முன்னோக்கு

நடத்தப்பட வேண்டிய போர், கோவிட்-19 க்கு எதிரான போராக இருக்க வேண்டும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முதலாளித்துவ அரசாங்கங்களும் பெருநிறுவன ஊடகங்களும் கோவிட்-19 தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவிக்க முயற்சிக்கின்ற போதிலும், வைரஸ் உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி, இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மிகுந்த தொற்றும் தன்மையுள்ள ஓமிக்ரோன் மாறுபாடு டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து உலகளவில் 140 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, என்றாலும் உண்மையான நோய்தொற்று எண்ணிக்கை 1 பில்லியனுக்கு அதிகம் என்று நம்பப்படுகிறது. இது நோயாளிகளின் மருத்துவமனை அனுமதிப்புக்களில் உச்சபட்ச அதிகரிப்பையும், இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட உச்சபட்ச அதிகரிப்பையும் விளைவித்துள்ளது.

நவம்பர் 26, 2021, வெள்ளிக்கிழமை அன்று, கலிஃபோர்னியாவில் உள்ள சிட்டாடெல் விற்பனைப் பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் நுழைய கறுப்பு வெள்ளி தினத்தன்று சாமான்கள் வாங்குபவர்கள் முகக்கவசம் அணிந்து வரிசையில் காத்திருக்கின்றனர். (AP Photo/Ringo H.W. Chiu, File)

வோல்டோமீட்டரின் கூற்றுப்படி, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலகளவில் கிட்டத்தட்ட 5.9 மில்லியன் மக்கள் கோவிட்-19 நோயால் இறந்துள்ளனர், மேலும் உலகளவில் ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் அதனால் இறக்கின்றனர். அமெரிக்காவில் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை புதன்கிழமை 952,240 ஐ எட்டியது, மேலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2034 பேர் இறக்கின்றனர். ரஷ்யாவில், கோவிட்-19 நோயால் இதுவரை 342,383 பேர் இறந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளது, மேலும் தினமும் 702 பேர் இறக்கின்றனர். உக்ரேனில், கோவிட்-19 க்கு இதுவரை 103,565 பேர் பலியாகியுள்ளனர், மேலும் இப்போது தினமும் 230 பேர் வீதம் இறக்கின்றனர். ஐரோப்பா முழுவதும், தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 1.7 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர்.

உலகளவில் நோய்தொற்றுகளையும் இறப்புக்களையும் கண்காணிக்க போதுமான பொது சுகாதார ஆதாரங்கள் இல்லாததால், இந்த கொடூரமான புள்ளிவிபரங்கள் கூட பரந்தளவில் குறைத்து மதிப்பிடப்பட்டவையாக அறியப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், உலகளவில் 2.1 மில்லியன் அதிகப்படியான இறப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அது ஜனவரி இறுதியில் ஒரு நாளைக்கு 44,600 என்ற உச்சத்தை எட்டியிருப்பதாகவும் எக்னாமிஸ்ட் செய்தியிதழ் மதிப்பிட்டுள்ளது.

மொத்தத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 19.5 மில்லியன் மக்கள் தேவையின்றி இறந்துள்ளனர், அதாவது இது தோராயமாக முதல் உலகப் போரின் போதான நான்கு ஆண்டு இறப்பு எண்ணிக்கைக்கு சமமானதாகும். இதில், 1.1 மில்லியன் அமெரிக்கர்கள், 1.2 மில்லியன் ரஷ்யர்கள் மற்றும் 220,000 உக்ரேனியர்கள் அடங்குவர்.

இந்த ஆழமடைந்துவரும் உலகளாவிய பேரழிவின் மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் ரஷ்யாவுடனான ஒரு போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது, இது கட்டுப்பாட்டை மீறி ஒரு அணுசக்தி மூன்றாம் உலகப் போராக வெடிக்க அச்சுறுத்துகிறது. செவ்வாயன்று ஒரு உரையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்யாவை கடுமையாக அச்சுறுத்தினார்: “எந்த தவறும் செய்யாதீர்கள், நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் அமெரிக்க சக்தியின் முழு பலத்தை கொண்டு அமெரிக்கா பாதுகாக்கும். ஒரு நேட்டோ நாட்டுக்கு எதிரான தாக்குதல் என்பது நம் அனைவருக்கும் எதிரான தாக்குதலாகும்.”

ஒரு சிறு ஆதாரத்தைக் கூட வழங்காமல், ரஷ்யா உக்ரேனுக்கு எதிராக ‘தேர்ந்தெடுக்கப்பட்ட போரை’ தயார் செய்கிறது என்று பைடென் ரஷ்யாவை குற்றம்சாட்டினார், அதை இரண்டாம் உலகப் போருடன் ஒப்பிடுகிறார், அதை அவர் 'தேவையான போர்' என்று விவரித்தார். உண்மையில், தொற்றுநோய்க்கு எதிரான 'தேவையான போரை' நடத்துவதற்கு பதிலாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் உண்மையில் ரஷ்யாவிற்கு எதிராக 'தேர்ந்தெடுக்கப்பட்ட போரை' தயார் செய்து வருகிறது.

இந்த வெறித்தனமான போர் முனைப்பில், இராணுவச் செலவுக்கு எந்தத் தொகையும் பெரிதாக இல்லை. 2014 இல் உக்ரேனில் தீவிர வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தியதன் பின்னர், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் ரஷ்யாவுடனான போருக்கு தயார்படுத்தும் வகையில் உக்ரேனிய அரசாங்கத்தின் ஆயுத பலத்தை பெருக்க பில்லியன் கணக்கான டாலர்களை வாரியிறைத்தன. அதில், 2014-2019 காலகட்டத்தில் 20 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட மதிப்பிலான இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியதும் அடங்கும்.

1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து, யூகோஸ்லாவியா, சேர்பியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் பல நாடுகள் உட்பட பல வெளிநாடுகளில் அமெரிக்கா தொடர்ச்சியான தலையீடுகளில் ஈடுப்பட்டுள்ளது. இந்த போர்களுக்கான மொத்த கூட்டுச் செலவும் இராணுவச் செலவும் பல பத்து டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு மேற்கொள்ளப்பட்டது.

புதன்கிழமை அன்று, 2023 வரவு-செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்காக 770 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டை பைடென் கோருவார் என்று செய்தி வெளியாகியுள்ளது, இதன் முதன்மை முன்னுரிமையாக குண்டுவீச்சு விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தரையிறங்கும் ஏவுகணைகள் ஆகியவற்றின் அணுசக்தி 'முக்கூட்டு' நவீனமயமாக்கலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, 'அணுசக்தி நவீனமயமாக்கல் ஒரு 'அவசியம்' எனக் கருதப்படுகிறது, மேலும் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான எந்தவொரு சாத்தியமான எதிர்கால போரையும் எதிர்த்துப் போராடுவதற்கு ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து முதலீடு செய்ய பென்டகன் திட்டமிட்டுள்ளது.'

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பு, நாடு தழுவிய அளவில் சமூக சேவைகள் மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்புகளின் பாரிய அழிவுடன் ஒத்தவகையில் நடந்தேறியுள்ளது. பல தசாப்தங்களாக சிதைந்துபோயிருந்த முழு சுகாதார அமைப்பும், இப்போது தொற்றுநோயின் எடையின் கீழ் சரிந்து கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியப் போரை நடத்துவதற்கு ஆளும் உயரடுக்குகள் பெரியளவில் விலைகொடுக்க தயாராகவுள்ள அதேவேளை, கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போர் என்று வருகையில் அவர்கள் வெகு காலத்திற்கு முன்பே கூடி வாழ்வதற்கான சமாதானக் கொடியை உயர்த்தியுள்ளனர்.

ஏறக்குறைய ஒவ்வொரு முன்னேறிய முதலாளித்துவ நாட்டிலும், ஓமிக்ரோன் எழுச்சியின் போது கோவிட்-19 க்கு முழுமையாக சரணடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் அனைவரும் மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளைக் கொண்டு தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து பாசாங்குகளையும் கைவிட்டதுடன், 2020 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப், ஜெய்ர் போல்சொனாரோ, போரிஸ் ஜோன்சன் மற்றும் பிற தலைவர்கள் முன்னெடுத்துச் சென்ற “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும், இந்த வைரஸ் தொற்று ‘நிரந்தர’ நோயாக மாறிவிட்டது, எனவே அதனால் கவலைப்பட ஒன்றுமில்லை என்பதான விஞ்ஞானபூர்வமற்ற கூற்றுக்கள் பரப்பப்பட்டு இந்த கொலைவெறி உத்தி திணிக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்காவில் கோவிட்-19 ‘நிரந்தர’ நோயாகும் என்ற யதார்த்ததை நோயெதிர்ப்பு நிபுணர் டாக்டர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் தனது திங்கட்கிழமை போட்காஸ்ட் பதிவில் அப்பட்டமாக விளக்கினார், அதில் அவர், “பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்திற்கு இரண்டு முறை நோய்தொற்றுக்கு ஆளாவதையும், மேலும் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 200,000 முதல் 250,000 வரையிலும் அல்லது அதற்கு மேலும் இறப்புக்கள் நிகழப்போவதையும் நாம் எதிர்பார்க்கலாம்”. இத்தகைய அளவிலான மறுதொற்று மற்றும் இறப்புகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தொடரலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

நிரந்தர வெகுஜன நோயுற்ற தன்மை மற்றும் இறப்புகளுக்கு கூடுதலாக, உலகெங்கிலுமான ‘நிரந்தர’ கோவிட்-19 நோய் பாதிப்பாளர்களில் பல நூறு மில்லியன் பேர் நெடுங்கோவிட் பாதிப்பாளர்களாக மாறுவார்கள். இந்த வைரஸ் மனித உடலில் ஏற்படுத்தக்கூடிய பயங்கரமான நீண்டகால தாக்கங்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் ஒரு அமைப்பு, மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் பல உறுப்புக்களை சேதப்படுத்தும் எனக் காட்டுகிறது.

இந்த நோய்தொற்று ‘நிரந்தரமானது’ என்ற ஊகத்தின் அடிப்படையில் ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை” பின்பற்றுவதானது, கோவிட்-19 நோயின் மிகக் கடுமையான பாதிப்புகளால் மிக அதிக எண்ணிக்கைகளில் இறக்கும் அல்லது பாதிக்கப்படும் வயோதிகர்களையும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களையும் வேண்டுமென்றே கொல்வதற்கு சமமான ஒரு தனித்துவமான கருணைக்கொலை கொள்கையை ஒத்ததாகும். இது ஜேர்மனியில் நாஜி ஆட்சியின் குற்றங்களை நினைவுகூருகிறது, இது பல்லாயிரக்கணக்கான நாள்பட்ட நோயுற்றவர்களைக் கொன்றது, அவர்களின் வாழ்க்கை 'வாழ்வதற்கு தகுதியற்றது' என்று கருதப்பட்டது.

பைடென் நிர்வாகம் உள்நாட்டில் கருணைக்கொலை கொள்கைகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதும், மற்றும் உக்ரேனின் அசோவ் படையணி போன்ற பாசிச துணை இராணுவக் குழுக்களுக்கு ஆதரவளிப்பதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களை போன்றதாகும். 1930 களில் நிகழ்ந்தது போல், இப்போது தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியானது, பாசிசம் மற்றும் போரின் பக்கம் திருப்பம் எடுக்கத் தூண்டுகிறது.

இராணுவ சித்தாந்தவாதி கார்ல் வோன் கிளாவுஸ்விட்ஸ் (Carl von Clausewitz) பிரபலமாக எழுதியது போல், “போர் என்பது வேறு வழிகளில் அரசியலை தொடர்வதாகும்.” ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான தீவிர முனைப்பானது தீர்க்க முடியாத உள்நாட்டு நெருக்கடியில் இருந்து எழுகிறது, மேலும் முதலாளித்துவ வர்க்கத்தால் கோரப்பட்ட அதிகரித்தளவிலான பாசிச தொற்றுநோய் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது. மேலதிக பாரிய இறப்புக்களுக்கும் பாதிப்புக்களுக்கும் அச்சுறுத்துவதான, மற்றும் அணுவாயுதப் படுகொலைக்கான சாத்தியக்கூறுகளை கொண்டதுமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றகரமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் எதிர்க்கப்பட வேண்டும்.

போருக்கான தயாரிப்புகளுக்கு எதிரான ஒரு முக்கியமான அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வாரத்தின் தொடக்கத்தில் எழுதியது:

இப்போதைய ஒரு நெருக்கடி ஒரு அபாய எச்சரிக்கையாகும். ஏகாதிபத்தியம் நாசத்தை நோக்கி வழுக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உக்ரேனில் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கு அணிதிரட்டப்பட்டாக வேண்டிய சமூக சக்தியாக சர்வதேசத் தொழிலாள வர்க்கம் உள்ளது. போருக்கு எதிரான போராட்டமானது சுரண்டல் மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களின் கொலைபாதக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைகள் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. ஏகாதிபத்தியமும் நிதி மூலதனமும் தமது கொள்ளைகளையும் இலாபங்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தனை மரணங்களையும் ஏற்றுக்கொள்ளும். பெருந்தொற்றில் மில்லியன் கணக்கானோர் இறந்திருக்க அவர்களுடன் சேர்த்து போரிலும் மில்லியன் கணக்கானோர் இறக்கக் கூடாது. ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான போர்-எதிர்ப்பு இயக்கத்தை தொழிலாளர்கள் கட்டியெழுப்புவது மிகவும் அவசரமானதாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கம் ரஷ்யா மீதானது அல்ல, தொற்றுநோய் மீதான போருக்கு அறிவிக்க வேண்டும்! போருக்கு எதிரான ஒரு பாரிய இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான மற்றும் தொற்றுநோயை நிறுத்துவதற்கான போராட்டத்திற்கு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் போராட்டங்களை ஒரு வெற்றிகரமான முடிவை நோக்கி வழிநடத்தும் வகையில் ஒரு புரட்சிகர சோசலிச தலைமையை உருவாக்குவது தேவைப்படுகிறது.

Loading