முன்னோக்கு

அணுஆயுதப் போரை நோக்கி பொறுப்பின்றிச் செல்வதை நிறுத்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒட்டுமொத்த உலகையும் பேரழிவுடன் அச்சுறுத்துகின்ற இந்த உலகப் போர் முனைவை நிறுத்தத் தலையிடுவதற்கு, அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களை அணித்திரட்டுமாறு உலக சோசலிச வலைத் தளம் அழைப்பு விடுக்கிறது.

1945 க்குப் பின்னர் எந்த நேரத்திலும் இல்லாதளவுக்கு அணு ஆயுதப் போர் ஆபத்து அதிகமாகி உள்ளது. 1962 கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது கூட இன்று இருப்பது போல் ஆபத்து இந்தளவுக்கு மிகப் பெரியளவில் இருக்கவில்லை — அந்த நெருக்கடியானது, நினைவுகூரப்படுமேயானால், அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப். கென்னடி மேற்கு அரைக்கோளத்தில் சோவியத் ஏவுகணைகளை அனுமதிக்க மறுத்ததால் தூண்டப்பட்டிருந்தது.

அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மிகப் பெரிய மோதலின் மத்தியிலும் கூட, அமெரிக்க மற்றும் சோவியத் அரசாங்கங்கள் இரண்டும் அந்த நெருக்கடியிலிருந்து வெளியேற மற்றும் போரைத் தவிர்க்க பேச்சுவார்த்தை மூலம் ஒரு வழியைக் காண முயன்றன. இன்று அப்படி இல்லை: அமெரிக்கா-நேட்டோ மற்றும் புட்டின் அரசாங்கம் இரண்டுமே நம்பமுடியாதளவில் பேராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொறுப்பின்றி செயல்படுகின்றன.

மார்ச் 1, 2022 அன்று, உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு அருகே உள்ள புச்சா நகரில் உள்ள தெருவில் ரஷ்ய இராணுவ வாகனங்களின் எரிந்த எச்சங்களை மக்கள் பார்க்கிறார்கள் (AP Photo/Serhii Nuzhnenko)

நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கத்தால் புட்டின் ஒரு மூலையில் ஒதுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், உக்ரேன் மீதான புட்டினின் மூர்க்கமான படையெடுப்பு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கரங்களில் சாதகமாக்கிக் கொள்ளப்படுகிறது. ஆனால், ரஷ்யாவுக்குள்ளே போருக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரிக்கின்ற போதும் கூட, அச்சுறுத்தல்கள் மற்றும் அணுஆயுத மிரட்டல் இராஜதந்திரம் மூலமாக, நேட்டோவைப் பேச்சுவார்த்தைக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் நிர்பந்திக்க முடியும் என்று புட்டின் நம்புகிறார். இந்த மூலோபாயம், மோதலைத் தீவிரப்படுத்துவதற்கான பைடென் நிர்வாகத்தின் உறுதிப்பாடு குறித்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதன் அடிப்படையில் உள்ளது.

புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளால் உந்தப்பட்ட ஏகாதிபத்திய சக்திகளுக்கு பின்வாங்கும் எண்ணம் இல்லை. அவை புட்டினை வலையில் சிக்க வைத்திருப்பதாக உணர்கின்றன, அதை அவை முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த நெருக்கடிக்கு ஏதேனும் விதத்தில் இராஜாங்க தீர்வைத் தேடுவதற்குப் பதிலாக, ரஷ்யாவிலேயே ஆட்சி மாற்றம் செய்யும் அவர்கள் இலக்கை அடைய, இன்னும் நேரடியான இராணுவத் தலையீட்டோடு சேர்ந்து, மிகப் பெரியளவில் பொருளாதார அழுத்தத்தைக் கொண்டு வர முடியும் என்பதே அவற்றின் கோட்பாடாக உள்ளது.

மோதலில் நேட்டோ இறங்காது என்று கூறுவது ஏற்கனவே ஒரு கட்டுக்கதையாகி விட்டது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான உறுப்பு நாடுகள் உட்பட 20 க்கும் அதிகமான நாடுகள், டாங்கி தகர்ப்பு ஏவுகணைகள், விமான தகர்ப்பு அமைப்புகள் மற்றும் போர் விமானங்கள் உட்பட உக்ரேனுக்கு ஆயுதங்களைப் பாய்ச்சி உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென், உக்ரேனுக்குப் போர் விமானம் அனுப்ப நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்கு 'பச்சை விளக்கு' காட்டி விட்டதாகவும், அதற்கு பதிலாக அமெரிக்காவில் இருந்து போலாந்துக்குப் போர்ப்படையினர் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். உக்ரேனிய போர் விமானங்களுக்கான களமாக நேட்டோ விமானத் தளங்களைப் பயன்படுத்தவும் முன்மொழிவுகள் உள்ளன. உக்ரேனுக்கும் நேட்டோ சக்திகளுக்கும் இடையிலான வித்தியாசம் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது.

ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ மோதலுக்கு உக்ரேன் ஒரு சிறந்த இடமாக கருதப்பட்டது என்பதை மட்டுமே இது கூடுதலாக நிரூபிக்கிறது. அமெரிக்க மூலோபாயவாதிகள் உக்ரேனை 'ரஷ்யாவின் ஆப்கானிஸ்தானாக' மாற்றுவதற்கான, அதாவது ரஷ்ய அரசாங்கத்தைத் தூக்கியெறிவதற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்கும் ஒரு நீடித்த போரை முடுக்கி விடுவதற்கான, திட்டங்களைப் பற்றி, அவ்வபோது பெருமைபீற்றி இருக்கிறார்கள். யதார்த்தத்தில், இந்த போரில் சிக்கியுள்ள உக்ரேனியர்களுக்கு அனுதாபம் காட்டுபவர்களைப் பொறுத்த வரையில், அவர்கள் எரிச்சலூட்டும் விதத்தில் இந்த பரந்த ஏகாதிபத்திய புவிசார் மூலோபாயத்தில் பகடைக்காய்களாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

உக்ரேன் மீதான மோதல் பெப்ரவரியில் தீவிரமடைந்த நிலையில், பைடென் நிர்வாகம் சமாதான வழியைத் தேடும் ஒரு முடிவை எடுக்கவில்லை, அது உக்ரேனை நேட்டோவில் அனுமதிக்கக் கூடாது என்ற ரஷ்யாவின் கோரிக்கை மீது வேண்டுமென்றே பேச்சுவார்த்தை நடத்த மறுத்தது. ரஷ்ய படையெடுப்புக்கு சில மாதங்களுக்கு முன்னரே, அமெரிக்கா அது தூண்டிவிட உத்தேசித்திருந்த ஒரு போரில் பயன்படுத்துவதற்காக ஏற்கனவே உக்ரேனுக்குள் ஆயுதங்களைப் பாய்ச்சி இருந்தது.

பகிரங்கமாக வெளியிடப்பட்ட உள்அலுவலக இராஜாங்க ஆவணங்களைக் குறித்து வாஷிங்டன் போஸ்ட் சனிக்கிழமை அறிவித்திருந்தது, அந்த ஆவணங்கள் 'ஏறக்குறைய டிசம்பர் மாத தொடக்கத்தில், பென்டகன் நகர்புற பகுதிகளில் சண்டையிடுவதற்குப் பயன்படும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டு உக்ரேனிய போராளிகளை ஆயுதமயப்படுத்தியது, வெடிக்காத வெடிமருந்துகளைக் கையாள்வதற்காக சிப்பாய்களை பாதுகாப்பதற்கான சிறப்பு உடுப்புகள் மற்றும் சிறு துப்பாக்கிகளும் இவற்றில் உள்ளடங்கும்… மொத்தமாக எடுத்துப் பார்த்தால், போர்ப் பகுதிக்குள் விரைந்த வெடிமருந்துகளின் வகையும், அளவும், ஆற்றலும் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு பன்முக போர் நடத்துவதற்கு அமெரிக்கா உக்ரேனிய இராணுவத்தை எந்தளவுக்குத் தயார் செய்ய முனைந்திருந்தது என்பதை எடுத்துக்காட்டுகின்றன…'

அமெரிக்க பின்புலத்தில் நடத்தப்பட்ட 2014 ஆட்சி கவிழ்ப்பு சதியில் ரஷ்ய-சார்பு அரசாங்கம் தூக்கியெறியப்பட்டதில் இருந்து, உக்ரேன் அடிப்படையிலேயே அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கான ஓர் இராணுவப் பாசறையாக மாற்றப்பட்டுள்ளது, இந்த செயல்முறை கடந்தாண்டு முடுக்கிவிடப்பட்டு, கடந்த வாரம் மிகப்பெரியளவில் தீவிரமடைந்துள்ளது. போஸ்ட் பின்வருமாறு குறிப்பிடுகிறது:

உக்ரேனுக்கு 1 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இராணுவ உதவிகள் வழங்க அமெரிக்கா கடந்தாண்டில் பொறுப்பேற்றதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். போஸ்ட் மதிப்பாய்வு செய்த பட்டியலின்படி, மோட்டார் கண்டறியும் ராடார்கள், பாதுகாப்பான ரேடியோக்கள், மின்னணு உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் ஜவலின் ஏவுகணை அமைப்புகளின் சீரான வினியோகம் ஆகியவை அதில் உள்ளடங்கும். தீவுகள் ரோந்து படகுகள் குறைந்த பட்சம் ஒன்பது மற்றும் Mi-17 ரக போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் ஐந்து ஆகியவையும் அமெரிக்க கூடுதல் பாதுகாப்பு தளவாடங்களின் கையிருப்பில் இருந்து உக்ரேனுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அழுத்தத்தை உருவாக்குவதிலும், மிகவும் ஆக்கிரோஷமான நடவடிக்கைகளுக்குச் சட்ட நியாயப்பாட்டை வழங்குவதிலும் மற்றும் நெருக்கடியை அதிகரிப்பதிலும் ஊடகங்களில் நிலவும் ரஷ்ய-விரோத பிரச்சாரம் அதிகரித்தளவில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. தீவிர நடவடிக்கைகள் முன்மொழியப்படுகின்றன, முதலில் இவை நிராகரிக்கப்பட்டிருந்தன, பின்னர் 'பேசும் புள்ளியாக' மாறுகின்றன, பின்னர் தீவிரமாக விவாதிக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன.

வியாழக்கிழமை குடியரசுக் கட்சியின் லிண்ட்சே கிரஹாம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைப் படுகொலை செய்ய அழைப்பு விடுத்தார். 'ரஷ்யாவில் யாராவது ஒருவர் இந்த நபருக்கு முடிவு கட்டுவது தான் இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரே வழி,” என்று கிரஹாம் ட்வீட் செய்தார். ஞாயிற்றுக்கிழமை ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ஜோ மன்சின், விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்ட மண்டலம் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்றார், குடியரசுக் கட்சி செனட்டர் மார்கோ ரூபியோ எதை 'அடிப்படையிலேயே மூன்றாம் உலகப் போரின் ஆரம்பம்' என்று ஒப்புக் கொண்டாரோ அப்படியான ஒரு நடவடிக்கையை முன்மொழிவதில் முக்கிய குடியரசுக் கட்சியினரும் மற்றும் ஜனநாயகக் கட்சியினரும் சேர்ந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஏகாதிபத்திய போரிலும் போர் பிரச்சாரம் ஒரு முக்கிய அம்சமாக இருந்து வருகிறது என்றாலும், இந்த அளவு ஒரு புதிய மட்டத்தை எட்டியுள்ளது. மேலும், உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் கணிசமான பிரிவினரிடையே இது தெளிவாக சென்று சேர்ந்துள்ளது.

உக்ரேன் படையெடுப்புக்கு விடையிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள போராட்டங்கள், போர் எதிர்ப்பாக இல்லை, ரஷ்ய-எதிர்ப்பாக உள்ளது. உண்மையான போர்-எதிர்ப்பு போராட்டங்கள், ஓர் அணுஆயுத மோதலைத் தூண்டக்கூடிய விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட மண்டலத்திற்கு அழைப்பு விடுக்காது— ஆனால் கடந்த வாரம் ஐரோப்பாவிலும் நேற்று இலினொய் சிகாகோவில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் இந்த கோஷம் தான் மேலோங்கி இருந்தது. அத்தகைய போராட்டங்கள் இராணுவ வரவு-செலவுத் திட்டங்கள் பாரியளவில் அதிகரிக்கப்படுவதை வரவேற்காது மற்றும் அதற்கு அழைப்பு விடுக்காது. அவை அவர்களின் சொந்த நாடுகளது அரசாங்கங்கள் நடத்திய போர் குற்றங்களை மறந்துவிடாது.

போர் எதிர்ப்பானது, 'எதிரி' நாட்டு தலைவர்களைப் படுகொலை செய்ய அழைப்பு விடுப்பதையோ அல்லது இனப்படுகொலைக் குற்றங்களின் நீண்ட வரலாறு கொண்ட பாசிச படைகளை இராணுவம் பயன்படுத்திக் கொள்வதைப் பாராட்டுவதையோ செய்யாது, ஆனால் உக்ரேன் ஆயுதப் படைகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த துணை இராணுவக் குழுக்கள் விஷயத்தில் இது தான் நடக்கிறது.

ரஷ்யாவில் வெடித்துள்ள ஆர்ப்பாட்டங்கள் மட்டுந்தான் உண்மையான போர் எதிர்ப்பு அம்சத்தைக் கொண்டுள்ளன. ரஷ்யாவில் எவ்வளவு தான் குழப்பம் இருந்தாலும், இந்த போராட்டங்கள் குறைந்தபட்சம் அவற்றின் சொந்த அரசாங்கத்தை நோக்கி திரும்பி உள்ளன, இவை உக்ரேன் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டு வருமாறு கோருவதுடன், இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக் கோரவில்லை.

ஆனால் ஆளும் வர்க்கம் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தினரிடையே உள்ள போர் வெறி, தொழிலாள வர்க்கத்தின் உத்வேகத்தைச் சந்தித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

நேற்று வெளியிடப்பட்ட Rassmussen கருத்துக்கணிப்பு, மிகவும் வசதி படைத்தவர்களே மக்களில் மிகவும் ஆக்ரோஷமான போர் ஆதரவு பிரிவினராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. 'ஐரோப்பாவில் ஒரு பரந்த போர் வெடித்தால், அமெரிக்க இராணுவம் அதில் தலையிடுமா?' என்று கேட்கப்பட்ட போது, $200,000க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களில் 66 சதவீதம் பேர் 'ஆம்' என்று கூறியுள்ளனர். $30,000க்கு கீழ் வருமானம் உள்ளவர்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்கா தலையிடுவதை ஆதரிப்பதாகக் கூறியுள்ளனர்.

போருக்கு ஆதரவான பிரச்சாரம் மக்களின் எல்லா பிரிவினர் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்தினாலும், தொழிலாள வர்க்கம் பெருமளவில் போருக்கு எதிராக உள்ளது. போர் முனைவின் விளைவுகள் குறித்து அதிகரித்து வரும் கவலையே தொழிலாளர்கள் மத்தியில் மேலோங்கி உள்ள உணர்வாக உள்ளது. எந்தவொரு மிகப் பெரிய போரிலும் தொழிலாளர்கள் தான் போராட வேண்டியிருக்கும், பொருளாதார விளைவுகளின் சுமைகளை அவர்கள் தான் தாங்க வேண்டியிருக்கும்.

அனைத்திற்கும் மேலாக, ரஷ்யாவுக்கு எதிரான போர் முனைவு, மொத்த மக்கள் மீதும் அதிர்ச்சியூட்டும் அளவில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒரு பெருந்தொற்றின் உள்ளடக்கத்தில் வருகிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கோவிட் ஆய்வு தகவல்படி, கோவிட்-19 இன் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை நேற்று ஆறு மில்லியனைத் தாண்டியது. 'அதிகப்படியான இறப்புகள்' அடிப்படையில் பார்த்தால், நிஜமான எண்ணிக்கை 20 மில்லியனாக மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவில், கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி வருகிறது. பத்து மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் ஒரு குடும்ப உறுப்பினரையோ, நண்பரையோ அல்லது சக பணியாளரையோ பறிகொடுத்துள்ளனர். மில்லியன் கணக்கானவர்கள் நீண்ட கால கோவிட் நோயின் பலவீனப்படுத்தும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் போருக்கு ஆதரவான வெறியானது, நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வந்துள்ள ஒரு செயல்முறையின் விளைவாகும். 2003 இல் ஈராக் படையெடுப்புக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள், அரசியல் ரீதியில் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகள் செல்வாக்கு செலுத்திய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் கடைசி சலசலப்பாக இருந்தன. எவ்வாறிருப்பினும் ஜனநாயகக் கட்சியிலும் அதைச் சுற்றியுள்ள அடுக்குகள் மத்தியிலும் குற்றவியல் படையெடுப்புக்கு எதிராக நிலவும் எதிர்ப்பு ஒரு கொள்கைரீதியான தன்மையைக் கொண்டதில்லை. ஏற்கனவே 1999 இல், உயர்மட்ட நடுத்தர வர்க்க தொழில் வல்லுநர்களும் மற்றும் கல்வியாளர்களும் 'மனிதாபிமானம்' என்ற மோசடி சாக்குப்போக்கின் கீழ் சேர்பியா மீது குண்டுவீச்சை ஆதரித்தனர்.

ஈராக் போர் எதிர்ப்பு போராட்டங்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை. ஜனநாயகக் கட்சி மற்றும் அடையாள அரசியலின் இயங்குமுறை மூலமாக, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளும் மற்றும் கல்வித்துறை வட்டாரத்தின் பிரிவுகளும் ஏகாதிபத்தியத்துடன் தங்களைச் சமரசம் செய்து கொண்டுள்ளன என்பது மட்டுமல்ல, அவர்கள் ரஷ்யாவுக்கு எதிராக முன்பினும் அதிக தீவிர நடவடிக்கைகளுக்கு மிகவும் வெறித்தனமான ஆதரவாளர்களாக மாறியுள்ளனர்.

அனைத்திற்கும் மேலாக, இது ஒரு சர்வதேச நிகழ்முறையாகும். ஜேர்மனியில், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பசுமைக் கட்சி, இராணுவ செலவினங்களைப் பாரியளவில் விரிவாக்குவதற்கான கோரிக்கைகளில் முன்னணியில் நிற்கிறது.

போருக்கு எதிரான போராட்டமானது, தத்துவார்த்தரீதியிலும், அரசியல்ரீதியிலும் மற்றும் அமைப்புரீதியிலும், தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்ற உண்மையை இது அடிக்கோடிடுகிறது.

இந்த பெருந்தொற்று எல்லா முதலாளித்துவ நாடுகளிலும் வர்க்க எதிர்விரோதங்களை மிகப் பெரியளவில் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரேன் நெருக்கடி வெடிப்பதற்கு முன்னர், இந்த பெருந்தொற்று கொள்கை சம்பந்தமாகவும், சுரண்டல் மற்றும் சமத்துவமின்மை பெரியளவில் அதிகரித்திருப்பது சம்பந்தமாகவும் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு மீதும் — தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் வெளிப்பாடுகள் அதிகரித்திருந்தன.

உள்நாட்டு அடக்குமுறையுடன் சேர்ந்து, ஒரு கற்பனையான 'தேசிய ஒற்றுமையை' ஏற்படுத்துவதற்கான முயற்சி, ஆளும் வர்க்கத்தின் போர் வெறியில் உள்ள ஒரு முக்கிய காரணியாகும். அதேநேரத்தில் வர்க்கப் போராட்டம் என்பது, சர்வதேச, சோசலிச மற்றும் புரட்சிகர முன்னோக்குடன் அரசியல்ரீதியில் ஆயுதபாணியான ஆவது தான், மூன்றாம் உலகப் போர் முனைவை நிறுத்துவதற்கான ஒரு இயக்கத்தின் புறநிலை அடித்தளமாகும்.

Loading