மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஏறக்குறைய 70,000 மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (MSRTC) தொழிலாளர்கள் அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் நிர்வாகத்தின் கொடூரமான பழிவாங்கல்களுக்கு மத்தியிலும், ஆறு வார கால வேலைநிறுத்தத்தை உறுதியுடன் தொடர்கின்றனர். 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இடைநீக்கம் செய்தல், 2,250 தொழிலாளர்களை தொலைதூர இடங்களுக்கு இடமாற்றம் செய்தல், குறைந்தபட்சம் 2,300 தினசரி கூலித் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் கடுமையான மகாராஷ்டிரா அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (MESMA) அமல்படுத்துவதாக திரும்ப திரும்ப அச்சுறுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா அரசுக்குச் சொந்தமான பேருந்து நிறுவனத்தில் தொழிலாளர்கள் நவம்பர் 3 நள்ளிரவில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் 18,500 பேருந்துகள் அனைத்தும் ஓடாமல் நிறுத்தப்பட்டன. பேருந்து ஓட்டுநர்கள், டிக்கெட் சேகரிப்பாளர்கள், மெக்கானிக்கள் மற்றும் உதவி ஊழியர்களும் எந்தவொரு வேலை நிறுத்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்றும், அதே போல் அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் 28 தொழிற்சங்கங்களையும் சட்டவிரோதமானது என்றும் அறிவித்த பம்பாய் உயர் நீதிமன்றத்தை மீறி இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். குறித்த தொழிற்சங்கங்கள், அக்டோபர் 27 அன்று மகாராஷ்டிர போக்குவரத்து மந்திரி அனில் பராப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது தொழிலாளர்களின் பிரதான கோரிக்கையான MSRTC முழுமையாக மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பதை கூட முன்வைக்க மறுத்துவிட்டதுடன் வேலை நிறுத்தத்தை தடை செய்த நீதிமன்ற உத்தரவுக்கு அடங்கிப் போகுமாறு தொழிலாளர்களை கேட்டுக்கொண்டன.
மாநில அரசாங்கத்துடன் MSRTC இணைப்பதன் மூலம், நிர்வாகம் மற்றும் அதன் செயல்பாடுகளை தனியார்மயமாக்கும் மகாராஷ்டிர அரசாங்கத்தின் திட்டங்களை எதிர்க்க வேலைநிறுத்தக்காரர்கள் முற்படுகின்றனர். MSRTC போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களை விட, மாநில அரசு ஊழியர்களுக்கு தொழில் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகள் உள்ளன.
தனது நடவடிக்கைகளால் மதிப்பிழந்து போன தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தத்தின் போது பெரும்பாலும் அமைதிகாத்து, தங்களது இயலாமையையும் பெருநிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களை கண்காணிக்கும் அமைப்பாக தங்களது வகிபாகத்தையும் காட்சிப்படுத்தியுள்ளன.
தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன என்ற உண்மையை MSRTC இன் நிர்வாக இயக்குனர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் உளறி இருந்தார். “தொழிலாளர்களின் தன்னிச்சையான மற்றும் தன்னார்வ வேலைநிறுத்தம் என்று அனைவரும் கூறுகின்றனர்; இங்கு தலைமைத்துவம் இல்லை என்று தெரிகிறது. பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு பொறுப்பான தலைவர் தேவை. தலைமைத்துவம் இல்லாததால், வேலைநிறுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு தள்ளுவதற்கு அதிகாரத்துவ தொழிற்சங்க எந்திரங்களை நிர்வாகம் நம்பியிருக்க முடியாது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஒரு பேருந்து ஓட்டுநர் வேலைநிறுத்தம் செய்பவர்கள் மத்தியில் காணப்படும் போர்க்குணமிக்க மனநிலையை வெளிப்படுத்தினார். 'எங்கள் போராட்டம் நீதிக்கானது, இணைப்பதற்கான (எங்கள்) கோரிக்கை நிறைவேறும் வரை நாங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடருவோம்' என்று அவர் அறிவித்தார். இந்த வேலைநிறுத்தத்தால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம், ஆனால் இதை மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும்: நாங்கள் இப்படிப் போராடி இறக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் [நாங்கள்] வேலைநிறுத்தத்தை கைவிட மாட்டோம்.”
கடந்த 43 நாட்களாக வேலைநிறுத்தத்தைத் தக்கவைப்பதில் தொழிலாளர்கள் மிகுந்த துணிச்சலையும் உறுதியையும் காட்டினாலும், அவர்களின் போராட்டம் பெரும் ஆபத்தில் உள்ளது. ஏனென்றால், தொழிலாள வர்க்கத்திற்காக பேசுவதாகக் கூறும் தொழிற்சங்கங்கள் மற்றும் தன்னை 'இடது' கட்சிகள்” என்று சொல்லக் கூடிய அமைப்புகள், MSRTC தொழிலாளர்களின் போராட்டத்தை திட்டமிட்டுத் தனிமைப்படுத்துகின்றன.
இதன் விளைவாக, MSRTC நிர்வாகமும் பாசிச சிவ சேனா தலைமையிலான, சமீப காலம் வரை இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய அரசாங்கத்தின் விரும்பத்தக்க கட்சியான காங்கிரசும் அடங்கிய முக்கட்சி மகாராஷ்டிர அரசாங்கமும், தொழில்களை அழிக்கும் போரை சுதந்திரமாக நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தல்கள், பழிவாங்கல்கள் மற்றும் மோசமான ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் பொருளாதார நெருக்கடிகளையும் முன்நிலைப்படுத்தி அதிக எண்ணிக்கையிலானவர்களை வேலைக்குத் திரும்புவதற்கு அழுத்தம் கொடுத்து, இறுதியில் வேலைநிறுத்தம் வீழ்ச்சியடைய வழிவகுக்கின்றனர்.
சமீப நாட்களில் அதிக பேருந்துகளை ஓடவைப்பதில் நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூற்றுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை என்றாலும், நவம்பர் 4 அன்று வெளிநடப்பு செய்த 93,000 தொழிலாளர்களில் 21,370 பேர் இப்போது வேலைக்குத் திரும்பிவிட்டனர் என்றும் அதன் 250 பேருந்து நிலையங்களில் பாதி ஓரளவு செயல்படுவதாகவும் MSRTC இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது.
மாநில போக்குவரத்து அமைச்சர் அனில் பராப், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இடைவிடாத மிரட்டல்களை விடுத்து வருகிறார். டிசம்பர் 10 அன்று, டிசம்பர் 13 திங்கட் கிழமைக்குள் வேலைக்குத் திரும்புமாறு தொழிலாளர்களுக்கு இறுதி எச்சரிக்கையை அவர் விடுத்தார். தொழிலாளர்கள் 'அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைக்குத் திரும்புவதைத் தடுப்பதாக' குற்றம் சாட்டிய பின்னர், அரசாங்கம் MESMAவின் கீழ் 'நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது' என்று அவர் அறிவித்தார்.
MESMAவின் கீழ், மொத்தமாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களைக் கைது செய்து தடுத்து வைக்க காவல்துறைக்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்படும். சிவசேனா தலைமையிலான அரசாங்கம் பராபின் அச்சுறுத்தலைச் செயல்படுத்தவில்லை என்றாலும், அது பாய்வதற்கும், மிகவும் போர்க்குணமிக்க வேலை நிறுத்தக்காரர்களைக் கைது செய்யவும் மற்றும் வேலைநிறுத்தத்திற்கு ஒரு மரண அடியை கொடுக்கவும் சந்தேகத்திற்கு இடமின்றி நேரம் பார்த்து காத்திருக்கின்றது.
வேலைநிறுத்தம் செய்பவர்கள் மீது பொது அனுதாபமும், பொதுவாக, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மத்தியில் பிரமாண்டமான சமூக கோபமும் இருப்பதை அது அடையாளம் கண்டிருப்பதாலேயே, அது இன்றுவரை அவ்வாறு செய்யவில்லை.
கோவிட்-19 தொற்றுநோயை இந்திய ஆளும் வர்க்கம் குற்றவியல் ரீதியாக தவறாகக் கையாண்டதன் விளைவாக, மில்லியன் கணக்கானவர்கள் இறந்துள்ளனர், மேலும் இலட்சக்கணக்கானோர் வறுமை மற்றும் பசியில் ஆழமாக மூழ்கியுள்ளனர். இந்தியா முழுவதிலும் உள்ள பல தொழிலாளர்களைப் போலவே, MSRTC தொழிலாளர்களும் தொற்றுநோய்களின் போது ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் கடத்தியுள்ளனர். தொற்றுநோய்களின் போது அவர்களின் குடும்பங்களுக்கு உணவளிக்கவோ அல்லது அவர்களுக்கு சரியான சுகாதார சேவையை வழங்கவோ முடியாமல், குறைந்தது 40 MSRTC தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அவர்கள் வெற்றிபெற வேண்டுமானால், இந்திய பெருவணிகம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும் வர்க்கப் போர் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான, தொழிலாள வர்க்கத்தின் தொழில்துறை மற்றும் அரசியல் எதிர்த்தாக்குதலின் முன்னணிப் படை ஆகி, தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
இங்கு MSRTC வேலைநிறுத்தக்காரர்கள் தனியார்மயமாக்கலுக்கு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உலகளவில் இணைக்கப்பட்ட தொழில்துறை நிறுவனங்கள் இரண்டிலும் ஆபத்தான முறையில் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும் எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்கு அறைகூவல் விடுக்கும் போது, அவர்கள் வெகுஜன ஆதரவை வெல்வார்கள்.
பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான மத்திய அரசாங்கம் எஞ்சியிருக்கும் பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கும், அதன் 'தேசிய பணமாக்க தொடர்' திட்டத்தின் கீழ் பொதுத்துறை உள்கட்டமைப்பின் பெரும் பகுதிகளை பெருவணிகத்தின் நிர்வாகத்தின் கீழ் வைப்பதற்கும் மற்றும் அதன் தொழிலாளர் சட்ட 'சீர்திருத்தத்தின்' கீழ் ஒப்பந்த தொழிலாளர்களை மேலும் ஊக்குவிப்பதற்கும் எதிராக கடந்த ஆண்டில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று, மகாராஷ்டிராவில் 60,000 பேர் உட்பட 900,000 வங்கி ஊழியர்கள் வரும் ஆண்டில் இரண்டு வங்கிகளை தனியார்மயமாக்கும் பாஜக அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக இரண்டு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
கடந்த வாரம், 23,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட, 68,000 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், தெலுங்கானாவில், அரசுக்குச் சொந்தமான சிங்கரேணி நிலக்கரி நிறுவனம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது பாஜக அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நான்கு நிலக்கரி சுரங்கங்களை விற்றதை எதிர்த்து மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கத்தை அமைக்கும் பஞ்சாபில், பஞ்சாப் ரோடுவேஸ், பன்பஸ் மற்றும் PEPSU சாலை போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பஞ்சாப் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் அவர்களின் வேலையை 'முறைப்படுத்துதல்', அதாவது தங்களை நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும் என்று கோருகின்றனர்.
ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்புகள், முறையே இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) ஆகியவை MSRTC வேலைநிறுத்தத்தில் இழிவான பாத்திரம் ஆற்றுகின்றன. MSRTC தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முயற்சிக்காமை ஒருபுறம் இருக்க, வேலைநிறுத்தத்தை விளம்பரப்படுத்த அவர்கள் எதுவும் செய்யவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஆங்கில மொழி வார இதழான People’s Democracy யில், சிவசேனா தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த வேலைநிறுத்தம் பற்றி ஒரு கட்டுரை கூட வெளியிடவில்லை. இந்தியாவின் தற்போதைய அதி-வலது பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு ஒரு மாற்றீடாக இன்னொரு வலதுசாரி அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவரும் தங்களது முயற்சியின் பாகமாக, சிவ-சேனா தலைமையிலான வலதுசாரி அரசாங்கத்தை ஸ்ராலினிஸ்டுகள் ஆதரித்தனர்.
மேலும் படிக்க
- தென்னிந்தியாவில் இலட்சக்கணக்கான விசைத்தறி இயக்குபவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்
- ஜம்மு காஷ்மீர் மின்வாரிய ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க இந்திய இராணுவம் குவிக்கப்பட்டது
- இந்தியா: 11 நாள் வேலை நிறுத்தத்தை மாவோயிச தலைமையிலான தொழிற்சங்கம் நிறுத்தியதால் மதர்சன் வாகன தொழிலாளர்கள் கோபம் கொண்டுள்ளனர்