மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த அறிக்கை ரஷ்யாவில் உள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் உறுப்பினரிடமிருந்து சர்வதேச மே தின பேரணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது ஆங்கில வசனங்களுடன் ரஷ்ய மொழியில் பேரணியில் வழங்கப்பட்டது. அனைத்து உரைகளையும் கேட்க, wsws.org/mayday க்கு செல்லவும்.
தொழிலாளர்களின் அகிலம் (Workers' International) மற்றும் சர்வதேச தொழிலாளர் ஒற்றுமையின் இந்த மகத்தான வரலாற்று நாளில், இன்று, அனைத்து முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் மீறி, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான கரங்கள், மே சூரியனின் கதிர்களில் ஒளிரும், சோசலிசத்திற்காக போராடிய போராளிகளின் இரத்தக்கறைப் படிந்த செம்பதாகைகளை மேலுயர்த்தும். முதலாளித்துவத்தின் வரலாறு முழுவதும், அவர்கள் ஓர் ஒடுக்குமுறை சமூகத்திற்கு எதிராக, அதிக இலாப விகிதத்திற்காக மனிதனை மனிதனே சுரண்டும் ஓர் அமைப்புமுறைக்கு எதிராக, ஒரு சமரசத்திற்கிடமற்ற போரை நடத்தி இருக்கிறார்கள்.
இந்தக் கரங்களில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளான எங்கள் கரங்களும் உள்ளன — இந்தப் போராட்ட வரலாற்றில் எங்கள் இடத்தை அறிந்துள்ள நாங்கள், மொத்த மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான இந்தப் போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்கிறோம். சோவியத் ஒன்றியத்தில் 'தனியொரு நாட்டில் சோசலிசத்தை' அபிவிருத்தி செய்த பிற்போக்குத்தனமான ஸ்ராலினிசப் போக்குக்கு போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளே உண்மையான சோசலிச மாற்றீடாக இருந்தனர். பின்னர் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ மீட்டமைப்புக்கு வழிவகுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த, தேர்மிடோரியன் (Thermidorian) ஸ்ராலினிச அதிகாரத்துவம் செய்த மார்க்சிச மறுதிருத்தத்திற்கு எதிராக அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடுத்தனர். போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளிடையே ஒரு சிறப்பு இடம் பெற்ற தலைச்சிறந்த புரட்சியாளர்களில் ஒருவராக லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கி இருந்தார். ஜெயிப்பதற்கான அவரின் வளைந்துகொடுக்காத விருப்பமும், முதலாளித்துவ சமூகத்தைத் தூக்கியெறிவதற்கான அவரின் ஆசையும் 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வை — 1917 அக்டோபர் புரட்சியை — நிறைவேற்ற அவருக்கு உதவின.
போல்ஷிவிக் கட்சியால், ஏப்ரல் மாதம் லெனினின் புகழ்பெற்ற தலையீட்டுடன், உண்மையிலேயே அப்போது ஒரு மகத்தான நிகழ்வை நடத்த முடிந்தது, அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. போல்ஷிவிக் கட்சியின் பலம், மாபெரும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஏற்ப விரைவாக தகவமைத்துக் கொண்டது என்பதில் மட்டுமல்ல, மாறாக அவர்கள் பாதுகாத்த மரபுகளிலும் தங்கியுள்ளது.
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் நிறுவிய மரபுகள், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்பட்டன. அவை இன்றும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருவதுடன், வரலாற்றுரீதியில் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான பாத்திரத்தைப் புரிந்துகொள்வதில் அவை உள்ளடங்கி உள்ளன. விஞ்ஞான சோசலிசம், வரலாறு, அரசியல் பொருளாதாரம் மற்றும் மெய்யியல் துறைகளில் சடவாத இயங்கியலின் உதவியுடன் செய்யப்பட்ட மகத்தான தத்துவார்த்த மற்றும் நடைமுறை வேலைகளின் மூலம் இந்த புரிதல் பெறப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரிப்பதிலும், சடவாத இயங்கியலை நிராகரிப்பதிலும் போய் முடியும் எந்தவொரு மறுதிருத்தலுக்கு எதிராகவும் இத்தகைய மரபுகளைத் தான் நாம் தொடர்ந்து பாதுகாத்து வருகிறோம்.
வரலாற்று சடவாதம், இயங்கியல், விஞ்ஞான சோசலிசம் மற்றும் உழைப்பு மதிப்பு தத்துவம் என இத்தகைய அடிப்படைகளை மறுதிருத்தம் செய்வதன் மூலம் மார்க்சிசத்தை மாற்றுவதற்காக செய்யப்பட்ட ஒவ்வொரு முயற்சியையும் நாம் பார்த்தால், அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் மெய்யியல், வரலாறு மற்றும் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய மார்க்சிசத்திற்கு முந்தைய புரிதலுக்குத் திரும்பும் வகையில் பிரயோஜனமற்று இருந்தது. இந்த பின்னுக்குத் திரும்புதல், தவிர்க்க முடியாமல் திருத்தல்வாதிகள் சந்தர்ப்பவாத முகாமுக்குள் நகர்ந்து, முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் முகாமுக்குள் நகர்ந்துவிட்டதை அர்த்தப்படுத்தியது.
மார்க்சிச மரபியத்தின் மீது லெனினும் ட்ரொட்ஸ்கியும் கொண்டிருந்த பார்வையும், அவர்களுக்குப் பின்னர் நமது பார்வையும், தவிர்க்க முடியாமல் ஸ்ராலினிச அவதூறுக்கு எதிராக லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் சிந்தனைகள் மற்றும் ஆளுமையைப் பாதுகாத்து, அக்டோபரின் வரலாற்று பாரம்பரியங்களை இன்னமும் பாதுகாக்கும் ஒரே சர்வதேச அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு எங்களைக் கொண்டு வந்தது. இந்தவொரு அமைப்பே அதன் பாட்டாளி வர்க்கத் தன்மையை இழக்காத ஓர் அமைப்பாக உள்ளது.
ஒரு சர்வதேச அடிப்படையில் சோசலிசத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கும் அனைத்துலகக் குழு, முதலாளித்துவ ஒழுங்கைத் தூக்கியெறிந்து, உலகெங்கிலும் சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் ஐக்கியப்பட விரும்பும் மார்க்சிச புரட்சியாளர்களின் எல்லா கப்பல்களுக்கும் போலவே எங்களுக்கும் கலங்கரை விளக்கமாக ஆகியுள்ளது.
ஒரு சோசலிச எதிர்காலத்திற்கான போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் சிக்கல்களையும் நாங்கள் அறிவோம். ஒடுக்குமுறையாளர்களின் சமூகத்தைத் தூக்கியெறியும் ஒரு முயற்சியில் நேர்மையாகவும் மிகுந்த ஆர்வத்துடனும் அதன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு சர்வதேச அமைப்பில் தொழிலாளர்களை ஒன்றிணைப்பதில் இது பிரிக்கமுடியாதவாறு தொடர்புபட்டுள்ளது. அனைத்துலகக் குழுவைச் சுற்றி தொழிலாள வர்க்கத்தின் மற்றும் இளைஞர்களின் எல்லா முன்னேறிய கூறுபாடுகளையும் ஒன்றிணைப்பது, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்தைக் கட்டமைக்கும் விருப்பத்திற்குரிய இலக்கை அடைய உலகத் தொழிலாளர்களுக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அனைத்துலகக் குழுவின் முகாமில் தர்க்கரீதியில் வந்தடைந்திருப்பது, ஏனைய விஷயங்களோடு சேர்ந்து, உலகிலும் மற்றும் ரஷ்யாவிலும் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை பற்றிய ஒரு பகுப்பாய்வின் காரணமாக ஆகும். உற்பத்தி சக்திகளின் மட்டத்திற்கும் சமூகத்தில் மேலோங்கிய முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாட்டால் ஏற்படுத்தப்படும், இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் சர்வதேச நெருக்கடியின் அபிவிருத்தி, உலக பதட்டங்களை அதிகரிக்க இட்டுச் செல்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்த நெருக்கடியை ஆழப்படுத்தி வருவதிலும், அதை கூடுதலாக உலகெங்கிலும் தீவிரப்படுத்துவதிலும் ஒரு தூண்டுதல் நிகழ்வாக இருந்தது.
சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஓர் 'ஒருமுனைதுருவ' உலக ஒழுங்கை நிறுவ முடிவு செய்தது. கிழக்கை நோக்கிய அதன் படிப்படியான நகர்வு 2014 இல் உக்ரேனில் ரஷ்ய சார்பு ஜனாதிபதி யானுகோவிச்சிற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரிக்க இட்டுச் சென்றது. அமெரிக்க முதலாளித்துவத்தின் உள் நெருக்கடியின் கூடுதல் அபிவிருத்தி, உக்ரேனை ஆயுதமயப்படுத்தியது, 'கிரிமியா மேடையை” தழுவியமை, நேட்டோவுக்கும் புட்டின் ஆட்சிக்கும் இடையிலான உறவுகளை கூர்மைப்படுத்தியமை ஆகியவை பெப்ரவரி 24, 2022 இல் உக்ரைன் மீது புட்டின் பிற்போக்குத்தனமாக படையெடுக்க இட்டுச் சென்றது.
இந்தப் படையெடுப்பு உலக நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ரஷ்யாவுக்கு எதிராக பழிவாங்குவதை நோக்கி இருந்த தடையாணைகள், வளர்ச்சியடையாத நாடுகளை மட்டுமல்ல மாறாக வளர்ந்த நாடுகளையும் பாதித்துள்ளது. வளர்ச்சியடையாத நாடுகள் இப்போது கடுமையான பசிக் கொடுமையை எதிர்கொண்டு வருகின்றன, அதேவேளையில் வளர்ந்த நாடுகளோ அதிகபட்ச வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் அதிகரித்து வரும் வறுமை விகிதங்களை எதிர்கொண்டுள்ளன.
ரஷ்யா முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு புட்டின் ஆட்சியிடம் எந்த தீர்வும் இல்லை என்பதை இந்தப் படையெடுப்பு எடுத்துக் காட்டுகிறது. சீனா மற்றும் ரஷ்யாவை விலையாகக் கொடுத்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதன் மூலம், தேசியளவில் மட்டுப்படுத்தப்பட்ட முக்கியத்துவம் ஒருபுறம் இருக்கட்டும், சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வந்து விட முடியாது. ரஷ்ய பேரினவாதம் அல்லது சீன தேசியவாதத்தின் அடிப்படையில் பழிவாங்கும் ஆக்கிரமிப்பைக் கொண்டு ரஷ்யாவில் உள்ள புட்டின் ஆட்சியோ அல்லது சீனாவில் உள்ள ஜி ஆட்சியோ கூட அவ்வாறு எதையும் செய்து விட முடியாது.
இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்பின் போக்கில் நிறுவப்பட்ட ரஷ்யா மற்றும் சீனாவின் முதலாளித்துவ ஆட்சிகள், உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமையின் அடிப்படையில் இருந்து, ஒரு தேசிய கட்டமைப்புக்குள் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்க முயல்கின்றன, மேலும் அவ்விதத்தில் ஒரு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நெருக்கடியைக் கையாள திராணியற்று உள்ளன, இதற்கு ஒரு சர்வதேச தீர்வு தேவைப்படுகிறது.
நமது உலகில் ஒரு சர்வதேச அடிப்படையில் மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்ட ஒரேயொரு சமூக மற்றும் வரலாற்று சக்தி மட்டுமே உள்ளது, அதுதான் தொழிலாள வர்க்கம். இந்த ஒரு சமூக சக்தி மட்டுமே முதலாளித்துவ அபிவிருத்தியுடன் சேர்ந்து அதிகரித்து வலுவடைந்து வருகிறது. இது அதன் உற்பத்தி தான், ஆகவே தான் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து நனவுபூர்வமான உற்பத்தி திட்டமிடலின் அடிப்படையில் மற்றும் ஒட்டுமொத்தமாக சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆதாரவளங்களை பங்கீடு செய்யும் ஒரு புதிய வர்க்கமற்ற சமுதாயத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதற்கான ஒரு நிஜமான வாய்ப்பை அது கொண்டுள்ளது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களும் யாருடைய நலன்களுக்காக போராடுகிறார்களோ, இந்த புரட்சிகர சக்தியைச் சுற்றி ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, சோசலிசத்தை யதார்த்தமாக மாற்ற முடியும், இதற்காக தான் கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கெல்ஸ், விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி மற்றும், நமக்கு சிறிதளவே தெரிந்திருந்தாலும், நம் நோக்கத்திற்காக முக்கியத்துவத்தில் குறையாத இன்னும் பலரும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காக இத்தகைய வழியில் ஊக்கத்துடன் போராடினார்கள்.
ஒரு சரியான மார்க்சிச தலைமை தொழிலாள வர்க்கத்தை கடினமாக்கி ஐக்கியப்படுத்ததும் மற்றும் அதன் புரட்சிகர பாத்திரத்தை நிறைவேற்ற அதற்கு உதவும். ஆனால் அவ்வாறான ஒரு சரியான தலைமை இருக்க, போல்ஷிவிக்குகள் நின்ற மற்றும் உலகின் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள் தொடர்ந்து நிற்கும் அந்த கோட்பாடுகளை அது மறந்துவிடக் கூடாது.
புட்டின் ஆட்சியின் உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்புக்கு எதிராக!
போருக்கு எதிராக உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக!
ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிராக மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தீவிரப்படுத்தலுக்கு எதிராக!
சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக!
ஒரு சோசலிச எதிர்காலத்திற்காக!