முன்னோக்கு

இலங்கையில் மிகப் பெரிய சமூக போராட்டங்கள் வெடிக்கின்றன: உலகளாவிய வர்க்க போராட்டத்தில் ஒரு முக்கிய அபிவிருத்தி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இலங்கை சம்பவங்கள் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் மிகக்கூர்ந்த கவனத்தைக் கோருகின்றன. இந்த பாரிய போராட்டங்கள், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் எதிர்கால வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிகரித்து வரும் உணவு மற்றும் பெட்ரோல் விலை, மணிக்கணக்கான மின்வெட்டுக்கள், மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை, மற்றும் மிகவும் பொதுவாக, உழைக்கும் மக்களின் சகிக்கவியலா வாழ்க்கை நிலைமைகள் மீதான அளப்பரிய சமூக கோபம் அத்தீவு நாடு முழுவதும் பாரிய போராட்டாங்களைத் தூண்டியுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ஷவின் வலதுசாரி, சிங்களப் பேரினவாத ஆட்சி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென்ற அழைப்புகள், தெற்கிலுள்ள பெரும்பான்மை சிங்களவர்கள் மற்றும் வடகிழக்கின் பெருமளவிலான தமிழர்கள் மத்திய பாரிய ஆதரவைப் பெற்று வருகிறது.

இதற்கு விடையிறுப்பாக, அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தது. இராணுவப் படைகள் பொலிஸ் அதிகாரங்களுடன் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதுடன், எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமலேயே மக்களை நீண்ட காலத்திற்குத் தடுப்புக் காவலில் வைக்க முடியும்.

இந்த நடவடிக்கைகளும் மற்றும் தலைநகர் கொழும்பின் வீதிகளில் பெரிய எண்ணிக்கையிலான பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதும், கொழும்பின் புறநகர்ப் பகுதிகளிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் சனிக்கிழமை நடந்த கூட்டு போராட்டங்களில் பத்தாயிரக் கணக்கானவர்கள் கலந்து கொள்வதைத் தடுத்துவிடவில்லை. அதிர்ச்சியடைந்த அரசாங்கம் பின்னர் திங்கட்கிழமை காலை வரை 36 மணி நேர நாடு தழுவிய ஊரடங்கு விதித்தது. பொலிஸ் தகவல்படி, கொழும்பு அமைந்துள்ள மேற்கு மாகாணத்தில் சனிக்கிழமை மாலை ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 664 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஏப்ரல் 3, 2022 ஞாயிற்றுக்கிழமை, கொழும்பில் அரசாங்கம் பதவி விலகக் கோரி இலங்கை மக்கள் நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் (AP Photo/Eranga Jayawardena)

ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி, முக்கிய சமூக ஊடக தளங்கள் மற்றும் சேதி அனுப்பும் மொபைல் பயன்பாடுகளின் தகவல்தொடர்பை அதிகாரிகள் முடக்கினர், இவை எதிர்கட்சிகளைச் சாராமல் அரசாங்க-எதிர்ப்பு போராட்டங்களை அதிகரித்தளவில் சுயாதீனமாக ஒழுங்கமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களின் ஆவேச எதிர்ப்புக்கு முன்னால், பாதுகாப்பு அமைச்சகம் இரவுக்குள் அதன் மூடிமறைப்பற்ற தணிக்கையைக் கைவிட்டு விட்டதாக செய்திகள் குறிப்பிட்டன.

ஊரடங்குச் சட்டத்தை மீறி, அரசாங்கம் வெளியேற வேண்டுமெனக் கோரி, ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலும், நாடெங்கிலுமான பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களிலும் நூறாயிரக் கணக்கானவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசாங்க அணிகளிடையே கொந்தளிப்பு கொந்தளிப்பு அதிகரித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மந்திரிசபை மொத்தமாக இராஜினாமா செய்தது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கை பொருளாதாரரீதியிலும் சமூக ரீதியாகவும் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிதும் அவசியமான வெளிநாட்டு செலாவணிக்கான பிரதான ஆதார வளங்களான, சர்வதேச சுற்றுலா மற்றும் வெளிநாட்டு பணவரத்து இரண்டுமே, பாதிக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டு, ஆசிரியர்கள், சுகாதார பராமரிப்பு, தேயிலைத் தோட்டம் மற்றும் துறைமுகத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினர், நிஜமான ஊதியம் குறைவதை எதிர்த்தும், கோவிட்-19 பாதுகாப்புகள் இல்லாமை மற்றும் தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி உள்ளனர். இத்தகைய போர்க்குணமிக்க போராட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டன.

இப்போது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர் உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் பெரும் விலையுயர்வைத் தூண்டிவிட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக, பணவீக்கம் 17 சதவீதமாக உள்ளது. இந்த பெருந்தொற்று பாதிப்புகளுக்கு முன்னரே கூட, வருடாந்தர தனிநபர் குடும்ப வருவாய் 1,420 அமெரிக்க டாலராக இருந்த ஒரு நாட்டில் இது நடக்கிறது, இங்கே உயர்மட்ட ஒரு சதவீதத்தினர் செல்வவளத்திலும் வருவாயிலும் 20 சதவீதத்திற்கு அதிகமான பங்கைக் கொண்டிருந்தனர், அடிமட்ட 50 சதவீதத்தினர் தேசிய வருவாயில் வெறும் 14 சதவீதத்தில் மற்றும் செல்வ வள பங்கில் வெறும் 4.3 சதவீதத்தில் உயிர்வாழ போராடி வந்தனர்.

இந்தாண்டு 4 பில்லியன் டாலர் வட்டி செலுத்த வேண்டும் என்ற உலக மூலதனத்தின் அழுத்தத்தின் கீழ், அதுவும் மொத்த வெளிநாட்டு செலாவணி கையிருப்பு அதன் பாதிக்குச் சற்று அதிகமாக இருந்த நிலையில், இராஜபக்ஷ அரசாங்கமும் இலங்கை ஆளும் வர்க்கமும் நெருக்கடியின் முழுச் சுமையையும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் மீது சுமத்தும் அவர்களின் முயற்சிகளை இரட்டிப்பாக்கி வருகின்றனர். இந்த விலைவாசி உயர்வும் மின்சார வெட்டுக்களும் ஓர் ஆரம்பம் மட்டுந்தான்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் ஒரு 'பிணையெடுப்பை' கோரி வருகிறது. இது சமூக செலவினங்களில் பாரிய வெட்டுக்களை செய்யும் என்பதுடன், அரசு நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை அடிமட்ட விலைக்கு விற்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவை மூலோபாயரீதியில் சுற்றி வளைத்து அச்சுறுத்துவதில், முன்பினும் தீவிரமான முனைப்புடன் இந்நாட்டை முழுமையாக இன்னும் அதிகமாக ஒருங்கிணைக்க, கொழும்புக்கு அழுத்தத்தை அதிகரிப்பதற்காக பைடென் நிர்வாகம் சர்வதேச நாணய நிதியம் மீதான அதன் செல்வாக்கைப் பயன்படுத்தும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கை பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் ஒரு புரட்சிகர சமூக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆளும் வர்க்கத்தின் எல்லா கட்சிகளையும் எதிர்க்கவும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடி வருகிறது.

இலங்கை திவாலாகிவிட்டதாகவும், உலகளாவிய 'சந்தை சக்திகளிடம்' இருந்து மக்களைப் பாதுகாக்கவும் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கவும் அங்கே ஆதாரவளம் இல்லை என்றும் முதலாளித்துவ ஸ்தாபகம் ஒருமித்த குரலில் பலமாக வாதிடுகிறது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த வாதங்களை நிராகரிக்கிறது, இவை மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையற்ற உணர்வை விதைக்கும் நோக்கம் கொண்டுள்ளன. நிதித்துறை, தொழில்துறை மற்றும் நாட்டின் இயற்கை ஆதாரவளங்களைத் தொழிலாள வர்க்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இலங்கையின் வளங்களைச் சமூக நலன்களுக்காக திரட்ட வேண்டுமானால், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் புரட்சிகர அரசியல் அணிதிரட்டல் மூலம் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் செல்வங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தை அரசியல் அதிகாரத்தில் இருந்து அகற்றி, அது கிராமப்புற ஏழைகளுடன் இணைந்து ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவக் நிறுவக்கோருகின்றது.

ஆனால் இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான கோரிக்கைகளை முன்வைக்கும் அதே வேளையில், சோசலிச சமத்துவக் கட்சி, அந்நாட்டிக்குள் விரிவடைந்து வரும் நெருக்கடியை அதன் சர்வதேச உள்ளடக்கத்தில் பார்க்க வேண்டுமென வலியுறுத்துகிறது. ஆகவே, கட்சியின் தலையீடு ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் உள்ளது.

அதனால் தான், சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை தொழிலாளர்களை வளர்ந்து வரும் உலகளாவிய தொழிலாள வர்க்க எழுச்சியை நோக்கி திருப்ப போராடுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை எதிர்த்து, பாக்கு நீரிணைக்கு அக்கரையில் கடந்த வாரம் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்ட பத்து மில்லியன் கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கு அது சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

இலங்கை முதலாளித்துவத்திற்கு அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவை வழங்குவதற்காக கடந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொழும்பு சென்றிருந்தார். இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான களமாக இத்தீவு சேவையாற்ற வேண்டுமென்ற இந்தியாவின் மற்றும் வாஷிங்டனின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்குப் புது டெல்லி இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வருகிறது. ஆனால் இலங்கையில் ஒரு சமூக வெடிப்பானது தமிழ்நாட்டிலும் மற்றும் இந்தியா எங்கிலும் வர்க்கப் போராட்டத்தைத் தூண்டிவிடும் என்பதே இந்திய ஆளும் வர்க்கத்தின் மிகப்பெரிய அச்சமாகும். இந்த துணைக் கண்டத்தின் 1947 இனவாதப் பிரிவினை மூலம் உருவாக்கப்பட்ட பிற்போக்குத்தனமான அரசு அமைப்பை, இலங்கையின் உள்நாட்டுப் போர், அபாயகரமாக சீர்குலைப்பதாக இந்திய ஆளும் வர்க்கம் கருதிய போது, 1987 இல், அத்தீவில் இந்திய துருப்புகள் தலையிட்டன.

இலங்கையின் சமூக-அரசியல் நெருக்கடியானது உலக முதலாளித்துவத்தைச் சூழ்ந்து வரும் நெருக்கடியின் ஒரு முன்னேறிய வெளிப்பாடாகும். இந்த பெருந்தொற்றும் ஐரோப்பாவில் போர் வெடிப்பும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்திரமற்ற வர்க்க உறவுகளை ஏற்படுத்தியுள்ளன, இவை ஏற்கனவே பல தசாப்தங்களாக தொடர்ந்து ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏகாதிபத்திய ஆக்ரோஷம் மற்றும் போரால் சுமையேறிப் போயுள்ளன.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் பில்லியன் கணக்கானவர்கள் விலைவாசி உயர்வு மற்றும் உணவுப் பற்றாக்குறையால், வறுமை, பட்டினி மற்றும் பஞ்சத்தைக் கூட முகங்கொடுத்து வருகையில், ஐ.நா. சபையும் மற்றும் பிற ஸ்தாபக அமைப்புகளும் பாரிய சமூக அமைதியின்மை குறித்து பதட்டமான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் ஏற்கனவே ஈராக் மற்றும் சூடானில் இருந்து துனிசியா வரையில் மத்திய கிழக்கு எங்கிலும் வெடித்துள்ளன.

உக்ரேனில் ஏகாதிபத்திய மையங்களின் பினாமி இராணுவ மோதலுக்கு சமாந்திரமாக, ரஷ்யாவுக்கு எதிராக அவை தொடுத்துள்ள பொருளாதாரப் போரால் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் இந்த பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் நாசகரமான விடையிறுப்பு ஆகியவற்றால் எரியூட்டப்பட்டு, இந்த வர்க்க போராட்டம் வேகமாக ஏகாதிபத்திய மையங்களில் தீவிரமடைந்து வருகிறது. ஸ்பெயினில், PSOE-பொடேமொஸ் அரசாங்கத்தால் உத்தரவிடப்பட்ட பாரிய பொலிஸ் அடக்குமுறையை மீறி எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ட்ரக் ஓட்டுனர்கள் வாரக் கணக்கில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில், கடந்தாண்டு தொடங்கிய வேலைநிறுத்த அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வர்க்க இயக்கமானது பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்கி வைத்துள்ள பெருவணிக தொழிற்சங்கங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் தொழிலாளர் கிளர்ச்சியின் தன்மையை எடுத்துள்ளது.

உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பை, சர்வதேச சோசலிசத்திற்கான ஒரு நனவான ஐக்கியப்பட்ட போராட்டமாக மாற்றுவதே அடிப்படை சவாலாகும்.

இப்போது இத்தீவை உலுக்கி வரும் நெருக்கடிக்கு விடையாக, சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கை முதலாளித்துவத்திற்கு எதிராகவும், அதன் கட்சிகள் மற்றும் அரசுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களைத் தொழிலாள வர்க்கத்திற்குப் பின்னால் அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக முறையாக அணிதிரட்ட ஒரு இடைமருவு கோரிக்கைகளின் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் உட்பட முக்கியமான பண்டங்களின் விநியோகம் தொழிலாள வர்க்கத்தின் மேற்பார்வையில் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும், பெரும் பணக்காரர்களின் செல்வமும், வங்கிகள் மற்றும் பெரிய உள்நாட்டு மற்றும் நாடுகடந்த நிறுவனங்களின் இலாபங்களும் மற்றும் நிதி சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு, சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய திருப்பி விடப்பட வேண்டும். மருத்துவக் கவனிப்பும் மற்றும் கல்வித்துறையும், வோல் ஸ்ட்ரீட், இலண்டன் மற்றும் டோக்கியோவின் இரத்தக் காட்டேரிகளைத் திருப்திப்படுத்துவதற்காக, சுரண்டப்படக் கூடாது.

உழைக்கும் மக்களின் அடிப்படை சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் எல்லா நடவடிக்கைகளுக்காகவும் போராட, தொழிற்சங்கங்களில் இருந்தும் முதலாளித்துவத்தின் எல்லா அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்தும் மற்றும் அதன் குட்டி-முதலாளித்துவ ஆதரவாளர்களிடம் இருந்தும் சுயாதீனமாக, வேலையிடங்கள் மற்றும் அண்டைப் பகுதிகளில் சாமானிய நடவடிக்கை குழுக்களை உருவாக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது. இத்தகைய குழுக்கள் வளர்ந்து, போராட்டத்தில் தங்களை நிரூபிக்கையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் பரந்த பிரிவுகளைத் தங்களுக்குப் பின்னால் அணிதிரட்டும் போது, அவை நாடாளுமன்றத்திற்கு எதிராக மற்றும் முதலாளித்துவ உயரடுக்கின் அடக்குமுறை அமைப்புகளுக்கு எதிராக சுயாதீனமான அரசியல் அதிகார அங்கங்களாக உருமாறும்.

அதிகரித்தளவில் அவநம்பிக்கையான மற்றும் நெருக்கடியில் சிக்கிய ஆளும் வர்க்கம் ஒரு பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவ முயற்சிக்கும் என்ற அச்சுறுத்தல் குறித்து சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தொடர்ந்து மக்களை எச்சரித்துள்ளது. சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக இலங்கை ஆளும் உயரடுக்கின் மூன்று தசாப்த கால இனவாத போரின் மிகவும் மோசமான அட்டூழியங்களுக்குப் பொறுப்பான ஒரு போர்க் குற்றவாளி இராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகளை அவர் அரசாங்கத்தில் அடுக்கி வைத்துள்ளார், அதேவேளையில் சிங்கள புத்த பேரினவாதத்தைத் தூண்டி விட்டு வருகிறார்.

இப்போது இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் சமூக அழிவை எதிர்ப்பதில், தொழிலாள வர்க்கம் வெறுமனே இராஜபக்ஷ கும்பலையும் மற்றும் அவர்களது இலங்கை மக்கள் முன்னணி அரசாங்கத்தையோ அல்லது இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தையோ மட்டுமல்ல, மாறாக உலக மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்குச் சவால் விடுத்து வருகிறது. இந்த பெருந்தொற்று மற்றும் பரவலான சமூக சமத்துவமின்மை தொடங்கி, ஏகாதிபத்திய ஒடுக்குமுறை மற்றும் போர் வரையில், எந்த உடனடி பிரச்சினைகளையும், முதலாளித்துவத்தை உலகளவில் தூக்கி வீசாமல் மற்றும் வரலாற்றுரீதியில் அது வேரூன்றி உள்ள காலங்கடந்த இந்த போட்டி தேசிய அரசு அமைப்புமுறையைத் தூக்கி வீசாமல் தீர்க்க முடியாது.

பீதியடைந்துள்ள இலங்கை அரசாங்க அதிகாரிகள் அத்தீவில் இப்போது கட்டவிழ்ந்து வரும் சம்பவங்களை, எகிப்தில் அமெரிக்க ஆதரவிலான முபாரக் சர்வாதிகாரத்தை வீழ்த்திய பாரிய மக்கள் எழுச்சியான 2011 அரபு வசந்தத்துடன் ஒப்பிடுகிறார்கள்.

அரபு வசந்தத்தின் மையப் பாடமே, புரட்சிகரத் தலைமையின் முக்கியப் பாத்திரம் பற்றியதாகும். இலங்கையிலும் இந்தியாவிலும் மற்றும் உலகெங்கிலும் அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க எதிர்ப்பை சோசலிசத்திற்கான ஒரு பாரிய இயக்கமாக மாற்றுவது என்பது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI), சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டமைப்பதைச் சார்ந்துள்ளது.

Loading