மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
தொடர்ச்சியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரில், அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அவற்றின் தலையீட்டை வியாழக்கிழமை பாரியளவில் தீவிரப்படுத்தின, இது அந்த மோதலை ஒரு புதிய உலகப் போராக மாற்றுவதற்கு அச்சுறுத்துகிறது.
கியேவுக்குக் கூடுதலாக கனரக ஆயுதங்களை அனுப்புவது குறித்து நேட்டோ அறிவித்தது, ஐரோப்பிய ஒன்றியமோ ரஷ்ய எரிசக்தி இறக்குமதிகளை நிறுத்துவதற்கு உறுதியளித்தது, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை வெற்றிகரமாக வெளியேற்றின.
இந்த வார தொடக்கத்தில் கியேவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய போர்க்குற்றங்கள் பற்றி கூறப்பட்ட அமெரிக்க குற்றச்சாட்டுகள், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எந்த வாய்ப்பையும் நாசமாக்கி, நேட்டோ தலையீட்டைத் தீவிரப்படுத்துவதற்கு ஏற்ப மக்களின் நனவைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சரமாரியான பிரச்சார முழக்கம் என்பதை இத்தகைய நடவடிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
புரூசெல்ஸில் நடந்த அட்லாண்டிக் கடந்த இந்த கூட்டணியின் இவ்வாரக் கூட்டத்தில் பேசிய உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, “டொன்பாஸிற்கான இந்த சண்டை உங்களுக்கு இரண்டாம் உலகப் போரை, அதன் மிகப்பெரும் செயல்பாடுகள் மற்றும் சூழ்ச்சிகளை, அதில் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான டாங்கிகள், கவச வாகனங்கள், போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை உங்களுக்கு நினைவூட்டும்,” என்றார். 'ரஷ்யாவின் தயாரிப்புகளைப் பார்க்கையில், இது ஓர் உள்ளூர் நடவடிக்கையாக இருக்காது' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.
ஆனால் இந்த சாத்தியக்கூறில் இருந்து பின்வாங்குவதற்குப் பதிலாக, நேட்டோ உறுப்பு நாடுகள் அதை ஏற்படுத்துவதற்குச் சாத்தியமான எல்லாவற்றையும் செய்து வருகின்றன.
நேட்டோ பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் உக்ரேனுக்கு 'பரந்தளவிலான' ஆயுத அமைப்புகளை வழங்க உறுதியளித்தார். நேட்டோ 'தாக்குதல்' ஆயுதங்களை வழங்குமா என்று அல் ஜசீரா வினவிய போது, ஸ்டோல்டென்பேர்க் கூறினார், 'தாக்குதல் மற்றும் தற்காப்புக்கு இடையேயான இந்த வேறுபாடு சற்று விசித்திரமானது என்று நினைக்கிறேன், ஏனென்றால் தன்னைத் தற்காத்து வரும் ஒரு நாட்டுக்கு ஆயுதங்களை வழங்குவதைக் குறித்து நாங்கள் பேசுகிறோம், தற்காப்பு என்பது ஒரு உரிமை அது ஐநா சாசனத்தில் உட்பொதியப்பட்டுள்ளது,” என்றார்.
'உக்ரேனுக்கு புதிய மற்றும் கனரக தளவாடங்கள் வழங்குவதை நாடுகள் ஆதரிக்கின்றன, இதன் மூலம் அவை ரஷ்யாவின் இந்த புதிய அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்க முடியும்,' என இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரூஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், 'உக்ரேனியப் படைகள் அவற்றின் சோவியத் கால தளவாடங்களில் இருந்து நேட்டோ தரநிலை தளவாடங்களுக்கு மாறுவதற்கு உதவ, இருதரப்பு அடிப்படையில், நாங்கள் உடன்பட்டுள்ளோம்,” என்றார்.
ரஷ்யாவுடனான ஐரோப்பிய உறவுகளின் 'புதிய சகாப்தம்' என்று அறிவித்த ட்ரூஸ், 'ரஷ்யாவுடன் நல்லுறவில் இருந்த காலம் முடிந்துவிட்டது,” என்றார். அதற்கு பதிலாக, 'மௌனம் கலைதல், பாதுகாப்பு மற்றும் தடுப்பு என்ற அடிப்படையில் ஐரோப்பாவில் ஒரு புதிய பாதுகாப்பு அணுகுமுறையை' அவர் பிரகடனம் செய்தார்.
பிரிட்டன் உக்ரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் என்று புதன்கிழமை டைம்ஸ் ஆஃப் லண்டன் செய்தி வெளியிட்டது. “இவை ரஷ்ய எல்லைகளை நோக்கி இன்னும் கூடுதலாக முன்நகர்வதற்கு உக்ரேனியப் படைகளுக்கு உதவும்,” என்று ஒரு பிரிட்டன் அதிகாரி கூறியதை அந்த பத்திரிகை மேற்கோளிட்டது.
நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென், உக்ரேனுக்கு 'புதிய அமைப்புகளை' வழங்க உறுதியளித்தார். 'உக்ரேனியர்கள் அவர்களுக்குத் தேவையானதைப் பெறுவதில், எதுவும் குறுக்கே நிற்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். … நாங்கள் என்ன வழங்கி உள்ளோமோ அதை மட்டும் பார்க்காமல், இப்போது அனைத்தையும் பார்க்கிறோம்,' என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை விரைவுபடுத்தும் மசோதாவை அமெரிக்க செனட் புதன்கிழமை நிறைவேற்றியது. 'உக்ரேனில் போர் கட்டவிழ்ந்து வருகையில், இராணுவ உதவிகளை வேகமாக வழங்குவதானது, தூண்டுதல் இல்லாமல் தொடுக்கப்பட்ட புட்டினின் தாக்குதல்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாப்பதற்கான உக்ரேனின் ஆற்றலுக்கு முக்கியமானதாகும்,” என்று அந்த மசோதாவைக் கொண்டு வந்த முன்னணி ஜனநாயகக் கட்சியாளர், நியூ ஹாம்ப்ஷேர் செனட்டர் ஜீன் ஷாஹீன் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்கும் அதன் முயற்சியில் வியாழக்கிழமை அமெரிக்கா வெற்றி அடைந்தது. 2011 இல் வெளியேற்றபட்ட லிபியா தான் கடைசியாக அந்த அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நாடாகும். அதற்குப் பின்னர் விரைவிலேயே, அமெரிக்கா நிதியுதவி வழங்கிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் அதன் அதிபரைக் கொன்றனர், இது 'நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்,” என்று முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிண்டனிடம் இருந்து ஒரு கேலியைக் கொண்டு வந்தது.
அதே நாளில் ஐரோப்பிய நாடாளுமன்றம் 'ரஷ்யாவின் எண்ணெய், நிலக்கரி, அணுசக்தி எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிக்கு உடனடியாக முழு தடை விதிக்க' அழைப்பு விடுக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. SWIFT பணப்பரிவர்த்தனை வங்கி வலையமைப்பில் இருந்து ரஷ்யாவை முழுவதுமாக துண்டிக்கவும் அந்த தீர்மானம் அழைப்பு விடுத்தது.
ரஷ்யாவை இலக்கில் வைக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவித்த ஸ்டோல்டென்பேர்க், சீனாவும் நேட்டோவின் பிரதான இலக்கு என்பதைத் தெளிவுபடுத்தினார்.
'ரஷ்யாவின் ஆக்ரோஷ நடவடிக்கைகளைக் கண்டிக்க சீனா விரும்பவில்லை என்பதை நாம் பார்க்கிறோம், நாடுகள் அவற்றின் சொந்த பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையைக் கேட்பதில் பெய்ஜிங் மாஸ்கோவுடன் இணைந்துள்ளது,” என்று வியாழக்கிழமை அறிவித்த ஸ்டோல்டென்பேர்க், “இது நம் அனைவருக்கும் ஒரு தீவிரமான சவால்,” என்றார்.
இராஜாங்க தீர்வுக்கு ரஷ்யா அழைப்பு விடுப்பதாக தெரிந்த வேளையில் நேட்டோவின் தீவிரப்பாடு நடந்தது. Sky News உடனான ஒரு பேட்டியில் கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் குறிப்பிடுகையில், “நாங்கள் குறிப்பிடத்தக்களவில் துருப்புகளை இழந்துள்ளோம்,” என்று கூறியதுடன், “இது எங்களுக்குப் பெரிய சோகம்,” என்றார்.
ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளைப் பீடித்து வரும் போர்க் காய்ச்சலின் பொறுப்பற்ற பைத்தியக்காரத்தனமான தன்மை, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வியாழக்கிழமை தலையங்கத்தில் வெளிப்பட்டது, 'உக்ரேன் கியேவ் போரை ஜெயித்து விட்டது என்றாலும், கிழக்கில் டொன்பாஸிற்கான போர் இன்னும் பயங்கரமானதாக இருக்கலாம். … இது நீண்ட காலத்திற்கு இருக்கலாம், மேற்கின் உறுதிப்பாடு திரு. புட்டினின் காட்டுமிராண்டித்தனத்திற்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்,” என்று அறிவித்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகள், உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடனான பினாமி மோதலில் அவற்றின் இலக்குகளை மாற்றி உள்ளன மற்றும் விரிவாக்கி உள்ளன என்பது கடந்த வாரம் தெளிவாகி உள்ளது. சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் இரத்தம் சிந்தும் ரஷ்யாவை வறண்டு போகச் செய்வதில் வெறுமனே திருப்திப்படாமல், அதற்கு பதிலாக அவை ஒரு தீர்க்கமான தந்திரோபாய வெற்றியை மட்டுமல்ல ஒரு மூலோபாய வெற்றியையும் எதிர்பார்க்கின்றன.
இந்தச் சூழலில், அணு ஆயுதப் போருக்குத் தயாராக வேண்டுமென அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.
Voice of America உடனான ஒரு பேட்டியில், ஐரோப்பாவின் நேட்டோ உயர்மட்ட கூட்டுப்படை தளபதி பிலிப் ப்ரீட்லொவ் குறிப்பிடுகையில், “அணுஆயுதங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போரைக் குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம், அது நாம் முழுமையாக தற்காப்புடன் இருக்க செய்கிறது. [புட்டின்], வெளிப்படையாகவே, எந்த தயக்கமும் இல்லாதவர்,” என்று குறிப்பிட்டார்.