இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, 'எங்கள் வேலைத்திட்டத்தின் விளைவு, ஒரு மாற்றத்துக்கு முன்னர், மிகவும் மோசமான நிலைமையாக இருக்கும் என்பதை நாங்கள் மக்களுக்குச் சொல்ல வேண்டும்' என வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) எந்தவொரு அவசரகால பிணை எடுப்பின் விலையாக, கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை கட்டளையிடும் என்று வீரசிங்க எச்சரித்தார். வெள்ளியன்று அவரது முதல் நடவடிக்கை, நாட்டின் வட்டி விகிதத்தை 14.50 சதவீதமாக ஆகக்கூடிய 7 சதவீதப் புள்ளியாக உயர்த்தியதாகும் - இது உழைக்கும் மக்களையும் சிறு வணிகங்களையும் கடுமையாக பாதிக்கும்.
வீரசிங்க, பதவிக்கு நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர், ஸ்வர்ணவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில், இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஒரு தூதுக்குழுவை ஒன்றிணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான அவரை, பதவியை ஏற்குமாறு கோரினார்.
நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு ஏப்ரல் 18 அன்று, நியூ யோர்க்கிற்குச் செல்ல உள்ளது. அந்த வேலையைத் தெளிவாக விரும்பாத சப்ரி, கடந்த திங்கட்கிழமை நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பதவியை இராஜினாமா செய்தார். மாற்றீட்டைக் கண்டுபிடிக்க பல நாட்கள் முயற்சித்த பின்னர், சப்ரியின் இராஜினாமாவை ஏற்க மாட்டோம் என்று ஜனாதிபதி அறிவித்தார். வெள்ளிக்கிழமை, தான் பதவியில் தொடர்வதாக சப்ரி தயக்கத்துடன் அறிவித்தார்.
வீரசிங்க எச்சரித்ததாவது: “இரண்டு வருடங்கள் ஏற்படுத்திய நெருக்கடியை இரண்டு நாட்களுக்குள் மாற்ற முடியாது. சர்வதேச நாணய நிதியத்துடன் அல்லது எங்கள் கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு பற்றி நாங்கள் கலந்துரையாடும்போது அவர்கள் பொறுப்பான அதிகாரம் என்ன என்று கேட்பார்கள். நாட்டிற்கு ஒரு 'நிலையான அரசாங்கம்' தேவை என்று அறிவித்த அவர், 'பொருளாதாரத்தில் திருப்பம் ஏற்படுத்துவது என்பது, எவ்வளவு விரைவில் நாம் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பெற முடியும் என்பதில் தங்கியிருக்கின்றது,' என்று மேலும் கூறினார்.
'மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் விளக்கி, அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்து, அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அப்போதுதான் இதை செயல்படுத்த முடியும். இப்போது பணவீக்கம் கடந்த மாதம் 17.5 ஆக இருந்தது, அடுத்த மாதம் அது 25 ஆக இருக்கும். மக்கள் தெருவில் இறங்கி இதை செய்ய சம்மதிக்கவில்லை என்று சொன்னால், அது இன்னும் மோசமாகிவிடும்... நீங்கள் அவர்களுக்கு தீர்வை விளக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உழைக்கும் மக்கள் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் ஒவ்வொரு நாளும் நீண்ட மணிநேரம் மின்சாரம் இல்லாமை ஆகியவற்றால் தாங்க முடியாத சுமைகளை எதிர்கொண்டுள்ளனர்.
இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
சனிக்கிழமையன்று, மத்திய கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடியதோடு, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சுமார் 10,000 பேர் அங்கு குவிந்தனர்.
உலகளாவிய ரீதியில் வெறுக்கப்படும் ஒரு அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கு 'அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கு” மத்திய வங்கி ஆளுநர் அழைப்பு விடுக்கின்றார். கடந்த வாரம் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாகச் செயல்படப் போவதாக அறிவித்ததையடுத்து, அரசாங்கம் ஒரு மெல்லிய பெரும்பான்மையைப் கொண்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கூட்டணிக்கு திரும்பச் செய்யும் முயற்சியில் ஜனாதிபதி இராஜபக்ஷ நேற்று அவர்களுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார். இடைக்கால ஆட்சியை அமைக்குமாறு இராஜபக்ஷ மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் இதேபோன்ற சலுகையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.
சர்வதேச நாணய நிதிய திட்டம் என்னவென்பது பொருளாதாரத்தை திருப்புவதற்கான வழிமுறையாக கடந்த மாத தொடக்கத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டது. வருமானம் மற்றும் பெறுமதி சேர்ப்பு வரிகளின் அதிகரிப்பு இதில் அடங்கும்; எரிபொருள் மற்றும் மின்சார விலையில் மேலும் அதிகரிப்பு; சந்தையால் நிர்ணயிக்கப்படும் நெகிழ்வான நாணயமாற்று விகிதம்; அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல்; அரச செலவினங்களில் ஆழமான வெட்டு; விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் மானியங்களை மேலும் குறைப்பதும் இவற்றில் அடங்கும்.
சந்தை அடிப்படையிலான ரூபாயின் மதிப்புக் குறைப்பு ஏற்கனவே மார்ச் மாத தொடக்கத்தில் அமல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, உத்தியோகபூர்வ அமெரிக்க டாலர் மதிப்பு 203 ரூபாயில் இருந்து 325 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது - இது 60 சதவீத மதிப்பிழப்பு ஆகும். இதனால் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட உலகளாவிய கொந்தளிப்பின் மிகக் கூர்மையான வெளிப்பாடாகும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் இது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டு, ஏற்றுமதி சரிந்துள்ளது. இலங்கையில் வெறும் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களே வெளிநாட்டு கையிருப்பு உள்ளதுடன், இந்த வருடத்தில் 7 பில்லியன் டாலர் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
ஏப்ரல் 7 அன்று வெளியான பினான்சியல் டைம்ஸ் தலையங்கம், இலங்கையின் பாதிப்பை எடுத்துக்காட்டி எச்சரித்ததாவது: 'ஒரு சில மாதங்களில் 1 பில்லியன் டாலர் பிணைப்பத்திர தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தாலும், நாட்டில் வெளிநாட்டு கையிருப்பானது 500 மில்லியன் டாலர் மட்டுமே மீதம் இருக்கலாம்.' 'வளர்ந்து வரும் சந்தைகள் தொகையில், பொருளாதாரத் தள்ளாட்டத்தில் விழும் முதல் நாடாக இலங்கை இருக்கக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது' என்று அது அறிவித்தது.
சனிக்கிழமையன்று ராய்ட்டர் செய்திச் சேவையிடம் பேசிய நிதியமைச்சர் சப்ரி, 'எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை மீட்டெடுக்க உதவும் வகையில் இலங்கைக்கு அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 3 பில்லியன் டாலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும்,' என்றார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, 'அரசாங்கம் ஆறு மாதங்களுக்குள் வரி மற்றும் எரிபொருள் விலைகளை உயர்த்தி, நஷ்டத்தில் இயங்கும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைச் சீர்திருத்த முயற்சிக்கும்' என்று உறுதியளித்தார்.
இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி வீதிகளில் இறங்கியுள்ள மக்களிடம், எதிர்க்கட்சிகள் தமது அனுதாபத்தை காட்டுகின்றன. ஆனால் அவர்கள் சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டநிரல் சமூகத் தாக்குதல்களை மட்டுமே தீவிரப்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும், அதற்கு வக்காலத்து வாங்குகிறார்கள்.
வெள்ளியன்று பாராளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'நாங்கள் அவர்களிடமிருந்து [சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து] பண உதவியைப் பெற விரும்பினால், கடன் நிலைத்தன்மையைக் கட்டியெழுப்பும் திட்டத்தை சர்வதேச நாணய நிதித்துக்கு வழங்க வேண்டும்,' என்றார். அவர் தலைமைதாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பேசும் போது, நாட்டின் நெருக்கடி குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகளுடன் தான் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், சர்வதேச நாணய நிதியம் உதவ தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாங்க திட்டங்கள் குறித்து, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போலியான மௌனத்தை கடைபிடிக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டநிரல் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் என்ற மாயையில் எவரும் இருக்க கூடாது. சர்வதேச வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டின் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களை புதிய சுமைகளைச் சுமக்க நிர்ப்பந்திப்பதற்கான வழிமுறையே இதுவாகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது. இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரி!
அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உற்பத்திச் சாதனங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, அவற்றை விநியோகிப்பதற்கு நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். பெரும் செல்வந்தர்களின் இலாபத்தை உறுதிப்படுத்த யாரும் பட்டினி கிடக்க வேண்டாம்!
இந்த போராட்டத்தை பரந்த அரங்கில் முன்னெடுப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
- வெகுஜன எதிர்ப்புகள் முன்னோக்கிச் செல்லும் வழியை கோடிட்டுக் காட்ட இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி செய்தியாளர் மாநாட்டை நடத்தியது
- இலங்கை அதிகரித்துவரும் கடன் மற்றும் பணவீக்க நெருக்கடியின் மையத்தில் உள்ளது