முன்னோக்கு

ஐரோப்பாவில் போர் கவுன்சில் கூட்டத்திற்கு முன்னர் நேட்டோ பொதுச் செயலர் "ரஷ்யா மீது முன்பில்லாத விலைகளை" திணிக்க சூளுரைக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரிட்டன் பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நேட்டோ கூட்டத்தில் பங்கெடுப்பதற்காக பெல்ஜியத்தின் புரூசெல்ஸ் பயணிக்க உள்ளனர். உண்மையில் சொல்லப் போனால் இந்த கூட்டம், ரஷ்யா உடனான அமெரிக்க-நேட்டோ மோதலை மிகப் பெரியளவில் தீவிரப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்படும் ஒரு போர் கவுன்சில் ஆகும்.

இந்த கூட்டத்திற்கு முன்னர் நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் உரையாற்றும் போது, “ரஷ்யா மீது முன்பில்லாத விலைகளை' சுமத்த சூளுரைத்தார். ஏற்கனவே ரஷ்ய எல்லைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள துருப்புகளை மதிப்பிட்டு அவர் கூறினார்:

இப்போது கூட்டணி முழுவதும் நூறாயிரக்கணக்கான கூட்டுப் படைகள் தீவிர தயார்நிலையில் உள்ளன. ஐரோப்பாவில் ஒரு இலட்சம் அமெரிக்க துருப்புக்கள் உள்ளன. மேலும் 40,000 படைகள் நேரடியாக நேட்டோ கட்டளையின் கீழ், பெரும்பாலும் இக்கூட்டணியின் கிழக்குப் பகுதியில் உள்ளன. இவை அனைத்தும் மிகப் பெரிய வான்வழி மற்றும் கடற்படை சக்தியால் ஆதரிக்கப்பட்டுள்ளன. ஹை நார்த்திலும் மற்றும் மத்தியதரைக் கடலிலும் உள்ள ஐந்து விமானந்தாங்கி போர்க்கப்பல்களின் தாக்கும் குழுக்களும் இதில் உள்ளடங்கும்.

People gather amid the destruction caused after shelling of a shopping center, in Kyiv, Ukraine, Monday, March 21, 2022. (AP Photo/ (AP Photo/Rodrigo Abd) [AP Photo/Rodrigo Abd]

வரவிருக்கும் கூட்டத்தின் விளைவைக் குறித்து திரும்பிய ஸ்டொல்டென்பேர்க் கூறினார், “எல்லா களங்களிலும் நேட்டோவின் தோரணையை வலுப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். கூட்டணியின் கிழக்குப் பகுதியில் நம் படைகள் மிகப் பெரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. தரைவழியிலும், வான்வழியிலும் மற்றும் கடல்வழியிலும்,” என்றார்.

ஸ்டொல்டென்பேர்க் பின்னர் சீனாவை அச்சுறுத்தினார். 'சுதந்திர நாடுகள் அவற்றின் சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான அவற்றின் உரிமையைக் கேள்விக்குட்படுத்துவதில் பெய்ஜிங் மாஸ்கோவுடன் இணைந்துள்ளது,' என்றார். பைடெனின் கடந்த வார கருத்துக்களை எதிரொலித்து, சீனாவுக்கு எதிரான ஸ்டொல்டென்பேர்க்கின் அச்சுறுத்தல்கள், ரஷ்யாவின் படையெடுப்பானது 'வல்லரசு மோதலுக்கான', அதாவது ரஷ்யாவையும் சீனாவையும் காலனித்துவ அடிபணிதலுக்குத் திரும்ப செய்ய ஒரு மிகப் பெரிய உலகப் போருக்காக, அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நீண்டகால திட்டங்களுக்குச் சாக்குப்போக்கை வழங்கியுள்ளது என்ற அடிப்படை யதார்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.

குறிப்பிடத்தக்க வகையில், ஸ்டொல்டென்பேர்க்கின் வரலாற்று குறிப்பு கடந்த மாதம் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றியதல்ல, மாறாக உக்ரேனை நேட்டோவின் ஒரு பினாமியாக மாற்றிய பாசிச தலைமையிலான 2014 ஆட்சிக்கவிழ்ப்பு சதி சம்பந்தப்பட்டதாகும். “2014 இல் இருந்து, [நேட்டோ] கூட்டணி நாடுகள் உக்ரேனின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களின் திறன்களைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் அந்த பயிற்சியை இப்போது, மிகுந்த துணிச்சலுடன், நடைமுறைக்கு, முன்களத்திற்குக், கொண்டு வந்திருக்கிறார்கள்.”

கடந்த எட்டு ஆண்டுகளாக உக்ரேனியப் படைகளை நேட்டோ பாரியளவில் இராணுவரீதியில் கட்டமைத்ததை மறைக்க ஸ்டொல்டென்பேர்க் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நேட்டோ, அவர் கூறினார், 'டாங்கி தகர்ப்பு தளவாடங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள், ட்ரோன்கள், எரிபொருள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கி வருகிறது. அத்துடன் நிதியுதவியும் தான்.”

அவர் தொடர்ந்து கூறினார், “உக்ரேனிய ஆயுதப் படைகளின் தைரியத்தையும் தொழில்முறையையும் நான் பாராட்ட விரும்புகிறேன். நான் அவர்களை உக்ரேனில் சந்தித்தேன், 2014 இல் அவர்கள் இருந்த இடத்துடன் ஒப்பிடும்போது, இது எட்டாண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட சக்தியாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். உக்ரேனிய ஆயுதப் படைகள் இன்று மிகப் பெரியவை, மிகவும் சிறந்த ஆயுதங்களைக் கொண்டுள்ளன, சிறந்த பயிற்சி பெற்றுள்ளன, சிறப்பாக கட்டளைக்கு உட்பட்டுள்ளன. அவை 2014 இல் இருந்ததை விட சிறந்த தளவாடங்களைக் கொண்டுள்ளன,” என்றார்.

நேட்டோவினால் ஆயுதமேந்த செய்யப்பட்ட மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட ஓர் ஆயுதப்படையுடன் ரஷ்யர்கள் சண்டையிட்டு வருகிறார்கள் என்பது தான் ரஷ்யர்களின் அதிர்ச்சியூட்டும் இழப்புகளுக்கு முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, ஸ்டொல்டென்பேர்க் கூறினார், உக்ரேனிய இராணுவம் 'மிகப் பெரிய ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக நிற்க முடிகிறது மற்றும் அதைப் பின்வாங்க செய்ய, முடிந்துள்ளது,' என்றார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

உலக சோசலிச வலைத் தளம், ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ போருக்குச் செல்கிறது,” என்ற அதன் பெப்ரவரி 28 அறிக்கையில் குறிப்பிடுகையில், 'போர்களின் இன்றியமையா காரணங்களும் மற்றும் நலன்களும் பெரும்பாலும் முதலில் வெளிப்படுவதில்லை. அவை பிரச்சாரப் பொழிவால் மூடிமறைக்கப்படுகின்றன. ஆனால் உண்மையான மற்றும் மிகவும் ஆழமான உந்து சக்திகளும் மற்றும் மோதல் ஏற்பட்டதற்கான முக்கியத்துவமும், விரைவிலோ அல்லது பின்னரோ, வெளிப்படுகின்றன.'

மூன்று வாரங்களுக்குப் பின்னர், இதில் சம்பந்தப்பட்டிருப்பது உக்ரேன் போர் மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவுக்கு எதிரான போருக்காக அமெரிக்க மற்றும் நேட்டோ ஏகாதிபத்திய சக்திகளின் பிரச்சாரமும் மற்றும் உலகையே மறுபகிர்வு செய்வதற்குமான நடவடிக்கையும் இதில் சம்பந்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. ஏகாதிபத்திய சக்திகளாலேயே தூண்டிவிடப்பட்டு, உக்ரேன் மீதான ரஷ்யாவின் அவநம்பிக்கையான படையெடுப்பு, அவற்றுக்குச் சாக்குப்போக்கை வழங்கியுள்ளது.

இந்த புரூசெல்ஸ் சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க வணிக வட்டமேசையுடனான சந்திப்பில், பைடென் நடைமுறையில் கொண்டு வரப்பட்டு வருகின்ற நீண்டகால திட்டங்களைச் சுட்டிக்காட்டினார்.

'உங்களுக்கே தெரியும், நாம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம்,' என்று கூறிய பைடென், 'இது ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. ஒரு நாள் ஓர் இரகசிய கூட்டத்தில் இராணுவ உயர் அதிகாரிகளில் ஒருவர் என்னிடம் கூறியது போல, 1900 மற்றும் 1946 க்கு இடையே 60 மில்லியன் பேர் உயிரிழந்தனர்.”

“இப்போது விஷயங்கள் மாறி வரும் நேரமிது. … ஒரு புதிய உலக ஒழுங்கு ஏற்பட உள்ளது, நாம் தான் அதற்கு தலைமை வழங்க வேண்டும்,” என்றார்.

“புதிய உலக ஒழுங்கு' என்ற வார்த்தை ஒரு நீண்ட மற்றும் இரத்தக்களரியான உள்ளர்த்தத்தைக் கொண்டுள்ளது.

செப்டம்பர் 11, 1990 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் 'புதிய உலக ஒழுங்கை நோக்கி' என்ற தலைப்பில் ஓர் உரை வழங்கினார். 'பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி, எவ்வளவு கொடூரமானதாக இருந்தாலும் சரி, வரலாற்றுக் காலகட்டத்தை நோக்கி நகர்வதற்கான ஓர் அரிய வாய்ப்பையும் வழங்குகிறது' என்றவர் அறிவித்தார்.

உக்ரேனில் தற்போதைய நெருக்கடியைப் போலவே, நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டு வந்த போர்த் திட்டங்களுக்குச் சாக்குப்போக்கை வழங்குவதற்காக, ஈராக் அண்டை நாட்டின் மீது படையெடுக்குமாறு செய்ய அமெரிக்கா சூழ்ச்சி செய்தது. அந்த வளைகுடா போர் அமெரிக்க இராணுவவாதத்தின் எழுச்சியைத் தூண்டியது, அது யூகோஸ்லாவியா போர்கள், 'பயங்கரவாதத்தின் மீதான போர்' மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்பு, லிபிய அரசாங்கத்தை அமெரிக்கா தூக்கியெறிந்தமை, பல ஆண்டுகளாக சிரியாவுக்கு எதிராக நடத்தப்பட்ட சீர்குலைக்கும் நடவடிக்கை ஆகியவற்றிலும் தொடர்ந்தது.

1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்ட மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் 30 ஆண்டுகால போர்கள் மற்றும் தலையீடுகளில் இருந்து அணுஆயுதங்களைக் கொண்டு தொடுக்கப்படும் ஒரு மூன்றாம் உலகப் போர் பேராபத்தை உயர்த்தும் ஒரு மோதலாக, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான ஒரு மோதலாக மாறியிருப்பது, பைடெனின் 'புதிய உலக ஒழுங்கு' என்பதில் உள்ளடங்கி உள்ளது.

முதலாளித்துவ பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள், ஆளும் வர்க்கத்தில் மேலோங்கி உள்ள பொறுப்பற்ற போர் வெறியை எடுத்துக்காட்டி, செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தை அதற்குப் பின்னால் கொண்டு வருகின்றன. 'நேட்டோ கிழக்குப் பகுதியில் படைகளை அதிகரிக்க திட்டமிடுகிறது' என்று நியூ யோர்க் டைம்ஸ் முழங்கியது. டைம்ஸின் மற்றொரு கட்டுரை, 'ரஷ்யாவும் அமெரிக்காவும் இரண்டுமே அணு ஆயுதங்களை வைத்துள்ளன, அவை மிகவும் குறைவான சேதாரத்தை ஏற்படுத்தக் கூடியவை—அவற்றின் சக்தி ஹிரோஷிமா வெடிகுண்டின் சக்தியில் வெறும் ஒரு பகுதியே இருக்கும், அவற்றைப் பயன்படுத்துவதைக் குறித்து அனேகமாக பெரிதாக பயப்படவோ மற்றும் நிறைய யோசிக்கவோ வேண்டியதில்லை,' என்று குறிப்பிட்டது.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தேசிய உளவுத்துறையின் முன்னாள் தற்காலிக இயக்குநராக இருந்த டேவிட் சி. கோம்பெர்ட், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வாசகர் தலையங்க துணை-பக்கத்தில் எழுதுகையில், அமெரிக்கா 'அதிகமாக உயிர்பிழைக்கக் கூடிய, துல்லியமான மற்றும் நம்பகமான தாக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது, இவை தரைவழியில் ரஷ்யாவின் மூலோபாயத் தடுப்புமுறையைக் கூடுதலாக சேதப்படுத்தக் கூடியவையாக உள்ளன. இத்தகைய ஆயுத ஆழிப்பு தாக்குதல்களில் ரஷ்ய ஏவுகணைகள் உயிர்பிழைத்தாலும் கூட அவை அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு முறைகளால் அழிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.

புட்டின் ஆட்சி அதன் பாதுகாப்பு கவலைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேட்டோவுக்கு அழுத்தமளிக்கும் நோக்கில் உக்ரேனில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போருக்கான அதன் திட்டங்களில் தோல்வியை எதிர்கொண்டுள்ள நிலையில், அது அணுஆயுத போர் முரசு கொட்டுவதில் போய் நிற்கும் அளவுக்கு சிக்கலில் சிக்கி இருப்பதில் இருந்து தப்பிக்க முயன்று வருகிறது. உலகம் ஒரு 'மிகப் பெரிய அணுஆயுத வெடிப்பில்' போய் முடியும் ஒரு கொடுமையான நெருக்கடியை முகங்கொடுக்கும் என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியும் புட்டினின் கூட்டாளியுமான டிமிட்ரி மெட்வெடேவ் புதன்கிழமை தெரிவித்தார்.

தொடர்ச்சியாக ஒன்றோடொன்று குறுக்கிடும் உள்நாட்டு நெருக்கடிகளால் எரியூட்டப்பட்டு, நேட்டோவின் அடாவடித்தனம் இதில் குறுக்கிடுவதும், மற்றும் ரஷ்யாவின் பெரும்பிரயத்தனமும் ஓர் அசாதாரண வெடிப்பார்ந்த நிலைமையை உருவாக்கி உள்ளன.

இந்த ஆபத்தான தீவிரப்பாடு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் எதிர்க்கப்பட வேண்டும்.

சமூக சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிராக உலகம் முழுவதும் தொழிலாளர்களின் இயக்கம் அதிகரித்து வருகிறது. போர் முனைவின் விளைவுகள், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பாரிய வறுமை மீதான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தூண்டி விடுகின்றன.

ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான கொள்கைகளின் விளைவாக, கோவிட்-19 பெருந்தொற்றின் தொடர்ந்து வரும் பாதிப்புகளும் இத்துடன் சேர்ந்துள்ளன, இது அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களையும், உலகளவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்களைக் கொன்றுள்ளது.

ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டம், இந்தப் போராட்டங்களுடன் இணைக்கப்பட்டு, சோசலிசத்திற்கான ஒரு நனவான சர்வதேச அரசியல் இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவதே இதன் அர்த்தமாகும்.

Loading