இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷ்யாவிற்கு எதிராக வான்வழிப் போருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் நேட்டோ படைகளை திரட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே போர் நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், மோதல் மிகப் பெரிய மோதலாக விரிவடைவதற்கான ஆபத்தான அறிகுறிகளைக் காட்டுகிறது.

அமெரிக்க இராணுவத்தின் 82 வது வான்வழிப் பிரிவின் உறுப்பினர்கள், பெப்ரவரி 14, 2022, திங்கட்கிழமை, ஃபோர்ட் பிராக்கில் இருந்து போலந்துக்கு அனுப்பப்படத் தயாராகிறார்கள். ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கவலைப்படும் நேட்டோ கூட்டணிகளுக்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பைக் காட்டும் வகையில் அதன் பாதுகாப்புத் துறை அனுப்பும் சிப்பாய்களில் இவர்களும் அடங்குவர். (AP Photo/Nathan Posner) [AP Photo/Nathan Posner]

உக்ரேனின் தலைநகரம் கியேவ் நகருக்குள் ரஷ்யப் படைகள் நுழைந்தபோது, இதுவரை நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான ரஷ்ய சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி மதிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் உட்பட 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரேன் கூறியுள்ளது. கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் முயற்சி வெள்ளிக்கிழமை முறிந்தது. இந்த மோதலில் மத்தியஸ்தம் செய்யுமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளியன்று, நேட்டோவின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க், 2003 இல் உருவாக்கப்பட்ட நேட்டோவின் 40,000 துருப்புக்களைக் கொண்ட வலுவான அதிரடி விரைவுப் படையை முதன் முறையாக அனுப்புவதாக அறிவித்தார்.

“நேற்று, நேட்டோ நட்பு நாடுகள் நமது பாதுகாப்பு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளன,” என்று ஸ்டோல்டென்பேர்க் வெள்ளியன்று கூறினார், மேலும் கூட்டணியின் படைகள் “தரையிலும், கடலிலும் மற்றும் வானிலும் நிலைநிறுத்தப்படும்” என்றும் கூறினார்.

“அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் கூட்டணியின் கிழக்குப் பகுதிக்கு மேலும் ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியுள்ளதாக,” ஸ்டோல்டென்பேர்க் தொடர்ந்து தெரிவித்தார். மேலும், “உயர் எச்சரிக்கை கொண்ட எங்களின் 100 க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்கள் 30 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இடங்களில் இயங்குகின்றன. 120 க்கும் மேற்பட்ட கப்பல்கள் தூர வடக்கிலிருந்து மத்தியதரைக் கடல் வரையிலான பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மூன்று விமானந்தாங்கிக் கப்பல் தாக்குதல் குழுக்களும் உள்ளன” என்றும் கூறினார்.

ஸ்டோல்டென்பேர்க் மேலும், “நாங்கள் ஆயிரக்கணக்கான துருப்புக்களைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் விமானப்படை மற்றும் கடற்படை திறன்களைப் பற்றி பேசுகிறோம். அவை உண்மையில் நிரந்தர கடற்படை குழுக்களின் ஒரு பகுதி மட்டுமே. கூட்டணியின் கிழக்குப் பகுதியில் எங்களின் பல விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், பல நட்பு நாடுகள், ஏற்கனவே நேட்டோ பதிலடிப் படைக்கு (NATO Response Force) துருப்புக்களையும் படைகளையும் ஒதுக்கியுள்ளன” எனக் கூறினார்.

ஸ்டோல்டென்பேர்க் ரஷ்யாவின் நடவடிக்கைகளை “பல தசாப்தங்களில் யூரோ-அட்லாண்டிக் பாதுகாப்பிற்கான பெரும் அச்சுறுத்தல்கள்” என்று அழைத்ததுடன், “நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு நட்பு நாடுகளையும் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு ரஷ்யாவுடனான மோதலை ஆதரிப்பவர்களால் பாராட்டப்பட்டது. “நேட்டோவின் மிக உயர்ந்த தயார்நிலை கூட்டுப் பணிக்குழு (Very High Readiness Joint Task Force-VJTF) இப்போது களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அருமையான செய்தி,” என்று ரஷ்யாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், பிரதான போர்வெறியருமான மைக்கேல் மெக்ஃபால் ட்வீட் செய்துள்ளார்.

ராயல் வெல்ஸ் போர்க் குழு விரைவில் நாட்டிற்கு வந்து சேரும் நிலையில், “திட்டமிட்டதை விட முன்னதாக” எஸ்தோனியாவிற்கு ஆயுதப் படைகளை இங்கிலாந்து அனுப்பும் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு மந்திரி ஜேம்ஸ் ஹீப்பி (James Heappey) அறிவித்துள்ளார். மேலும் 1,000 இங்கிலாந்து துருப்புக்கள் “ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் போலந்துக்கு ஆதரவளிக்க தயார் நிலையில் இருக்கும்,” என்றும் ஹீப்பி கூறினார்.

ஆனால், பாதுகாப்பு மந்திரி இந்த மோதல் விரைவில் அதன் ‘இருப்பையே கேள்விக்குரியதாக” மாற்றக்கூடும் என்று அவதானித்து, நேட்டோ மற்றும் ரஷ்யா இடையேயான பகிரங்கமான போர் ஈடுபாட்டின் அபாயங்கள் குறித்து எச்சரித்தார்.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இரு நாடுகளிலும், அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள குறிப்பிடத்தக்க சக்திகள் அத்தகைய ‘இருத்தலியல்’ மோதலுக்கு வெறுமனே வாதிடுகின்றன.

ஹீப்பியின் எச்சரிக்கைகள்; உக்ரேன் மீது பறக்கக் கூடாத பகுதி அமைக்கப்பட வேண்டும் என்று வாதிடும் பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கியதாக இருந்தது. அதாவது நேட்டோ, தரையிலிருந்து விண்ணுக்கு பாயும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை ஈடுபடுத்தி ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த முயற்சிக்கும் என்பதே இதன் அர்த்தமாகும்.

உக்ரேனில் பறக்கக் கூடாத பகுதி விதிப்பதானது “உக்ரேனிய மக்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் உண்மையான உதவியாக இருக்கும்,” என்று டோரி பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் கூறினார்.

அமெரிக்காவில், காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் கிஞ்சிங்கெர் (Adam Kinzinger), அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கோரினார். “உக்ரேன் மீதான பறக்கக் கூடாத பகுதி (#NoFlyZone) அறிவியுங்கள்,” என்று கிஞ்சிங்கெர் ட்வீட் செய்தார். “ஒரு நிலைப்பாட்டை எடுப்பது தவிர்க்க முடியாதது மற்றும் அதை காலத்தில் எடுப்பது மிக உயர்ந்தது என்று வரலாறு கற்பிக்கிறது. எங்களிடமும் சொந்த வான்பரப்பு உள்ளது, ரஷ்யாவால் எங்கள் வான் சக்திக்கு மெழுகுவர்த்தியை பிடிக்க முடியாது. இதைச் செய்யுங்கள். புட்டின், ‘உக்ரேனுடன் மட்டும்’ திருப்தி அடைவார் என்று நம்ப முடியாத அளவிற்கு ஆபத்தானவர் ஆவார்” என்றும் பதிவிட்டார்.

கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்கா ‘வான்பரப்பை சொந்தம் கொண்டாடும்’ கூற்று தவறானது. உலகின் மிகவும் மேம்பட்ட அணுகல் எதிர்ப்பு மற்றும் பகுதி மறுப்பு (A2/AD) முறையை ரஷ்யா செயற்படுத்துகிறது, இது ரஷ்ய விமானப்படைகளை ஈடுபடுத்த முயன்ற நேட்டோ விமானப் படைகளுக்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும். மாஸ்கோவின் விமானங்கள் நேட்டோ பிராந்தியத்தில் உள்ள தளங்களில் இருந்து தாக்கப்பட்டால், ரஷ்யா கப்பல் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுக்க முடியும், இது நேட்டோவின் பிரிவு 5 ஐத் தூண்டி உலகப் போரைத் தூண்டும்.

இந்த பைத்தியக்காரத்தனமான கோரிக்கை இரு தரப்பிலும் ஆதரவைப் பெற்றது, அதாவது, ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் ஜோன் கூப்பரும் “இப்போதே, உக்ரேன் பிராந்தியத்தை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அமெரிக்கா அறிவிக்க வேண்டும்!!” என்று கோருகிறார்.

இன்று, BBC’s Radio 4 நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில், இங்கிலாந்து பாதுகாப்புச் செயலர் பென் வாலஸ், உக்ரேன் பிராந்தியத்தை பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிப்பது ரஷ்யாவிற்கு எதிரான போர் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறினார்.

“உக்ரேனை வான்வழிப் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க நான் ரஷ்யர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் போர் விமானங்களை முன்நிறுத்த வேண்டியிருக்கும்; நேட்டோ ரஷ்யா மீதான போருக்கு அறிவிக்க வேண்டியிருக்கும்.” இது “ஒரு ஐரோப்பிய போரைத் தூண்டும்,” என்று அவர் கூறினார்.

அத்தகைய போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. CNN இராணுவ ஆய்வாளர் ஜேம்ஸ் ‘ஸ்பைடர்’ மார்க்ஸ் வியாழனன்று தொலைக்காட்சி நேரலையில் கூறியது போல், “[விளாடிமிர் புட்டின்] ஒரு தந்திரோபாய அணுக்குண்டை பயன்படுத்தி தப்பித்துவிடலாம் என்று நினைக்கலாம், மேலும் அதற்கு இணையான பதில் இருக்காது என்று நினைப்பதை நான் வெறுக்கிறேன். அது பின்னர், காலத்தின் முடிவில் தொடர்ச்சியான விளைவுகளை தொடங்கும்.”

வியாழனன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், 7,000 அமெரிக்க துருப்புக்கள் ஜேர்மனிக்கு அனுப்பப்படும் என்று கூறினார். ஆனால், அவர்களில் சிலர் நேட்டோ அதிரடி விரைவுப் படையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் எல்லைகளுக்கு அனுப்பப்படலாம் என்பதை பென்டகன் தெளிவுபடுத்தியுள்ளது.

Military.com வலைத் தளம், “அமெரிக்கா ஏற்கனவே சுமார் 12,000 துருப்புக்களையும், மற்றும் F-35 Lightning II போர் விமானங்கள் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் போன்ற போர் உபகரணங்களையும் ஜேர்மனி, போலந்து, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. நிலைநிறுத்தப்படுவதற்காக ஜனவரி முதல் 11,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் உச்சபட்ச எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பென்டகன் கூறியுள்ளது, என்றாலும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி எத்தனை துருப்புக்கள் எச்சரிக்கை நிலையில் உள்ளன அல்லது எத்தனை துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான புள்ளிவிபரங்களை அதனால் வழங்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் இருந்து ரஷ்ய மக்களை முற்றிலும் துண்டிக்க மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முன்னேற்றங்கள் நிகழ்கின்றன. வெள்ளியன்று, போலந்து ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அதன் வான்வெளியை மூடியது, அதேவேளை British Airways மற்றும் Virgin Atlantic விமான சேவைகள் ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன என்று கொம்மர்சன்ட் நாளிதழ் தெரிவித்தது. S&P, உக்ரேன் மற்றும் ரஷ்யா இரு நாடுகளின் கடன் தரமதிப்பீடுகளைக் குறைத்துள்ளது.

வெள்ளியன்று, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எரிக் ஸ்வால்வெல், “ஒவ்வொரு ரஷ்ய மாணவரையும் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தரவு மேசையில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ அரசாங்கங்கள் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிலிருந்து உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் காரணங்களுக்காக இலாபம் அடையும் என்று நம்புகின்றன. இந்தப் போர் இந்த பிராந்தியத்தின் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் மிக முக்கியமான மற்றும் கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அச்சுறுத்துகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) அதன் வெள்ளிக்கிழமை அறிக்கையில் கூறியது போல், உக்ரேன், ரஷ்யா மற்றும் உலகளவில் மக்களிடமிருந்து எழும் எதிர்ப்பு என்பது “சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். இதன் பொருள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவதாகும்.”

Loading