மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனிய கம்யூனிச இளைஞரைச் சேர்ந்த மிக்கைல் மற்றும் அலெக்சாண்டர் கொனோனோவிச் ஆகியோரின் கைதுகளை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது மற்றும் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோருகிறது.
மார்ச் 6 அன்று, உக்ரேனில் உள்ள ஊடகங்கள், சட்டவிரோதமான உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவைச் சேர்ந்த கொனோனோவிச் சகோதரர்கள், உக்ரேனிய இரகசிய சேவையால் (SBU) 'ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய சார்பு கருத்துக்கள்' ஐ கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர் என்று அறிவித்தன.
கொனோனோவிச் சகோதரர்களின் வாழ்க்கை இப்போது பெரும் ஆபத்தில் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவர்கள் மரணதண்டனையை சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014-2017 இல் கிழக்கு உக்ரேனில் நடந்த உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாக ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக SBU உறுப்பினர்களால் நடத்தப்பட்ட சித்திரவதை மற்றும் பாலியல் வன்கொடுமைகளின் கொடூரமான வழக்குகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. SBU ஆல் 'கற்பழிப்பு, கற்பழிப்பு அச்சுறுத்தல்கள், அடித்தல் மற்றும் பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுதல் ஆகியவை பெரும்பாலும் விசாரணை நுட்பமாக பயன்படுத்தப்படுகின்றன' என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. மே 2016 இல் நடந்த ஒரு சம்பவத்தில், கைதியை 'நான்கு SBU அதிகாரிகள் கட்டாயப்படுத்தி' மண்டியிட்டு, அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி, தலை, சிறுநீரகம், இடுப்பு, மற்றும் அவரது நாக்கில் மின்சார அதிர்ச்சியைப் பிரயோகித்தார்கள். பெரும்பாலும் அந்த நேரத்தில் அவர் ஒரு பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டிருந்தார், மேலும் அவருக்கு உணவும் தண்ணீரும் கூட மறுக்கப்பட்டன.
இந்த கைதுகள், உக்ரேனிய அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்கள், ரஷ்ய சார்பு கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ரஷ்யாவுடனான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கான உக்ரேனிய உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக SBU இன் பயங்கரவாத பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளன.
கடந்த வாரம், கியேவின் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக் குழுவின் உறுப்பினரான டெனிஸ் கிரீவ்வை SBU கொன்றது, அவர் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படுவதை எதிர்த்ததால் நடந்திருக்கலாம். மற்றொரு பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினரான எவ்ஜெனி ஷெவ்சென்கோ, வோலோடிமிர் செலென்ஸ்கியின் ஆளும் மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார், அவர் போலந்து எல்லையைக் கடக்க முயன்றபோது SBU ஆல் கைது செய்யப்பட்டார். ரஷ்ய-சார்பு எதிர்க் கட்சிகளின் கூட்டில் உறுப்பினர்களாக உள்ள பல பாராளுமன்ற பிரதிநிதிகளும் தேசத்துரோகம் மற்றும் நாசவேலை என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரேனில் உள்ள ஸ்ராலினிச இரகசிய சேவையான KGB இன் வாரிசான SBU, நவ-பாசிச அசோவ் பட்டாலியன் உட்பட உக்ரேனிய தீவிர வலதுசாரிகளுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டுள்ளது மற்றும் நாஜி ஒத்துழைப்பு அமைப்புகளான UPA (உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம்) மற்றும் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) ஆகியவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க உக்ரேனிய அரசின் முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்டுள்ளது. அதன் முன்னாள் தலைவரான Valentyn Nalyvaichenko, 2015 இல், SBU 'புதிதாக எதையும் கண்டுபிடிக்கத் தேவையில்லை, 1930-1950 ஆண்டுகளில் உக்ரேனிய தேசியவாதிகள் மற்றும் UPA அமைப்புகளின் மரபுகளின் மீது உருவாக்குவது முக்கியம்' என அறிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது, OUN-B இன் உக்ரேனிய பாசிஸ்டுகள் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் போலந்துகள் மற்றும் உக்ரேனிய பாசிச எதிர்ப்பாளர்களின் படுகொலைகளில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக, உக்ரேனில் யூத மக்கள்தொகை மீதான இன அழிப்புப் படுகொலை 1.5 மில்லியன் உயிர்களைக் கொன்றது, மேலும் மில்லியன் கணக்கான உக்ரேனிய குடிமக்கள் நாஜி ஆக்கிரமிப்பின் கீழ் கொல்லப்பட்டனர்.
போருக்குப் பின்னர் மற்றும் 1950 களில், OUN-B மற்றும் UPA இரண்டும் சோவியத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டன, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் ஆதரவுடன், UPA மேலும் 20,000 உக்ரேனிய குடிமக்களைக் கொன்றது. அவர்களின் கிரிமினல் இனப்படுகொலைப் பதிவு உக்ரேனிய அரசால் திட்டமிட்ட முறையில் பூசிமெழுகப்பட்டது, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஆதரவுடன் கூடிய 2014 தீவிர வலதுசாரி சதியானது ரஷ்ய-சார்பு அரசாங்கத்தை வெளியேற்றியது மற்றும் கிழக்கில் ரஷ்ய-சார்பு பிரிவினைவாதிகளுடன் உள்நாட்டுப் போரைத் தூண்டியது.
உக்ரேனை நாசிசத்திலிருந்து விடுவித்த செம்படையின் சின்னங்கள் உட்பட அனைத்து கம்யூனிச சின்னங்களையும் 2015 இல் தடை செய்தல் மற்றும் உக்ரேனின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியை சட்டவிரோதமாக்குதல் ஆகியவையும் இந்தப் பிரச்சாரத்தில் அடங்கும். லெனின் மற்றும் செம்படையின் நினைவுச்சின்னங்கள் நாடு முழுவதும் அகற்றப்பட்டன, அதே நேரத்தில் கியேவ் ஆட்சியின் இடதுசாரி எதிர்ப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் படுகொலை முயற்சிகளுக்கு ஆளாயினர். கொனோனோவிச் சகோதரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பாசிச கும்பல்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
போரின் தொடக்கத்தில் இருந்து, உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் இணைய தளம் மற்றும் தகவல் தொடர்பு சேனல்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வெளியீடான உலக சோசலிச வலைத் தளம், ஸ்ராலினிசத்துடன் அடிப்படையானதும், நன்கு ஆவணப்படுத்தப்பட்டதுமான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. புட்டின் ஆட்சியை ஆதரிக்கும் உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறாக, நாங்கள் அதையும் உக்ரேனில் அதன் படையெடுப்பையும் எதிர்க்கிறோம். ஆனால் இந்த கைதுகளை எதிர்க்கும் ஒவ்வொரு வர்க்க நனவுள்ள தொழிலாளியின் கடமையில் ஒரு துளி கூட மாறாது. அந்தக் கைதுகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு ஆபத்தான தாக்குதலை உருவாக்குகின்றன, பாசிச சக்திகளை வலுப்படுத்த உதவுகின்றன, மேலும் அரசாங்கத்தின் அனைத்து இடதுசாரி எதிர்ப்பாளர்களையும் ஒடுக்குவதற்கும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய போர் உந்துதலுக்கும் உதவுகின்றன. இது முழு பிராந்தியத்தையும் உலகையும் பேரழிவில் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது