பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்களில் மக்ரோன் இராணுவவாத, வர்க்கப் போர் தேர்தல் திட்டத்தை முன்வைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 17 அன்று, ஏப்ரல் 10 மற்றும் 24, 2022 ஜனாதிபதித் தேர்தல்களுக்கான தனது திட்டத்தை ஒபெர்வில்லியே என்னும் இடத்தில் இமானுவல் மக்ரோன் வழங்கினார். அது, இராணுவ மறுஆயுதபாணியாக்கல் மற்றும் ஆழ்ந்த சமூக சிக்கன கொள்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறது, புதிய அலை தொற்றுகள் விரிவடைகின்றபோதிலும் கோவிட்-19 தொற்றுநோய் குறித்து அமைதியாக உள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன், வியாழன், மார்ச் 17, 2022, வியாழன், 17 மார்ச், 2022, பிரான்சின் வடக்கே உள்ள ஒபெர்வில்லியே இல் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார செய்தி மாநாட்டின் போது தனது உரையை ஆற்றுகிறார் (AP Photo/Thibault Camus)

மக்ரோனின் வேலைத்திட்டம் பற்றிய ஒரு ஆய்வானது, ரஷ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து உக்ரேனில் நேட்டோவால் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்படும் போர், உலகை கடுமையாக மறுகட்டமைக்கும் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களின் முயற்சியை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மக்ரோன் தனது திட்டத்தை முன்வைக்கும்போது, உக்ரேனில் நடந்த போரைக் குறிப்பிட்டார்: 'இன்று நான் உங்களுக்கு முன்வைக்கும் திட்டம் எங்களுடையது, அதாவது, வரலாற்றில் சோகம் திரும்பும் தருணத்தில் வேரூன்றி உள்ளது.'

வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராகப் போரை நடத்த, முதலாளித்துவ வர்க்கமும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது போர் தொடுக்கிறது என்ற மார்க்சிச பழமொழியை அவரது வேலைத்திட்டம் உறுதிப்படுத்துகிறது. ஐரோப்பாவின் இராணுவமயமாக்கலின் மத்தியில், பேர்லின் தனது பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை இந்த ஆண்டு 150 பில்லியன் யூரோக்களாக மூன்று மடங்காக உயர்த்தியதால், பிரெஞ்சு இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை 50 பில்லியன் யூரோக்களாக உயர்த்தவும், பொலிஸ் படைகளை வலுப்படுத்தவும் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு நிதியளிக்க, மக்ரோன் ஓய்வூதியங்கள் மற்றும் வேலையின்மை நலன்களுக்கான செலவினங்களை 50 பில்லியன் யூரோக்களால் குறைக்க திட்டமிட்டுள்ளார்.

'இறையாண்மை', 'முன்னேற்றம்' மற்றும் 'மனிதநேயம்' போன்றவற்றை மக்ரோனின் சடங்காக வெளிப்படுத்திய போதிலும், ரஷ்யாவிற்கு எதிரான ஒரு உலகப் போரை நோக்கிய நேட்டோவின் உந்துதல், ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையை ஆழமாகப் பின்னடையச் செய்யும் முயற்சியில் இருந்து பிரிக்க முடியாதது என்பது தெளிவாகிறது.

இராணுவ முன்னணியில், பிரான்சை 'உயர்-தீவிரமான போருக்கு' தயார்படுத்துமாறு மக்ரோன் அழைப்பு விடுக்கும் இடத்தில், அவர் ஏற்கனவே முன்மொழிந்த அல்லது முடிவு செய்த கொள்கைகளை துரிதப்படுத்துகிறார்:

  • 2018 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2019-2025க்கான இராணுவ திட்டமிடல் சட்டத்தின் மூலம், இராணுவ வரவு-செலவுத் திட்டம் 40 இலிருந்து 50 பில்லியன் யூரோக்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிப்பது முன்னறிவிக்கப்பட்டது.
  • சமூக சமத்துவமின்மைக்கு எதிரான வெகுஜன 'மஞ்சள் சீருடை' ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபோது, 2018 இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தால் அனைவருக்குமான இராணுவ சேவை (service militaire universel) இன் உருவாக்கம் அங்கீகரிக்கப்பட்டது.
  • பிரான்சிற்குள் பொலிஸ் படைகளுக்கு உதவுவதை இலக்காகக் கொண்ட இராணுவ 'தேசிய காவலர்' (garde nationale) படையை உருவாக்குவது அவரது அரசாங்கத்தாலும், நவபாசிச வேட்பாளர் மரின் லு பென் ஆலும் அடிபணியா பிரான்ஸ் வேட்பாளர் ஜோன் லூக் மெலோன்சோனாலும் எழுப்பப்பட்டது.

மக்ரோன் தனது முதல் பதவிக் காலத்தில், வேலைநிறுத்தங்களை அடக்க வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்கு காவல்துறையைப் பலப்படுத்தினார் மற்றும் 'மஞ்சள் சீருடை' போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இராணுவத்திற்கு அதிகாரம் அளித்தார். பிரான்சை உள்நாட்டில் இராணுவமயமாக்கும் அவரின் கொள்கையானது, 'உயர்-தீவிர' போர்களுக்கான தயாரிப்புடன் நேரடியாக பிணைக்கப்பட்டுள்ளது, அதாவது தற்போதைய நேட்டோ-ரஷ்யா போர் போன்ற உலகை முதலாளித்துவ மறு-பங்கீடு செய்யும் போர்களில், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

'பணக்காரர்களின் ஜனாதிபதி' என்ற தனது முதல் பதவிக் காலத்தில் தொழிலாளர்களால் பரவலாக வெறுக்கப்பட்ட மக்ரோன், அவரது சமூகத் திட்டத்தை பின்வருமாறு வரையறுக்கிறார்: 'கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்ததை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செய்வது உள்ளடக்கியுள்ளது.'

உண்மையில், இந்த வேலைத்திட்டம் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களில் ஒரு பரந்த விரிவாக்கத்தை முன்மொழிகிறது. மக்ரோன் தனது முதல் பதவிக் காலத்தில் செல்வ வரியை இரத்து செய்ததற்கு ஏற்ப, 15 பில்லியன் யூரோக்கள் வரி வெட்டுக்களை விரும்புகிறார், அதில் பாதி நிறுவனங்களுக்குச் செல்லும். வேலையின்மை காப்பீட்டில் குறைப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பது, அவரது முதல் பதவிக் காலத்தில் விதிக்கப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஒத்ததாக இருக்கிறது, ஆனால் வெகுஜன சமூக எதிர்ப்பின் காரணமாக தொற்றுநோய் காலத்தின் போது அவர் அதைச் செயல்படுத்த துணியவில்லை.

இருப்பினும், பிற சீர்திருத்தங்கள் சமூகத்தின் பிற்போக்குத்தனமான மாற்றத்தை இலக்காகக் கொண்ட பெரிய புதிய தாக்குதல்களுக்கு ஒத்திருக்கிறது. நலன்புரி உதவி பெறுபவர்களை (RSA பெறுபவர்களை) வாரத்திற்கு 15 முதல் 20 மணிநேரம் வேலை செய்து பலன்களைப் பெற வேண்டும் என்று மக்ரோன் விரும்புகிறார். பல்கலைக்கழகங்களுக்கு அதிக 'நிதி சுயாட்சி' வழங்குவதற்கான தனது ஜனவரி முன்மொழிவுக்கு அவர் திரும்புகிறார், அதன் நோக்கத்தை அவர் கொடூரமாக விளக்கினார், 'உயர்கல்வி என்பது, கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் எந்த விலையும் இல்லை என்ற ஒரு அமைப்பில் நாங்கள் நீண்ட காலம் இருக்க முடியாது.'

மக்ரோன் வேலையில்லாதவர்களையும் ஏழைகளையும் மிகை சுரண்டப்படும் தொழிலாளர்களாக மாற்றவும், ஆங்கிலோ-அமெரிக்கன் மாதிரியான பல்கலைக்கழக நிதியுதவி மாதிரியைப் பின்பற்றவும் விரும்புகிறார். பெரும்பாலும் பொது நிதியுதவியுடன் கல்வியைப் பெறுவதற்கு சில நூறு யூரோக்களை கல்விக் கட்டணமாகச் செலுத்துவதற்குப் பதிலாக, மாணவர்கள் ஒவ்வொரு அரை-ஆண்டுக்கும் (semestre) ஆயிரக்கணக்கான யூரோக்களைக் கடனாகப் பெற வேண்டியிருக்கும், பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கடனுடன் தங்கள் படிப்பை முடிக்க வேண்டும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரையும் நாடுகடத்துவேன் என்றும் மக்ரோன் சுட்டிக்காட்டுகிறார், இதன்மூலம் இரண்டாவது பதவிக்காலத்திலும், தொழிலாள வர்க்கத்தின் சுற்றுப்புறங்கள் மற்றும் இஸ்லாமிய அல்லது புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை அவர் தனது முதல் பதவிக் காலத்தில் போலவே தொடர்ந்து நடத்துவார் என தெரியப்படுத்தியுள்ளார்.

மக்ரோனின் வேலைத்திட்டத்தில் கோவிட்-19 தொற்றுநோயை பற்றி ஒரு காது கேளாத அமைதி நிலவுகிறது, அந்த நோயின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. இது 24 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்து, பிரான்சில் 140,000 இறப்புகளையும், ஐரோப்பாவில் 1.7 மில்லியனையும் ஏற்படுத்தியது, மேலும் BA.2 மாறுபாட்டால் இயக்கப்படும் புதிய அலை மீண்டும் ஐரோப்பாவை நாசமாக்குவதால், பிரான்சில் ஒரு நாளைக்கு சுமார் 100,000 தொற்றுக்களை வழக்கமாக ஏற்படுத்துகிறது. மக்ரோன் தனது வேலைத்திட்டத்தில் இந்த மௌனத்தின் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தனது அரசாங்கத்தின் தற்போதைய மறுப்பைத் தொடர அவர் திட்டமிட்டுள்ளார் என்பதைக் குறிக்கிறது.

இந்த அமைதி இருந்தபோதிலும், தொற்றுநோய் பிரெஞ்சு முதலாளித்துவத்தை நிரந்தரமாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. தொற்றுநோய்களின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய மீட்புத் திட்டங்கள், பிரான்சின் சொத்துடைமை வகுப்புகளை நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வரை வளப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய அரசுகள் பெரும் பணக்காரர்களுக்கு இந்தப் பணப் பரிமாற்றங்களுக்கு நிதியளித்தன, பிரான்சின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 90 சதவீதத்திலிருந்து 115 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரெஞ்சு முதலாளித்துவம் திவாலாகி விட்டது என்பது, பொதுவாக ஒப்புக்கொள்ளப்படாவிட்டாலும், அதன் ஆளும் உயரடுக்கின் ஆபாசமான அதிர்ஷ்டத்தால் உள்நாட்டில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நேட்டோ-ரஷ்யா மோதலுடன் உலக அளவில் குறிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் வரலாற்று நெருக்கடியை பிரான்சில் ஜனாதிபதித் தேர்தல்கள் குறிக்கின்றன. 1991ல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு திரும்பிய அதே வேளையில், அவை ஈராக், யூகோஸ்லாவியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் அதற்கு அப்பால் நேட்டோ போர்களில் இணைந்தன. இப்போது இந்த நெருக்கடியின் புதிய கட்டம் உருவாகி வருகிறது. அணுஆயுத சக்தி நாடான ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் அச்சுறுத்தல்கள், இராணுவ-பாசிச ஆட்சி வடிவங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வறுமையை நோக்கிய தீவிர சிக்கன ஆட்சியின் தோற்றத்துடன் கைகோர்த்துச் செல்கின்றன.

ரஷ்யப் படைகளால் உக்ரேன் மீதான படையெடுப்பு பற்றிய அவரது இராணுவவாதக் கொள்கைக்கான பழியை மக்ரோன் சுமத்துவது இழிந்த ஏமாற்றாகும். உக்ரேன் மீதான படையெடுப்பு என்பது ரஷ்ய மற்றும் உக்ரேனிய தொழிலாளர்களை பிரிக்கும் ஒரு பிற்போக்கு நடவடிக்கையாகும். ஆனால் நேட்டோ இந்த படையெடுப்பைத் தூண்டி, உக்ரேனுக்கு ஆயுதம் அளிப்பதிலும், ரஷ்யாவால் கோரப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க மறுப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது.

உண்மையில் மக்ரோன் நேட்டோவின் தற்போதைய கொள்கைக்கு நேர்மாறாகச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, கோவிட்-19 தொற்றுநோய் தொடங்குவதற்குச் சற்று முன்பு மக்ரோன் இந்தக் கொள்கையைக் கண்டித்தார். பிரிட்டிஷ் இதழான தி எகனாமிஸ்டிடம் பேசிய அவர், அமெரிக்க டாலரை நிர்வகிப்பதில் ஐரோப்பிய நிதியை சார்ந்திருப்பதை விமர்சித்தார் மற்றும் ரஷ்யா மீதான நேட்டோவின் ஆக்கிரமிப்புக் கொள்கையை கண்டித்தார்.

'நாம் என்ன அனுபவத்தை பெறுகிறோம் என்றால், என்னைப் பொறுத்தவரை, நேட்டோ மூளைச்சாவு அடைந்துவிட்டது' என்று மக்ரோன் மேலும் கூறினார்: 'ரஷ்யாவை நோக்கி அமெரிக்கா மிகவும் கடினமாக உள்ளது என்பது நிர்வாக, அரசியல் மற்றும் வரலாற்று வெறியின் ஒரு வடிவமாகும். ... ஐரோப்பாவில் அமைதியைக் கட்டியெழுப்ப, ஐரோப்பிய மூலோபாய சுயாட்சியை மீண்டும் கட்டியெழுப்ப விரும்பினால், ரஷ்யாவுடனான நமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”

இப்போது, 'மூளைச் சாவடைந்த' மக்ரோன், ரஷ்யாவிற்கு எதிரான வாஷிங்டனின் 'அரசியல் வெறியுடன்' தன்னை இணைத்துக் கொள்கிறார், அணு ஆயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்துகிறார், இதன் மூலம் அவர் தனது பதவிக் காலம் முழுவதும் பின்பற்றிய இராணுவவாத மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை தீவிரப்படுத்துகிறார்.

ஆயினும்கூட, மக்ரோன் தற்போது தேர்தல் கருத்துக் கணிப்புகளில் 31 சதவீத வாக்குகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார் என்பது அவரது கொள்கைகளுக்கான மக்கள் ஆதரவைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக போட்டி வேட்பாளர்களின் திவால்தன்மை மற்றும் பிரெஞ்சு ஆட்சியின் சிதைவை பிரதிபலிக்கிறது. சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் அதன் போலி-இடது சுற்றுவட்டங்களின் தலைமையிலான பல தசாப்தகால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்குப் பின்னர், ஊடகங்களால் 'இடது' என முன்வைக்கப்பட்ட எந்த வேட்பாளரும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த ஆதரவைப் பெறவில்லை. மக்ரோனின் கொள்கைகளுக்கான தொழிலாளர்களின் எதிர்ப்பு, முற்றிலும் ஊழல் நிறைந்த அரசியல் ஸ்தாபத்திற்குள் எந்த வெளிப்பாட்டையும் காணவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் தொழிலாளர்களின் எந்தவொரு அத்தியாவசியப் பிரச்சினையையும் தீர்க்காது. மக்ரோன் வெற்றி பெற்றாலும் சரி, அல்லது வேறு வேட்பாளரா இருந்தாலும் சரி, ஆளும் உயரடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே ஒரு வெடிக்கும் மோதல் தயாராகி வருகிறது. தொழிலாளர்கள் தங்கள் நலன்களை, போர், தொற்றுநோய் மற்றும் வங்கிகளின் கட்டளைகளுக்கு எதிராக ஒரு சர்வதேச அணிதிரட்டல் மூலமாகவும், தொழிற்சங்க எந்திரங்களுக்கு எதிரான ஒரு வெளிப்படையான கிளர்ச்சி மூலமாகவும் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலமாகவும் மட்டுமே பாதுகாக்க முடியும்.

Loading