மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், ஓமிக்ரோன் மாறுபாட்டால் இயக்கப்படும் கோவிட்-19 நோய்த்தொற்றுக்களின் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான அலை குறித்து பேட்டி கண்டனர். ஐரோப்பிய அரசாங்கங்கள் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகையில், இளைஞர்கள், அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க, வைரஸ் பரவுவதை நிறுத்தும் கொள்கைக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
அவர்கள் அனைவரும், வைரஸின் சமீபத்திய அலையின் போது, அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் படிப்புகள் சீராக இயங்குவதை அரசாங்கம் அப்பட்டமாக புறக்கணிப்பதை பற்றிக் குறிப்பிட்டனர். இந்த அலையின் போது, சுமார் 171 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்னர், இதில் 15 மில்லியன் பிரெஞ்சு மக்கள் (மக்கள் தொகையில் 22 சதவீதம்) உட்பட, ஐரோப்பா முழுவதும் சுமார் 200,000 பேர் இறந்தனர். இருப்பினும், மக்ரோன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற அரசாங்கங்களும் கேலிக்குரிய நடவடிக்கைகளையே எடுத்துள்ளன.
எமிலி, Aulnay-sous-Bois உயர்நிலைப் பள்ளி மாணவி கருத்து தெரிவிக்கையில்: “கிறிஸ்துமஸை ஒட்டி எங்கள் வகுப்பில் வராதவர்களின் எண்ணிக்கை 15 பேர் ஆக அதிகரித்தபோது உயர்நிலைப் பள்ளியின் சுகாதார நிலை உண்மையில் பேரழிவை ஏற்படுத்தியது. மாணவர்கள், ஆசிரியர்களின் அதிருப்தி மற்றும் தலைமை ஆசிரியரின் எதிர்ப்பு இருந்தபோதிலும், மாணவர்கள் முகக்கவசங்களை அணிந்திருந்ததால், ஆபத்தில் இல்லை எனக் கூறி, எல்லாவற்றையும் மீறி பாடங்கள் நேருக்கு நேர் நடந்தன. சுகாதார நிலைமை தீவிரமாக கையாளப்படவில்லை.
Paris-9 இல் உள்ள பல்கலைக்கழக மாணவி மார்ஜோரி கூறினார்: “நாங்கள் எங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், ஆனால் எனது வகுப்பில் பல கோவிட் தொற்றுக்கள் உள்ளன என்பதை அறிகையில் எனது படிப்பில் கவனம் செலுத்துவது எப்படி என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, அது இன்னும் மூடப்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது … எமது படிப்பு நம்மை எங்கு அழைத்துச் செல்லும் என்று கூட தெரியாமல் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறோம். நாங்கள் அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டதாகவும் உணர்கிறோம்.
'ஜனவரியில், எனது சக மாணவர்கள் அனைவரும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டனர், பள்ளி நேர்மறை தொற்றுக்களின் உண்மையான தொகுப்பாக மாறியது' என Blanc-Menil உயர்நிலைப் பள்ளி மாணவி செலின் குறிப்பிட்டார், அவர் அரசாங்கத்தின் பொது சுகாதார அறிவிப்புகளால் 'விரக்தியில்' இருப்பதாக விவரித்தார். அறிவிப்புகள், 'மிகவும் நியாயமற்றது' என்று அவர் கூறினார்.
அனைத்து மாணவர்களும் மக்ரோன் அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட சுகாதார நடவடிக்கைகளின் பொருத்தமின்மையைக் குறிப்பிட்டனர். மேலும் தொலைதூரக் கல்வியை அறிமுகப்படுத்த அல்லது பள்ளிகளில் வகுப்பு அளவுகளை பாதியாகக் குறைக்க அவர் மறுப்பதை விமர்சித்தனர்.
மார்ஜோரி கூறினார்: “நாம் எவ்வளவு முன்னேறுகிறோமோ, அவ்வளவுக்கு அதிகமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். எடுத்துக்காட்டாக, எங்கள் பள்ளியில் அம்புக்குறிகள் கொண்ட பாதைகள் உள்ளன. அம்புக்குறிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட திசையில் கோவிட் நகரும் என நான் நினைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நாம் அனைவரும் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது, எல்லா இடங்களிலும் அம்புக்குறிகளை வைப்பதில் பயனில்லை என்பது என் கருத்து. மேலும் என்னவென்றால், நின்று காப்பி குடிக்க முடியாது என்ற கட்டுப்பாடு முற்றிலும் பைத்தியக்காரத்தனமானது. கோவிட் தரையில் இருந்து 5 அடி 6 அங்குல உயரத்தில் மட்டுமே சுற்றுவது போல் இல்லை. இந்த நடவடிக்கைகள் கேலிக்கூத்தானது” என்றார்.
எமிலி, பாரிய வருகையின்மை தனது வகுப்புகளின் இயல்பான செயல்பாட்டைத் தடுத்த போது, “எனது பிரதான பொறுப்பாசிரியர் வகுப்பை மூடக் கோரி நிர்வாகத்திடம் புகார் செய்யச் சென்றார். அவரிடம், 'அது சாத்தியமில்லை, மாணவர்கள் முகமூடி அணிந்துள்ளனர்' என கூறப்பட்டது. இந்த நிலை மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்றார்.
'தொடர்புத் தொற்றுக்கள்', அதாவது வைரஸால் பாதிக்கப்படும் மாணவர்கள் புகாரளிப்பதில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட விதிகள் குறித்தும் புகார் தெரிவித்தனர். பள்ளியில் தொடர்புத் தொற்றுக்கள் என அறிவிக்கப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதன் மூலம், வங்கிகளுக்கு இலாபம் ஈட்டும் வகையில் அவர்களின் பெற்றோரை வேலையில் வைக்க மக்ரோன் அதிகபட்ச இளைஞர்களை வகுப்பில் வைத்துள்ளார். இந்த முடிவு இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் ஆரோக்கியம், கல்வி மற்றும் வாழ்க்கையை கூட அவமதித்து எடுக்கப்பட்டது.
“கோவிட்டுக்கு நேர்மறை சோதனை செய்த ஒரு மாணவரின் அருகில் முகக்கவசம் அணிந்து அமர்ந்திருக்கும்போது நாம் ஏன் தொடர்புத் தொற்றாளர்களாக இருக்க முடியாது? அறுவைசிகிச்சை முகக்கவசங்கள் கோவிட் இலிருந்து போதுமான அளவு பாதுகாக்கவில்லை என ஊடகங்களும் அரசாங்கமும் விளக்குகின்றன,' என்று குறிப்பிட்ட செலின், நோய்வாய்ப்பட்ட மாணவர்களைக் கூட பள்ளிக்குத் திரும்ப அனுமதிப்பதில் அரசாங்கத்தின் 'ஒழுங்கற்ற தன்மையை' விமர்சித்தார், மேலும் இதனால் வகுப்பில் உள்ள நண்பர்களுக்கும் தொற்று ஏற்பட்டுவிடுகிறது.
செலின் சொன்னாள்: “எனக்கு ஒரு வகுப்புத் தோழி இருந்தாள், அவளுக்கு பள்ளியில் முதல் வாரத்தில் கோவிட் இருந்தது. அவள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டாள். இருப்பினும், ஏழு நாட்களுக்குப் பின்னர் அவளது PCR சோதனை இன்னும் நேர்மறையாக காட்டியது. ஏற்கெனவே அவளுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், அவள் இன்னும் நேர்மறையாக சோதனை செய்தாலும், திரும்பி வருமாறு பள்ளியின் மூத்த நிர்வாகி கூறினார். தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் பள்ளிக்குத் திரும்பும்படி வற்புறுத்துவது சரியல்ல என்று நினைக்கிறேன். அவள் இன்னும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாள் மற்றும் மிகவும் வெளிர் நிறமாக இருந்தாள், ஆனால் பள்ளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.
மார்ஜோரி, பொதுப் போக்குவரத்து நெரிசலில் 'மூச்சுத்திணறல்' போன்ற உணர்வை விவரித்தார், அவசர நேரத்தில் அனைவரும் 'சார்டின் மீன்களைப் போல ஒன்றாக அடைக்கப்படுவார்கள்'. “ஊடகங்கள் கோவிட் பற்றி அதிகம் பேசுகின்றன, ஆனால் உச்ச நெரிசல் நேரத்தில் மக்கள் தாங்கும் மனநிலைமைகளைப் பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை… ஒவ்வொரு நாளும், நாம் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் பள்ளி மற்றும் வேலைகளுக்கு செல்ல வேண்டும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வைரஸ் தொற்றும் என்ற பயத்தில் இதைப் பயன்படுத்துவது கூட ஒரு கெட்டகனவாகிவிட்டது.
2021 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் ஏற்கனவே 2 மில்லியன் குழந்தைகள் COVID-19 காரணமாக குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையாவது இழந்திருந்தாலும், பல இளைஞர்கள் தங்கள் குடும்பங்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான அச்சத்தை மார்ஜோரி வலியுறுத்தினார். பொதுப் போக்குவரத்தில் தனக்குள்ள அமைதியின்மை குறித்து அவர் கூறினார்: “தனிப்பட்ட முறையில், பாதிக்கப்படக்கூடிய எனது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். நோய்வாய்ப்பட்ட எனது குடும்ப உறுப்பினர்களை பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த தொற்றுநோய் பிரான்சில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள ஒரு தலைமுறை இளைஞர்களுக்கு ஒரு அழியாத அனுபவமாகும். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், எமிலி உறுதிப்படுத்துகிறார், 'கோவிட் ஆனது அனைத்து மாணவர்களின் வாழ்க்கையையும் மாற்றியுள்ளது என்பதை நாங்கள் தெளிவாகக் காண்கிறோம்.'
இந்த மிருகத்தனமான அனுபவம், தனிநபர்களால் விருப்பமான முகக்கவசங்களை பயன்படுத்துவதைத் தவிர, வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் அகற்றுவதற்கான வங்கிகள் மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிய கோபத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியுள்ளது, இது கூட கட்டாயமாக்கப்படவில்லை.
எமிலி கருத்துரைத்தார்: “முகக்கவசம் அணிவது போதுமானதாக இல்லை என்று நான் நினைக்கிறேன். பெரிய கூட்டங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும், மேலும் திறந்த பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன். இதெல்லாம் சாதாரணம் இல்லை”.
மார்ஜோரி சீனாவின் உதாரணத்தை வலியுறுத்தினார், இது தொற்றுநோயை முறியடித்தது, இதனால் ஐரோப்பிய சக்திகளை விட உயிர்கள் மற்றும் அதன் உண்மையான பொருளாதாரம் இரண்டையும் சிறப்பாகக் காப்பாற்றியது. உண்மையில், சீனா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நோயின் வெடிப்புகளை மட்டுமே அனுபவித்துள்ளது மற்றும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து கோவிட்-19 இலிருந்து இறப்புகள் எதுவும் இல்லை. மார்ச் 2020 முதல் தற்போது வரை, சீனா 29,000 தொற்றுக்களை மட்டுமே கண்டறிந்துள்ளது, ஆனால் பிரான்சில் இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரே நாளில் 42,000 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மார்ஜோரி சீனாவின் சாதனையை 'பணக்காரர்களின் ஜனாதிபதி' மக்ரோனுடன் ஒப்பிடுகிறார்: 'தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவது சாத்தியமற்றது அல்ல, ஆனால் அதற்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்பதை விளக்குவதற்கு நான் சீனாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். அவர்கள் ஆரம்பத்தில் கட்டுப்பாடுகளை விதித்து, தொற்றுள்ளவர்களை தனிமைப்படுத்தி, வைரஸ்களின் சுழற்சியைக் குறைத்தனர். எவ்வாறாயினும், பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவில் எல்லா இடங்களிலும், நாங்கள் கோவிட் தொற்றுக்களால் மூழ்கி இருக்கிறோம், அவர்கள் தங்களின் சொத்து மதிப்பீடுகளையும் தங்களின் பொருளாதாரத்தையும் மட்டுமே பாதுகாக்க விரும்புகிறார்கள்.