மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிலிப்பைன்ஸில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகி வருகின்றன என்றாலும், கிட்டத்தட்ட எல்லா தொகுதிகளும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன, நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் அவருக்கு மிக நெருக்கத்தில் உள்ள போட்டியாளரை விட கணிசமான முன்னிலையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியாக ஆகி இருப்பது தெளிவாகிறது.
50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பதற்காக கடும் வெயிலில் வரிசையில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சனையால் பலர் நான்கு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டியிருந்தது. தேர்தல் வன்முறைகளும் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட செய்திகளும் இருந்தன என்றாலும், அந்நாட்டின் தேசிய தேர்தல் தரத்தை விட அதிகமாக எதுவும் நடக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் (Comelec) பகுதியான முடிவுகளில், 93 சதவீத தொகுதிகளது முடிவுகள், மார்க்கோஸிற்கு 29.8 மில்லியன் வாக்குகள் கிடைத்திருப்பதாக காட்டுகின்றன. அவருக்கு அருகாமையில், அவரின் போட்டியாளரான தற்போதைய துணை ஜனாதிபதி லெனி ரோபிரேடோ (Leni Robredo) 14.2 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளார், அதேவேளையில் மூன்றாவது இடத்தில், குத்துச்சண்டை வீரராக இருந்து செனட்டரான மேனி பாக்கியோ (Manny Pacquiao) 3.3 மில்லியன் வாக்குகளுடன் மிகவும் தொலைவில் பின்தங்கியுள்ளார்.
பிலிப்பைன்ஸில் ஜனாதிபதிக்கும் துணைத் ஜனாதிபதிக்கும் தனித்தனியாக வாக்களிக்கப்படும், மார்க்கோஸின் துணை ஜனாதிபதியாக போட்டியிடும், தற்போதைய ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றயின் (Rodrigo Duterte) மகள் சாரா டுரேற்ற-கார்பியோ (Sara Duterte-Carpio) இன்னும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கும் பாதையில் உள்ளார். அவரின் முன்னணி போட்டியாளர் கிகோ பாங்கிலினன் (Kiko Pangilinan), ரோபிரேடோவின் துணை ஜனாதிபதி ஆக போட்டியிடும் இவரின் 8.8 மில்லியன் வாக்குகளை விட அதிகமாக சாரா டுரேற்ற தற்போது 30.1 மில்லியன் வாக்குகள் பெற்றுள்ளார்.
மார்க்கோஸின் வேட்பாளர்களும் மற்றும் அவரின் சக கூட்டணி அரசியல் சக்தி வேட்பாளர்களும் செனட்டின் 12 ஆசனங்களில் கணிசமான பெரும்பான்மையைப் பெறத் தயாராக உள்ளனர். எண்ணிக்கையைக் கூறுவது மிகவும் முன்கூட்டியே கூறுவதாக இருக்கும் என்றாலும், ரோபிரேடோ வேட்பாளர்கள் ஏறக்குறைய மூன்று ஆசனங்களை ஜெயிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. திரைப்பட நட்சத்திரமும் வலதுசாரி வெகுஜனவாதியுமான ரோபின் பாடிலாவும் (Robin Padilla) பாசிசவாத ஷாக் வானொலி இதழாளர் ரஃபி டுல்ஃபொவும் (Raffy Tulfo) செனட் ஆசனங்களை உறுதியாக பெறுபவர்களில் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் சபை ஆசனங்களுக்குப் போட்டியிடும் பட்டியலிடப்பட்ட கட்சி அமைப்புகளில், ஏறக்குறைய வேறெந்த கட்சியை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக 2 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன், அதிகபட்ச வாக்குகளை ACT-CIS கட்சி (கம்யூனிச தலையீடு மற்றும் ஒத்துழைப்புடன் குற்றங்கள்-தடுப்பு மற்றும் பயங்கரவாத-தடுப்பு கட்சி) பெற்றுள்ளது. ACT-CIS கட்சியானது, டுல்ஃபொ (Tulfo) குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு பாசிசக் கட்சியாகும், இது முன்னாள் பொலிஸ் தலைவர்களால் நிறுவப்பட்டது. அது அரசாங்க நிதியுதவியுடன் கம்யூனிச-விரோத தான்தோன்றி அமைப்புகளை உருவாக்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு சீருடைகள், சிவப்பு கைப்பட்டைகள் மற்றும் குவித்த உள்ளங்கையை உயர்த்திக் காட்டும் டுரேற்றயின் பாசிச வீரவணக்கம் ஆகியவற்றுடன், வன்முறையான கம்யூனிச-எதிர்ப்பு மற்றும் கட்டாய இராணுவ பயிற்சிகளுக்கு அறிவுறுத்தும், ஹிட்லர் இளைஞர் அமைப்பு பாணியில் வேண்டுமென்றே அமைக்கப்பட்ட ஓர் அமைப்பான டுரேற்ற இளைஞர் அமைப்பு (Duterte Youth) 500,000 வாக்குகளுக்கும் அதிகமாக பெற்றிருந்தது. அதன் 2019 தேர்தலில் 350,000 வாக்குகளைப் பெற்றிருந்த அது அப்போது அதன் தேர்தல் அறிக்கையில், 'உங்களின் குற்றகரமான, பலாத்காரமான, பயங்கரவாதத் தோழர்களுடன் சேர்த்து உங்களை நாங்கள் வீதியிலேயே முடித்துக் கட்டுவோம்' என்று 'கம்யூனிஸ்ட்' இளைஞர்கள் என்று அது குற்றஞ்சாட்டுபவர்களை எச்சரித்தது.
பிலிப்பைன்ஸில் இந்த 2022 தேர்தல் முடிவானது, பிலிப்பைன்ஸ் அரசியலில் மிகவும் பிற்போக்கு சக்திகளின் தகுதியற்ற வெற்றியைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.
மார்க்கோஸ் ஜனாதிபதி பதவி என்ன எடுத்துக்காட்டுகிறது?
முதலாவதாக, புவிசார் அரசியல் அடிப்படையில் பார்த்தால், வெளியேறவிருக்கும் டுரேற்ற நிர்வாகத்தின் கொள்கைகளான பெய்ஜிங்குடன் இராஜாங்க மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் கொள்கைகளைத் தொடரும் அவரின் நோக்கத்தை மார்க்கோஸ் வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த மூலோபாயம் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் பகிரங்கமான போர் நாடும் நகர்வுகளுக்குக் குறுக்காக செல்வதுடன், மணிலாவை பெரிதும் அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளரின் புவிசார் மூலோபாய சுற்றுவட்டத்துக்கு வெளியே நிறுத்துகிறது.
2016 இல், டுரேற்ற பதவியேற்ற போது, அப்போது வெளியேறிய மூன்றாம் பெனிங்னொ அக்கினோ (Benigno Aquino III) நிர்வாகம் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை என்றழைக்கப்படும் ஓர் உடன்பாட்டை வாஷிங்டனுடன் ஏற்படுத்தி இருந்தது, அது 20 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் அந்நாட்டில் இல்லாமல் இருந்த அமெரிக்க இராணுவத் தளங்களை மீண்டும் திறம்பட கொண்டு வந்தது. தென் சீனக் கடலில் சீனாவின் பெரும்பாலான உரிமைக்கோரல்களைச் செல்லாததாக ஆக்கி, சர்வதேச கடல் சட்டத்திற்கான ஹேக் தீர்ப்பாயம் (ITLOS) கையளித்த தீர்ப்பு, சீனாவின் மீது அழுத்தத்தை அதிகரிக்க ஓர் அமெரிக்க பினாமியின் கரங்களில் கிடைத்த ஆயுதமாக இருந்தது.
டுரேற்றவின் மாறுபட்ட புவிசார் அரசியல் நோக்குநிலை, இவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்களை ஆறு ஆண்டுகளுக்கு வாஷிங்டனின் கரங்களில் இருந்து அகற்றிவிட்டிருந்தன. மார்க்கோஸ் தேர்வாகி இருப்பது வாஷிங்டனின் இந்த முன்னாள் காலனி நாடு மீதான அதன் பிடியைக் குறைக்கிறது.
இது ஆளும் வர்க்க சக்திகள் மார்க்கோஸிற்குப் பின்னால் அணிதிரண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. மார்க்கோஸ் பதவியின் போது சாரா டுரேற்றயைத் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கும் உடன்பாட்டுக்கு, அரசியல் ஜாம்பவான் முன்னாள் ஜனாதிபதி குளோரியா மக்காபாகல்-அரோயோ (Gloria Macapagal-Arroyo) இடைத்தரகராக இருந்து செயலாற்றி இருந்தார். மார்க்கோஸ் ஜனாதிபதி காட்சிக்குப் பின்னால் மிகவும் செல்வாக்கான தனியொரு அரசியல் சக்தியாக இப்போது அர்ரோயோ நிற்கிறார். அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தான் பிலிப்பைன்ஸ் சீனாவை நோக்கி அதன் உறவுகளை மறுசீரமைக்கத் தொடங்கியது.
அப்பெண்மணியின் கொடிய எதிரியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜோசப் எஸ்ட்ராடாவும் (Joseph Estrada) இதில் இணைந்துள்ளார். இராணுவ ஆதரவுடன் ஓர் அரசியலமைப்பு சதி மூலம் எஸ்ட்ராடாவை வெளியேற்றிய பின்னர் அரோயோ பதவியேற்றார். என்றாலும், அவர்கள் சீனாவை நோக்கி ஒரு பொதுவான அணிசேர்க்கையை மற்றும் மார்க்கோஸுடனான பொதுவான உறவுகளைப் பகிர்ந்து கொண்டனர், அரோயோவுக்கு அவரின் உற்சாகமான ஆதரவை எஸ்ட்ராடா பகிரங்கமாக வழங்கி உள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மையினர் வாஷிங்டனின் இழப்பில் சீனாவை நோக்கி அந்நாட்டின் நோக்குநிலையை ஆதரிக்கின்றனர் என்பதற்கு அங்கே அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் உக்ரேனில் வாஷிங்டனின் போர் முனைவைக் குறித்து எச்சரிக்கை ஒலி எழுப்பி உள்ளதுடன், சீனாவுக்கு எதிரான இதுபோன்ற நகர்வுகள் பிலிப்பைன்ஸை இரத்தக்களரியான ஓர் உலகளாவிய போரில் சிக்க வைக்கும் என்று அஞ்சுகின்றனர். வணிக சமூகத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகள், குறிப்பாக தலைநகர் மணிலாவுக்கு வெளியே இருப்பவர்கள், சீனாவுடனான உறவுகளை ஆதரிக்கின்றனர், ஏனென்றால் உலக சந்தையை அவர்கள் அணுகுவதை அதிகரிப்பதற்கான ஒரு வழிவகையாக சீனாவிலிருந்து உள்கட்டமைப்பு முதலீடு வருவதற்கான வாய்ப்பிருப்பதாக அவர்கள் பார்க்கிறார்கள்.
இரண்டாவதாக, அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளைப் பறிப்பது மற்றும் வெளிப்படையான இராணுவ சர்வாதிகாரத்தைத் திணிப்பதற்கான வாய்ப்பு உட்பட, அந்நாட்டில் அதிகரித்து வரும் சமூக அமைதியின்மையை ஒடுக்குவதற்கு ஆளும் வர்க்கத்தின் முன்னேறிய அரசியல் தயாரிப்புகளை மார்க்கோஸ் பிரதிநிதித்துவம் செய்கிறார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1972 இல், ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் சீனியர், 'கம்யூனிச' ஆபத்து என்று கூறி, வீதிகளில் ஆர்ப்பாட்டங்களும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வந்த வேலைநிறுத்த அலைகளும் கொண்ட ஓர் அளப்பரிய சமூக நெருக்கடியை ஒடுக்க அந்நாட்டின் மீது இராணுவச் சட்டத்தை திணித்தார். ஆளும் வர்க்கத்தின் பெரும் பெரும்பான்மை இதில் மார்க்கோஸை ஆதரித்தனர், அவருடைய அரசியல் எதிரிகளும் கூட இதை ஆதரித்தார்கள்.
மார்க்கோஸ் சீனியர் அவர் இராணுவ சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வேலைநிறுத்தங்களுக்கும் தடை விதித்தார். இராணுவச் சட்டத்தின் கீழ் 70,000 பேர் உத்தரவாணை இல்லாமல் கைது செய்யப்பட்டனர்; கிட்டத்தட்ட 4,000 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டனர். இந்த கொடூர சர்வாதிகார ஆட்சி 1986 வரை தொடர்ந்தது, அப்போது நடந்த ஒரு மக்கள் எழுச்சி, அத்துடன் சேர்ந்து ஒரு முயற்சிக்கப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் மார்க்கோஸ் அகற்றப்பட்டார், அது முதலாளித்துவ எதிர்க்கட்சி வேட்பாளரான கொராசோன் அக்கினோ (Corazon Aquino) ஆட்சிக்கு வர வழிவகுத்தது. மார்க்கோஸிற்கும் மற்றும் ஃபெர்டினாண்ட் ஜூனியர் உட்பட அவர் குடும்பத்தினருக்கும் அமெரிக்க அரசாங்கத்தால் ஹவாயில் நாடு கடந்து ஒரு வசதியான வாழ்க்கை வழங்கப்பட்டது, அவர் சர்வாதிகாரம் அறிவிக்கப்பட்ட அந்த நாளில் இருந்தே அமெரிக்க அரசாங்கம் அதை ஆதரித்தது.
பிலிப்பைன்ஸ் வரலாற்றில் அந்த இராணுவச் சட்டம் ஒரு 'பொற்காலமாக' இருந்தது என்பது அவர் பிரச்சாரத்தின் மையமாக இருக்கும் என்று மார்க்கோஸ் ஜூனியர் கூறி உள்ளார். இது வெறுமனே அவர் குடும்பப் பெயரைப் பயன்படுத்தி வாக்குகள் பெறுவதற்கான ஒரு பொய் முயற்சி மட்டுமல்ல, இது ஒரு வாக்குறுதியும் கூட. மார்க்கோஸ் அவர் சர்வாதிகாரத்தின் வேட்பாளராக போட்டியிடுவதாக ஆளும் வர்க்கத்திற்குக் கூறி வருகிறார்.
1986 இல் ஃபெர்டினாண்ட் மற்றும் மெல்டா மார்க்கோஸ் வெளியேற்றப்பட்ட போது, அவர்களின் ஆட்சி வெறுக்கப்பட்டது. அவர்கள் ஊழல்வாதிகள், கொடூரமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் வெகுஜன படுகொலை மற்றும் பில்லியன் டாலர்கள் திருட்டு ஆகிய குற்றங்களுக்கு ஆளாகி இருந்தார்கள். பெரும்பாலான மக்களுக்கு ஒரேயொரு ஜோடி காலணிகள் பெறுவதும் அதை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்வதும் அதிருஷ்டமாக உள்ள ஒரு நாட்டில், மெல்டா ஆயிரக் கணக்கில் காலணிகளை வைத்திருந்தார் என்பது மக்கள் நனவில் பதிந்திருந்தது.
36 ஆண்டுகளுக்குப் பின்னர், ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் அவரின் பெற்றோரின் சர்வாதிகாரம் ஒரு பொற்காலமாக இருந்தது என்ற பச்சைப் பொய்யின் அடிப்படையில் எப்படி தேர்தலை ஜெயிப்பது சாத்தியமானது?
மார்க்கோஸ் அவரின் குடும்பம் களவாடி இன்னமும் சேர்த்து வைத்திருக்கும் செல்வங்களைப் பயன்படுத்தி, ஆதரவை விலைக்கு வாங்கினார். அவர் பேரணிகளுக்குத் திரட்டப்பட்ட கூட்டங்கள் பணம் வழங்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் விலைக்கு வாங்கப்பட்டன என்பது நாடெங்கிலும் எண்ணற்ற பல அடிமட்ட விபரங்களில் இருந்து வெளிப்படையாக உள்ளது. சராசரியாக ஒரு நபருக்கு 500 பெசோ (சுமார் 10 அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டதாக பரவலாக செய்திகள் குறிப்பிடுகின்றன. வாக்குகளை விலைக்கு வாங்கும் பாரம்பரியம் பிலிப்பபைன்ஸில் வெகு காலமாக இருந்து வருகிறது, மார்க்கோஸ் இந்த நடைமுறையில் ஈடுபட்டார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இணைய ட்ரோல் பண்ணைகளைப் பயன்படுத்தும் அளவுக்கு ஆதரவை விலைக்கு வாங்குவது நீண்டிருந்தது. மார்க்கோஸ் போட்டியாளர்கள் இரகசியமான கம்யூனிஸ்டுகள் என்றும், இராணுவச் சட்டம் பிலிப்பைன்ஸில் சமூக நிலைமைகளை மேம்படுத்தியது என்றும், மார்க்கோஸ் வசமிருக்கும் அவரின் தனிப்பட்ட பெரும் செல்வவளத்தை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் மறுபங்கீடு செய்ய உத்தேசித்திருப்பதாகவும், இன்னும் பல விதத்திலும் தகவல்களைப் பரப்ப டிக்டாக் மற்றும் பேஸ்புக்கில் காணொளிகள் மற்றும் பதிவுகளை உருவாக்கி, பொய் தகவல்களைப் பரப்பும் ஒரு முறையான வலையமைப்பு மார்க்கோஸ் ஆதரித்திருந்தது.
வாக்குகளை விலைக்கு வாங்கியதும், பொய் தகவல்களை உருவாக்கியதும் மட்டுமே தேர்தல் முடிவுகளுக்குக் காரணமாக இருக்க முடியாது. பொய்த் தகவல்களைக் குறித்து, குறிப்பாக அவற்றில் பெரும்பாலானவை மிகவும் கொடுமையானவை என்ற நிலையில், அது ஏன் பரவியது என்ற கேள்வி கேட்க வேண்டியுள்ளது. அவை நம்பகமானவை என்று கருதும் அளவுக்கு அவை ஏன் பெருந்திரளான வாசகர்களைக் கண்டது?
1986 இல் கொராசோன் அக்கினோ பதவியேற்றபோது, அவர் அரசாங்கம் சமூக மாற்றங்களை நடத்தும் என்று அளப்பரிய பிரமைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இரண்டு தசாப்த கால மார்க்கோஸ் ஆட்சிக்குப் பின்னர், இறுதியில் விஷயங்கள் சிறப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாட்டின் மிகப்பெரிய நில உரிமையாளர்களில் ஒருவரான அக்கினோ மிகச் சிறிதளவே மாற்றங்களைச் செய்தார். இராணுவச் சட்ட ஆட்சியின் முன்னணி குற்றவாளிகள் பலரை அப்பெண்மணி அவர் அமைச்சரவையில் உள்ளிணைத்திருந்தார். அவரின் ஆறு ஆண்டுகால பதவியின் முடிவில், மார்க்கோஸை நாடு திரும்ப அனுமதிப்பதற்கு உகந்த நிலைமைகளை அவர் கண்டார்.
உண்மை ஆராயும் ஆணையம் அமைக்கப்படவே இல்லை; சர்வாதிகாரத்தின் தன்மை குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இப்போது அவர் கூட்டாளிகளாக இருப்பவர்களின் குற்றங்களை அக்கினோ மூடி மறைத்தார். இதன் அடிப்படையில் வரலாற்றுப் பாடநூல்கள் எழுதப்பட்டன. இராணுவச் சட்டம் எப்படி இருந்தது என்று யாருக்கும் கற்பிக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக, மக்கள் 'இனி ஒருபோதும் வேண்டாம்' என்ற சொற்றொடரை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்கள், ஆனால் அதுவும் படிப்படியாக அதன் அர்த்தத்தை இழந்தது.
நாட்டின் பெரும்பகுதி இப்போது திட்டமிட்டு விதைக்கப்பட்ட வரலாற்று அறிவின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. டுரேற்ற நிர்வாகம் வரலாறு கற்பிப்பதை உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து முற்றிலுமாக அகற்றி, அதனிடத்தில் பெரிதும் வெற்று வார்த்தைகள் நிரம்பிய சமூக ஆய்வுகளைக் (Araling Panlipunan) கொண்டு பிரதியீடு செய்தது.
வரலாறு பற்றிய இந்த கல்வியறிவின்மைதான் பொய் தகவலின் செல்வாக்கை சாத்தியமாக்குகிறது, ஆனால் அது அதன் முறையீட்டை விளக்குவதாக இல்லை.
உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களைப் போலவே, பிலிப்பைன்ஸ் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரமும் கடந்த மூன்று தசாப்தங்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. நிஜமான சம்பளம் குறைந்துள்ளது. நாட்டைப் பீடித்துள்ள அளப்பரிய சமூக நெருக்கடி பாரியளவில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதில் வெளிப்பாட்டைக் காண்கிறது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் கட்டாயத்தில் உள்ளனர். குடும்பங்கள் பிரிந்து கிடக்கின்றன. சிங்கப்பூர் அல்லது ஹாங்காங், சவுதி அரேபியா அல்லது தைவானில் வேலை செய்ய தந்தை அல்லது தாய், சகோதரி அல்லது மகனைப் பிரிந்திராத உழைக்கும் குடும்பங்கள் அங்கே வெகு குறைவாகவே இருக்கும்.
இராணுவச் சட்டத்தை அடுத்து வந்தவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த தாராளவாத ஜனநாயகம் மீதான பிரமைகளும் திரும்ப மீட்க முடியாதளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டன. நீண்ட காலமாக அக்கினோஸ் உடனும் மற்றும் மார்க்கோஸை வெளியேற்றியவர்களுடனும் தொடர்புடைய மார்க்கோஸின் முன்னணி எதிர்ப்பாளரும் லிபரல் கட்சியின் தலைவருமான லெனி ரோபிரேடோ (Leni Robredo), இத்தகைய சிதைக்கப்பட்ட பிரமைகளின் வாரிசாக இருந்தார். இவரின் சொந்த பதாகை களங்கப்பட்டு சிதைந்து போயிருப்பது இந்த பெண்மணிக்கு நன்கு தெரியும் என்பது, அவரின் சொந்த கட்சியுடனே கூட இவர் பகிரங்கமாக இணைந்திருப்பதைத் தவிர்த்து ஒரு சுயேட்சையாக போட்டியிடுவதென்ற அவர் முடிவில் வெளிப்பட்டது.
பிலிப்பைன்ஸில் உத்தியோகபூர்வ ஜனநாயகத்தின் பெரும்பான்மை சீரழிந்த தன்மையில் உள்ளது. தேர்தல்கள் பொதுப் பார்வைக்கு நடத்தப்படுகின்றன என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆடல், பாடல் வானவேடிக்கையுடன் இருக்கும் அவற்றில் பொருத்தமான அரசியல் சிந்தனை எதுவும் இல்லை. உயரடுக்கு அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக வேண்டுமென்றே தங்களைத்தாங்களே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள்.
ரோபிரேடோ இந்த பாரம்பரியத்தில் இருந்து உடைத்துக் கொள்ளவில்லை, மாறாக அதன் வரம்புகளுக்குள் வேண்டுமென்றே ஒரு பழமைவாத, வலதுசாரி பிரச்சாரத்தையும் கூட நடத்தினார். அவர் ஜனநாயகத்தை எல்லாவற்றுக்கும் மேலாக நாகரீகம் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியாக முன்வைத்ததுடன், மார்க்கோஸிற்கு எதிரான ஒரு கண்ணியமான, கனிவான எதிர்பலமாக தன்னை அவர் திறம்பட எதிர்நிறுத்தினார். ஒவ்வொரு நாளும் அவர் நூறாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட பேரணிகளை நடத்தினார், அவர்கள் இளஞ்சிவப்பு ஆடை அணிந்து அவர் பிரச்சார இசைக்கு நடனமாடினார்கள்.
மார்க்கோஸையும் மற்றும் அவர் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்தையும் எதிர்த்த காரணத்தாலேயே மில்லியன் கணக்கானவர்கள் ரோபிரேடோவுக்கு வாக்களித்தனர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நாகரீகத்தை அல்ல, மாறாக அவர்களின் வறுமைக்கு முடிவு கட்ட விரும்பிய கோடிக்கணக்கான மக்களுக்கு அப்பெண்மணி திட்டவட்டமான முறையீடு எதுவும் செய்யவில்லை.
ஓர் அமைதியான ஜனநாயக சக்தியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அதேவேளையில், ரோபிரேடோ முன்னணி தளபதிகளைச் சந்தித்ததுடன், டுரேற்றவின் கீழ் உருவாக்கப்பட்ட உள்ளூர் ஆயுதமேந்திய கம்யூனிஸ்ட் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் தேசிய செயற்படையான (NTF-ELCAC) மெக்கார்த்தியிச பாணியிலான கம்யூனிச-எதிர்ப்பு எந்திரத்தை தொடர்ந்து தக்க வைத்திருக்க அவர் ஆதரவை சூளுரைத்தார்.
மார்க்கோஸ் ஜெயிப்பதில் பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CPP) ஓர் உள்ளார்ந்த பாத்திரம் வகித்தது. அதன் அரசியல் வழியைப் பின்தொடர்ந்து, பாயன் (BAYAN) குடையின் கீழ் செயல்படும் பல்வேறு சட்ட அமைப்புகள், 2010 இல் மார்க்கோஸ் செனட் பதவிக்குப் போட்டியிட்ட போது அவருடன் இணைந்து பிரச்சாரம் செய்தன, அவை ரியல் எஸ்டேட் பில்லியனர் மேனி வில்லருக்குப் (Manny Villar) பின்னால் வேட்பாளர்களைப் பகிர்ந்து கொண்டன. CPP உற்சாகத்துடன் ரோட்ரிகோ டுரேற்றவை ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தியதுடன், அந்த பாசிச அரசியல் தலைவரை ஒரு 'சோசலிஸ்ட்' என்று கூறியது. இன்று இந்நாட்டில் அதிவலது சூழல் ஏற்பட்டுள்ளது என்றால் அது ஸ்ராலினிஸ்டுகள் வகித்த பாத்திரத்தால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.
ஸ்ராலினிஸ்டுகள் அக்கட்சி வரலாற்றிலேயே முன்னோடியில்லாத வகையில் லெனி ரோபிரேடோவுக்காக பிரச்சாரம் செய்து, அவருக்கு ஆதரவாகத் தங்களை நிறுத்திக் கொண்டார்கள். மே 1, 2022 இல், ஸ்ராலினிஸ்டுகளின் தொழிற்சங்க அமைப்பான Kilusang Mayo Uno இயக்கம் (மே ஒன்று இயக்கம்) அதன் உறுப்பினர்கள் செங்கொடி அசைக்க வேண்டாமென்றும் அல்லது NTF-ELCAC ஐ கண்டிக்க வேண்டாமென்றும் அவர்களை அறிவுறுத்தியது. அவர்கள் தங்கள் முதலாளித்துவ கூட்டாளிகளைக் காயப்படுத்த விரும்பவில்லை.
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த ஜனநாயக பாரம்பரியங்கள் ஸ்பெயின் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக உருவான அந்நாட்டின் காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களில் இருந்து கடுமையாக வென்றெடுக்கப்பட்டன.
பிலிப்பைன்ஸ் மக்களிடையே நீடித்து வரும் ஜனநாயக மரபு, பேச்சு சுதந்திரத்திற்கான உணர்ச்சிமிக்க அர்ப்பணிப்பையும், சக்தி வாய்ந்தவர்களைக் கேலி செய்வதற்கான துணிச்சலான விருப்பத்தையும் மற்றும், எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக சமத்துவத்தின் தேவை குறித்து மிகவும் வளர்ச்சி அடைந்துள்ள நம்பிக்கையையும் உள்ளடக்கி உள்ளது.
ஆனால் பிலிப்பைன்ஸின் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற அரசியலானது, நாட்டில் தங்கள் உயரடுக்கு பங்காளிகளின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான தேடலில் அமெரிக்காவால் அமைக்கப்பட்டவை ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகள், அந்நாட்டின் சட்ட நெறிமுறைக்குள் இராணுவச் சட்டத்தை ஒரு நிர்வாக அதிகாரமாக எழுதி, நீதி விசாரணைக் குழு முன்னிலையிலான விசாரணை முறையை அகற்றினார்கள். சம்பிரதாயமான ஜனநாயகம் என்பது உயரடுக்கு ஆட்சியின் எந்திரமே அல்லாமல் வேறொன்றுமில்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
ஸ்ராலினிஸ்டுகள் பிலிப்பைன்ஸ் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப எந்த முயற்சியும் எடுக்கவில்லை; அவர்கள் தங்கள் முதலாளித்துவ கூட்டாளிகளின் சம்பிரதாயமான ஜனநாயக ஆட்சிக்கு முட்டு கொடுக்க முயல்கின்றனர்.
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸின் வெற்றி ஓர் உலகளாவிய போக்கின் கூர்மையான வெளிப்பாடாகும். மார்க்கோஸுக்கு உலகம் முழுவதும் அரசியல் சமதரப்பினர் உள்ளனர்: டொனால்ட் ட்ரம்ப், ஜயர் போல்சொனாரோ, மரின் லு பென், நரேந்திர மோடி ஆகியோர். இவர்களின் உயர்வு, சமூக சமத்துவமின்மையால் முறையான ஜனநாயகம் வெறுமையாகிவிட்டது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இப்போது பெருந்தொற்றால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள பெரும் நெருக்கடியால் உந்தப்பட்டு, சமூக அமைதியின்மையின் தீவிரமடைந்து வரும் வளர்ச்சியை எதிர்கொண்டுள்ள, ஆளும் வர்க்கம் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்பி வருகிறது.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, முதலாளித்துவத்தின் பாரம்பரிய தாராளவாதக் கட்சிகளிடம் வழங்குவதற்கு ஒன்றும் இருக்கவில்லை, எந்த விஷயத்திலும் முற்போக்கான சமூக நடவடிக்கைகள் இல்லை. இந்த தசாப்தங்களில் சமூக நெருக்கடி தீவிரமடைந்ததால், அவை இன்னும் கூடுதலாக வலதுக்கு சாய்ந்தன. ஆழ்ந்த சமூக நெருக்கடியின் பின்னணியில், போலி-இடதுகளின் உதவி மற்றும் ஆதரவுடன், முதலாளித்துவ தாராளவாதத்தின் திட்டவட்டமான திவால்நிலைமை, ஜனரஞ்சகப் பொய்களை அடிப்படையாகக் கொண்ட அதிவலது சக்திகளின் எழுச்சிக்கு உதவுகிறது.
பிலிப்பைன்ஸில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவைக் கட்டியெழுப்புவோம்! சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க கீழே கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பி அனுப்புங்கள்!