தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகபூர்வ மொத்த இறப்பு எண்ணிக்கையை விட மும்மடங்கு அதிகம் என்று லான்செட் அறிக்கை காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அரசாங்கங்கள் அவர்களின் மக்கள்தொகையின் சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான மக்களின் பதிலை மதிப்பீடு செய்வதற்கும் அவர்களுக்கு உதவ, இறப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் போன்ற முக்கிய பொது சுகாதாரப் புள்ளிவிபரங்களை கண்காணிப்பது, அதிலும் குறைந்தபட்சம் தத்துவார்த்த ரீதியில் அவற்றைக் கண்காணிப்பது உதவும். பொது சுகாதாரப் புள்ளிவிபரங்கள் என்பவை, சமூக வரைபடத்தில் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் அதன் ஆரோக்கியத்தைக் கண்டறிவதற்கான ஒரு வகை வரைபடமாகச் செயல்படுவதுடன், குடிமக்களுக்கான பாதுகாப்பான பாடத்திட்டத்தை அவை பட்டியலிடுகின்றன.

அமெரிக்காவில் தற்போது செய்யப்படுவது போல், அத்தகைய புள்ளிவிபரங்களின் சேகரிப்பை வேண்டுமென்றே நிறுத்துவதானது, ஒரு மாலுமி தனது கப்பலை கண்மூடித்தனமாக வழிநடத்த முயற்சிப்பது போன்றதாகும். பொது சுகாதார நடவடிக்கைகளின் இன்றியமையாத குறிக்கோள் தணிக்கை மூலம் சிதைக்கப்படும் நிலையில், அவை மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு அல்ல என்பதை இது நிரூபிக்கிறது, அதேவேளை முதலாளித்துவத்தின் கீழ், ஆளும் வர்க்கத்தின் இலாபமீட்டும்தன்மையை இன்னும் முக்கியமான ஒன்றாக பேணும் நிலை தான் உள்ளது. இது வர்க்க நலன்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் பரிசீலனைகளால் தீர்மானிக்கப்படுகிறது.

உலக வரைபடத்தின்படி, கோவிட்-19 நோய்தொற்று வெடிப்பால் ஒவ்வொரு 100,000 பேரில் நிகழ்ந்த மொத்த இறப்புக்களின் விபரம். ஆதாரம் விக்கிபீடியா.

மருத்துவ வரலாற்றாசிரியரும் பேராற்றல் மிக்க பொது சுகாதார வல்லுநருமான டாக்டர். ஜோர்ஜ் ரோஷன் குறிப்பிட்டது போல், “சமகாலத்திய பொது சுகாதார நிலைமையுடன் தொடர்புடையது என்ற வகையில், அந்தந்த காலத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல், எந்தக் காலகட்டத்திலும் பொது சுகாதாரத்தின் வரலாற்றைப் பற்றிய உண்மையான புரிதலை ஒருவர் கொண்டிருக்க முடியாது.”

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதான அந்த வார்த்தைகள், உலகம் தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளதான, மற்றும் முதலாளித்துவ நாடுகளின் தலைவர்கள் மனித நல்வாழ்வு அல்லது மனிதர்களின் உடல் ரீதியான உயிர்வாழ்வு குறித்து அவர்கள் காட்டும் அனைத்து பாசாங்குகளையும் நிறுத்திக் கொண்டுள்ளதான இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் பொருந்தக்கூடியவையாக உள்ளன. குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதான கொரோனா வைரஸின் மிகுந்த தொற்றும்தன்மை கொண்ட பல்வகை மாறுபாடுகளால் மீண்டும் மீண்டும் உருவெடுக்கும் நோய்தொற்று வெடிப்புக்களையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தணிப்பதற்கான எந்தவொரு முயற்சிகளையும் அவர்கள் கைவிட்டனர்.

மாறாக, தொற்றுநோய்க்கான அவர்களது பேரழிவுகரமான பதிலிறுப்பால் தீவிரப்படுத்தப்பட்ட எப்போதும் வளர்ந்து வரும் உள் பதட்டங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, அவர்கள் தங்கள் கவனத்தை போரின் பக்கம் திருப்பியுள்ளனர். தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டானது, உலக வரலாற்றில் ஒரு தீர்க்கமான மற்றும் மனித குலத்திற்கு மிகுந்த ஆபத்தான காலகட்டமாக இருக்கக்கூடும்.

இந்தச் சூழலில், அதிகப்படியான இறப்புகளின் உலகளாவிய மதிப்பீடுகள் குறித்து லான்செட்டில் நாழிதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய மதிப்பாய்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளும் உயரடுக்கு தங்கள் மக்கள் எவ்வளவு விலை கொடுத்தாலும் அவர்களின் உயிரை விட மேலாக தமது இலாபத்தை முன்னிலைப்படுத்திய நிலையில், நாடு நாடாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் குற்றவியல் கொள்கைகளுக்கு ஒரு சாளரத்தை வழங்குகிறது. இதில் உயிரிழப்பின் அளவு அபரிமிதமாக வெளிப்படுத்தப்படுகிறது, மேலும் மேலே இணைக்கப்பட்டுள்ள விஞ்ஞான ஆவணத்தை மதிப்பாய்வு செய்ய வாசகர் ஊக்குவிக்கப்படுகிறார்.

கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட பேரழிவை முதலாம் உலகப் போருடன் ஒப்பிடுவது மிகைப்படுத்தல் அல்ல, ஏனென்றால், ஒவ்வொரு நோய்தொற்று அலையும், ஒரு இரத்தக்களரியான மற்றும் அர்த்தமற்ற போரினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது போல், மக்களை கொத்து கொத்தாக அது பலி கொண்டது.

தவிர, இந்த நிகழ்வில், அகழிகள் மற்றும் போர்முனைகளுக்குப் பதிலாக, மக்கள் அடர்த்தி மிக்க நகரங்களும் நகர்ப்புறங்களும் தான் போர்க்களங்களாக மாறிப்போயின. போர் மற்றும் தொற்றுநோய்கள், இரண்டு நிகழ்வுகளையும் பொறுத்தவரை, அவை முன்னறிவிக்கக்கூடியவை, தடுக்கக்கூடியவை, மேலும் இறுதியாக ஆய்வு செய்தால், அவை முற்றிலும் தேவையற்றவையே.

படம் 1 இரண்டு ஆண்டுகளில் கடும் பிராந்திய நோய்களின் உலகளாவிய சுமையால் ஏற்பட்ட அதிகப்படியான இறப்புகள் பற்றிய பகிர்ந்தாய்வு. ஆதாரம் அதிகப்படியான இறப்புகள் குறித்த லான்செட் ஆய்வு.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்த மரணத்தின் அளவு அதிர்ச்சியளிக்கிறது, அதிலும் குறிப்பாக தொற்றுநோயை வெறும் வாரங்களில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் எப்போதும் கைவசம் இருக்கையில் இது தேவையற்றதே. தொழில்நுட்பம், விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் போன்ற பொது சுகாதார அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ஆதாரங்களும் கிடைக்கக்கூடிய நிலையில், அந்த முடிவு எடுத்த சில வாரங்களுக்குள் வைரஸை ஒழிக்க முடியும். ஆனால் அதற்குப் பதிலாக, ‘வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற மந்திரம் தான் காலவரையின்றி போதிக்கப்படுகிறது.

லான்செட் அறிக்கையில், ஆசிரியர்கள் 2020 ஆம் தொடக்கத்தில் இருந்து வாராந்திர அல்லது மாதாந்திர அடிப்படையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளின் 31 பகுதிகளும் உட்பட, 74 நாடுகள் மற்றும் பிரதேசங்களினது மற்றும் 266 துணை தேசிய பகுதிகளினது அனைத்து காரணங்களினால் ஏற்படும் இறப்புக்களின் தரவுகளை சேகரித்தனர். இந்த அவதானிக்கப்பட்ட இறப்புகள் பின்னர், இறப்பு பதிவுகள் முழுமையடையாத பகுதிகளுக்கும் கணக்கிடப்பட்டதான சிக்கலான ‘குழும’ மாதிரியின் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் இறப்புகளுடன் ஒப்பிடப்பட்டன.

ஜனவரி 1, 2020 முதல் டிசம்பர் 31, 2021 வரை, அதாவது ஓமிக்ரோன் மாறுபாடு அதன் உலகளாவிய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னைய காலகட்டத்தில், உலகளவில் 5.94 மில்லியன் கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் அதிகப்படியான இறப்புகள், ஒரு சாதாரண காலகட்டத்தில் ஏற்படும் இறப்புகளை விட அதிகமாகவும் அதற்கு மேலாகவும் மூன்று மடங்கு அதிகமாக 18.2 மில்லியன் அளவிற்கு பதிவாகியிருப்பதாக புதிய ஆய்வு மதிப்பிடுகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் விஞ்ஞானத்தின் இணைப் பேராசிரியரான, இந்த ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர். ஹைடாங் வாங், “உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களால் ஆவணப்படுத்தப்பட்ட நிலைமையை விட, கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்படும் இறப்பின் தாக்கம் மிகவும் அழிவுகரமானதாக இருப்பதாக எங்கள் கோவிட்-19 காரணமான அதிகப்படி இறப்புகளின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, … [இது] இறப்பின் உண்மையான சுமையின் ஒரு பகுதி படத்தை மட்டுமே வழங்குகிறது” என்று கூறினார்.

இந்த அறிக்கை, “தொற்றுநோயால் ஏற்படும் ஒட்டுமொத்த உலகளாவிய அதிகப்படியான இறப்புகள், தொற்றுநோய் காலத்தின் போதான இறப்புகளின் முக்கிய உலகளாவிய காரணங்களில் ஒன்றாக கோவிட்-19 ஐ உருவாக்குகிறது, அதாவது, தொற்றுநோய்க்கு முன்னைய இறப்புக்கான பிற காரணங்களின் விகிதங்களையும் போக்குகளையும் கருத்தில் கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது” என்று குறிப்பிடுகிறது.

தேசியளவில், இந்தியா மிகப்பெரியளவிலான உயிரிழப்பை எதிர்கொண்டது, அங்கு 4 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1.13 மில்லியன் இறப்புகளுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதனையடுத்து ரஷ்யா 1.07 மில்லியன் இறப்புகளை கொண்டுள்ளது. மெக்சிகோ 798,000, பிரேசில் 792,000, இந்தோனேசியா 736,000, மற்றும் பாகிஸ்தான் 664,000 என்றளவிற்கு இந்த நாடுகளும் பாரிய உயிரிழப்புகளை எதிர்கொண்டன. மேலும், பங்களாதேஷ், பெரு, தென்னாபிரிக்கா, ஈரான், எகிப்து மற்றும் இத்தாலி ஆகிய ஆறு நாடுகளும் கால் மில்லியனுக்கும் அதிகமான அதிகப்படியான இறப்புகளை எதிர்கொண்டன.

தனிநபர் அடிப்படையில், பொலிவியாவில் 100,000 பேருக்கு 735 இறப்புகள் என்ற வீதத்தில் கோவிட் காரணமான அதிகப்படி இறப்புகளின் வீதம் உச்சபட்சமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரு 100,000 பேருக்கு 500 என்ற வீதத்தில் இறப்புகளைச் சந்தித்தது. ஆண்டிஸ் மலைகளில் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரண்டு தென் அமெரிக்க நாடுகளும் இந்த எண்ணிக்கையில் அருகருகே உள்ளன.

ரஷ்யாவின் அதிகப்படியான இறப்பு விகிதம் 100,000 பேருக்கு 375 இறப்புகளை எட்டியது. மெக்சிகோ 100,000 பேருக்கு 325 இறப்புக்களைக் கண்டது. பிரேசிலும் அமெரிக்காவும் 100,000 பேருக்கு முறையே 187 மற்றும் 179 இறப்புகள் என ஒரே வரிசையில் இருந்தன.

2020-21 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த காலத்திற்கான COVID-19 தொற்றுநோய் மற்றும் அறிக்கையிடப்பட்ட COVID-19 இறப்பு விகிதத்தால் மதிப்பிடப்பட்ட அதிகப்படியான இறப்பு விகிதத்திற்கு இடையிலான விகிதத்தின் உலகளாவிய விநியோகம் (Credit: Lancet study on excess deaths, Creative Commones)

இதற்கு முற்றிலும் மாறாக, பூஜ்ஜிய கோவிட் மூலோபாயத்தை கடைபிடிக்கும் நாடுகள் உண்மையில் எதிர்மறையான அதிகப்படியான இறப்புகளை எதிர்கொண்டன, அதிலும் ஒரு கொலையாளி வைரஸ் உலகளாவிய பெருந்தொற்றை உருவாக்கியுள்ள நிலைமைகளின் கீழ் கூட, அந்நாடுகளில் மக்கள் ‘எதிர்பார்த்ததை,’ விட நீண்ட காலம் வாழ்கிறார்கள்.

தனிநபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்தியங்களுக்கு இடையிலான அதிகப்படியான இறப்புகளை ஒப்பிடுகையில், உயர் வருமான பிராந்தியங்கள் 100,000 பேருக்கு 126 இறப்புகள் என்ற உலகளாவிய சராசரிக்கு நெருக்கமான அதிகப்படியான இறப்புகளை எதிர்கொண்டன. வறிய கிழக்கு ஐரோப்பா சராசரியாக 100,000 பேருக்கு 345 இறப்புகளை கொண்டுள்ள அதேவேளை, பணக்கார மேற்கு ஐரோப்பா சராசரியாக ‘வெறும்’ 140 இறப்புகளையே கொண்டுள்ளது.

ஆசிரியர்கள், “பிராந்திய மட்டத்தில், இலத்தீன் அமெரிக்காவின் ஆண்டியன் பிராந்தியத்தில் உச்சபட்ச அதிகப்படியான இறப்பு விகிதங்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த பிராந்தியங்களுக்கு வெளியே உள்ள பல இடங்களும் இதேபோன்ற உயர் விகிதங்களைக் கொண்டுள்ளன, குறிப்பாக லெபனான், ஆர்மீனியா, துனிசியா, லிபியா, இத்தாலியின் பல பகுதிகள் மற்றும் தெற்கு அமெரிக்காவின் பல மாநிலங்கள் இதில் அடங்கும்” என்று குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள தனிப்பட்ட மாநிலங்களுக்கான புள்ளிவிபரங்கள், உலகெங்கிலும் உள்ள நாடுகளுடனான ஒரு ஒப்பீட்டை வழங்குகிறது. அந்த வகையில், அலபாமா 294, ஆர்கன்சாஸ் 256, கென்டக்கி 242, லூசியானா 257, மிசிசிப்பி 330, ஒக்லஹோமா 249, தெற்கு கரோலினா 248, நியூ மெக்சிகோ 240, மற்றும் மேற்கு வேர்ஜீனியா 278 என்ற உச்சபட்ச விகிதங்களைக் கொண்டிருப்பதானது மெக்சிகோ மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பீடு செய்யக்கூடியதாக உள்ளன.

என்றாலும், சீனாவின் கண்டுபிடிப்புக்கள் விதிவிலக்காக குறிப்பிடத்தக்கவை. அதாவது, 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில் மதிப்பிடப்பட்ட அதிகப்படியான இறப்புகள் மொத்தம் 17,900 மட்டுமே, அதிகப்படி இறப்புகளின் தனிநபர் விகிதம் 100,000 பேருக்கு 0.6 ஆகும், அதாவது இது அமெரிக்காவை விட 300 மடங்கு குறைவானதாகும்.

ஓமிக்ரோனின் BA.2 துணை மாறுபாடு சீனாவிற்கு மிக ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது, ஆனால் இது பூஜ்ஜிய கோவிட் கொள்கையில் இருந்து விலகியதன் விளைவு அல்ல. மாறாக, இது ஏனைய பல நாடுகளில் உள்ள ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்படும் மோசமான கொள்கையால் ஏற்படுகிறது, அவை வைரஸை நிலையாக, பரவவும் மற்றும் பிறழ்வு காணவும் அனுமதிப்பதுடன், புதிய மற்றும் மிகுந்த தொற்றும் தன்மையுள்ள மற்றும் ஆபத்தான மாறுபாடுகளை உருவாக்குகின்றன.

தொற்றுநோயின் மூன்றாம் ஆண்டு, வறிய மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைக் கொன்று குவிப்பதை மட்டுமே தொடரும். புத்தாண்டு முதல், ஓமிக்ரோன் அலையின் போக்கில் 600,000 கோவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. இதை மூன்றால் பெருக்கினால், 2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் உலகளவில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அதிகப்படியான இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்பதானது, ஓமிக்ரோன் விகாரத்தின் கொடிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Nature Reviews Microbiology இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய அழுத்தமான கருத்துரைப்பில், புகழ்பெற்ற வைராலஜிஸ்ட் டாக்டர். அரிஸ் கட்ஸோராகிஸ் உள்ளிட்ட ஆசிரியர்கள், பரிணாம அழுத்தங்கள் அதிக உள்ளார்ந்த பரவும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு தவிர்க்கும் தன்மையைத் தேர்ந்தெடுக்கும் என்று வாதிடுகின்றனர்.

அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்:

வைரஸ் அவற்றின் பிறழ்வுகளைக் காப்பாற்றுவதற்கு குறைவான வீரியத்துடன் உருவெடுக்கும் என்ற கருத்து நோய்க்கிருமி பரிணாமத்தைச் சுற்றியுள்ள மிகவும் தொடர்ச்சியான கட்டுக்கதைகளில் ஒன்றாகும். வலுவான பரிணாம அழுத்தத்தின் கீழ் இருப்பதான வைரஸ் நோயெதிர்ப்பு ஏய்ப்பு மற்றும் பரவும் தன்மையைப் போலல்லாமல், வைரஸின் வீரியம் என்பது ஒரு துணை தயாரிப்பு ஆகும், இது பிறழ்வு மற்றும் நோய்க்கிருமி இரண்டிலும் உள்ள காரணிகளுக்கு இடையிலான சிக்கலான தொடர்புகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. வைரஸ்கள் அவற்றின் பரவும் தன்மையை அதிகரிக்க உருவெடுக்கின்றன, சில சமயங்களில் இது அதிக வீரியத்துடன் சம்பந்தப்பட்டிருக்கலாம், உதாரணமாக, அதிக வைரஸ் சுமைகள் பரவலை மேம்படுத்தும் அதேவேளை அதன் கடுமையையும் அதிகரிக்கும். அப்படியானால், நோய்க்கிருமிகள் உயர் வீரியத்துடன் பரிணமிக்கலாம். SARS-CoV-2, அத்துடன் இன்ஃப்ளூயென்சா வைரஸ், எச்.ஐ.வி., ஹெபடைடிஸ் சி மற்றும் பலவற்றில் உள்ளதைப் போல வழமையான பரிமாற்ற சாளரத்திற்குப் பின்னர் மட்டுமே, நோய்தொற்றின் தீவிரம் தாமதமாக வெளிப்பட்டால், அது வைரஸ் தகுதியில் வரையறுக்கப்பட்ட பங்கைக் கொண்டுள்ளது, மேலும் அதற்கு எதிராக தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம். [முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது] வைரஸ் பரிணாமத்தை முன்னறிவிப்பது ஒரு சிக்கலான பணியாகும், மேலும் ஓமிக்ரோனின் குறைந்த தீவிரத்தன்மை எதிர்கால மாறுபாடுகளுக்கு ஒரு நல்ல முன்கணிப்பு அல்ல.

SARS-CoV-2 வைரஸ் தொடர்ந்து ‘ஆன்டிஜெனிக் பரிணாமத்திற்கு’ உட்பட்டு வருகிறது, ஏனெனில் பாரிய தடுப்பூசி வழங்கலால் பெரும்பான்மை மக்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி கிடைப்பதன் காரணமான அழுத்தங்களுக்கு இது எதிர்வினையாற்றுகிறது. நோயெதிர்ப்பு திறனை தவிர்க்கும் நோக்கிலான இந்த பிறழ்வுகளின் போக்கானது, மக்கள்தொகை அளவில், நோய்தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து, ஒட்டுமொத்த நோயின் கடுமையும் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது.

மேலும், இந்த ‘ஆன்டிஜெனிக் பரிணாமங்கள்,’ ஒட்டுமொத்த மக்களின் ஆரோக்கியத்தைப் போல, ஒரு அரசியல் நிகழ்வாகும், இது வெறுமனே தானியங்கி உயிரியல் செயல்முறைகளால் இயக்கப்படுவதில்லை, மாறாக, மனிதர்கள் மூலமாக வைரஸ் உயிர்வாழ்வதற்கும், தகவமைவதற்கும் தேவையான நிலைமைகளை அது அணுக அனுமதிக்கும் கொள்கைகளால் இயக்கப்படுகின்றன.

தொழிலாள வர்க்கம், தொற்றுநோயின் தன்மை குறித்து ஒரு குறுகிய காலத்தில் திரட்டப்பட்ட விஞ்ஞான அறிவைக் கவனிக்க வேண்டும் மற்றும் உலகளவில் வைரஸை அகற்றுவதற்கான உலகளாவிய முயற்சியை ஆதரிக்க வேண்டும். வெளியில் இருந்து சீனா போன்ற பெரிய நாட்டிற்கு வரும் புதிய வெடிப்புகளை அடக்குவதற்கான அதன் முயற்சிகளை பாதுகாப்பதும் இதில் அடங்கும். இது கோவிட்டுக்கு எதிரான போராகும், மாறாக ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் அல்ல, எனவே அதுவே உழைக்கும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசரத் தேவையாகவுள்ளது.

Loading