மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்
ரஷ்யாவின் கருங்கடல் கப்பற்படையின் பிரதான போர்க்கப்பல் மொஸ்க்வா (Moskva) கடந்த வாரம் மூழ்கிய பின்னர், மற்றும் நேட்டோ உக்ரேனுக்கு ஆயுதங்கள் அனுப்புவதில் செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய விரிவாக்கத்திற்குப் பின்னர், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான ஏகாதிபத்திய பினாமி போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது, செலென்ஸ்கி இப்போது ரஷ்யா உடனான 'எல்லா பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த' அச்சுறுத்தி வருகிறார்.
மொஸ்க்வா மூழ்கியதற்கான துல்லியமான சூழ்நிலைகள் தெளிவாக இல்லை. கப்பலைத் தாக்கிய இரண்டு நெப்டியூன் ஏவுகணைகளை அது வீசியதாக கியேவ் கூறும் அதேவேளையில் —இந்த கூற்றை அமெரிக்கா ஆதரிக்கிறது— கப்பலில் ஏற்பட்ட வெடிப்பும் 'கொந்தளிப்பான கடல்' நிலைமையுமே அது மூழ்குவதற்குக் காரணம் என்று கிரெம்ளின் வலியுறுத்துகிறது. ஆனால் உண்மை என்னவாக இருந்தாலும், மொஸ்க்வாவின் இழப்பு ரஷ்யாவுக்கு எற்பட்ட ஒரு மிகப்பெரிய இராணுவ அவமானம் மற்றும் பின்னடைவு என்றே உலகளவில் கருதப்படுகிறது. கடந்த தசாப்தங்களில் எந்தவொரு கப்பற்படைக்கும் ஏற்பட்டிராத மிகவும் குறிப்பிடத்தக்க இழப்பான அது, 1904-05 இல் ஜப்பானுடனான போரில் ரஷ்ய கப்பற்படைக்கு ஏற்பட்ட படுமோசமான இழப்புடன் ஒப்பிடப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமின்றி மொஸ்க்வா மூழ்கியதன் படுமோசமான உணர்வை ஈடுகட்டுவதற்காக உந்தப்பட்டு, உக்ரேனிய ஆயுதப்படைகளுக்குப் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை அனுப்பி உள்ள ஏகாதிபத்திய சக்திகளின் முடிவில்லா ஆத்திரமூட்டலுக்கு விடையிறுப்பாக, உக்ரேன் எங்கிலுமான இலக்குகளை நோக்கி ரஷ்யா விமானத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளதுடன், மரியுபோலைச் சுற்றி வளைப்பதற்கான ஓர் ஒருங்கிணைந்த முயற்சியைச் செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷ்யப் படைகள் கியேவ் அருகே ஒரு வெடிமருந்து தொழிற்சாலையை அழித்ததாகவும், அசோவ்ஸ்டல் (Azovstal) தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர்த்து அந்த தென்கிழக்கு நகரத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷெக்காவின் (Igor Konashenkov) கூற்றுப்படி, நவ-நாஜி அசோவ் பட்டாலியனுடன் இணைந்த 2,500 ஆயுததாரிகள் இன்னமும் அசோவ்ஸ்டல் ஆலையைப் பிடித்து வைத்துள்ளனர், இதில் 400 வெளிநாட்டு கூலிப்படையினரும் உள்ளடங்குவர், பெரும்பாலும் இவர்கள் ஐரோப்பா மற்றும் கனடாவில் இருந்து சேர்க்கப்பட்டவர்களாவர்.
எஞ்சிய உக்ரேனிய படைகள் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்குள் சரணடையுமாறு ரஷ்ய இராணுவம் விடுத்த இறுதி எச்சரிக்கையை கியேவ் நிராகரித்தது. அந்த துருப்புகள் 'இறுதி வரையில் போராடும்' என்று உக்ரேனிய பிரதம மந்திரி வலியுறுத்தி உள்ளார்.
மரியுபோலில் இன்னும் சண்டையிடும் இந்த சக்திகள் 'அழிக்கப்படும்' என்று ரஷ்ய அதிகாரிகளின் அச்சுறுத்தல்களுக்கு விடையிறுப்பாக, 'எங்கள் ஆட்களை' முடித்துக் கட்டுவது 'ரஷ்யாவுடனான எல்லா பேச்சுவார்த்தைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்' என்று செலென்ஸ்கி எச்சரித்தார்.
மரியுபோல் ஏழு வாரங்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. அந்நகரத்தில் எஞ்சியுள்ள 100,000 அப்பாவி மக்கள் மீது ஒரு மனிதாபிமான பேரழிவு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதுடன், அங்கே கடுமையான மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறை அனுபவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மரியுபோல் உட்பட பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதைகளை ஏற்படுத்துவது குறித்து ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியில் முடிந்துள்ளன.
போருக்கு முன்னர் 400,000 மக்கள்தொகை கொண்ட மரியுபோல், டொன்பாஸ் எனப்படும் கிழக்கு உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரம் என்பதுடன், இது முக்கிய மூலோபாய மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அசோவ் கடலின் வடகிழக்கு கடற்பகுதியில் அமைந்துள்ள இது, இந்த போர் வரையில், உக்ரேனின் பெரும்பாலான ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் இதன் துறைமுகங்கள் வழியாகவே நடந்து வந்தன.
அந்நகரம் ரஷ்யாவால் எடுத்துக் கொள்ளப்பட்டால், அது கருங்கடலில் கிரிமியன் தீபகற்பத்திற்கும், டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க்கைச் சுற்றி, டொன்பாஸில் ரஷ்யா கட்டுப்பாட்டிலுள்ள பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு முக்கிய தரைப் பால பகுதியாக மாறும். அத்தகைய சூழ்நிலை உக்ரேனுக்கு ஒரு மிகப் பெரிய இராணுவப் பின்னடைவாக இருக்கும் என்பதோடு, அது நீடிக்கும் போரில் செலென்ஸ்கி அரசாங்கத்திற்குக் குறிப்பிடத்தக்க பொருளாதார மற்றும் தளவாட சவால்களை உருவாக்கும்.
அடால்ஃப் ஹிட்லரைப் போற்றும் மற்றும் 'வெள்ளையினத்தவரின்' மேலாதிக்கத்திற்கான உலகளாவிய போருக்குக் கனவு காணும் தீவிர நவ-நாஜிக்களை உள்ளடக்கிய அசோவ் பட்டாலியன், இந்தாண்டு இந்த போர் தொடங்கியதில் இருந்தே மரியுபோல் போர்க்களத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. கியேவில் பெப்ரவரி 2014 ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் வெடித்த உள்நாட்டுப் போரில், Right Sector மற்றும் அசோவ் பட்டாலியன் போன்ற அதிவலது போராளிகள் குழுக்களுக்கும் ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் நடந்த இரத்தந்தோய்ந்த போரில்அந்நகரம் கியேவ் ஆட்சியின் பிடியில் சென்று முடிந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், அசோவ் பட்டாலியன் உக்ரேனின் தேசியப் பாதுகாப்புப் படையில் ஒருங்கிணைக்கப்பட்டு மரியுபோலில் அதன் அதிகாரபூர்வ தலைமையகம் அமைக்கப்பட்டது.
செலென்ஸ்கி உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அசோவ் ஆயுததாரிகளுக்கு நடைமுறையளவில் அரசாங்கத்தால் வரம்பிலா அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். அவர் கூறினார், ''அசோவ்ட்ஸி' (Azovtsy) ஏற்கனவே மாவீரர்கள், அவர்கள் சில நடவடிக்கைகளை எடுப்பதை யாரும் தடுக்க மாட்டார்கள்.' அசோவ் பட்டாலியனின் பதவிகளில் உள்ள தளபதிகளுக்கு செலென்ஸ்கி 'உக்ரேனின் மாவீரர்கள்' என்று விருது வழங்கி கௌரவித்துள்ளார், இந்த போரில் போராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து அதிவலது சக்திகளை ஈர்க்கும்நோக்கில் அசோவ் இன் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை ஜெலென்ஸ்கி அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.
CNN இன் Jake Tapper உடனான ஒரு நேர்காணலில், உக்ரேனிய தேசியக் கொடி மற்றும் உக்ரேனிய தேசியவாதிகளின் நாஜி ஒத்துழைப்பு அமைப்பின்(OUN) சின்னம் பொதிந்த கொடியின் முன் அமர்ந்து, செலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்பது 'உலகம் முழுவதும், எல்லா நாடுகளும் கவலைப்படக் கூடியதாக உள்ளது' என்பதை ஒப்புக் கொண்டார்.
ஆனால் இந்த மோதலைத் தணிக்க அறிவுறுத்துவதற்குப் பதிலாக, உக்ரேனியர்களுக்கு எதிராக ரஷ்யா 'இனப்படுகொலையில்' ஈடுபட்டு வருவதாககடந்த வாரம் குற்றஞ்சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் ஆத்திரமூட்டும் வாய்சவுடாலையே அவரும் எதிரொலித்தார், மேலும் உக்ரேனுக்கு 'பலமான, இன்னும் அழிவுகரமான ஆயுதங்கள்' மற்றும் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான முழுமையான தடைகளைக் கோரினார். வரவிருக்கும் நாட்களில் டொன்பாஸ் மீது ரஷ்யா ஒரு மிகப் பெரிய தாக்குதலைத் தொடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியை உக்ரேன் சரணடைய விடாது என்றும் அவர் எச்சரித்தார்.
உக்ரேனுக்கு ஏற்கனவே அதிநவீன நேட்டோ ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன, அவை இந்த போரில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளன. ரஷ்ய இராணுவத்தின் மோசமான இழப்புகளுக்கு உக்ரேன் இராணுவம் மற்றும் அதிவலது சக்திகளுக்கு வழங்கப்பட்ட இந்த அதிநவீன ஆயுத அமைப்புகள் ஏதோ சிறிய கணக்கில் வரவில்லை, ஆயிரக் கணக்கான சிப்பாய்களும் டஜன் கணக்கான உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் இந்த கணக்கில் வருகிறார்கள்.
பெப்ரவரி 24 இல் இந்த போர் தொடங்கியதில் இருந்து மட்டுமாவது, டாங்கிகள், டாங்கி தகர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பிற அதிநவீன ஆயுத அமைப்புகள் உட்பட உக்ரேனுக்கு 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. 'உளவுத்துறை நடவடிக்கைகளில்' உக்ரேன் இராணுவத்துடனான அதன் ஒத்துழைப்பையும் அமெரிக்கா கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது.
போருக்கு முன்பே கூட, அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேன் இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க பில்லியன் கணக்கில் செலவிட்டன, அதேவேளையில் ரஷ்யாவுக்கு எதிராக ஒரு 'கிளர்ச்சிக்கு' தயாரிப்பு செய்ய 'உயர்மட்ட உக்ரேனிய சிறப்பு நடவடிக்கை படைகள் மற்றும் பிற உளவுத்துறை அதிகாரிகளுக்கு அமெரிக்காவில் ஓர் இரகசிய தீவிர பயிற்சியை' சிஐஏ நடத்தி இருந்ததாக யாஹூ செய்திகள் குறிப்பிட்டன.
இப்போது ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஒரு நேரடி இராணுவ மோதலுக்கு, அதாவது உலகப் போருக்கு, திட்டமிட்டு தயாரிப்பு செய்ய அமெரிக்க இராணுவம் உக்ரேனில் இந்த ஏகாதிபத்திய பினாமிப் போர் அனுபவத்தைப் பயன்படுத்தி வருகிறது. அசோசியேடெட் பிரஸின் ஒரு செய்தி குறிப்பிட்டதாவது, “அமெரிக்க ஆயுதப்படை பயிற்சியாளர்கள் ரஷ்யா அல்லது சீனா போன்ற ஒரு மிகப்பெரிய எதிரிக்கு எதிரான எதிர்கால சண்டைகளுக்குச் சிப்பாய்களைத் தயார் செய்து வருகின்ற நிலையில், அவர்கள் ஏற்கனவே உக்ரேனுக்கு எதிரான ரஷ்ய போரில் இருந்து கற்ற பாடங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்,” என்று குறிப்பிட்டது.
இராணுவச் செயலர் கிறிஸ்டின் வோர்ட்முத் அசோசியேடெட் பிரஸிற்குக் கூறுகையில், “இப்போது மொத்த ஆயுதப் படையும் உண்மையிலேயே உக்ரேனில் என்ன நடந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறது, அவற்றிலிருந்து பாடங்களைப் படிக்க முயன்று வருகிறது என்று நினைக்கிறேன்,” என்றார். ரஷ்ய இராணுவம் முகங்கொடுத்து வரும் தளவாட மற்றும் சரக்கு பரிவர்த்தனை பிரச்சினைகளில் இருந்து ஐரோப்பாவில் உள்ள சேற்று நிலப்பரப்பில் பயன்படுத்த அமெரிக்கா தயாராக இருக்க வேண்டிய டாங்கி வகைகள் வரையில் இந்த 'பாடங்கள்' நீள்கின்றன என்றவர் தெரிவித்தார்.
கட்டவிழ்ந்து வரும் இந்த போரைக் குறித்து பெரிதும் வெளிப்படையான உத்வேகத்துடன் வோர்ட்முத் குறிப்பிடுகையில், “தகவல் களம் எவ்வளவு முக்கியமாக இருக்கப் போகிறது என்பதற்கு இந்த ரஷ்ய-உக்ரேனிய அனுபவம் நம் இராணுவத்திற்கு மிகவும் சக்தி வாய்ந்த எடுத்துக்காட்டாகும். சுமார் ஐந்து வருடங்களாக நாங்கள் இதைப் பற்றி தான் கூறி வந்தோம். ஆனால் உண்மையிலேயே அதை பார்க்கிறோம், செலென்ஸ்கி நம்ப முடியாதளவில் சக்தி வாய்ந்தவராக இருப்பதை நாம் பார்க்கிறோம். … நிஜமான உலகம் பார்க்கக்கூடிய ஓர் உலகப் போரான இது, நேரடியாக கவனிக்கக் கூடியதாகும்,” என்றார்.
மேலும் படிக்க
- உக்ரேனில் "இனப்படுகொலை" பற்றிய பைடெனின் கூற்றுகள்: ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு ஒரு சாக்குப்போக்கு
- நேட்டோ பொதுச் செயலர் ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக நேட்டோவை ஒரு போர்ப் படையாக "மாற்றுவதற்கு" அழைப்பு விடுக்கிறார்
- பைடென் தனது போர்வெறி உரையில், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கு தொழிற்சங்கங்களை அணிதிரட்டுகிறார்