மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வாஷிங்டனும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ரஷ்யாவைச் சுற்றி வளைக்க இராணுவரீதியில் செயல்பட்டு வருகையில், அமெரிக்க அதிகாரிகள் நேற்று அமெரிக்க-ரஷ்ய போர் உடனடி என்று அறிவித்தனர்.
உக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள போலந்தின் இராணுவத் தளங்களுக்கு 82 ஆம் விமானப்படை பிரிவில் இருந்து 3,000 துருப்புகளை நிலைநிறுத்துவதாக வாஷிங்டன் நேற்று அறிவித்தது. பிரிட்டனும் ஜேர்மனியும் எஸ்தோனியா மற்றும் லித்துவேனியாவில் நேட்டோ படைப் பிரிவுகளைப் பலப்படுத்த நூற்றுக் கணக்கான சிப்பாய்களை அனுப்ப உள்ளன. இது, பல வாரங்களாக நேட்டோ நாடுகள் கியேவின் உக்ரேனிய ஆட்சிக்கு ஜவலின் டாங்கி தகர்ப்பு ஏவுகணைகள், ஸ்டின்ஜெர் விமானத் தகர்ப்பு ஏவுகணைகள், மற்றும் துருக்கிய TB2 பேரக்டர் (Turkish TB2 Bayraktar) டிரோன்களை அனுப்பிய பின்னர் வருகிறது.
ரஷ்யாவிடம் இருந்து உக்ரேனைப் பாதுகாக்க செயல்படுவதாக நேட்டோ பரப்பிவிடும் சொல்லாடல் ஒரு பொய் மூட்டையாகும். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பகிரங்கமாக அறிவிக்கையில் ரஷ்யாவின் இராணுவ நிலைப்பாடு உக்ரேன் மீதான முற்றுமுதலான படையெடுப்புக்கான திட்டங்களுடன் பொருந்துவதாக இல்லை என்று அறிவித்தார். அனைத்திற்கும் மேலாக, ரஷ்யா தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது என்ற அமெரிக்காவின் வாதங்களைச் செய்தியாளர்கள் சவால் விடுத்தபோது, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், வெளியிட முடியாத 'உளவுத்துறை தகவல்கள்' அவரது வாதங்களை உண்மையென அர்த்தப்படுத்துவதாக வாதிடுவதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.
ஈராக் வசம் 'பாரிய பேரழிவு ஆயுதங்கள்' இருப்பதாக பொய்களின் அடிப்படையில் வாஷிங்டன் அதன் மீது படையெடுத்து அண்மித்து இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஓர் அணுஆயுத நாடான ரஷ்யாவுடன் ஒரு போரைத் தூண்டி, அதற்கான பழியை ரஷ்யா மீதே சுமத்தும் நிலைமைகளின் கீழ், ஒரு போர் மூலோபாயத்தை வகுத்து வருகின்றன. அங்கே போரைத் தூண்டுவதற்கு நேட்டோ ஆதரவு இராணுவ ஆத்திரமூட்டல் அரங்கேற்றப்படலாம் என டொன்பாஸ் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் உக்ரேனிய இராணுவ நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் கூறுகையில் ரஷ்யா 'ஒரு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையை நடத்தக்கூடிய நிலையில்' இருப்பதாக கூறியதுடன், மேற்கொண்டு விபரங்களை வழங்க மறுத்துவிட்டார். அவர் பின்வருமாறு கூறினார்: “எங்கள் உளவுத்துறை தகவல் விபரங்களை நான் கூற முடியாது. ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னரே அது நடக்கும் என்ற நிறைய ஊகங்கள் இருந்தாலும், இந்த ஒலிம்பிக்ஸின் போதே கூட அது தொடங்கக் கூடும் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.” இந்த அடிப்படையில், உக்ரேனில் உள்ள அமெரிக்க பிரஜைகள் 'சாத்தியமானளவுக்கு உடனடியாக வெளியேறுமாறு' சுலிவன் வலியுறுத்தினார்.
சுலிவன் தொடர்ந்து கூறுகையில், மிகவும் குறிப்பாக, நேட்டோ கூட்டணி ரஷ்யா உடனான ஒரு மோதலுக்கான மிகவும் விரிவான திட்டங்களைத் தீட்டியிருப்பதாக தெரிவித்தார். அவர் கூறினார், “பரந்த மூலோபாயத்தில் இருந்து தொழில்நுட்ப விபரங்கள் வரையில் நாங்கள் குறிப்பிடத்தக்க மட்டத்திற்கு நல்லிணக்கம் மற்றும் பொதுவான நோக்கத்தை எட்டியுள்ளோம். ரஷ்யா முன்நகர்ந்தால், அதன் நீண்டகால அதிகாரமும் செல்வாக்கும் ஒரு படையெடுப்பின் மூலம் விரிவடையாது, அழிக்கப்படும். அது மிகவும் உறுதியான அட்லாண்டிக் கடந்த சமூகத்தை எதிர்கொள்ளும்,” என்றார்.
இதற்கு முதல் நாள் அமெரிக்க பிரஜைகளை உக்ரேனில் இருந்து வெளியேறுமாறு பைடெனின் ஓர் அறிக்கை வெளியானது, “விஷயங்கள் விரைவிலேயே மோசமாகலாம்' மேலும் ஒரு அமெரிக்க-ரஷ்ய மோதல் 'உலகப் போராக' ஆகலாம் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
இந்த மூலோபாயம் ஐரோப்பிய சக்திகளுடன் ஒருங்கிணைந்து செய்யப்படுகிறது. நேற்று பைடெனின் அவசர அழைப்பு பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் (இங்கிலாந்து), ஜஸ்டீன் ட்ரூடோ (கனடா), மற்றும் மரியோ திராஹி (இத்தாலி); ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (பிரான்ஸ்), ஆன்ட்ர்செஜ் துதா (போலந்து) மற்றும் கிளவுஸ் லொஹன்னிஸ் (ரோமானியா), ஜேர்மன் சான்சிலர் ஒலாஃப் ஷோல்ஸ் ஆகியோருக்கும், ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோ அதிகாரிகளுக்கும் சென்றது. ஒரு வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, 'அது இராணுவத் தீவிரப்படுத்தலைத் தேர்ந்தெடுத்ததால், நேட்டோவின் கிழக்கு விளிம்பில் தற்காப்பு தோரணையை மீளப்பலப்படுத்துவதைத் தொடர்ந்தால், பாரிய விளைவுகளை ஏற்படுத்தவும் மற்றும் ரஷ்யாவைக் கடுமையான பொருளாதார விலை கொடுக்க செய்யவும்,” அவர்கள் உறுதி அளித்திருந்தார்கள்.
அமெரிக்க அதிகாரிகள் அடுத்த வாரம் போர் தொடங்கும் என்று வலியுறுத்துகிறார்கள், “சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம் இரண்டும், புதிய தகவல்களின்படி, ஏறக்குறைய அடுத்த வாரம் தாக்குதல் நடக்கலாம் என்று அவை அஞ்சுவதாக வெள்ளிக்கிழமை ஜேர்மன் அரசாங்கம் மற்றும் மற்ற நேட்டோ அரசுகளுக்குத் தகவல் அளித்தன' என்று குறிப்பிட்டு, Der Spiegel செய்தி வெளியிட்டது.
அதேநேரத்தில், நேட்டோ பல மிகப் பெரிய இராணுவ ஒத்திகைகளை நடத்தி வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் “Dynamic Manta 22” என்ற நீர்மூழ்கி தகர்ப்பு ஒத்திகை பெப்ரவரி 20 இல் தொடங்குகிறது, இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர் நோர்வேயில் “Dynamic Guard” என்ற ஒத்திகை தொடங்குகிறது. இரண்டுமே “பனிப்போர் கால விடையிறுப்புக்கு” மாறி, 28 நாடுகளில் இருந்து 35,000 துருப்புகள் ஈடுபடும், 1980 களுக்குப் பின்னர் நோர்வேயில் நடக்கும் மிகப் பெரிய 'போர் பயிற்சி' ஆகும்.
நேற்று, ருமேனியாவின் Mihail Kogalniceanu விமானத் தளத்தில், நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் பேசுகையில் கிழக்கு ஐரோப்பாவை மீளப்பலப்படுத்த உறுதியளித்தார். வரவிருக்கும் மாட்ரிட் உச்சி மாநாடு குறித்து அவர் கூறுகையில், “அடுத்த வாரம், நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் ஒன்று கூடி, இந்த கூட்டணியின் கிழக்கு பாகத்தில், புதிய போர்ப்படைப் பிரிவுகள் உட்பட நமது பிரசன்னத்தை இன்னும் கூடுதலாக நாம் எவ்வாறு பலப்படுத்துவது என்று விவாதிப்பார்கள். ருமேனியாவில் ஒரு நேட்டோ போர்ப்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்க பிரான்ஸ் முன்வந்திருப்பதை நான் வரவேற்கிறேன்,” என்றார்.
ஒரு போரானது ரஷ்யா ஆக்கிரமிப்பின் விளைவாக இருக்காது மாறாக அது 1991 இல் ஸ்ராலினிசத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு ஏகாதிபத்திய சக்திகளின் ஆக்ரோஷமான விடையிறுப்பாக இருக்கும். கடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் மேலாதிக்கம் செலுத்தியதன் மூலம் வாஷிங்டன் அதன் உலகளாவிய மேலாதிக்கத்தை நிறுவ முனைந்தது. நேட்டோ போர்களை நடத்தியது, குறிப்பாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சிரியாவில், மில்லியன் கணக்கான உயிர்கள் விலையாக கொடுக்கப்பட்டன, ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்பட்டன.
ரஷ்யாவின் மற்றும் பெருகிய முறையில், சீனாவின் அதிகரித்து வரும் பொருளாதாரப் பலம் இந்த மூலோபாயத்திற்கு மிகப்பெரிய தடைகளாக இருந்துள்ளன. 2013 இல், சிரியா மீது குண்டு வீச அச்சுறுத்திக் கொண்டிருந்த நேட்டோ போர்க்கப்பல்களை கிரிமியாவின் செவஸ்டொபோலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பல்கள் எதிர்த்தன, இதன் பின்னர் நேட்டோ பின்வாங்கியது. பின்னர் ஈரானுக்குப் பக்கவாட்டில், ரஷ்யா தலையிட்டு, சிரியாவில் இருந்த நேட்டோ ஆதரித்த இஸ்லாமிய போராளிகள் குழுக்களைத் தோற்கடித்தது, அவ்விரு நாடுகளும் இப்போது உலகளாவிய தொழில்துறை உள்கட்டமைப்பு திட்டமான சீனாவின் 'ஒரேபாதை ஒரேஇணைப்பு' திட்டத்தில் இணைந்துள்ளன.
2014 இல், சிரியாவில் நேரடியான நேட்டோ தலையீட்டை ரஷ்யா தடுக்க உதவிய சிறிது காலத்திற்குப் பின்னர், நேட்டோ சக்திகள் கியேவில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்தன, அங்கே அதிவலது ஆயுதக் குழுக்கள் ரஷ்ய சார்பான உக்ரேனிய ஜனாதிபதியைக் கவிழ்த்து ஒரு நேட்டோ கைப்பாவை ஆட்சியை அமைத்தன. நேட்டோ கைக்கூலிகளால் ஆதரிக்கப்பட்ட இந்த ஆயுததாரி குழுக்கள் டொன்பாஸ் மற்றும் கிரிமியா போன்ற ரஷ்ய மொழி பேசும் உக்ரேனிய பகுதிகளைத் தாக்கின, இந்த பகுதிகள் உக்ரேனில் இருந்து உடைத்துக் கொண்டன, கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய வாக்களித்தது. அப்போதிருந்து, இந்த அதிவலது உக்ரேனிய ஆயுததாரி குழுக்கள் கிரிமியாவில் ரஷ்யா துருப்புகளையும் டொன்பாஸில் ரஷ்யா ஆதரிக்கும் குடிப்படைக் குழுக்களையும் எதிர்த்து நிற்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அவமானகரமான கடந்தாண்டு தோல்விக்குப் பின்னர் ரஷ்யா உடனான நேட்டோ மோதல் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி கருங்கடல், காகசஸ் மற்றும் காஸ்பியன் கடலைச் சுற்றி உள்ள எல்லைகளின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில், உக்ரேனை நோக்கி இப்போது மீண்டும் அதன் படைகளை நிலைநிறுத்தி வருகிறது. இது ரஷ்யாவைத் தனிமைப்படுத்தி அச்சுறுத்தவும், மத்திய கிழக்குக்கான ரஷ்ய இராணுவ உதவிகளை வெட்டவும், சீனாவின் மேற்கு எல்லைகள் வரையில் மத்திய ஆசியாவில் தலையீடு செய்யவும் அவற்றை அனுமதிக்கும். இந்த திட்டம் தான் உக்ரேனில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உக்ரேனில் உள்ள ரஷ்ய மொழி பேசும் பகுதிகள் நேட்டோ போர் தயாரிப்புகளுக்காக மிகவும் முன்னேற்றப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் (Donetsk People’s Republic - DPR) தலைவர் டெனிஸ் புஷிலின் போர் உடனடியாக நிகழக்கூடும் என்று எச்சரித்து, உக்ரேனில் இருந்து அமெரிக்க பிரஜைகளை வெளியேறுமாறு பைடென் கேட்டுக் கொண்டதை மேற்கோளிட்டார். “அனேகமாக, உக்ரேனில் அமெரிக்க செல்வாக்கை வைத்துப் பார்த்தால், அமெரிக்க ஜனாதிபதிக்கு இதுபோன்ற அறிக்கைகள் வழங்க மற்றும் இதுபோன்றவொரு நிலைப்பாட்டை எடுக்க அனுமதிக்கும் தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும். … உக்ரேன் எந்த தருணத்திலும் தாக்கப்படலாம். உக்ரேனிடம் அனைத்தும் தயாராக உள்ளது: படைகள் திரட்டப்பட்டுள்ளன, மேலும் அரசியல் முடிவு எடுக்கப்பட்டால், எந்த தருணத்திலும் அதைச் செய்ய, தளவாடங்கள் அதைச் சாத்தியமாக்குகின்னறன,” என்றார்.
அவ்தெயெவ்கா (Avdeyevka), கோர்லோவ்கா (Gorlovka) மற்றும் நோவ்கோரோட்ஸ்கோய் (Novgorodskoye) இலிருந்து வெறும் 15 கிலோமீட்டர் தூரத்தில் உக்ரேனிய டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன என்று பெப்ரவரி 9 இல் DPR இராணுவத்தின் துணை தலைவர் எட்வார்ட் பாசுரின் (Eduard Basurin) தெரிவித்தார். நேற்று, உக்ரேனிய படைகள் எஸ்-300 ஏவுகணை அமைப்பையும் நிலைநிறுத்தி இருப்பதாக பாசுரின் தெரிவித்தார்.
இத்தகைய நிலைநிறுத்தல்கள் 2015 மின்ஸ்க் உடன்படிக்கைகளை மீறுகின்றன, அந்த உடன்படிக்கைகள் தற்காலிகமாக உக்ரேனிய மோதலை நிறுத்தி, எல்லை முகப்பைக் கண்காணிக்க ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பை (Organization for Security and Cooperation in Europe - OSCE) அனுப்பி இருந்தது. ஆனால் இத்தகைய நிலைநிறுத்தங்களை கண்காணிக்க டிரோன்களைப் பயன்படுத்துவதில் இருந்து OSCE கண்காணிப்பாளர்களைத் தடுக்க கியேவ் ஆட்சி படைகள் மின்னணு அலைவரிசைக் குறுக்கீட்டு சாதனங்களைப் பயன்படுத்தி வருவதாக பாசுரின் தெரிவித்தார். “உக்ரேனின் மீறல்களைப் பதிவு செய்வதைச் சாத்தியமில்லாது ஆக்கும் ஒரு சூழ்நிலையுடன் OSCE கண்காணிப்பாளர்கள் சமரசப்படுவதாக தெரிகிறது,” என்றார்.
மிகவும் குறிப்பாக, DPR படைகள் கியேவில் உள்ள அவர்களின் ஆதாரநபர்களின் அடிப்படையில், கடந்த மாதம் குறிப்பிடுகையில், உக்ரேனிய கவசவாகன தாக்குதல் படைப்பிரிவுகள் நிலைப்பாட்டை எடுத்து ஒன்று கூடிய உடனே ஒரு தாக்குதல் வருமென்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் என்று எச்சரித்தார்.
ஜனவரி 28 இல் பாசுரின் கூறினார்: “எங்கள் உளவுத்துறை தகவல்களின்படி, உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள அமெரிக்க ஆலோசகர்களின் அறிவுரையின் கீழ் உக்ரேனிய தலைமை தளபதி டொன்பாஸில் தாக்குதல் நடவடிக்கைகளுக்கான ஒரு திட்டத்திற்கு இறுதிக் கட்ட சரிபார்ப்புகளை செய்து வருகிறார். தாக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டு, உக்ரேனிய தேசிய பாதுகாப்பு மற்றும் தற்காப்பு கவுன்சில் நடவடிக்கை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதும், மக்கள் குடியரசுகளுக்கு எதிரான ஆக்ரோஷமான தேதி குறிக்கப்படும்,” என்றார்.
இவைதான், ஓர் அணுஆயுத சக்தியான ரஷ்யாவை நேட்டோ போருக்குள் இழுக்கும் நிலைமைகளாகும். இத்தகைய ஒரு தாக்குதல் தொடங்கினால், அதிவலது உக்ரேனிய ஆயுதக் குழுக்கள் கைப்பற்றுவதைத் தடுக்க DPR படைகளுக்கு அனேகமாக ரஷ்ய இராணுவ உதவித் தேவைப்படலாம், இந்த அதிவலது உக்ரேனிய ஆயுதக் குழுக்கள், ரஷ்யர்களைக் கொல்லவும் மற்றும் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகே ரஷ்ய மொழி பேசும் உக்ரேனிய நகரங்கள் மீது குண்டுவீசவும் அழைப்பு விடுக்கின்றன. ஆனால் இதற்கு எதிராக மாஸ்கோ தலையீடு செய்தால், அது நேட்டோ போர் பிரச்சாரத்திற்கு அடித்தளங்களை வழங்கும் என்பதுடன், DPR க்கு ரஷ்ய உதவிகளை உக்ரேன் மீதான ஒரு 'படையெடுப்பாக' கண்டிக்கின்றன.
அதிகரித்து வரும் ஓர் அணுவாயுத உலகப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே முன்பினும் அதிக தீர்க்கமான கேள்வியாகும். அதை ரஷ்ய தேசியவாத, இராணுவவாதத்தின் அடிப்படையில் எதிர்க்க முடியாது, அதன் முழுமையான சரணடைவு அல்லது முற்றுமுதலான போர் என்ற மாற்றீடுகளை மட்டுமே ஏகாதிபத்தியம் அதற்கு முன்னால் வைத்துள்ளது. தொழிலாள வர்க்கத்தில் நிலவும் இராணுவவாதத்திற்கான பரந்த எதிர்ப்பு சர்வதேச அடித்தளத்தில், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான ஒரு போராட்டத்தில் அணித்திரட்டப்பட வேண்டும்.