் 'ஒரு பரந்த மற்றும் விரிவான பாதுகாப்பு கூட்டுழைப்பை' கொண்டிருந்தன என்றார். சீனாவுடனான எந்தவொரு மோதலிலும் ஆஸ்திரேலியாவை அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு முக்கிய தளமாக மாற்றும் முக்கியமான அடிப்படை ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த கூட்டணி கடந்த தசாப்தத்தில் இருந்து பெரிதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாற்கர கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதில் நான்கு நாடுகளின் ஒத்துழைப்பையும், அதன் பெரிய எரிமலை வெடிப்புக்குப் பின்னர் டோங்காவிற்கு பேரழிவு உதவிகளை அனுப்புவதையும் பற்றிய பகட்டுத்தன்மையால் நிரம்பியுள்ளது. இவை சீன செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளாகும். அந்த அறிக்கை இராணுவ ஆட்சிக் குழுவைக் கண்டிக்காமல், 'மியான்மரில் நெருக்கடி' மற்றும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைகள் பற்றிய கவலைகளை வெளிப்படுத்தியது.

சீனாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, கூட்டத்தின் முக்கிய உந்துதல் சந்தேகத்திற்கு இடமின்றி பெய்ஜிங்கிற்கு எதிராக இருந்தது. Australian இன் வெளிநாடுகளுக்கு பொறுப்பான ஆசிரியர் கிரெக் ஷெரிடன், 'நாற்கர ஐக்கியமானது சீனாவை அது தொடர்பாக கவனிக்க செய்கின்றது' என்ற தலைப்பில் இன்று தனது கருத்தில் அப்பட்டமாக விஷயத்தை வைத்தார். அவர் பின்வருமாறு எழுதினார்: 'இந்தோ-பசிபிக்கின் பெரும்பகுதியில் பெய்ஜிங் மேலாதிக்கத்தை செலுத்த முடியாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாற்கர கூட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்'.

வாஷிங்டனுடன் நன்கு இணைந்திருக்கும் ஷெரிடன், அதன் பிரச்சாரத்தை கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப கூறுகின்றார். தென் சீனக்கடலில் சீனாவின் விரிவாக்கம் மற்றும் தைவானை நோக்கி ஆக்கிரமிப்பு என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஆனால் கடற்பயணத்திற்கான சுதந்திரம் என்ற பெயரில் அமெரிக்கா தான் தென் சீனாவிலும் கிழக்குக் கடல்களிலும் மற்றும் சீனப் பாதுகாப்பிற்கு மிக இன்றியமையாததாகவுள்ள கடற்பகுதியில் தனது கடற்படை ஆத்திரமூட்டல்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நாற்கர கூட்டு அதேபோன்று, 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதியை முன்னெடுப்பதற்கான' தேவையை பின்வருமாறு அறிவித்தது: 'சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல்கள் உட்பட கடல்சார் விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறைக்கு விடப்படும் சவால்களை எதிர்நோக்க குறிப்பாக கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டை (UN Convention on the Law of the Sea - UNCLOS) இது பிரதிபலிக்கிறது'.

முக்கியமாக, UNCLOS இனைப்பற்றி குறிப்பிடுகையில், நாற்கர மேசையைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களில் ஒன்றான அமெரிக்கா அந்த ஐ.நா. மாநாட்டை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் அது அதன் சொந்த கடல்சார் நலன்களுடன் முரண்படுகிறது.

நாற்கர கூட்டம் அமெரிக்க போர் தயாரிப்புகளின் வேகத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. உள்நாட்டில் ஆழ்ந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியால் தூண்டப்படுவதால் அதே நேரத்தில் சீனாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலைத் தொடர்கிறது, ரஷ்யாவை கிழக்கு ஐரோப்பாவில் போரின் விளிம்பிற்கு தள்ளுகிறது. இங்குள்ள ஆபத்து என்னவென்றால், ஒரு மோதல் எவ்வாறு தொடங்கினாலும் அது உலகை மூழ்கடிக்க வேகமாக விரிவடையும்.

Loading