மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இன்று, மே 18 அன்று, இலங்கையின் பயங்கரமான, 26 ஆண்டுகால இனவாத உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முள்ளிவாய்க்கால் படுகொலையின் 13வது ஆண்டு நிறைவை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நினைவு கூர்கின்றனர்.
மே 18, 2009 அன்று, இலங்கை இராணுவம் இறுதியாக முள்ளிவாய்க்காலைச் சுற்றி 6 கிலோமீட்டர் சுற்றளவில் 400,000 தமிழ் பொதுமக்களையும் தப்பிப்பிழைத்த தமிழீழ விடுதலைப் புலிகளையும் (LTTE) சுற்றி வளைத்தது. இலங்கை அரசாங்கம் ஆரம்பத்தில் அப்பகுதியை 'சுட தடைசெய்யப்பட்ட பகுதி' (“no fire zone”) என அறிவித்து, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க அங்கு செல்லுமாறு கூறியது. எனினும், முள்ளிவாய்க்காலில் சிக்கியிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது இராணுவம் பாரிய பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது.
இதன்போது 40,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 300,000 பேர் மிகமோசமான தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த முகாம்களில், 12,000க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தனித்தனி, இரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற விவரம் இன்றுவரை தெரியவில்லை. தற்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய இராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இந்த கொடூரமான படுகொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று, இராஜபக்ஷ உணவு மற்றும் எரிபொருளை வாங்கமுடியாதளவு விலையேற்றி மக்களை பட்டினியில் தள்ளும் நிலையில், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என வேறுபாடின்றி அவருக்கு எதிராக பெருமளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் எழுந்துள்ளனர். 'கோத்தாபய வெளியேற வேண்டும்' என அவர்கள் கோருகின்றனர். பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களின் தீவிரத்திற்கு மத்தியில், கோத்தாபய இராஜபக்ஷ தனது பிரதம மந்திரியும் சகோதரனுமான மஹிந்த இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.
வெகுஜனங்களின் கோபத்தைத் தணிக்க, இராஜபக்ஷ கும்பலானது பாரிய படுகொலைகளில் அதற்கிருந்த அனுபவத்தில் முழுமையாக தங்கயிருப்பதற்கான அதன் திட்டங்களை சமிக்ஞை செய்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்னர், மஹிந்த இராஜபக்ஷ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நிறுத்துமாறு தொழிலாளர்களை கோரி “ஒரு வரலாற்று முன்னோக்கின் அடிப்படையில் அதன் அபாயங்களை புரிதுகொள்ளுமாறு” கேட்டார். இப்போது, ஆர்ப்பாட்டங்கள் மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கிய பின்னர், கோத்தபாய இராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை விதித்து, கலவரக்காரர்கள் என்று அவர்கள் அறிவிக்கும் எவரையும் சுடுவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் அளித்துள்ளார்.
இராஜபக்ஷவை தூக்கியெறிவதற்கான ஒரு வெகுஜன இயக்கத்தின் தோற்றம், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஒரு அவசியமான சமகால முக்கியத்துவத்தை வழங்குகிறது. இலங்கையில் சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு இந்த நினைவேந்தல் முன்வைக்கும் கேள்வி: இத்தகைய கொடூரமான இரத்தக்களரியின் புதிய வெடிப்பை எவ்வாறு தடுக்க முடியும்? என்பதாகும்.
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அகற்றுவற்கும் அதன் அணிதிரட்டலுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. கீழிருந்து வரும் அச்சுறுத்தலைத் தடுக்க இலங்கை முதலாளித்துவம் எப்பொழுதும் இது தொழிலாளர்களை சகோதரப் படுகொலைகளில் மூழ்கடிப்பதை அர்த்தப்படுத்தினாலும் கூட, சிங்கள மக்களையும் தமிழ் மக்களையும் பிரிக்கும் ஒரு மூலோபாயத்தில் தங்கியிருந்தது. எதிர்ப்பாளர்களை தாக்க குண்டர்களை அணிதிரட்டி வரும் இராஜபக்ஷ ஆட்சியுடன் தொடர்புடைய பெருநிறுவன தொழிற்சங்கங்களுக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் அடக்குமுறைக்கு எதிரான பாதுகாப்பை ஒழுங்கமைப்பதற்கும் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை அமைக்க அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பின் தெருக்களில் இருந்து எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்காக தனது குண்டர்களை அணிதிரட்ட இராஜபக்ஷ மேற்கொண்ட ஒரு முயற்சியை தொழிலாள வர்க்கம் ஏற்கனவே தோற்கடித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் பெருமளவிலான தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலி போராளிகளின் மரணங்கள், இராஜபக்ஷ மற்றும் முழு ஆளும் வர்க்கத்தின் இரக்கமற்ற தன்மை பற்றி முழு தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு மறக்க முடியாத எச்சரிக்கையாக உள்ளது.
இப்போது இராஜபக்ஷவின் இரத்தக்கறை படிந்த கரங்களுக்குள் குதித்துக்கொண்டிருக்கும் எஞ்சியிருக்கும் தமிழ் தேசியவாதிகளின் மீது பதிலளிக்க முடியாத குற்றச்சாட்டாகவும் அவை இருக்கின்றன. பிரித்தானிய ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் கடந்த மாதம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் முதலாவது ஒன்றிணைந்த போராட்டத்தினால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் பல்கலைக்கழகத்தை மூடுவதன் மூலம் பதிலளித்தனர். கடந்த மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) தலைவர் எம்.ஏ.சுமந்திரன், மஹிந்த இராஜபக்ஷவிடம் பேசியதாகவும், போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தை எவ்வாறு மாற்றுவது என தான் ஆலோசனை வழங்கியதாகவும் பெருமையாகக் கூறினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியவாதிகள், இந்த துன்பியலான ஆண்டு நிகழ்வில் பேசி முதலைக் கண்ணீர் வடிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்னர் அதே இடத்தில் நின்று இலங்கை அரசாங்கத்தின் போருக்கு முழு ஆதரவளித்த அமெரிக்கா இந்தியா போன்ற சர்வதேச போர் குற்றவாளிகளிடம், இலங்கை போர்க்குற்றங்களுக்கு நீதி பெற்றுத்தருமாறு அழைப்பு விடுவார்கள். கொழும்பில் ஒரு சீனசார்பு ஆட்சி இருந்தால், அந்த கோரிக்கை மிக ஆக்ரோஷமாக இருக்கும். அடுத்து சிங்களத் தொழிலாளர்கள் இனவாதிகள், அவர்கள் தமிழ் மக்களுக்கு விரோதமானவர்கள் என்று பொய் கூறி, வெட்கமின்றி சிங்கள மக்களுக்கு விரோதமான கருத்துக்களை திணிப்பார்கள். இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் தமிழ் மக்கள் நீதி கேட்க நம்பவேண்டும் என்பார்கள்.
தமிழ் தேசியவாதிகள் இந்தியாவின் ஆளும் இந்து-பேரினவாத பாரதீய ஜனதா கட்சியின் இலங்கைக் கிளையையும் அதனுடன் தொடர்புடைய வகுப்புவாத அமைப்பான சிவசேனாவையும் கட்டியெழுப்பவும், இராஜபக்ஷவுடன் இந்திய முதலாளித்துவத்தின் பொருளாதார ஒப்பந்தங்களுக்கும் உதவுகின்றனர். இத்தகைய ஒப்பந்தங்களால், தமிழ் தேசியவாதக் கட்சிகளிலும் அதைச் சுற்றியும் உள்ள கணிசமான அடுக்குகளிலும் உள்ளோர் தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்டுகின்றனர், எந்த வேலைப்பாதுகாப்பும் இன்றி தொழிலாளர்களை அடிமட்ட ஊதியத்தில் சுரண்டும் வணிகங்களை நடத்துகின்றனர். அவர்களின் இனவாதப் பேச்சு, தொழிலாளர்களை பிளவுபடுத்தவும், அவர்களின் இலாபங்களையும் சலுகைகளையும் கீழே இருந்து எழும் கோபத்திலிருந்து பாதுகாக்கவும் நனவான முறையில் செய்யப்படுகிறது.
இலங்கைத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் தானியங்கள் மற்றும் எரிபொருளின் உலகளாவிய விலை உயர்வு மற்றும் பட்டினி என்பவை முதலாளித்துவத்தின் திவால்நிலையில் வேரூன்றியுள்ளது இதை சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எதிர்க்க முடியும். COVID-19 தொற்றுநோய்களின் போது முதலீட்டாளர் வர்க்கத்தை செல்வந்தர்களாக்க மத்திய வங்கிகள் பெருமளவில் பணத்தை அச்சிடுவது உலகெங்கிலும் உள்ள நாணயங்களின் மதிப்பைக் குறைத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ சக்திகளின் போர் உந்துதலின் விளைவாக, எரிசக்தி மற்றும் தானிய ஏற்றுமதிகள் வெட்டப்பட்டதோடு, இது இலங்கையில் உள்ள பெருமளவிலான தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்க முடியாததாக ஆக்குகிறது.
இலங்கை தொழிலாளர்களின் புதுப்பிக்கப்பட்ட கிளர்ச்சிப் போராட்டம், பெரும் செல்வந்தர்களின் அபகரிப்பு மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான சோசலிசத்திற்கான போராட்டத்தை நிகழ்ச்சிநிரலில் முன்வைக்கிறது.
1983 இல் இலங்கையில் இனவாதப் போர் வெடிப்பதற்கு முந்தைய தசாப்தத்தில், தமிழ் முதலாளித்துவ தேசியவாதிகள் சோசலிசத்தை கட்டியெழுப்புவதாக உறுதியளித்தனர், ஆனால் அதை அடைய முதலில் தனித் தமிழ் அரசை கட்டியெழுப்ப வேண்டும் என்றனர். அவர்களது இந்திய ஸ்ராலினிச கூட்டாளிகளையும், இறுதியில் சோவியத் அதிகாரத்துவத்தையும் எதிரொலித்து, அவர்கள் ஸ்ராலினின் 'தனியொரு நாட்டில் சோசலிசம்' போன்ற ஒன்றைக் கட்டமைக்கும் மாயத்தோற்றத்துடன் தொழிலாளர்களை ஏமாற்றினர்.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் மரணத்துடன் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போர், இலங்கையில் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்களை எதிர்கொள்ளும் போது, இராஜபக்ஷவுடனான தமிழ் தேசியவாத குழுக்களின் கூட்டணியைப் போலவே, இந்த தேசியவாத முன்னோக்கின் திவால்நிலைக்கும் சாட்சியமளிக்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) தேசியவாதம் மற்றும் ஸ்ராலினிசத்திற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) சமரசமற்ற எதிர்ப்பின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை போராட்டத்தில் ஐக்கியப்படுத்த முயல்கிறது. நான்காம் அகிலத்தை ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாதக் கட்சிகளுக்குள் கலைக்க வாதிட்டு, 1953ல் ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்ட மிஷேல் பப்லோ மற்றும் ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான போக்கை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எதிர்த்தது. இலங்கையின் இனவாதப் போரின் விதைகள், லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) பப்லோவாத்ததிற்கு அடிபணிந்து தொழிலாளர்களுக்கு அது செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பினாலேயே விதைக்கப்பட்டது.
லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்த இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியை தைரியமாக எதிர்த்தனர். அவர்கள் இந்தியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் ஒரு சோசலிசப் புரட்சியை வழிநடத்த இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை (BLPI) கட்டமைக்கப் போராடினர். இந்தியா முழுவதும் வேலைநிறுத்தங்களும் கிளர்ச்சிகளும் பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தை 1947 இல் வீழ்த்தியது, அங்கு ஒரு சோசலிசப் புரட்சியை கருச்சிதைவு செய்வதற்காக இந்திய துணைக் கண்டத்தில் இருந்து துண்டாடப்பட்ட முதலாளித்துவ அரசுகளுக்கு இலண்டன் வழங்கிய போலி சுதந்திரத்தை BLPI கண்டனம் செய்தது.
ட்ரொட்ஸ்கிச இயக்கம் இலங்கையில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மத பின்னணியில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் பரந்த ஆதரவைக் கொண்டிருந்தது. அது ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் ஆதரிக்கப்பட்ட போருக்குப் பிந்தைய தேசிய-அரசு அமைப்பை எதிர்த்தது. இலங்கையில், ஒரு மில்லியன் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையைப் பறிக்கும், புதிதாக நிறுவப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இனவாத முடிவை இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியும், லங்கா சம சமாஜக் கட்சியும் எதிர்த்தன.
பப்லோவாதிகள் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியை கலைப்பதில் வெற்றி பெற்ற பின்னர், இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி லங்கா சம சமாஜக் கட்சியினுள் கலைக்கப்பட்டதோடு 1964 இல், திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்து, பௌத்தத்தை ஒரு அரசு மதமாக உள்ளடக்கிய அரசியலமைப்பிற்கு இணங்கியது. இந்தக் காட்டிக்கொடுப்பும், தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் அது ஏற்படுத்திய கோபமும், குழப்பமும் தமிழ் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு முன்னெப்போதையும் விட பரந்த ஆதரவைப் பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL), LSSP இன் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு எதிரான மார்க்சிச சர்வதேசிய எதிர்ப்பாக உருவானது. 1968 இல் ஸ்தாபிக்கப்பட்ட, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், LSSP இன் தொழிலாள வர்க்க காட்டிக்கொடுப்பு கொள்கையை, தேசிய பேரினவாதம் மற்றும் பப்லோவாதத்திற்கு LSSP சரணடைந்ததன் விளைவு என நிராகரித்தது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் தோற்றம், சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் அரசியல் முன்னோக்கின் சக்திவாய்ந்த நிரூபணமாகும்.
இலங்கையின் இனவாதப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், போரின் நீடித்த சமூக துன்பங்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். 100,000 க்கும் மேற்பட்ட போர் விதவைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல போராடுகிறார்கள். போரில் பிள்ளைகளை இழந்த வயதான பெற்றோர்கள் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவியும் பாதுகாப்பும் தேவைப்படுகிறது. இன்னும் பலர் அங்கங்களை இழந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், மேலும் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டு இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னரான கடந்த தசாப்தத்தின் அனுபவங்கள், போர்க் குற்றங்கள் அவற்றை நடத்திய இலங்கை ஆளும் வர்க்கத்தினாலோ அல்லது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளாலோ தண்டிக்கப்படப்போவதில்லை என்பது முன்னரையும் விட தெளிவாகிவிட்டது. போர்குற்றங்களை தண்டிப்பதும், போரின் அழிவுகரமான தாக்கத்தை நிவர்த்தி செய்வதும், ஆசியாவின் ஐக்கிய சோசலிச அரசுகளின் பாகமாக, சிறிலங்கா, தமிழீழ ஐக்கிய சோசலிச அரசுகளைக் கட்டியெழுப்ப போராடும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் எழுச்சி பெறும் புரட்சிகர இயக்கத்தின் பணிகளாகும்.
மேலும் படிக்க
- இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் குண்டர்கள் மற்றும் அரச படைகளின் தாக்குதல்களில் இருந்து உயிர்களையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்குங்கள்!
- கண்டவுடன் சுடும் உத்தரவுடன் இலங்கை ஜனாதிபதி இராணுவத்தை திரட்டுகிறார்
- தமிழ் தேசியவாதிகள் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக இலங்கை போர் குறித்த ஏகாதிபத்திய-ஆதரவு பொய்களை விதைக்கின்றனர்