உணவு மற்றும் எரிபொருளுக்கான விலைகளை வெகுஜனங்களால் செலுத்தமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில் இலங்கை முழுவதும் பாரிய கோபம் வெடித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்க்ஷவின் பாதுகாப்புப் படைகளையும் மீறி, இலங்கை அரசாங்கத்தை வெளியேற்றக் கோரி, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றுபட்டுள்ளனர்.
இலங்கையில் பல தசாப்தங்களாக தமிழ் தேசியவாதத்தின் மையமாக விளங்கும் யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் முதல் தடவையாக தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு பேரணிகளில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகம், அனைத்துக் கல்வி நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்திவிட்டு பல்கலைக்கழகத்தை மூடியது. வாரக்கணக்கில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் (TNA) மற்றும் அதனுடன் இணைந்த தமிழ் தேசியவாதப் போக்குகளும் இந்த எதிர்ப்புக்கள் குறித்து கடும் மௌனத்தைக் கடைப்பிடித்தன.
ஏப்ரல் 13 அன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் M. A. சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மௌனத்தை திடீரென உடைத்து, பல வாரங்களாக, வெறுக்கப்பட்ட இராஜபக்க்ஷ ஆட்சியுடனும் பிற முன்னணி இலங்கை அரசியல்வாதிகளுடனும் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகளின் நோக்கம், அரசியல் 'ஸ்திரத்தன்மையை' உருவாக்குவது, எதிர்ப்புக்களை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் வங்கிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆணையை இலங்கை மீது சுமத்துவது என்பதை சுமந்திரன் தெளிவுபடுத்தினார். சுமந்திரன் கூறியதாவது:
“பல கட்சிகள் என்னோடு பேசுகிறார்கள். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா என்னோடு பேசினார், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் என்னோடு காலையில் பேசினார். மற்ற மற்ற தலைவர்கள் என்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் நிலைமையில் ஒரு ஸ்திரத்தன்மையை கொண்டுவருவதற்கான முயற்சி சம்பந்தமாக நடக்கின்ற பல பேச்சுவார்த்தைகளிலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.. தற்போதைய பிரதமர் மகிந்த இராஜபக்ஷக்கு நான் நேற்று கொடுத்த ஆலோசனை, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கமே கொண்டுவந்தால், நாங்கள் முன்னேற முடியும் என்று தனிப்பட்ட ரீதியில் எனது கருத்தை அவருக்கு சொல்லியிருந்தேன்.”
என்ன ஒரு இழிந்த மோசடி! இராஜபக்க்ஷ நல்ல மனத்துடன் தனது சொந்த சர்வாதிகார ஆட்சியை ஒழிக்க விருப்பத்துடன் திட்டமிட்டுள்ளார் என்று தொழிலாளர்களும் இளைஞர்களும் நம்ப வேண்டும் என்று சுமந்திரன் விரும்புகிறார். இது ஒரு ஆபத்தான அரசியல் பொய். இராஜபக்க்ஷ சகோதரர்களான கோத்தபாய மற்றும் மகிந்த இரக்கமற்ற அரசியல் குற்றவாளிகளாவார். அவர்களின் கைகள், பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பற்ற மக்களின் இரத்தத்தில் நனைந்துள்ளன. இராஜபக்க்ஷ சகோதரர்கள் தம்மை சீர்திருத்திக்கொள்வார்கள் என்ற மாயையை பரப்பும் பிற்போக்குவாதிகளுக்கு, எந்த பேயும் தனது நகத்தை தானாகவே வெட்டுக்கொள்வதில்லை என்பதையே ஒருவரால் கூறமுடியும்.
சுமந்திரன் பேசுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பிரதமர் மஹிந்த இராஜபக்க்ஷ நேரடியாக போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார். 'நீங்கள் வீதியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ஒவ்வொரு நொடியும், எமது நாடு சாத்தியமான டாலர்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை இழக்கிறது,' என்று கூறிய இராஜபக்க்ஷ, 'இந்த நடவடிக்கைகளின் மூலம் இலங்கை நமது வரலாற்றில் இருந்ததைப் போன்ற இருண்ட காலத்திற்கு நழுவிச்செல்லக்கூடும்' என்று எச்சரித்தார்.
இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது, சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் ஒரே மாதிரியாக படுகொலை செய்த அரசாங்கத்தால் விடப்படும் இந்த முன்னறிவிப்பு, எதிர்ப்புக்களை இரத்தத்தில் மூழ்கடிப்பதற்கான ஒரு அப்பட்டமான அச்சுறுத்தலாகும். 2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த இராஜபக்க்ஷவே பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்களின் படுகொலைக்கு தலைமை தாங்கியதோடு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) போராளிகளையும் தோற்கடித்தார். ஆயினும், தமிழ் மக்களுக்கு நீதியைக் கோரி வழி நடத்துவதாக பாசாங்குத்தனமாகக் கூறும் சுமந்திரன், இராஜபக்க்ஷவுடனான தனது பின்கதவுப் பேச்சுக்களை பற்றி வெட்கமின்றிப் பெருமையடித்துக் கொண்டார்.
பட்டினி, வறிய மக்கள் மீது பேரழிவு தரும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதன் மூலம் நிலைமையை 'சீர்படுத்த' இராஜபக்க்ஷ அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்கள் என்பதை சுமந்திரன் தெளிவுபடுத்தினார். இராஜபக்க்ஷவிடம் “சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக பேசவேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புகளோடு பேசவேண்டும். மிக மோசமான சூழ்நிலைக்குள்ளே நாடு தள்ளப்பட்டுள்ளது,' என்று அவர் கூறினார்: 'இந்த நெருக்கடிக்கு மாறிமாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. ஆனால் இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதிக் காலத்திலேயே. ஆகவே இதை சீர்செய்யும் பொறுப்பு, அவர்களிடத்திலே உள்ளது,” என்றார்.
இந்த உள்ளடக்கத்தில், இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற சாமானிய மக்களது பிரபலமான கோரிக்கையை சுமந்திரன் பயன்படுத்துவது ஒரு மாபெரும் அரசியல் மோசடியாகும்.
சுமந்திரன் பேசுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) அந்தக் கோரிக்கையை முன்வைத்து ஒரு அரசியல் அறிக்கையை வெளியிட்டது. நிரந்தரப் புரட்சியின் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டு, சோசலிச சமத்துவக் கட்சி போராட்டத்திற்கு வரும் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு ஒரு புரட்சிகரப் பாதையை காட்ட முயன்றது. தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் இன மற்றும் மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஐக்கியப்பட்ட வெகுஜனங்களின் புரட்சிகர அணிதிரட்டலின் ஒரு பகுதியாக நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டவேண்டும் என்று அது விளக்கியது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி அவர் குறிப்பிடும்போது, சுமந்திரன் அதனை ஒரு வெற்று முழக்கமாக மாற்றி ஒரு பிற்போக்கான வர்க்க உள்ளடக்கத்தால் நிரப்புகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராஜபக்க்ஷவிற்கு முட்டு கொடுக்கவும், மக்கள் மீதான வங்கிகளின் ஆணையை வலுப்படுத்தவும், இராஜபக்க்ஷவிற்கு எதிராக ஒன்றுபடுவதைத் தடுக்க தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இன மற்றும் மத அடிப்படையில் பிரிக்கவும் முயல்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கணிசமான பிரிவினர், குறிப்பாக தமிழரசுக் கட்சி (ITAK) சிங்களவர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டி வருகிகிறது.
தமிழ் தேசியவாதிகளின் கேவலமான இனவாத பிரச்சாரத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரின் அண்மைய பாராளுமன்ற உரையில், இலங்கை இராணுவத்தின் இனவாத தமிழர்-விரோதப் போரைக் குறிப்பிட்டு, சிங்களவர்கள் தற்போது அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி பெருமிதம் கொண்டார்: “90களில், இலங்கையில் பொருளாதாரத் தடையை சந்தித்தவர்கள் தமிழர்கள். 20 வருடங்களுக்கு மேல் நாங்கள் அதை அனுபவித்தவர்கள். தமிழர்கள் அனுபவித்தவர்கள். இப்பொழுதுதான் சிங்களவர்கள் இந்த நாட்டிலே இந்த துன்பங்களை சந்திக்க தயாராகி இருக்கிறார்கள். அவர்கள் இப்போதுதான் வரிசையில் நிற்கிறார்கள்” எனக் கூறி பொய்யுரைத்தார்.
சிங்கள மக்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கிற்கு எதிராக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த வடக்கை கட்டுப்பாட்டில் வைத்திருந்த உள்நாட்டுப் போரின் போது இருந்த நிலைமைகளை சிறீதரன் பாராட்டினார். வட இலங்கை மக்கள் பட்ட துன்பங்களையும், போரின் போது அது எதிர்கொண்ட உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து பற்றாக்குறைகளையும் குறைத்துக்காட்டி, அவர் கூறினார்: “பிரபாகரன் காலத்தில் யாராவது பட்டினியால் இறந்ததை அறிந்தீர்களா? பிரபாகரன் காலத்தில் இவ்வாறு எரிபொருளுக்காக வரிசையில் நின்று செத்ததை வரலாற்றில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்றார்.
சிறீதரனின் வாதம் ஒரு பிற்போக்குத்தனமான மோசடியாகும், ஏனெனில் இன்றைய நெருக்கடியானது, அனைத்து இன மற்றும் மதப் பின்னணியில் உள்ள உழைக்கும் மக்களையும் பாதிக்கிறது. அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை, தாங்க முடியாத விலைவாசி உயர்வு மற்றும் இராஜபக்க்ஷ கும்பலின் ஊழலுக்கு எதிராக இலங்கை முழுவதும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சிறீதரன் சிங்கள மக்கள் மீது தனது இனவாதத் தாக்குதல்களை மேற்கொள்கிறார், அவர் வெகுஜனங்களின் எழுச்சியைக் கண்டு பயந்து, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு எதைக் குறிக்கிறது என்பதை எதிர்க்கிறார்: அது, தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான போராட்டம்.
அதே சமயம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரத்தக் கறை படிந்த இந்து மேலாதிக்க ஆட்சிக்கு ஆதரவான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சிறீதரன் தலைமை தாங்குகிறார். 2002 குஜராத் முஸ்லிம்களின் படுகொலைக்கு மட்டுமல்ல, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தேவையற்ற மரணங்களுக்கும் மோடி பொறுப்பேற்கிறார். ஆனால் பல தசாப்தங்களாக இந்திய முதலாளித்துவத்தின் கையாட்களாக செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாரிய அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுவதன் மத்தியில் இலங்கைக்கு அவசர விஜயம் மேற்கொண்டபோது அவரைச் சந்திக்க விரைந்தனர்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்கவோ அல்லது அதிகாரத்தை கைப்பற்றவோ முயற்சிக்க வேண்டாம், மாறாக இலங்கையின் கேவலமான அரசாங்கத்துடன் இணைந்து இயங்குமாறு ஜெயசங்கர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். 'புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியில் இணைந்து விடாதீர்கள்,' என்றதோடு அவர் மேலும்: “அந்த செயல்முறை நடப்பதாக அரசு கூறிக்கொண்டிருக்கும். இந்தியா உள்ளிட்ட தரப்புகள் இலங்கையுடன் பேசினால், அரசியலமைப்பு உருவாக்கத்தில் எம்முடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது எனக் கூறுவார்கள்.” … 'புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் சிக்காதீர்கள், அதற்காக காத்திருந்து ஏனைய விடையங்களில் கோட்டை விட்டுவிடாதீர்கள், அவற்றை விரைவாக பெற முயற்சி செய்யுங்கள்” என தமிழ் தேசியவாதிகளுக்கு அறிவுறுத்தினார்.
அந்த முன்மொழிவுக்கு இந்திய இராணுவத்தின் கைக்கூலியாக செயற்பட்ட TNA இல் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், “புதிய அரசியலமைப்பு உருவாகுமென நானும் நம்பவில்லை, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, புதிய ஆக்கிரமிப்பு பிரதேசங்களை தடுப்பது போன்றவற்றை செய்ய எத்தனிக்கிறோம்” என்றார்.
பிற்போக்குத்தனமான மோடி அரசாங்கத்துடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகள், இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முறியடிக்கும் அவர்களின் உறுதிமொழியின் மோசடியை அம்பலப்படுத்துகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் அடிப்படையிலான அரசியலமைப்பை தீண்டாமல் விட்டுவிட்டு, சட்டமியற்றும் நடவடிக்கை மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எவ்வாறு ஒழிப்போம் என்பதை அவர்கள் விளக்க முயற்சிக்கவில்லை.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியம், வாஷிங்டன் மற்றும் புதுடெல்லி ஆகியவற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீண்டகாலமாக இணைந்திருப்பதன் ஒரு பகுதியாகவும், சீனாவுடனான அவர்களின் வளர்ந்து வரும் மோதலின் ஒரு பகுதியாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் இந்தியத் தலையீட்டிற்கான ஏதேனும் ஒரு வடிவத்தை அரசியல் ரீதியாகத் தயாரிப்பு செய்ய முயல்கிறது.
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாலை மலர் நாளிதழுடன் நடத்திய இணையவழி சந்திப்பில் சிறீதரன், “தெற்கிற்கு சீனா உட்பட பல நாடுகள் உதவக்கூடும், தமிழ் மக்கள் எந்த நிவாரணமும் இன்றி உள்ளார்கள்” எனக் கூறி தமிழ் நாடு ஆளும் தட்டுக்கும் வணிக சமூகத்திற்கும் இலங்கையில் தலையிட அழைப்பு விடுகையில், இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான, வடக்கு கிழக்கிலும் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்ற, “தமிழ்நாடு அரசு ஒரு தனியான பொறிமுறையை உருவாக்க வேண்டும். உடனடியாக கப்பலில் நிவாரண பொருட்கள், உணவு பொருட்களை வழங்கிவைக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இலங்கைக்குள் இந்தியா எந்த அடிப்படையில் தலையிடலாம் என்பதை விபரிக்கையில், “1987ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக இந்தியாவே கையொப்பமிட்டது, அது ஒரு சர்வதேச ஒப்பந்தம், அந்த அடிப்படையில் ஈழ தமிழ் மக்களை காப்பாற்றுகின்ற உரிமை இந்தியாவுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உரியது” என்றார்.
இந்தியாவின் ஸ்ராலினிச கட்சிகளின் ஆதரவோடும் இலங்கையின் போலி இடது கட்சிகளின் ஆதரவோடும், “தமிழ் மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கை திரும்புகிறது” என்ற சுலோகத்தோடு, 1987 ஜூலையில் கைச்சாத்தான இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பும் சிறிதரனும் ஏனைய தமிழ் தேசியவாதிகளும் வரலாற்றை பொய்மைப்படுதுவதைப்போல தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க செய்யப்படவில்லை. தொழிலாளர்களுக்கு இரத்தம் தோய்ந்த பொறியாக இருந்தது.
அதன் மைய நோக்கம் நெருக்கடியில் இருந்த கொழும்பின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதும், வடக்கில் ஆயுத போராட்ட இயக்கங்களை நிராயுதபாணியாக்குவதும், தெற்குப் பகுதியில் எழுந்த எதிர்ப்புக்களை ஒடுக்க இலங்கை இராணுவத்தை தெற்குக்கு அனுப்பி வைப்பதை உறுதிப்படுத்துவதாகவும் இருந்தது.
இன்று போலவே அன்றும் சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவ வர்க்கங்கள் கீழிருந்து வரும் ஆபத்துக்கு எதிராக தொழிலாளர் மத்தியில் பிரிவினையை உருவாக்க முயன்றனர். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பும், வடக்கு கிழக்கில் அப்பாவி பொதுமக்கள் உட்பட 6,000 க்கும் மேற்பட்டோர் இந்திய இராணுவத்தாலும், அதன் கூலிப்படைகளாக செயற்பட்ட TELO, EPRLF, ENDLF ஆல் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதுடன், தெற்கில் 60,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொல்லப்படுவதற்கும் வழிவகுத்தது.
சோசலிசக் கட்சி மட்டுமே இந்த ஒப்பந்தத்தை சோசலிச முன்னோக்கில் எதிர்த்து தொழிலாள வர்க்கத்திற்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் ஒரு முற்போக்கான தீர்வை முன்மொழிந்தது. சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய தனது அறிக்கையில் பின்வருமாறு எழுதியது:
இலங்கையில் முதலாளித்துவத்தின் ஆட்சி இப்போது வடக்கில் இந்திய ஆக்கிரமிப்பு மற்றும் தெற்கில் தமிழ் எதிர்ப்பு இனவாதம் என்ற இரட்டைத் தூண்களின் மீது தங்கியுள்ளது. எந்தவொரு நாட்டிற்குள்ளும் அனைத்து தேசிய, இன மற்றும் மத குழுக்களின் ஜனநாயக சமத்துவத்தை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச புரட்சியின் மூலம் மட்டுமே அடைய முடியும் என்ற உண்மையை இந்த நிலைமை அப்பட்டமாக விளக்குகிறது. காந்தி மற்றும் ஜெயவர்த்தனாவின் சதித்திட்டங்கள் இந்திய துணைக்கண்டத்தில் தேசிய முதலாளித்துவத்தின் மிருகத்தனமான தன்மை வெளிப்படுத்திக்காட்டப்படும் நிலையில், இந்த சமீபத்திய வரலாற்று அனுபவம் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் திவால்நிலையை நிரூபித்துள்ளது...'
இந்த வரிகள் 35 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இந்தியத் தலையீட்டின் போது நடந்த நிகழ்வுகளை மட்டுமல்ல, இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பணிகளை விளக்குகின்றன. உலகளாவிய தொற்றுநோய், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ போர் உந்துதல் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பணவீக்கம் ஆகியவற்றால் உந்தப்பட்ட இலங்கையில், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு இலங்கை முதலாளித்துவத்தின் பல்வேறு இனப் பிரிவினரிடம் எந்த முற்போக்கான தீர்வும் கிடையாது.
சோசலிச சமத்துவக் கட்சி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முன்னோக்கை முன்வைக்கிறது. சர்வதேச நெருக்கடியால் தூண்டப்பட்ட இந்த பிரச்சினைகளுக்கு, எந்தவொரு தேசியவாதக் கட்சியிடமும், குறிப்பாக தமிழ் முதலாளித்துவ தேசியவாத கட்சிகள், குழுக்களிடமும் முற்போக்கான தீர்வு இல்லை என அது வலியுறுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சியானது, நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அதன் கோரிக்கைக்கு தெளிவான வர்க்க உள்ளடக்கத்தை வழங்கியது. இந்த பணி உழைக்கும் மக்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் மீது விழுகின்றது என வலியுறுத்துகிறது. இது சோசலிசத்திற்கான போராட்டத்தில் இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் உட்பட இன, மத, மொழி மற்றும் தேசியம் கடந்து அவர்களை ஐக்கியப்படுத்துகிறது.
இந்த அடிப்படையில், மக்களின் நண்பனாக தன்னை பொய்யாகக் காட்டிக் கொண்டு, இராஜபக்ஷ கும்பலுக்கு முட்டுக் கொடுக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கும் வெற்று வாய்வீச்சுகளுக்கு, சோசலிச சமத்துவக் கட்சி சமரசமற்ற முறையில் எதிரானது.
மேலும் படிக்க
- இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!
- இலங்கையின் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா அதிக சுயாட்சி வழங்குமாறு கோருகிறது
- இலங்கை தமிழ் தேசியவாதிகள் இந்தியாவின் இந்து-பேரினவாத பாஜகவுடன் கூட்டணி நாடுகின்றனர்