மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கிழக்கு உக்ரேனின் இரண்டு பிராந்தியங்களின் சுதந்திரத்தை அங்கீகரித்து திங்கட்கிழமை காலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் எடுத்த முடிவுகளைப் பிரதான முதலாளித்துவ சக்திகள் கண்டிப்பதற்காக, அன்றைய நாள் மாலையே ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை ஓர் அவசர கூட்டத்தை கூட்டியது.
குண்டு துளைக்காத இரண்டு உக்ரேனிய இராணுவ கவச வாகனங்கள் அதன் எல்லைகளுக்குள் நுழைந்ததாகவும், அவை அழிக்கப்பட்டதில் ஐந்து உக்ரேனிய சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும், திங்கட்கிழமையே, ரஷ்ய அரசாங்கம் அறிவித்தது. மேலும் உக்ரேனிய அரசாங்கத்தின் பாரிய இராணுவ குண்டுவீசுக்களின் இலக்கில் உள்ள கிழக்கு உக்ரேனுக்குள் தனது இராணுவப் படைகளை அனுப்புவதாகவும் அறிவித்தது.
இந்த அபிவிருத்திகள், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் நேட்டோ இராணுவக் கூட்டணியில் உள்ள பிரதான ஐரோப்பிய சக்திகள் சம்பந்தப்படும் முற்றுமுதலான போருக்குள், உக்ரேன் மோதலை அபிவிருத்தி செய்வதில் ஒரு குறிப்பிடத்தக்க தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.
இத்தகைய நெருக்கடி நிலைமைகளின் கீழ், ஊடகங்களில் இடைவிடாமல் ஊக்குவிக்கப்படும் இராணுவவாத பிரச்சாரத்தால் அடித்துச் செல்லப்படாமல் இருப்பது அவசியம். இதற்கு, தற்போதைய அபிவிருத்திகளை அவற்றின் பரந்த வரலாற்று உள்ளடக்கத்தில் நிறுத்த வேண்டியுள்ளது. தற்போதைய மோதல் ஒரே இரவில் எழுந்தது அல்ல. இது, நேட்டோவை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்த இடைவிடாமல் உழைத்துள்ள, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியான ஒட்டுமொத்த ஆத்திரமூட்டல்கள் மற்றும் நடவடிக்கைகளின் விளைவாகும்.
ஆறாண்டுகளுக்கு முன்னர், பெப்ரவரி 18, 2016 இல், 'சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்' என்ற ஓர் அறிக்கையை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்டது, அது தற்போதைய இந்த போர் அபாயத்தைக் குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் முன்கணித்தது.
உலக சோசலிச வலைத் தளம் இந்த அறிக்கையின் சில பகுதிகளை மீண்டும் இங்கே வழங்குகிறது. இப்போது வெடித்து வரும் அபிவிருத்திகளை இந்தளவுக்குத் தெளிவாக அந்த அறிக்கையால் முன்கணிக்க முடிந்தது என்ற உண்மையே கூட, பைடென் நிர்வாகத்தின் போர் அச்சுறுத்தல்கள் “ரஷ்ய ஆக்கிரமிப்புக்கும்' மற்றும் உக்ரேனின் 'இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டை' பாதுகாப்பதற்குமான உடனடி விடையிறுப்பு என்ற அதன் வாதங்களைப் பலமாக மறுத்தளிக்கிறது. தற்போதைய இந்த நெருக்கடிக்குப் பின்னால் உள்ள உந்துசக்திகளையும் மற்றும் மூன்றாம் உலகப் போர் அபாயத்தைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்த அறிக்கையை மிகவும் கவனமாக படிக்க வேண்டும்.
***
பெப்ரவரி 18, 2016 இல் வெளியிடப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் 'சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்' அறிக்கையில் இருந்து சில பகுதிகள்.
அமெரிக்கா 'பயங்கரவாதத்தின் மீதான போரை” ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த ஒட்டுமொத்த உலகமும் இடைவிடாது ஏகாதிபத்திய வன்முறையின் விரிந்து செல்லும் சுழலுக்குள் இழுபட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட படையெடுப்புகளும் தலையீடுகளும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியாவை நாசம் செய்திருக்கின்றன. ரஷ்யாவுடனான போர் தயாரிப்புக்காக நேட்டோ பாரியளவில் மறுஆயுதமயப்படுத்தும் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது…
உலகம் ஒரு பேரழிவுகரமான உலகளாவிய மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களின் தலைவர்களது அறிக்கைகள் நாளுக்குநாள் போர்வெறியோடு அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. உக்ரேன் மற்றும் சிரியாவில் நடக்கும் பினாமிப் போர்கள் நேட்டோவையும் ரஷ்யாவையும் ஒரு முழு-அளவிலான மோதலின் மிக அருகாமையில் கொண்டு வந்துள்ளது… 1914 இன் முதலாம் உலகப் போர் மற்றும் 1939 இன் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, அரசியல் தலைவர்களும் இராணுவத் திட்டமிடலாளர்களும், பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு போர் வெகு காலத்திற்குப் பின்னரே சாத்தியமாகும் என்றில்லாமல், மாறாக அதிக சாத்தியம் உள்ளது, இன்னும் சொன்னால், தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்…
இந்த போர் முனைவு, உலக மேலாதிக்க சக்தியாக தனது நிலையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கு அமெரிக்கா மேற்கொள்கின்ற பிரயத்தனங்களில் மையம் கொண்டிருக்கிறது. 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது உலகெங்கும் கடிவாளமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கப்பட்டது. அது ஏகாதிபத்திய பிரச்சாரவாதிகளால் 'வரலாற்றின் முடிவாகவும்,” சவால்செய்ய முடியாத அமெரிக்காவின் அதிகாரம் வோல் ஸ்ட்ரீட்டின் நலன்களுக்காக ஒரு “புதிய உலக ஒழுங்கை” கட்டளையிடும் ஒரு 'ஒற்றைத்துருவ காலக்கட்டத்தை' உருவாக்கி உருவாக்கி இருந்ததாகவும் போற்றப்பட்டது. சோவியத் ஒன்றியமானது, ஐரோப்பாவின் கிழக்கு எல்லைகள் தொடங்கி பசிபிக் கடல் வரையிலும் உலகின் ஒரு பரந்து விரிந்த பகுதியை உள்ளடக்கியிருந்தது. இவ்வாறாய், பலம் இழந்திருந்த ரஷ்யா வசம் இருந்த யுரேசியாவின் பரந்த பிராந்தியங்களும் அத்துடன் புதிதாக சுதந்திரமடைந்திருந்த மத்திய ஆசிய அரசுகளும் மீண்டும் “முற்றுமுழுதாக”, பெருநிறுவனச் சுரண்டலுக்கும் சூறையாடலுக்கும் திறந்து விடப்பட்டது. சீனாவில் ஸ்ராலினிஸ்டுகளால் முதலாளித்துவம் மறுபுனருத்தானம் செய்யப்பட்டமை, 1989 ல் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீதான அதன் போலிஸ்-அரசு அடக்குமுறை மற்றும் நாடுகடந்த முதலீடுகளுக்கு “சுதந்திர வணிக மண்டலங்கள்” திறந்து விடப்பட்டமை ஆகியவை மலிவு உழைப்பின் ஒரு பரந்த கையிருப்பை கிடைக்கச் செய்தது…
ஐரோப்பா மற்றும் ஆசியா இரண்டு இடங்களிலுமே இத்தகைய புவிமூலோபாயத் திட்டங்கள் பயன்படுத்தப்படுவது தெளிவாய் தெரிகிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க மற்றும் கூட்டாளிகளது இராணுவ பலம் கொஞ்சம்கொஞ்சமாய் பெருக்கப்பட்டுச் செல்வது நடந்தேறிக் கொண்டிருக்கிறது, அதேவேளையில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ நிலைநிறுத்தல்களை ரஷ்யா முகம்கொடுத்திருக்கிறது, அத்துடன் பால்டிக் அரசுகள் மற்றும் உக்ரேனின் அதிதீவிர-தேசியவாத ஆட்சிகளுக்கு அமெரிக்கா இராணுவ-உதவிக்கு வாக்குறுதியளிக்கிறது. பெய்ஜிங் மற்றும் ரஷ்யாவின் அணுஆயுத அரசுகளை தாமதமின்றி விரைவில் மண்டியிடச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் வந்து சேர்ந்திருக்கிறது. சீனாவையும் ரஷ்யாவையும் அரைக்காலனித்துவ கீழ்ப்படிந்த அரசுகளின் நிலைக்கு குறைப்பதும், “இருதயப் பகுதியை” கட்டுப்படுத்துவதும், உலகை ஆளுவதுமே அமெரிக்காவின் இலக்காக இருக்கிறது…
ஹிட்லரின் மூன்றாம் குடியரசு (Third Reich) வீழ்ந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், ஜேர்மன் ஆளும் வர்க்கமானது, அதன் அரசு ஐரோப்பாவின் கேள்விக்கப்பாற்பட்ட தலைமையாகவும் ஒரு உலக சக்தியாகவும் தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் கோரிக் கொண்டிருக்கிறது. ஜேர்மன் மக்களிடையே போர்-எதிர்ப்பு மனோநிலைகள் ஆழமாய் வேரூன்றி விட்டிருக்கும் நிலையை முகம் கொடுக்கின்ற பேர்லின், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் தனது நலன்களை நிலைநாட்ட இராணுவப் படைகளை நிறுத்தி வருகிறது. மறுஆயுதமயப்படுத்துவதில் அது பணத்தை இறைத்துக் கொண்டிருக்க, ஜேர்மன் ஏகாதிபத்திய இலட்சியங்களுக்கு புத்துயிரூட்டுவதை நியாயப்படுத்துகின்ற நோக்கத்துடன் நாஜி ஆட்சியின் குற்றங்களுக்கு வக்காலத்துவாங்கும் குரல்கள் அரசியல் ஸ்தாபனங்கள், ஊடகங்கள் மற்றும் கல்வி ஸ்தாபனங்கள் எங்கும் முன் கொண்டு வரப்படுகின்றன…
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது பங்காக, அமெரிக்க வீழ்ச்சியை ஒரு வாய்ப்பாகக் கருதி இன்னமும் இலண்டன் மாநகரை மையமாகக் கொண்டு இயங்கும் வங்கிகள் மற்றும் நிதியங்களது கணிசமான உலகளாவிய நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எண்ணுகிறது. வடக்கு மற்றும் மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் அதன் முன்னாள் காலனித்துவ ஆதிக்க பிரதேச நாடுகளின் மீதான அதன் பிடியை மீண்டும் பெறுவதற்கு முனைந்து கொண்டிருக்கிறது.
முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் நெருக்கடியானது இரண்டு சமரசப்படுத்தவியலாத முன்னோக்குகளை உயர்த்துகிறது. முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையுடன் உடன்பிறந்ததாய் இருக்கக்கூடிய பொருளாதார மற்றும் புவிமூலோபாய நலன்களின் மோதலை, ஏகாதிபத்தியமானது, அதன் அத்தனை எதிரிகள் மீது ஒற்றை உலக மேலாதிக்க சக்தியாக வெற்றி காண்பதன் மூலம், கடந்து வர முனைகிறது. இதுதான் ஏகாதிபத்திய புவிமூலோபாய கணக்கீடுகளின் நோக்கமாகும், உலகளாவிய போர் அதன் தவிர்க்கவியலாத விளைபொருளாக உள்ளது.
முதலாளித்துவ வர்க்கத்தின் புவிஅரசியலுக்கு எதிராய், ஒட்டுமொத்தமாய் தேசிய-அரசு அமைப்புமுறைக்கு ஒரு முடிவுகட்டப்படுவதையும் சமத்துவம் மற்றும் விஞ்ஞானபூர்வமான திட்டமிடலை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதையும் குறிக்கின்ற உலக சோசலிசப் புரட்சிக்கான வெகுஜன அடித்தளத்தை புறநிலையாக கொண்டுள்ள சமூக சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கம் அமைந்திருக்கிறது. ஏகாதிபத்தியமானது முதலாளித்துவ ஒழுங்கை போரின் மூலமாகக் காப்பாற்ற விழைகிறது. தொழிலாள வர்க்கம் உலக நெருக்கடியை சமூகப் புரட்சியின் மூலமாகத் தீர்க்க முனைகிறது. ஏகாதிபத்திய தேசிய-அரசு புவியரசியலின் எதிர்மறையாக புரட்சிகரக் கட்சியின் மூலோபாயம் அபிவிருத்தி காண்கிறது. ட்ரொட்ஸ்கி விளக்கியதைப் போல, புரட்சிகரக் கட்சியானது “போரின் வரைபடத்தைப் பின்பற்றுவதில்லை, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தையே பின்பற்றுகிறது.”…
ஸ்ராலினிச அதிகாரத்துவம் சோவியத் அரசை அகற்றி தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமை உறவுகளை ஒழித்ததிற்கு பின்னர், அதிலிருந்து எழுந்த செல்வந்த தட்டுக்களின் பிரதிநிதியாகவே ரஷ்ய அரசாங்கம் இருக்கிறது. ”மகா ரஷ்ய” தேசியவாதத்தை அது ஊக்குவிப்பது என்பதே ஸ்ராலினிசத்தின் ஒரு உச்சநிலையான விளைவுதான் என்பதோடு அது மார்க்சிசத்தின் சர்வதேசிய வேலைத்திட்டத்தை வன்முறையாகவும் எதிர்ப்புரட்சிகரமாகவும் மறுதலிப்பதாகவும் இருக்கிறது…
உலகப் பொருளாதாரமும் உலக அரசியலும் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்திருக்கின்றன. கிழக்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டு, சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிசக் கலைப்பின் பின் உச்சம் பெற்ற முதலாளித்துவ வெற்றிக்களியாட்டத்தின் காலம் முடிந்து விட்டது. ஆளும் வர்க்கத்தின் ஒட்டுண்ணித்தனமான செல்வத்திற்கு ஆதாரமாய் இருந்திருக்கக் கூடிய ஊகவணிக சீட்டுக்கட்டு மாளிகை சரிந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை மதிப்புகளின் வீழ்ச்சி என்பது வெறுமனே பங்குஅளவுகளது பணமதிப்பைக் குறைத்துக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்ல, முதலாளித்துவ-ஆதரவு தத்துவவாதிகள் மற்றும் அரசியல் தலைவர்களது மரியாதையையும் நம்பகத்தன்மையையும் கூட தகர்த்துக் கொண்டிருக்கிறது.
***
இரண்டாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய கோவிட்-19 பெருந்தொற்றின் வெடிப்பானது, ஆறாண்டுகளுக்கு முன்னர் ICFI அடையாளங்கண்ட போக்குகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பெருந்தொற்று ஒரு 'தூண்டுதல் நிகழ்வு', இது சமகாலத்திய முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகள் அனைத்தையும் தீவிரப்படுத்துகிறது.
தற்போதைய இந்த நெருக்கடி ஆறாண்டுகளுக்கு முந்தைய ICFI இன் பகுப்பாய்வையும் அந்த அறிக்கை வரையறுத்த தீர்மானங்களையும் இரண்டையுமே உறுதிப்படுத்துகிறது. “முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெருந்திரளான உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து, போருக்கு எதிரான ஒரு சர்வதேச இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும்,” என்று ICFI அறிவித்தது. “போர்வெறி பைத்தியக்காரத்தனத்தை உருவாக்கும் அதே முதலாளித்துவ நெருக்கடி, சமூகப் புரட்சிக்கான தூண்டுதலையும் உருவாக்குகிறது.”
அந்த அறிக்கை போருக்கு எதிரான ஓர் இயக்கத்திற்கு பின்வரும் இன்றியமையா அரசியல் அடித்தளங்களை விவரித்தது:
- போருக்கு எதிரான போராட்டமானது, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கம், மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி முன்நிற்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்க வேண்டும்.
- புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவ எதிர்ப்புத்தனமானதாகவும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும், ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படையான காரணமாக இருக்கின்ற பொருளாதார அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் போருக்கு எதிரான எந்த பொறுப்புணர்ச்சி வாய்ந்த போராட்டமும் இருக்க முடியாது.
- ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும் சுயாதீனமானதாகவும், குரோதமானதாகவும் இருந்தாக வேண்டும்.
- எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது சர்வதேசமயமானதாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக்கூடியதாக இருந்தாக வேண்டும்.
- இதுவே சர்வதேச தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள அவசர அரசியல் பணியாகும்.
சனிக்கிழமை, பெப்ரவரி 26 இல், உலக சோசலிச வலைத் தளம், “கோவிட் ஐ எதிர்ப்போம், உயிர்களைக் காப்பாற்றுவோம்! மூன்றாம் உலக போர் முனைவை நிறுத்து!” என்ற தலைப்பில் ஒரு சர்வதேச இணையவழி கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முக்கிய சர்வதே நிகழ்வில் இன்றே கலந்து கொள்ள திட்டங்கள் வகுத்து, பதிவு செய்யுமாறு உலகெங்கிலுமான நம் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.