மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உக்ரேன் மீதான படையெடுப்பிற்கு இரத்தவெறிபிடித்த பதிலாக, பிரிட்டனின் பழமைவாத அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக ஆதரவளித்துள்ளன.
பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் நேற்று காலை அரசாங்கத்தின் அவசரகால கோப்ரா குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், அது 'இங்கிலாந்தின் பதிலை ஒருங்கிணைக்க', 'உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டிய பொருளாதாரத் தடைகளின் குறிப்பிடத்தக்க தொகுப்பு' உள்ளிட்டதாக இருந்தது.
அன்று காலை ஒரு தொலைக்காட்சி உரையில் ஜோன்சன், 'இங்கிலாந்தின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்காக' உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கியுடன் பேசியதாகக் கூறினார். 'ரஷ்ய பொருளாதாரத்தை சரியான சமயத்தில் முடக்குவதற்கான பொருளாதார தடைகளின் ஒரு பெரிய தொகுப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் உறுதியளித்தார். எங்கள் திட்டம் தெளிவாக உள்ளது; இராஜதந்திர ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, இறுதியில் இராணுவ ரீதியாகவும், விளாடிமிர் புட்டினின் இந்த கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி தோல்வியில் முடிய வேண்டும்” என்றார்.
பாராளுமன்றத்தில் ஜோன்சனின் உரைக்கு முன்னதாக, 10 டவுனிங் தெரு மற்றும் அனைத்து Whitehall துறைகளும் உக்ரேனியக் கொடியை பறக்கவிட்டன, அவை அதன் மஞ்சள், நீல நிறத்தில் ஒளிர்ந்தன.
ஜோன்சன் தனது மாலை 5 மணி உரையில், முந்தைய ஏகாதிபத்திய தலையீடுகளில் கொல்லப்பட்ட தலைவர்களுக்கு பயன்படுத்தப்பட்ட பதங்களில் புட்டினை விவரித்தார்; ஈராக்கின் சதாம் ஹுசைன் மற்றும் லிபியாவின் முகம்மர் கடாபி போன்று புட்டின் ஒரு 'இரத்தக் கறை படிந்த ஆக்கிரமிப்பாளர், அவர் ஏகாதிபத்திய வெற்றியில் நம்பிக்கை கொண்டவர்', அவர், 'நாம் என்ன செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் தனது அண்டை நாட்டை தாக்குவதில் எப்போதும் உறுதியாக இருக்கிறார்.'
பிரதம மந்திரி ஒரு 10 அம்ச தடைகளின் தொகுப்பை அறிவித்தார், 'அனைத்து முக்கிய ரஷ்ய வங்கிகளும் இங்கிலாந்து நிதி அமைப்பிலிருந்து விலக்கப்படும் மற்றும் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய வங்கியான VBT மீது முழு சொத்து முடக்கம் விதிக்கப்படுகிறது' என்று கூறினார்.
அனைத்து ரஷ்ய நிறுவனங்களும் இங்கிலாந்து சந்தைகளில் நிதி திரட்டுவதையும், ரஷ்ய அரசு இறையாண்மைக் கடனை உயர்த்துவதையும் தடை செய்யும் சட்டம் வரும் செவ்வாய்கிழமை நிறைவேற்றப்படும். ரஷ்யாவின் மிகப்பெரிய பாதுகாப்பு நிறுவனமான ரோஸ்டெக் உட்பட 100க்கும் மேற்பட்ட ரஷ்ய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்பட்டன. பிரிட்டிஷ் வங்கிக் கணக்குகளில் ரஷ்யர்கள் வைத்திருக்கும் தொகைக்கு வரம்புகள் விதிக்கப்படும், மேலும் 100 பேருக்கு அதிகமானவர்களின் சொத்து முடக்கம் நீட்டிக்கப்படும். ரஷ்ய விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் உடனடியாக இங்கிலாந்திற்குள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. SWIFT [பூகோள நிதி பரிவர்த்தனைகள்] பணம் செலுத்தும் முறையை ரஷ்யா அணுகுவதை தடுக்கும் நோக்கம்” உள்ளிட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.
இங்கிலாந்தின் இராணுவவாத நிகழ்ச்சி நிரலில் எதுவும் மேசைக்கு வெளியே இல்லை. முன்னதாக வியாழனன்று, டோரி பின்வரிசை உறுப்பினரும் முன்னாள் கட்சித் தலைமை வேட்பாளருமான டேவிட் டேவிஸ் டுவீட் செய்தார், 'களத்திற்கு காலணிகளை (படைகளை) அனுப்புவது மிகவும் தாமதமாகி விட்டது, ஆனால் புட்டினின் அபரிமிதமான இராணுவ தளவாட மேலாண்மையை நடுநிலையாக்குவதற்கு உக்ரேனிய இராணுவத்திற்கு வான்வழி ஆதரவை வழங்குவதற்கான நேரம் இன்னும் மிகவும் தாமதமாகி விடவில்லை.'
பாராளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற் கட்சி ஆகிய இரண்டு தொகுதி எம்.பி.க்கள் அறையின் இருபுறமும் ஆக்கிரமித்துள்ளனர், ஆனால் இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய கைப்பற்றலுக்கு அர்ப்பணித்துள்ள போருக்கான ஒரே கட்சியாக நிற்கின்றனர்.
உக்ரேன் நெருக்கடி முழுவதும், தொழிற் கட்சி தன்னை 'நேட்டோவின் கட்சி' என்றும் மாஸ்கோவின் தீவிர எதிர்ப்பாளர் என்றும் அறிவித்தது. ஜனவரியில், Labourlist வலைப்பதிவு, 'ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான சர்வதேச ஒற்றுமை மிகவும் முக்கியமானது மற்றும் தொடர வேண்டும்' என்று ஒரு கூட்டுக் கட்டுரையை வெளியிட்டது, அந்த மாத தொடக்கத்தில் பிளேயரின் ஆதரவாளர்களான டேவிட் லாம்மி மற்றும் ஜோன் ஹீலி உக்ரேனுக்கு பயணம் செய்ததை தொடர்ந்து அது வெளியிடப்பட்டது.
உக்ரேனிய அரசாங்கத்திற்கு ஏற்கனவே 2,000 இராணுவ கவச வண்டி எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பிய ஜோன்சன் மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என செவ்வாயன்று, கட்சித் தலைவர் சர் கீர் ஸ்டார்மர், வலியுறுத்தினார். புட்டினைக் கையாள்வதில் 'தோல்விவாத அணுகுமுறை' இலிருந்து இங்கிலாந்து 'சுத்தமாக முறிப்பது” அவசியம் என நேற்று அவர் இரட்டிப்பாக வலியுறுத்தினார். அதன் அர்த்தம் 'உக்ரேனிய மக்களுக்கு ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் நிதி உதவி மற்றும் மனிதாபிமான ஆதரவை வழங்குவதன் மூலம் உக்ரேன் தன்னைத் தற்காத்துக் கொள்ள எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகும்.'
ஜோன்சன் அரசாங்கம் 'பார்ட்டிகேட்' நெருக்கடியால் பல மாதங்களாகத் தடுமாறிக் கிடந்தது, அவரது சொந்தப் பிரதமர் பதவி அச்சுறுத்தலுக்கு உள்ளானது – அந்நிலையில் அவர் ஸ்டார்மரை புகழ்ந்து பேசினார்; 'மிகவும் கடினமான நேரத்தில் அரசாங்கத்திற்கும் மேற்கு கூட்டமைப்பிற்கும் அவரின் வலுவான ஆதரவை வழங்கி பேசிய பதங்களுக்காக சரியாக கவுரவிக்கபடக் கூடிய இந்த கனவானுக்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.”
முன்னதாக ஸ்டார்மர் தொலைக்காட்சியில் ஒரு தேசிய உரையை வழங்கினார், அவரது இரண்டு பக்கங்களிலும் இரண்டு யூனியன் ஜாக் கொடிகள் பறந்தன, அப்போது அவர், ரஷ்யாவை பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் எதிர்கொள்வதற்கான விலையை தொழிலாள வர்க்கம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வலியுறுத்தினார். 'இங்குள்ள சிரமங்களுக்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் - ரஷ்ய எரிவாயுவைச் சார்ந்திருப்பதில் இருந்து ஐரோப்பாவை விடுவிக்கும்போது மற்றும் ரஷ்ய மக்களிடமிருந்து திருடப்பட்ட பணத்திலிருந்து எங்கள் நிறுவனங்களை சுத்தம் செய்யும்போது நாம் பொருளாதார வலியை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் பிரிட்டிஷ் பொதுமக்கள் எங்கள் கண்டத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க எப்போதும் தியாகம் செய்ய தயாராக இருந்துள்ளனர். நாங்கள் மீண்டும் அதை செய்வோம்.”
ஒரு நீண்டகால ரஷ்ய-எதிர்ப்பு போர்வெறியரான தொழிற் கட்சி எம்பி கிறிஸ் பிரையன்ட், ரஷ்ய மற்றும் பிரிட்டிஷ் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க கட்டாயப்படுத்த வேண்டும் என்று டுவீட் செய்துள்ளார். பாராளுமன்றத்தில், மற்றொரு பிளேயர் ஆதரவாளர், லியாம் பைர்ன், 'ரஷ்ய இரட்டை குடிமகனுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு விசாவும் இப்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் மேலும் ஜனாதிபதி புட்டினுக்கு அவர் நெருக்கமானவர் என்று நிரூபிக்கப்பட்டால் அவரது குடியுரிமை இரத்து செய்யப்பட வேண்டும்' என கோரினார். பரம பிற்போக்குத்தனமான ஜோன்சன் கூட 'நாங்கள் அதைச் செய்கிறோம்' என்று அறிவித்த பின்னர், 'ஒவ்வொரு ரஷ்யனும் ஒரு கெட்ட மனிதர் அல்ல' என்று கூற வேண்டியிருந்தது.
தொழிற் கட்சி 'இடது' என்று தன்னை அடையாளப்படுத்தும் Lloyd Russell-Moyle, 'பாசிச ஏகாதிபத்திய புட்டின் ஆட்சியால் புறக்கணிக்கப்படக்கூடிய மக்களுக்கு எங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் நாங்கள் வழங்குவோம் என்று நான் நம்புகிறேன்.' என்று கூறினார்.
போருக்கான எந்த எதிர்ப்பும் சகித்துக் கொள்ளப்படமாட்டாது. வெளியுறவுக் குழுவின் தலைவரான கன்சர்வேடிவ் எம்.பி. டாம் துகென்டாட், ஜோன்சனிடம், 'இங்கே பாருங்கள், வீட்டிற்கு அருகில், புட்டின் தனது சொந்த மக்களை பலவீனப்படுத்துவதற்கு பயன்படுத்தும் பிரச்சாரத்தை செய்பவர்களை அனுமதிப்பவர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கின்றனர், எல்லா இடங்களிலும் மக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் தேச துரோக சட்டத்தை புதுப்பிக்க வேண்டும், அதன் மூலம் அவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களை என்னவோ அப்படி அவர்களை அழைக்க வேண்டும்: துரோகிகள்
எவ்வளவு பயமுறுத்தினாலும் தொழிற்கட்சியும் எதிர்ப்பை ஒடுக்குவதில் அதே அளவு தீவிரமாக உள்ளது. நேற்று அதன் 11 எம்.பி.க்கள், பிரிந்து சென்ற சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவின் (Socialist Campaign Group - SCG) உறுப்பினர்கள், தங்கள் பெயர்களை ’போர் கூட்டணியை நிறுத்து’ (STWC) என்று பிப்ரவரி 16 அன்று வெளியிட்ட அறிக்கையில் இருந்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என கோரியது. 'பிரிட்டன் பதட்டத்தைத் தணிக்கவும், உக்ரேன் மீதான நெருக்கடியைத் தூண்டுவதற்குப் பதிலாக அதற்குத் தீர்வைத் தேடவும் இராஜதந்திர திட்டங்களை முன்வைக்க வேண்டும்' என்ற அறிக்கையின் அடக்கமான அழைப்பை ஆதரிக்கும் பாவத்தை அந்த 11 பேர் செய்தனர்.
STWC அறிக்கையை முறியடிப்பதில் தொழிற் கட்சி சமமாக ஆர்வமாக உள்ளது என விமர்சிக்கப்பட்டது, அனைத்து 11 பேரும் உள்வாங்கப்பட்டனர். இவர்களில் ஜோன் மெக்டோனல், கட்சியின் தலைவரும், சக SCG உறுப்பினருமான ஜெர்மி கோர்பின், அவரது முன்னாள் நிழல் உள்துறை செயலாளர் டயான் அபோட் மற்றும் SCG இன் தலைவர் ரிச்சர்ட் பர்கன் ஆகியோர் அடங்குவர். STWC அறிக்கையில் இப்போது பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்கள் சுயேட்சைகளாக அமர்ந்துள்ளனர் - கோர்பின், பாராளுமன்ற தொழிற் கட்சியிலிருந்து ஓராண்டுக்கு முன்பு ஸ்டார்மரால் வெளியேற்றப்பட்டவர் மற்றும் மற்றொரு முன்னாள் தொழிற் கட்சி எம்.பி.யான கிளாவுடியா வெப்.
STWC அறிக்கையில் கையெழுத்திட மறுத்த பெரும்பாலான SCG உறுப்பினர்களில் ஒருவரான கிளைவ் லூயிஸ், உக்ரேனுக்கு 'அதிக தற்காப்பு திறன்களை வழங்குவது' உட்பட ஜோன்சனின் ரஷ்ய-விரோத நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய ராயல் மிலிட்டரி அகாடமி சான்ட்ஹர்ஸ்ட்டில் பயிற்சி பெற்ற சிப்பாய் லூயிஸ், ஜோன்சனிடம் பணிவுடன் கேட்டார், 'இதற்கு பேச்சுவார்த்தை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், இராணுவ வழிமுறையின் மூலமாக அல்ல என்று நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா'
ஜோன்சன் லூயிஸை நிராகரித்து, பதிலளித்தார், 'அந்த வாய்ப்பு இப்போது போய்விட்டது. அவர் [புட்டின்] அதை தவறவிட்டு விட்டார் என்று நான் பயப்படுகிறேன். அவர் பெரும் வன்முறை மற்றும் அழிவின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார், அது நம்மை மிக மிக வித்தியாசமான போக்கில் கொண்டு செல்கிறது என்று நான் பயப்படுகிறேன், அந்த யதார்த்தத்தை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
யதார்த்தம் அர்த்தப்படுத்துவது இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்திய வன்முறையின் இன்னும் விரைவான அதிகரிப்பு ஆகும். ஜோன்சன் பாராளுமன்றத்தில் தோன்றுவதற்கு முன்பே, டவுனிங் தெரு அறிவித்தது, அதாவது UK 'நேட்டோவிற்கு RAF அக்ரோதிரி [சைப்ரஸின் மத்தியதரைக் கடல் தீவு] மற்றும் UK இலிருந்து விமானக் காவல் பங்களிப்பை முடுக்கிவிடப்பட்டுள்ளது.' அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்: 'இரண்டு டைபூன்களும் இங்கிலாந்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் ஒரு வயோயேஜரும் உக்ரேனுடனான போலந்தின் எல்லையில் தொடர்ச்சியான நேட்டோ விமானக் காவல் பணியை ஆதரிக்கும் ... இரண்டு டைபூன்களும் அக்ரோதிரியில் இருந்து எரிபொருள் நிரப்பும் ஒரு வாயேஜரும், ருமேனியாவுடனான உக்ரேனின் எல்லையில் தொடர்ச்சியான நேட்டோ விமானக் காவல் பணியை ஆதரிக்கும்”.
மேலும் படிக்க
- புட்டின் அரசாங்கத்தின் உக்ரேன் படையெடுப்பையும் அமெரிக்க-நேட்டோ போர்வெறிக் கூச்சலையும் எதிர்ப்போம்! ரஷ்ய, உக்ரேன் தொழிலாளர்களின் ஐக்கியத்திற்காக நிற்போம்!
- பேர்னி சாண்டர்ஸ் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய ஆத்திரமூட்டல்களை ஆதரிக்கிறார்
- உக்ரேனில் “சிறப்பு இராணுவ நடவடிக்கையை” ரஷ்யா அறிவித்ததன் பின்னர், அமெரிக்கா “ரஷ்யாவை பொறுப்பேற்கச் செய்யும்” என்று பைடென் அறிவிக்கிறார்