மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் எரிக் லண்டன் வழங்கிய அறிக்கை இதுவாகும். லண்டன் WSWS இன் எழுத்தாளர் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) முன்னணி உறுப்பினரும் ஆவார். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.
இது உக்ரேனிலான போரின் வரைபடம். ஏகாதிபத்திய சக்திகளின் மிகச்சிறந்த பயிற்சியளிக்கப்பட்ட தளபதிகள், வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், மற்றும் உளவுத்துறை ஆய்வாளர்கள் இந்த வரைபடத்தில் நிலைகுத்திய பார்வையுடன் பல ஆண்டுகளை செலவிட்டிருக்கின்றனர், தாக்குதல் திட்டங்கள் தீட்டியிருக்கின்றனர், படைவீரர்களை நிலைநிறுத்தியிருக்கின்றனர், எதிரியின் பதிலிறுப்பை எடைபோட்டிருக்கின்றனர், அத்துடன் உலகத்தை தலைகீழாய் காட்டும் பொய்களைக் கொண்டு பொதுக் கருத்தை தயாரித்து வந்திருக்கின்றனர்.
ஆனால் இந்த வரைபடம் வர்க்கப் போராட்டத்தின் வரைபடம் ஆகும். வரலாற்றில் முன்கண்டிராத அளவுகளிலான ஒரு வெகுஜன இயக்கம் உலகெங்கும் அபிவிருத்தி கண்டுவருவதை இது காட்டுகிறது. அத்துடன் இந்த வரைபடத்தில் காட்டப்படுகின்ற இந்த இயக்கம், தொழிலாள வர்க்கத்தால் உலகப் போரைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் உலகை சோசலிச அடிப்படையில் உருமாற்றுவதை நடத்திக் காட்ட முடியும் என்பதையும் காட்டுகிறது.
இந்த வரைபடத்தில் இருக்கும் ஒவ்வொரு பின்னும் ரஷ்யா அதன் உக்ரேன் படையெடுப்பை தொடக்கியது முதலான ஒன்பது வாரங்களில் நடைபெற்றிருக்கக் கூடிய ஒரு தாக்குதலைக் காட்டுகிறது.
இவை உலகின் துறைமுகங்கள் மீதான தாக்குதல்கள், ஒவ்வொன்றும் சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தில் முக்கியமான புள்ளிகளாக இருப்பவை. ஊதா வண்ணம் இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் குறிக்கிறது. கறுப்பு உலகின் பரபரப்பான விமானநிலையங்கள் பலவற்றில் நடந்த வேலைநிறுத்தங்களை குறிக்கிறது. பிரவுன் நிற பின் ஒவ்வொன்றும் பேருந்து, டிரக், கழிவு சேகரிப்பு அல்லது விநியோக ஓட்டுநர்களின் ஒரு வேலைநிறுத்தம்.
ஆரஞ்சு வண்ணம் ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தைக் காட்டுகிறது. அடர் பச்சை பின்கள் செவிலியர்களின் வேலைநிறுத்தங்களாகும். இலேசான பச்சை எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் நீல வண்ணம் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக பணியாளர்களது வேலைநிறுத்தங்களையும் பழுப்பு நிறம் உணவு உற்பத்தித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களையும் காட்டுகிறது. இறுதியாக மஞ்சள் நிறம் அமெரிக்க/நேட்டோ தடைகளால் _இவற்றை மனிதாபிமான நடவடிக்கைகள் என்றே அவர்கள் அழைக்கிறார்கள், ஆனால் அவை நூறுமில்லியன்கணக்கிலான மக்களை பட்டினியின் விளிம்புக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன_ பெரிதும் தீவிரமடையப் பெற்றுள்ள வாழ்க்கைச் செலவினங்களது துரிதவேக அதிகரிப்பினால் தேசிய அளவில் போராட்டங்கள் அல்லது வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கக் கூடிய இடங்களைக் காட்டுகிறது.
இந்த பின்களில் ஒவ்வொன்றும் போராட்டத்தில் இறங்கியுள்ள தொழிலாள வர்க்கத்தின் அற்புதமான தீரம் மற்றும் மன உறுதியைக் குறிக்கிறது.
சூடானின் தெற்கு டார்ஃபர் பகுதியில் உள்ள நியாலா நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்களை எடுத்துக் கொள்வோம், இவர்கள் நாடெங்கிலும் பரவிக் கொண்டிருக்கும் உணவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருந்த மாணவர்களைக் கைது செய்வதற்காக வகுப்பறைக்குள் போலிஸ் நுழைய முயன்ற தினத்திற்குப் பின்னர் மார்ச் மாதத்தில் புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கினர். மாணவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஆசிரியர்கள் போலிசுக்கு பாதையை மறித்து நின்றபோது, போலிசார் அவர்களை அடித்ததோடு மூன்று ஆசிரியர்களை பகிரங்க அவமதிப்பும் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் “பாரிய அளவிலானவை மற்றும் முன்கண்டிராதவை” என்று உள்ளூர் வானொலி தெரிவித்தது. ஆசிரியர்கள் பள்ளிகளையும் அத்தனை வங்கிகளையும் கூட மூடச் செய்தனர். நியாலா ஆசிரியர்களின் தீரம் இராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் சகிக்கமுடியாத வாழ்க்கைச் செலவின அதிகரிப்புக்கு எதிராகவும் நாடெங்கிலும் தேசிய அளவிலான போராட்டங்கள் மற்றும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களது ஒரு புதிய அலையைத் தூண்டியது.
முதலாளித்துவ அரசை, அதன் போலிசை, இராணுவங்களை மற்றும் நீதிமன்றங்களை எதிர்த்துநிற்கும் தொழிலாளர்கள் ஒரு மேம்பட்ட உலகிற்கான போராட்டத்தில் தமது வாழ்க்கைகளையும் சுதந்திரங்களையும் தியாகம் செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில், எரிபொருள் மற்றும் உணவு விலையேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கணவரும் தந்தையுமான 40 வயது சமிந்தா லக்ஷன் போலிஸ் துப்பாக்கிசூட்டுக்குப் பலியானார். பெரு நாட்டின் போராட்டங்களில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர், சூடானில் தொன்னூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
எந்தக் குற்றமும் செய்யாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ நீதிமன்றங்களின் நீதியாக இருக்கிறது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், 70,000 போக்குவரத்துத் தொழிலாளர்கள் பங்குபெற்ற ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தில், பேருந்து வழித்தடங்களை தனியார்மயமாக்குவதற்குப் பொறுப்பான ஒரு அரசியல்வாதியின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த ஒரே காரணத்திற்காக 118 பேருந்து ஓட்டுநர்கள் “கலவரம்”செய்ததாக குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
எழுச்சி கண்டுவரும் இந்த போராட்ட இயக்கத்தின் தன்மை குறித்தும் தொழிலாளர்’ கோரிக்கைகள் பூர்த்திகாண்பதற்கு அவசியமான மூலோபாயத்தைக் குறித்தும் இந்த வரைபடம் நமக்கு எடுத்துச்சொல்வது என்ன?
இந்த வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் 21 ஆம் நூற்றாண்டில் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் இயல்பு மற்றும் ஐக்கியத்திற்கான அதன் முனைப்பு ஆகியவை குறித்த ஒரு ஆற்றல்மிக்க உணர்வைக் கொடுக்கின்றன. தொழிலாளர்களை பிளவுபடுத்தி அவர்களை ஒருவருக்கொருவர் எதிராய் நிறுத்துவதற்கு ஆளும் வர்க்கங்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்ற செயற்கையான நிற, இன, மற்றும் மத பாகுபாடுகள் அனைத்தையும் இந்த இயக்கம் தகர்த்துக் கொண்டிருக்கிறது. வியட்நாமில் மின்னணுத் தொழிலாளர்கள் அதிகரித்துச் செல்லும் உணவுப் பொருட்களது விலைக்கு ஈடுகட்ட Tet விடுமுறை கொடுப்பனவுக்கு கோரினர் என்றால் பங்களாதேஷில் ரமலான் கொடுப்பனவு கோரி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
ஈராக்கிலும் ஈரானிலும் எண்ணெய் உற்பத்தி தொழிலாளர்கள், வெறும் 35 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களது தந்தைமார்கள் ஒருவருக்கொருவர் கொல்வதற்காக அவர்களது அரசாங்கத்தால் எந்த பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்டிருந்தார்களோ பல மைல் தூரத்தால் பிரிக்கப்பட்டுள்ள அதே பிராந்தியத்தில், ஒரேநேரத்தில் வேலைநிறுத்தங்களில் இறங்கினர். இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஆசிரியர்களும் கொஞ்சம் தள்ளி பாகிஸ்தானில் லாஹூரில் இருக்கும் ஆசிரியர்களும், அவர்களது அரசாங்கங்கள் எதிர்நாட்டின் மக்கள் செறிந்த மையங்களுக்கு எதிராய் அணுஆயுத ஏவுகணைகளைக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கின்றபோதும், ஒரே வேலைநிறுத்தக் கோரிக்கைகளையே பகிர்ந்து கொள்கின்றனர். இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் தோளோடு தோள் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.
மிக முக்கியமாக, உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில், வேலைநிறுத்தங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன, அங்கே அரசாங்கங்கள் போரில் ஈடுபடும் அதீத பொறுப்பற்ற நடவடிக்கையானது வர்க்கப் போராட்டத்தை ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக திசைதிருப்பி விடுவதற்கான ஒரு நப்பாசையான முயற்சியாக இருக்கிறது.
இந்த வேலைநிறுத்த இயக்கமானது எளிதில் நொறுங்கத்தக்க உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு மத்தியில் தொழிலாளர்கள் கையில் கொண்டிருக்கும் செறிவான ஆற்றலையும் விளங்கப்படுத்துவதாய் இருக்கிறது.
ஆம்ஸ்டர்டாமில் சென்ற வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில், Schiphol விமானநிலையத்தில், விமானநிலையத்தின் பைகள் மேலாண்மைத் தொழிலாளர்கள் சில டஜன் பேர் கேண்டீனில் கூடி தமது நிலைமைகள் குறித்துப் பேசி பைகளை ஏற்றுவதில்லை என்று முடிவெடுத்ததை அடுத்து சர்வதேச விமானப் போக்குவரத்து தாமதப்பட்டது. இந்த திடீர் போராட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில், விமானநிலையம் மூடப்பட்டது, ஐரோப்பாவெங்கிலும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. பெருநிறுவன ஊடகங்கள் திகிலடைந்தன. டச்சு செய்தித்தாள்கள், குறிப்பாக ஆடம்பர விடுமுறை சுற்றுலாதாரர்களுக்கு நேர்ந்த அசவுகரியம் தொடர்பாக, ஆவேசமடைந்தன. ஒரு மிகைத்துயர தலைப்பு கூறியது, “Schiphol குழப்பத்திற்குப் பலியானவர்கள்”, அது ஒரு வசதியான விடுமுறை சுற்றுலாதாரரை மேற்கோளிட்டிருந்தது: “நாங்கள் ஒரு ஸ்பானிய கூரையை எதிர்நோக்கியிருந்தோம்”. வர்க்கப் போராட்டமானது உண்மையாகவே பெரும் தியாகங்களைக் கோருகிறது.
பல நாடுகளில் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் கிளர்ச்சிப் போராட்டங்களாக அபிவிருத்தி கண்டு வருகின்றன. பாரிய சமூக சமத்துவமின்மை மட்டங்கள், முன்கண்டிராத பெருநிறுவன இலாபங்கள், 20 மில்லியன் மக்களை அநாவசியமாகக் காவு வாங்கியிருக்கிற ஒரு கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் ஆகியவை அணைக்கமுடியாத உலக வர்க்கப் பதட்டங்களது ஒரு வெடிமருந்துக் கிடங்கின் திரியைப் பற்றவைத்திருக்கின்றன. மிக அதிக எண்ணிக்கையிலான தனிநபர் கோவிட் மரணங்களால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பெருவில், அத்துடன் இலங்கை மற்றும் சூடானில், புரட்சிகர எழுச்சிகளாக அபிவிருத்தி காண அச்சுறுத்துகிற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அரசாங்கங்கள் முகம்கொடுக்கின்றன. ஈரானிலும் தென்ஆபிரிக்காவிலும், வேலைநிறுத்த அலைகள் ஒவ்வொரு நாளும் வளர்ந்து செல்கின்றன. உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலுமே, சரிந்து விழவிருக்கும் அடுத்த சீட்டாக தங்கள் நாடு இருக்கலாம் என்பதை பத்திரிகையாளர்களும் NGO இயக்குநர்களும் பதட்டத்துடன் எச்சரிக்கை செய்கின்றனர். வாரங்கள் நகர நகர உலகளாவிய உணவு மற்றும் உர விநியோகங்கள் எதிர்கொள்ளக் கூடிய நாசகரமான தாக்கங்களைக் கொண்டு பார்த்தால், அவர்களது கணிப்புகள் சரியானதாக நிரூபணமாகக் கூடும்.
இந்த உலகளாவிய இயக்கமானது தொழிற்சங்கங்களின் தலைகளுக்கு மேலாக அபிவிருத்தி கண்டுகொண்டிருக்கிறது, தேசிய அரசு அமைப்புமுறையில் வேர்களைக் கொண்டிருப்பதானது தொழிற்சங்கங்களை இந்த சர்வதேச இயக்கத்தின் ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு வாகனமாக அல்லாமல் மாறாக முட்டுக்கட்டையாக ஆகும்படி செய்கின்றன. ஒரேயொரு போராட்டத்திலும் கூட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை உண்மையாக போராட்டத்தில் வழிநடத்த்துவதையோ, சக சர்வதேசத் தொழிலாளர்களது வேலைநிறுத்தங்களைக் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பதையோ, அல்லது சமத்துவத்திற்கான அவர்களது முனைப்பை ஊக்குவிப்பதையோ காண முடிவதில்லை.
2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் 106 முன்னறிவிப்பற்ற வேலைநிறுத்தங்கள் நடந்திருப்பதாக துருக்கி அரசாங்கம் தெரிவிக்கிறது, இது முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கக் கூடிய முன்னறிவிப்பற்ற வேலைநிறுத்தங்கள் மொத்தத்தையும் விட அதிகமான எண்ணிக்கையாகும். வியட்நாமில் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் முன்னறிவிப்பற்ற வேலைநிறுத்தங்கள் 40 சதவீதம் அதிகரித்ததாக அரசாங்கம் கூறுகிறது. பிரேசிலில் ஒரு சக்திவாய்ந்த அறிவிப்பற்ற வேலைநிறுத்த இயக்கம் அபிவிருத்தி கண்டுகொண்டிருக்கிறது, அங்கே தொழிற்சங்கங்கள் இது வேலைநிறுத்தம் செய்வதற்கான சரியான நேரம் இல்லை என்பதாக தொழிலாளர்களுக்குக் கூறும் பரிதாபகரமான சிறு துண்டறிக்கைகளை அச்சடித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவில், உருக்காலை தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் போர் முனைப்புக்கு உதவும்விதமாக ஊதியங்கள் பணவீக்கத்திற்கு கீழே பராமரிக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்வோம் என்று பைடன் நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார்.
சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இந்த இயக்கம் முதலாளித்துவத்தின் கீழ் இதற்குமுன் ஒருபோதும் இத்தகைய ஆற்றல்மிக்க நிலையைப் பெற்றிருந்ததில்லை.
இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, உலகப் பொருளாதாரத்தின் உலகமயமாக்கமானது பல பில்லியன் மக்களைக் கொண்ட, உற்பத்தி நிகழ்முறையால் பரஸ்பரம் இணைக்கப்பட்ட, மனித வரலாறு முன்னொருபோதும் கண்டிராத அளவுக்கு பாரிய நகரங்களில் ஒன்றாக வேலைசெய்கிற மற்றும் வாழ்கிற ஒரு தொழிலாள வர்க்கத்தை உருவாக்கிக் கொண்டுவந்திருக்கிறது. உலகளாவிய தெற்கில், வடக்கிலும் சரி தெற்கிலும் சரி நாட்டுப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு முன்கண்டிராத ஒரு புலப்பெயர்வு நடைபெற்றிருக்கிறது.
2008 இல், உலக வரலாற்றில் முதன்முறையாக, மக்கள்தொகையின் பெரும்பான்மையினர் நகர்ப்புறப் பகுதிகள் வாழ்ந்தனர். அத்துடன் முதன்முறையாக, இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் வாயிலாக, தொழிலாளர்கள் தங்கள் உள்ளங்கைகளில் இருந்தபடி கிட்டத்தட்ட கணக்கில்லாத தமது சக தொழிலாளர்களுடன் தகவல்தொடர்பை பரிமாறிக் கொள்ள முடிகிறது. உலகமய உலகப் பொருளாதாரம் ஒரு சோசலிச சமூகத்தை பெற்றெடுக்க தயாராய் நிறைமாதக் கர்ப்பமாய் இருக்கிறது, ஆனால் தேசிய அரசு அமைப்புமுறையாலும் உற்பத்தி சாதனங்களது தனியார் உடைமையினாலும் தளையிடப்பட்டுள்ளதுடன் முதலாளித்துவக் கட்சிகளாலும் தேசியவாத தொழிற்சங்கங்களாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் எத்தனை தீரமானவர்களாய் இருந்தாலும், எத்தனை தியாகம் செய்யத் தயாராய் இருந்தாலும், உலகெங்கிலும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற பற்றியெரியும் சமூக சவால்களுக்கு நிவர்த்தி காண்பதற்கு, தன்னெழுச்சியான கோபம் மட்டும் அதனளவில் திறம்கொண்டதாக இருக்க முடியாது என்பதையே 2011 அரபு வசந்தமும் 2018-19 உலகளாவிய ஆர்ப்பாட்டங்களும் காட்டுகின்றன. ஆளும் வர்க்கங்கள் தமது பாதையை மாற்றிக் கொள்வதற்கு அவற்றிடம் செய்யப்படும் விண்ணப்பங்கள் ஒழுங்குவழிக்கு வர அவற்றிற்கு அழுத்தமளிக்காது, மாறாக இத்தகைய விண்ணப்பங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் தன்னை -காப்பாற்றிக் கொள்கிற- உணர்வை அதிகரிப்பதற்கே வகைசெய்யும். தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்கு அதனை மயக்குவதில், மிரட்டுவதில், பிளவுபடுத்துவதில், ஏமாற்றுவதில், வாக்குறுதியளிப்பதில் மற்றும் பயங்கரத்தின் பீதியேற்படுத்துவதில் முதலாளித்துவ வர்க்கம் நூறாண்டுகளது கணக்கில் அனுபவம் கொண்டிருக்கிறது.
சாமானியத் தொழிலாளர் குழுக்கள் தான் இந்த வளரும் இயக்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவசியமான அமைப்பு வடிவமாகும். 21 ஆம் நூற்றாண்டின் உலகத்தில் சர்வதேசத் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுவழி அவசியமான அங்கங்களாய் அவை இருக்கின்றன.
சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேசக் கூட்டணி (IWARFC) என்பது உலகெங்கிலும் தொழிலாளர்களது சாமானியத் தொழிலாளர் குழுக்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் அவற்றை ஐக்கியப்படுத்தி ஆதரவும் தலைமையும் வழங்குவதற்காகவும் சென்ற ஆண்டு நடந்த மே தினப் பேரணியின் போது அனைத்துலகக் குழுவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சர்வதேசிய தொழிலாள வர்க்க அமைப்பாகும். தொழிலாள வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளை, அதன் அனைத்து பல அடுக்குகளை மற்றும் மூலபாகங்களை, ஒரே ஐக்கியப்பட்ட இயக்கத்திற்குள் கொண்டுவந்து, அதன் பிரமிப்பூட்டும் சமூக சக்தியை வெளிக்கொண்டு வர உதவுவதும், சுதந்திரத்திற்கும் ஐக்கியத்திற்குமான அதன் உயிர்ப்பான முனைப்பை ஊக்குவிப்பதும், தொழிலாளர்களுக்கு வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் படிப்பினைகளை அறிமுகம் செய்வதும், தேசிய தொழிற்சங்கவாதத்தின் கைவிலங்குகளில் இருந்து அவர்களை விடுவித்து நிதி பிரபுத்துவம் மற்றும் ஏகாதிபத்திய போர்க்கூச்சல் பேர்வழிகளின் கரங்களில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு உலகளாவிய போராட்டத்தில் தொழிற்பிரிவுகள் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்து தமது சக தொழிலாளர்களை நோக்கி அவர்கள் நேசக்கரம் நீட்டச் செய்வதுமே IWARFC இன் நோக்கமாகும்.
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து உலகளாவிய ஒரு புரட்சிக்கான போராட்டத்தில் முதல் கட்டத்தை குறித்ததாய் இருந்த 1917 ரஷ்யப் புரட்சியில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் அமைத்துத் தரப்பட்ட முன்னுதாரணங்களே எங்களை வழிநடத்துகின்றன. இந்த போராட்டங்களை தொழிலாளர்கள் சுய-நனவுடனான சோசலிஸ்டுகளாக தொடங்கவில்லை என்பதை, 1917 போல்ஷிவிக்குகள் போல, நாங்களும் அறிவோம். எனினும் அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடி மிகச்சிறந்த போராளிகளாக எங்களை நிரூபிக்கின்ற பாதையில், அனைத்துலகக் குழுவும் உலகெங்கிலுமான அதன் காரியாளர்களும் தொழிலாளர்களுக்கு தலைமை கொடுப்பதற்கான எமது உரிமையை விளங்கப்படுத்துவோம், சோசலிசத்திற்கு அவர்களை வென்றெடுத்து வரலாற்றின் பாதையை மாற்றுவோம்.