மெலோன்சோனுக்கு வாக்களித்த பாரிஸ் தொழிலாளர்கள் இரண்டாவது சுற்று பிரெஞ்சு தேர்தல் பற்றி பேசுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஏப்ரல் 10, 2022 ஞாயிற்றுக்கிழமை, பிரான்சில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின் பின் ஜோன்-லூக் மெலோன்சோன் கருத்துத் தெரிவிக்கிறார். (AP Photo/Michel Spingler)

ஜனாதிபதி தேர்தலில் ஜோன்-லூக் மெலோன்சோனுக்கு வாக்களித்த பாரிஸ் பகுதியில் உள்ள தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில் கோபம் அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் இப்போது இரண்டு வலதுசாரி வேட்பாளர்களான மக்ரோன் மற்றும் மரின் லு பென் இடையே இரண்டாவது சுற்றுக்கு முகம் கொடுக்கின்றனர். 'செல்வந்தர்களின் ஜனாதிபதியான' மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு மெலோன்சோனின் அழைப்பு, அவரது வாக்காளர்களை நம்ப வைக்கவில்லை, மேலும் பரந்த அளவிலான வாக்காளர்கள் வெற்று வாக்கைப் பரிசீலித்து வருகின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste) ஆல் முன்னெடுக்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலை தீவிரமாகப் புறக்கணிக்கும் வாய்ப்பைப் பற்றி கலந்துரையாட WSWS செய்தியாளர்கள் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நேர்காணல் செய்தனர்.

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் பணிபுரியும் கணினி தொழில்நுட்ப வல்லுநரான மிஷேல், தீவிர வலதுசாரிகளின் எழுச்சி மற்றும் போரின் ஆபத்து குறித்து குறித்து தான் அஞ்சுவதாக WSWS இடம் கூறினார்

அவர் கூறினார், “பிரான்ஸின் அரசியல் நிலைமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். நிலைமை இப்படியே நீடித்தால் சாதாரண மக்களின் எதிர்காலம் மற்றும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் மிகவும் மோசமாகும் என்பது தெளிவாகின்றது. மக்ரோனின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. தினமும் 45 கிமீ [28 மைல்] காரில் பயணம் செய்து வேலைக்குச் செல்கிறேன். பெட்ரோல் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்ந்துள்ளது.

மிஷேல் உக்ரேன் போருக்கு எதிரான தனது விரோதத்தையும் ரஷ்யாவிற்கு எதிராக பிரான்ஸ் மற்றும் நேட்டோவின் தலையீட்டையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். 'இப்போது உக்ரேனில் நடக்கும் போர் நிலைமையை மோசமாக்கியுள்ளது,' என்று அவர் கூறினார். மேலும், 'பிரான்சும் ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆபத்தான தயாரிப்புகளை செய்து வருகிறது. நம்மை வழிநடத்துபவர்கள், நம் குழந்தைகளை எப்படி சுரண்டுவது? எப்படி போருக்கு தள்ளுவது? என்று சிந்திக்கிறார்களே தவிர, அவர்களின் நல்ல எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பதில்லை” என்றார்.

மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு மெலோன்சோன் விடுத்த அழைப்பில் மிஷேல் தனது ஏமாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்: “இந்தக் கட்சி மக்ரோனுக்கும் இனவாத லு பென்னுக்கும் எதிராக இருக்கும் என்று நான் நினைத்தேன். மெலோன்சோன் ஒரு சிறிய வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். இப்போது என்னைப் போன்ற மில்லியன் கணக்கானவர்கள் இரண்டு மோசமான வேட்பாளர்களை இரண்டாவது சுற்றில் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 22 சதவீத வாக்குகளைப் பெற்ற மெலோன்சோனுக்கு நாட்டை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான தைரியமோ அல்லது வேலைத்திட்டமோ இல்லாமல் போய்விட்டது. … மெலோன்சோன் எங்களை மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு 'ஒருவரை சிந்திக்க வைக்கிறது' என்று மிஷேல் குறிப்பிட்டார். மேலும் கூறினார்: 'யார் வெற்றி பெற்றாலும், நாடு விளிம்பிற்கு தள்ளப்படும். எனவே நான் இரண்டாவது சுற்று தேர்தலில் ஒருவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை. மக்ரோன் எங்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்துகிறார். மேலும் பல மோசமான திட்டங்களை அவர் எங்கள் மீது சுமத்தியுள்ளார். லு பென் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரானவர், மேலும் அவர் பிரெஞ்சு தொழிலாளர்களின் சமூகநல முன்னேற்றத்திற்கு உதவப்போவதில்லை மாறாக சிக்கன நடவடிக்கையை சுமத்துவார். எதிர்காலம் நமக்கு ஆபத்தாக இருக்கும்”.

பொருட்களை விநியோகிக்கும் வேலையில் உள்ள ராஜேஷ், WSWS க்கு தான் ஏன் மெலோன்சோனுக்கு வாக்களித்தார் என்பதை விளக்கினார்: “ஒரு குடும்பம் மற்றும் இரண்டு குழந்தைகள் என்னை நம்பியிருப்பதால், நாளாந்தம் 12 மணித்தியாலங்கள் வேலைசெய்தும் மாதக் கடைசியில் இறுக்கமான நிலையை முகங்கொடுக்கிறேன். பல ஆண்டுகளாக இதுதான் எனது வாழ்க்கையாகி விட்டது, களைத்துவிட்டேன். நான் வசிக்கும் பகுதி Seine Saint-Denis [பாரிஸின் வடக்குப் புறநகர்ப் பகுதி], சமூகரீதியாக துண்டு துண்டாக பிளவுபட்டுள்ளது, அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாழும் இளைஞர்களின் நிலை மிகக் கவலைக்கிடமானது, உலகளாவிய கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இது மிகவும் மோசமானது மற்றும் பணவீக்கத்தால் நிலைமை மேலும் இருளடைந்துள்ளது, இங்கே முகக்கவசம் சலுகைபடைத்தவர்களுக்கானதாக பார்க்கப்படுகிறது.”

ராஜேஷ் கூறுகையில், 'இடதுசாரிகளை நம்பியிருக்கும் என்னைப் போன்ற அடக்கமானவர்களுக்கு இந்தத் தேர்தல் நம்பிக்கையைத் தர வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். நமது தற்போதைய ஜனநாயகத்தில் மாற்றத்திற்கான இந்த நம்பிக்கையே என்னை ஜோன்-லூக் மெலோன்சோனுக்கு வாக்களிக்க தூண்டியது. ஆனால் இப்போது நாம், தான் இடதும் இல்லை வலதும் இல்லை என்று கூறிக்கொள்ளும் ஆனால் வலதுசாரி கொள்கைகளையே செயல்படுத்தும் ஒரு வேட்பாளர் ஒருபுறமும் ….., மறுபுறம், ஒரு இனவெறி மற்றும் வெளிநாட்டவர் வெறுப்பு வேட்பாளரையும் கொண்ட இரண்டாவது சுற்று வாக்களிப்பை எதிர்கொள்கிறோம்...”.

ஐரோப்பிய ஒன்றியம் தொற்றுநோயை தவறாகக் கையாண்டதால் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்ட பெரும் பொருளாதாரச் சுமையை ராஜேஷ் அடிக்கோடிட்டுக் காட்டினார், இப்போது ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோ நடத்தும் போரின் ஆபத்தை கோடிட்டுக் காட்டினார்.

அவர் கூறினார், “COVID-19 க்கு முன்பு, நான் ஒவ்வொரு வாரமும் சந்தைக்குச் செல்லும்போது, ஒரு கிலோ தக்காளியை 1.20யூரோக்கு வாங்கினேன். இப்போது 4 யூரோ வரை விலை உயர்ந்துள்ளதால் அவற்றை வாங்க நான் சந்தைக்கு அவ்வளவாக செல்வதில்லை. இது பலரின் நிலைக்கான ஒரு உதாரணம் மட்டுமே. ... பணக்காரர்கள் நெருக்கடிகளில் இருந்து காப்பாற்றப்படுகிறார்கள், ஆனால் நாங்கள், உழைக்கும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், மக்ரோனின் சமூகத்தை நொருக்கும் கொள்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள். நான் உங்களுடன் உடன்படுகிறேன்: எங்களுக்கு மாற்றுக் கொள்கை தேவை.

மக்ரோன் தனது ஐந்தாண்டு காலத்தில் செய்த கொடூரமான நிலமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற நம்பிக்கையில் மெலோன்சோனுக்கு வாக்களித்த பல இளைஞர்களிடமும் WSWS பேசியது.

“எனது பெயர் ஜூலின், நான் ஒரு மாணவன். மற்ற வேட்பாளரின் திட்டத்துடன் ஒப்பிடும்போது மெலோன்சோன் ஒரு மாற்றத்தை கொண்டுவருவார் என பல மாணவர்கள் நினைத்தனர். அவர் எங்களை ஏமாற்றி விட்டார்” என்றார். இப்போது லு பென் மக்ரோனின் ஒரே எதிர்ப்பாளராக இருப்பதால், அவர் தனது அதிருப்தியைக் காட்ட ஒரு வெற்று வாக்கைத் தவிர வேறு வழியில்லை என பார்க்கிறார். அவர் கூறினார், 'நான் மரின் லு பென்னுக்கு வாக்களிப்பதை விட வெற்று வாக்களிக்க விரும்புகிறேன், ஏனெனில் அவரது திட்டத்தை நான் முற்றிலும் இனவெறியாக கருதுகிறேன். புலம்பெயர்ந்தோர் இல்லாத பிரான்சை அவர் விரும்புகிறார்”.

வலண்டினா என்ற மாணவி, தான் வாக்களிக்கச் சென்றது இதுவே முதல் முறை என்றும் மெலோன்சோனுக்கு வாக்களித்ததாகவும் கூறினார்: “ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் சில சதவீதம் குறைவாக இருந்ததால் அவர் இரண்டாம் சுற்றுக்கு தேர்வுபெற முடியவில்லை. அவரது தோல்வியைத் தொடர்ந்து, அவர் இமானுவேல் மக்ரோனுக்கு முறையிடுகிறார்.”

மக்ரோன் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் மெலோன்சோனின் முடிவு குறித்து அவர் தனது ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.

அவர் கூறினார், 'இது தனிப்பட்ட முறையில் எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது, ஏனெனில் ஜோன்-லூக் மெலோன்சோன் இடது பக்கம் இருப்பதாக கூறியவர், அதே சமயம் இமானுவல் மக்ரோன் எந்த மறைப்பும் இல்லாமல் வலதுபுறத்தில் இருக்கிறார். தன்னுடைய அரசியல் பக்கம் கூட இல்லாத ஒருவருக்கு ஓட்டு போடுங்கள் என்று மெலோன்சோன் எங்களுக்கு எப்படிச் சொல்ல முடியும்? மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு எங்களிடம் கேட்க அவருக்கு உரிமை இல்லை. ... சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் இடதுசாரி மனிதர் என்று நினைத்து நாங்கள் அவருக்கு வாக்களித்தோம், மாறாக ஒரு வலதுசாரிக்கு வாக்களிக்குமாறு அழைப்பு விடுக்கிறார். மெலோன்சோனும் மற்றவர்களைப் போலவே இருக்கிறார், நாங்கள் அவரை நம்பியிருக்கக்கூடாது.

மக்ரோனுக்கோ அல்லது லு பென்னுக்கோ வாக்களிப்பதை பரிசீலிக்க முடியாது என்று வலண்டினா விளக்கினார்: 'நான் அவர்கள் இருவருக்கும் வாக்களிக்க மாட்டேன், ஏனென்றால் தற்போதைய ஜனாதிபதியுடன் நாங்கள் மஞ்சள் சீருடைகள் நெருக்கடி, கல்வியில் முறையை மோசமாக மாற்றியமைத்தல், கொரோனா தொற்றுநோயை பள்ளிக்கூடங்களிலும் வெளியிலும் பொறுப்பற்ற முறையில் கையாள்தல் போன்ற பல சிரமங்களை அனுபவித்துள்ளோம். [மக்ரோன்] எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மிகவும் வன்முறையில் ஈடுபட்டார். மக்ரோனின் ஐந்தாண்டு பதவிக் காலத்தில் பொலிஸ் வன்முறைகள் மிகவும் அதிகரித்துள்ளன, நான் அதை ஆதரிக்கவில்லை.”

ஜனாதிபதி தேர்தலை தீவிரமாக புறக்கணிப்பதற்கான PES அழைப்பு பற்றி, அவர் கூறினார்: 'மரின் லூ பென்னின் எழுச்சியை தடுக்க மக்ரோனுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது கடந்த 5 ஆண்டுகளில் பொய்யாக்கப்பட்டுள்ளது. செயல்திறன் மிக்க புறக்கணிப்பு பற்றி நீங்கள் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் இருவருக்கும் வாக்களிக்க நான் விரும்பவில்லை. பெரும்பான்மை மக்களின் நலனுக்காக கட்சியை உருவாக்க வேண்டும்” என்றார்.

Loading