மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உக்ரேனில் போருக்கு எதிரான எதிர்ப்பை குற்றமாக்கும் புதிய சட்டங்கள் மற்றும் ஒரு ஆக்கிரோஷமான போலீஸ் அடக்குமுறை இருந்தபோதிலும், ரஷ்யாவில் போருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. ஐரோப்பிய ஆணையத்திடம் இருந்து நிதியுதவி பெறும் ரஷ்ய மொழி மனித உரிமைகள் திட்டமான OVD-Info இன் படி, 12ம் தேதி நாளின் முடிவில் 36 நகரங்களில் 668 பேர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முந்தைய வார இறுதியில் இருமடங்கு பல நகரங்களில் 10 மடங்கு அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து, OVD-Info ரஷ்யாவிற்குள் 14,000 க்கும் மேற்பட்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்ததை ஆவணப்படுத்தியுள்ளது, 170 க்கும் மேற்பட்டோர் காவலில் உள்ளனர். இன்னும் பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்கின்றனர், இது பேச்சு சுதந்திரத்தை கடுமையாக கட்டுப்படுத்துகிறது, அத்துடன் Facebook, Twitter மற்றும் Instagram உள்ளிட்ட சில பிரபலமான சமூக ஊடக தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
ஒரு புதிய கட்டுப்பாடு 'ரஷ்ய ஆயுதப்படைகளின் நோக்கம், பங்கு மற்றும் பணிகளை சிதைக்கும், அத்துடன் சிறப்பு மற்றும் பிற இராணுவ நடவடிக்கைகளின் போது மற்ற பிரிவுகளை சிதைக்கும்' எந்தவொரு பேச்சு அல்லது நடத்தையையும் தடை செய்கிறது. 'தவறான போலிகளை' தெரிந்தே பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபருக்கும் விரிவாக்கப்பட்ட புதிய சட்டங்களின் கீழ் அதிகபட்ச தண்டனை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகும். சட்டத்தின் தெளிவற்ற மொழி, அதன் மீறலுக்கான கடுமையான தண்டனையுடன், போர் தொடர்பான கருத்து வேறுபாட்டின் எந்தவொரு வெளிப்பாட்டையும் தன்னிச்சையாக துன்புறுத்துவதற்காக கதவைத் திறக்கிறது.
போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளில் வேரூன்றியிருந்தாலும், அரசியல்ரீதியாக அமெரிக்க-சார்பு தாராளவாத எதிர்ப்பால் மேலாதிக்கம் பெற்றிருந்தாலும், அவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சிதைந்த அர்த்தத்தில் மக்கட்தொகை முழுவதும் பரந்த அளவிலும் ஆழமாகவும் உணரப்படும் போர்-எதிர்ப்பு உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. புட்டின் ஆட்சியின் அடக்குமுறை குறிப்பாக, ஆர்ப்பாட்டங்களில் சேராத பல தொழிலாளர்களை அச்சுறுத்துவதையும், தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கம் தோன்றுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கிரெம்ளின் இப்போது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்களை தடை செய்துள்ளது, அங்கு போரை எதிர்க்கும் பல வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் மில்லியன் கணக்கானவர்களால் பகிரப்பட்டு பார்க்கப்பட்டன. மார்ச் 15 முதல் Instagram முடக்கப்படும்.
ஏறக்குறைய 10 மில்லியன் முறை பார்க்கப்பட்ட ஒரு சிறிய வீடியோவில், செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் பொலிசார் நன்கு அறியப்பட்ட கலைஞரும் லெனின்கிராட் முற்றுகையில் உயிர் பிழைத்தவருமான 77 வயதான யெலினா ஒசிபோவாவை கைது செய்தனர். அவர் உலகளவில் அணு ஆயுதங்களை ஒழிக்குமாறு அழைப்புவிடும் கைகளால் எழுதப்பட்ட இரு பெரிய பதாகைகளை ஏந்தி இருந்தார்.
ஆர்ப்பாட்டங்களின் பதாகைகளில், 'தயவுசெய்து போர் வேண்டாம்' மற்றும் 'நாங்கள் அமைதிக்காக இருக்கிறோம்' என்று எழுதப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில், போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் 'அவமானம்,' 'உக்ரேன் எங்கள் எதிரி அல்ல' மற்றும் 'புட்டினே, துருப்புக்களை திரும்பப் பெறு' என்று கோஷமிட்டனர். ஒசிபோவாவின் கைது பின்னணியில் கேட்கக்கூடிய ஒரு பொதுவான கோஷம், 'போர் வேண்டாம்' (nyet voinye) என்ற எளிய இரண்டு அசைகள் ஆகும், இது சமூக ஊடக ஹேஷ்டேக்காக (#нетвойне) பரவலான பயன்பாட்டைக் கண்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை வாய்மொழி மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் செய்வதைப் படம்பிடிப்பதாகக் கூறப்படும் பல ஆடியோ பதிவுகள் கடந்த வாரத்தில் ரஷ்ய மொழி சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரவி, பல தளங்களில் நூறாயிரக்கணக்கான தொடர்புகளை பெற்றன.
அவற்றில் ஒன்றில், மார்ச் 6 தேதியிட்ட, 26 வயதான பெண்ணிய ஆர்வலர் அலெக்ஸாண்ட்ரா கலுஷ்ஸ்கிக், கொம்சோமோல்ஸ்காயா சதுக்கத்தில் ஒரு பேரணியில் கலந்து கொண்ட பின்னர், மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியான Brateyevoவில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணையின் போது வாய்மொழியாகவும் உடல் ரீதியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். மற்றொன்றில், 22 வயதான மெரினா மொரோசோவா ஒரு விசாரணையாளரை எதிர்கொள்கிறார், அவர் தண்ணீரை தெளித்து, அவளை கையால் தாக்கினார், மேலும் அவரது முகத்திற்கு முன்னால் ஒரு துப்பாக்கியை அசைத்தார்.
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்திருக்கும் கொம்சோமோல்ஸ்கியா பிராவ்தா என்ற செய்தித்தாள், பதிவுகள் 'போலி' என்று கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டது, அவற்றை விநியோகிக்கும் எவரும் 'போலிகளை' பரப்புவதற்கு எதிராக புதிதாக விரிவாக்கப்பட்ட சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரலாம் என்று எச்சரித்தது.
இந்தப் பதிவுகள் ரஷ்ய ஊடகங்களின் பிரிவுகளில் வெளியிடப்பட்டு, ரஷ்யாவிற்குள் இருக்கும் வலதுசாரி, சிறையில் அடைக்கப்பட்ட 'எதிர்க்கட்சித் தலைவர்' அலெக்ஸி நவால்னி உட்பட மேற்கத்திய சார்பு எதிர்ப்புகளுடன் இணைந்துள்ளன. இதில் Novaya Gazeta போன்ற தளங்களும் அடங்கும், அதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் நவால்னிக்கு சமீபத்திய நோபல் பரிசை அர்ப்பணித்தார். மேலும் மேற்கத்திய அரசியல்வாதிகளிடமிருந்து கணிசமான ஆதரவைப் பெற்ற பங்க் இசைக் குழுவின் இரண்டு உறுப்பினர்களால் நிறுவப்பட்ட மீடியாசோனா திட்டத்திற்கும் அர்ப்பணித்தார்.
Brateyevo காவல் நிலையத்தில் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான துஷ்பிரயோகம் நேட்டோ-சார்பு மேற்கத்திய ஊடகங்களிலும் கூறப்பட்டுள்ளது, ரஷ்யாவின் சர்வாதிகாரத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்ட அவை பயன்படுத்தப்பட்டன. மாஸ்கோவால் துன்புறுத்தப்பட்ட போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்கார்களுக்கு பாசாங்குத்தனமான அனுதாப வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், மேற்கில் ஒரு உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கம் வெளிப்படும் போது, அது இதேபோன்ற மிருகத்தனமான அடக்குமுறையை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.