மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
விக்கிலீக்ஸ் ஸ்தாபகர், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர்க்குற்றங்கள், சூழ்ச்சிகள், மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியதற்காக உளவுச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது அதைவிட மோசமான தண்டனையை எதிர்கொள்கிறார்.
அவரை நாடு கடத்துவது தொடர்பான முடிவு பிரிட்டனின் உள்துறை செயலர் பிரிதி பட்டேலின் கையில் உள்ளது. மே 18 முதல் மே 31 வரையிலான தேதிகளில் எந்த நேரத்திலும் அவர் அந்த அறிவிப்பை வெளியிடலாம்.
கடந்த ஆண்டு பிரிட்டிஷ் நீதி நீதித்துறையின் தொடர்ச்சியான தீர்ப்புகளால் — அமெரிக்காவுடன் அடிமைத்தனமாக இணைந்த அரசாங்கத்தின் உறுப்பினரான, வன்முறை சர்வாதிகார அரசியல்வாதி பட்டேலின் தயவில்— அசான்ஜ் இந்த ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 2021 இல், நீதிபதி வனேசா பரைட்ஸரின் கவனமாகக் கணக்கிடப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கப்பட்டது, இது ஜனவரியில் அசான்ஜின் நாடுகடத்தலைத் தடுத்தது, அது அவரது மனநலத்தின் மீதான அடக்குமுறை தாக்கத்தின் அடிப்படையில் மட்டுமே, மற்ற அனைத்து தற்காப்பு வாதங்களும் நிராகரிக்கப்பட்டன. 2021 டிசம்பரில், விக்கிலீக்ஸ் நிறுவனரை அமெரிக்காவிடம் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோது, இந்த மேல்முறையீடு உறுதி செய்யப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அசான்ஜின் சட்டக் குழுவின் முயற்சி உச்ச நீதிமன்றத்தால் மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு ஏப்ரல் மாதம் பட்டேலுக்கு மாற்றப்பட்டது.
முழு நேரமும், 50 வயதான ஊடகவியலாளரும் மற்றும் தந்தையுமான அசான்ஜ் இலண்டனின் உச்சபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் உயர்நீதிமன்ற விசாரணையின் போது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
அசான்ஜின் சட்டக் குழு, பாரைட்சரின் ஆரம்ப முடிவை எதிர்த்து தங்கள் சொந்த மேல்முறையீட்டைத் தொடங்குவதன் மூலம், அசான்ஜை நாடுகடத்துவதற்கான உள்துறை செயலரின் தவிர்க்க முடியாத முடிவுக்குப் பதிலளிக்கும், என்றாலும் இந்த நடைமுறையின் பெரும்பகுதி அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கு சாதகமாக இருப்பது தெரிகிறது. இந்த மேல்முறையீடு வெற்றியடைந்தால், அசான்ஜின் வழக்கறிஞர்கள் இறுதியாக அசான்ஜின் துன்புறுத்தலின் மையத்தில் இருக்கும் தவறான பிரதிநிதித்துவம், அரசியல் உந்துதல், முறைகேடு மற்றும் ஜனநாயக உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
அத்தகைய முடிவு சாத்தியமாகும். விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பெல்மார்ஷ் சிறையில் அடைத்து வைத்திருக்கும் அதேவேளை, அவருக்கு நியாயமான விசாரணையை வழங்குவது போல் தொடர்ந்து நடிக்க பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கும். ஆனால் எதுவுமே நிச்சயமில்லை என்பதை சமீபத்திய வரலாறு காட்டுகிறது. அவரது வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் செய்தது போல் உயர்நீதிமன்றமும் மறுக்கலாம். அது நடந்தால், இங்கிலாந்து சட்டச் செயல்பாட்டில் அசான்ஜுக்கு வேறு எந்த வழியும் இல்லை, மேலும் அவர் நாடு கடத்தப்படுவதற்கு எதுவும் தடையாக இருக்காது.
அசான்ஜ் ஒரு ஆஸ்திரேலிய குடிமகன் என்றாலும், அவரது விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
அசான்ஜின் வழக்குரைஞர்களால் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீடு எப்படி தொடரும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, அல்லது பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய இங்கிலாந்து இந்த வழக்கில் அதன் அதிகாரத்தை அங்கீகரிக்கும் சாத்தியக்கூறுகள் கூட இல்லை, அல்லது மேல்முறையீடு ஒப்புக்கொள்ளப்பட்டாலும், இடைக்காலமாக அசான்ஜ் அமெரிக்காவுக்கு மாற்றப்படுவதை தடுக்கும்.
ஆபத்தை மிகைப்படுத்த முடியாது. அசான்ஜின் உடல்நிலை குறித்த கடந்த இரண்டு வருடகால சட்டப் போராட்டங்களில், அமெரிக்க சிறை அமைப்பில் அவர் எதிர்கொள்ளவிருக்கும் நிலைமைகள் ஒருபுறம் இருக்க, அவர் நாடுகடத்தப்படுவதற்கான உண்மையே அவரை தற்கொலைக்குத் தூண்டும் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டது.
நரம்பியல் மனநலப் பேராசிரியர் மைக்கேல் கோபல்மேன் (Michael Kopelman) செப்டம்பர் 2020 இல் நடந்த முதல் ஒப்படைப்பு விசாரணையில் ‘தற்கொலைக்கான மிக அதிக ஆபத்து’ இருப்பதாகக் கூறினார், மேலும் அவரது கருத்துப்படி, “ஒப்படைப்பின் உடனடி நிலை மற்றும்/அல்லது உண்மையான ஒப்படைப்பு அந்த முயற்சியைத் தூண்டும்.”
அமெரிக்க அரசாங்கத்தின் பிடியில் சிக்கியவுடன், அவரை தனிமைப்படுத்தவும், மனரீதியாக அழிக்கவும் மற்றும் அவரைத் தண்டிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு விசாரணை மற்றும் தடுப்புக் காலத்தை அசான்ஜ் எதிர்கொள்வார்.
அவர் ஒரு பெரும் நடுவர் மன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார், அமெரிக்க குற்றவியல் மற்றும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர் ராபர்ட் பொய்ல் (Robert Boyle) அசான்ஜின் ஒப்படைப்பு விசாரணையில் இது “குற்றவியல் விசாரணைகளின் தொழில்நுட்ப மற்றும் ஆதார விதிகளை கடைப்பிடிக்காமல்” செயல்படுவதாகவும் “வழக்குமுறை துஷ்பிரயோகத்திற்கு வளமான அடித்தளத்தை” வழங்குவதாகவும் விவரித்தார். மேலும், மனித உரிமைகள் ஆராய்ச்சியாளர் பிரிட்ஜெட் பிரின்ஸ் (Bridget Prince) இன் கருத்துப்படி, இந்த நடுவர் குழு “இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறைகளில் பணிபுரியும் அரசாங்க ஒப்பந்தக்காரர்களை பெரியளவில் கொண்ட நிறுவனங்கள்” உள்ள பகுதியிலிருந்து பெறப்பட்டதாகும்.
வேர்ஜீனியா பாதுகாப்பு வழக்குரைஞர் யான்சி எல்லிஸ் (Yancey Ellis) மற்றும் தண்டனை நிபுணர் ஜோயல் சிக்லர் (Joel Sickler) ஆகியோரின் நேரடி அனுபவத்தின்படி, அந்த நேரத்தில், போதிய மருத்துவ பராமரிப்பு மற்றும் அவரது நிலைமையை சரிசெய்வதற்கான வாய்ப்பு இல்லாத வகையில், அவர் அலெக்ஸாண்ட்ரியா தடுப்பு மையத்தில் ‘தனிமை சிறையில்’ அடைக்கப்படுவார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஒரு அமெரிக்க மத்திய சிறையான ADX Florence க்கு அவர் அனுப்பப்பட்டால், அந்த சிறையின் ஒரு முன்னாள் காவலாளியின் கூற்றுப்படி அவர் “மரணத்தை விட மோசமான விதி”க்கு ஆளாக நேரிடும், கிட்டத்தட்ட வெளியுலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒரு நிலையை அவர் எதிர்கொள்வார்.
அசான்ஜின் சட்டக் குழு பட்டேலுக்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்கும் உரிமைக்கான கடைசி நாளைக் குறிப்பதான இன்று (17 மே 2022) மாலை இலண்டனில் உள்ள உள்துறை அலுவலகக் கட்டிடத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில், பல நூறு பேர் ஒன்றுதிரண்டு அசான்ஜை நாடுகடத்த மறுக்குமாறு கோரினர். அப்போது, விக்கிலீக்ஸ் தலைமை ஆசிரியர் கிறிஸ்டின் ஹ்ராஃப்ன்சன், அசான்ஜின் மனைவி ஸ்டெலா, தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரிச்சார்ட் பர்கன், ஜூலியன் அசான்ஜை பாதுகாக்கும் குழுவின் பிரதிநிதி எம்மி பட்லின், மற்றும் அசான்ஜை நாடுகடத்தாதே (Don’t Extradite Assange – DEA) குழு ஒழுங்கமைப்பாளர் ஜோன் ரீஸ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
ஸ்டெலா அசான்ஜ் ஈராக்கில் நடந்த ஈஷாக்கி படுகொலையின் உதாரணத்தை எடுத்துக்காட்டினார் —இதில் நான்கு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 11 பேர் அமெரிக்கத் துருப்புக்களால் கைவிலங்கிடப்பட்டு தூக்கிலிடப்பட்டனர்— அதாவது, அசான்ஜ் தண்டிக்கப்படுவது தொடர்பான வெளியீடுகள் “சுருக்கமான வெளியீடுகள் மட்டுமல்ல. இவை பல்லாயிரக்கணக்கான மனித உயிரிழப்புகள்… மனித சடலங்களின் குவியல்கள் பற்றியது. அதனால்தான் நாங்கள் அதைப் பற்றி பேசுகிறோம்” என்ற புள்ளியை குறித்துக் காட்டினார்.
ஆளும் வர்க்கம் மூடிமறைக்கவும் நிரந்தரமாக்கவும் நினைக்கும் இந்தக் குற்றங்களின் மகத்தான தன்மைதான் அசான்ஜை இரக்கமற்ற வகையில் வேட்டையாடுவதற்கான உந்துதலாக உள்ளது. பிரிட்டிஷ் அரசிடமோ அல்லது நீதித்துறையிடமோ எதையும் நம்ப முடியாது என்பதை இதுவரை அசான்ஜ் நடத்தப்பட்ட விதம் நிரூபித்துள்ளது. அவர்கள் அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடுகடத்த உத்தரவிடுவதற்கான விளிம்பில் உள்ளனர். ‘இடது’ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் அடங்கிய ஒரு குழுவால் அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கும் வாய்ப்பு தகர்ந்துவிட்டது.
பெப்ரவரி 2020 இல் அசான்ஜை நாடுகடத்தாதே குழுவின் உத்தியோகபூர்வ பிரச்சாரக் கூட்டத்தில், “வழக்கு உச்ச நீதிமன்றங்களுக்கு மேல்நோக்கி நகரும் நிலையில், சில நீதிபதிகள் கண்ணியமாக இருக்க தயாராக இருப்பார்கள் என நம்புகிறோம்” என்று தாரிக் அலி பார்வையாளர்களிடம் கூறினார். ஆகஸ்ட் 2021 இல் ரீஸ் அதே வரியை திருப்பிக் கூறினார், அதாவது அசான்ஜின் “இறுதியாக வழக்கு ஒரு தீவிர நீதிமன்றத்தை அடைந்துள்ளது” என உயர் நீதிமன்றத்தில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது பற்றி கூறினார். அதே பேரணியில், அசான்ஜின் விஷயத்தில் ஒரு முன்னணி ஆதரவாளராகக் கருதப்படும் தொழிற் கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின், நீதித்துறை மீதான தனது சொந்த ‘நம்பிக்கையை’ வெளிப்படுத்தினார்.
அவர்களுக்கு இடையே, கோர்பினும் DEA குழுவும், அமெரிக்க ஜனாதிபதிகள் ட்ரம்ப் மற்றும் பைடென், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் இப்போது பட்டேல் உட்பட, அசான்ஜின் துன்புறுத்தலுக்கு முக்கிய பொறுப்பாளிகளான அரசியல்வாதிகளின் முழு வரம்பையும் தலையிட்டு அவரை விடுவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த முறையீடுகளின் அரசியல் தாக்கம், பரந்த மக்கள் மத்தியில் ஒரு மக்கள் இயக்கத்தை கட்டமைக்க தேவையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அசான்ஜின் ஆதரவாளர்களை திசைதிருப்புவதாகும்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவீடன் —இது அசான்ஜை கைது செய்வதற்கான சாக்குப்போக்காக அவரை ஒரு மோசடியான பாலியல் வன்கொடுமை விசாரணைக்கு உட்படுத்த திட்டமிட்டது— மற்றும் அவர்களின் அனைத்து முக்கிய கட்சிகளும் மற்றும் பெருநிறுவன ஊடகங்களும் அசான்ஜை மௌனமாக்குவதற்கும், தனிமைப்படுத்துவதற்கும் ஒரு தசாப்த காலமாக இடையறாது உந்தப்பட்டு வருகின்றன.
எனவே, விக்கிலீக்ஸ் ஸ்தாபகரை பாதுகாக்க உறுதியான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு இந்த தடைகள் கடக்கப்பட வேண்டும். உலகம் முழுவதுமாக அசான்ஜூக்கான மக்கள் ஆதரவு தீவிரமாக திரட்டப்பட வேண்டும். அவர் சிறையில் அடைக்கப்படாத அல்லது அவர் பேசிக் கொண்டிருந்த காலத்தை அறியாத இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றி பயிற்றுவிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அசான்ஜின் விடுதலைக்காக ஒரு வெற்றிகரமான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.
***
உலக சோசலிச வலைத் தளம், உள்துறை அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த எதிர்ப்பாளர்களுடன் பேசியது.
ஜூவான் என்பவர், “ஜூலியன் அசான்ஜ் நாடுகடத்தப்படுவதை எதிர்க்க நான் இங்கு வந்துள்ளேன், ஏனென்றால் உலகில் உள்ள மக்களுக்கு சுதந்திரத்திற்கான உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன், மேலும் மேற்கத்திய உலகம் செய்த குற்றங்களைத்தானே ஜூலியன் அசான்ஜ் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” என விளக்கினார்.
“அவர் நாடுகடத்தப்பட்டால் அது மிகவும் மோசமான செய்தியாக இருக்கும். இது ஜூலியன் அசான்ஜை பற்றியது மட்டுமல்ல. உலகம் முழுவதுக்கும் அவர்கள் அனுப்பும் செய்தியைப் பற்றியது, இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் புகாரளிக்க முடியாது. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பை நாம் இப்போது வெளிப்படையாக பார்க்கும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக நாம் மிகவும் எளிதாக பேச முடியும், அதேவேளை, பாலஸ்தீனத்திற்கு எதிராகவுள்ள இஸ்ரேலைப் பற்றி ஊடகங்கள் அதிகம் பேசாததை நாம் காண்கிறோம் – எனவே இவற்றிற்கு இடையேயான வேறுபாட்டை நீங்கள் காணலாம்” என்று கூறினார்.
மேலும் அவர், “சில போர்களை நாம் எதிர்க்க முடியும், ஆனால் மற்றவற்றை எதிர்க்க முடியாது. உதாரணமாக, ஈராக்கில் பேரழிவுகர ஆயுதங்கள் உள்ளன என்ற பொய்யான கருத்துடன் அதன் மீது படையெடுக்கப்பட்டதைக் கூறலாம். மக்கள் எதிர்த்தனர் என்றாலும் அவர்கள் இன்னும் உள்ளே சென்றனர். மேலும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும், அவர்கள் மேலும் முன்னேறினர். நமது அரசுகள் தங்கள் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கின்றன என்பதையே இது காட்டுகிறது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என்றும் கூறினார்.
ஃபஹிம் என்பவர், “நான் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன், ஜூலியன் அசான்ஜ் உண்மையைத்தான் கூறினார் என்பதால், அவரது சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க நான் இங்கு வந்துள்ளேன். அதாவது, ஆப்கானிஸ்தானில் நடந்த குற்றங்கள் பற்றிய உண்மையை அவர் வெளிப்படுத்தினார். எத்தனையோ குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு நான் சாட்சியாக இருக்கிறேன் – அவர் என்ன பேசுகிறார் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையை ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தினார். அவர் எதையும் உருவாக்கவில்லை. இந்த ஆவணங்களை எழுதுவது அமெரிக்க சிப்பாய்களும் அதிகாரிகளும் தான்” என்று நமது நிரூபரிடம் கூறினார்.
மேலும், “[இரகசிய செய்தி வெளியீட்டாளர்களான] செல்சியா மானிங் மற்றும் எட்வர்ட் ஸ்னோவ்டென் போன்றவர்களும் மற்றும் பலரும் தாம் பார்த்தைக் கண்டு வயிறு கலங்கிப் போயினர். இந்தக் குற்றங்களை அவர்களால் மறைக்க முடியவில்லை. மேலும் அந்த குற்றங்கள் தான் என்ன? குழந்தைகளைக் கொல்வது, எங்கள் மக்களைக் கொல்வது. சட்டவிரோதமான போர்களை தொடர்வது. பிரவுண் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, அரசாங்கம் 8 டிரில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்க வரி செலுத்துவோரிடமிருந்து கொள்ளையடித்து, அதை ஆயுதங்களுக்கும் படைகளுக்கும் செலவிட்டது, மேலும் அவர்கள் எங்கள் குழந்தைகளை கொன்று எங்கள் நாட்டை அழித்து கொடூரமான ஆட்சியை திணித்தனர்” என்று கூறினார்.
மேலும் அவர், “ஜூலியன் அசான்ஜின் விடுதலையை ஆதரிப்பதற்கு மட்டுமல்லாமல், இந்த குற்றகரமான, சட்டவிரோதப் போர்களில் என்ன நடந்தது என்பதைப் பற்றிய கதையின் மறு பக்கத்தைச் சொல்ல நான் இங்கு இருப்பது முக்கியம். அவரை ஆதரிக்கவும், உண்மையான குற்றவாளிகளை சிறையில் அடைக்கவும் நான் இங்கு வந்துள்ளேன். எங்கள் குழந்தைகளைக் கொன்றவர்களும், மற்றும் இனப்படுகொலை செய்தவர்களுமான புஷ் மற்றும் பிளேயர், மேர்க்கெல் மற்றும் ஜோன்சன், கர்சாய் போன்றவர்கள் மற்றும் தாலிபான்கள், பாகிஸ்தான் அரசாங்கமும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த குற்றகரமான, சட்டவிரோத போர் பென்டகனில் வடிவமைக்கப்பட்டது” என்று கூறினார்.
ஒலிவர் என்பவர், “ஜூலியன் அசான்ஜை பாதுகாக்கவே நான் இன்று வந்துள்ளேன். அவர் முக்கியமானவர், ஏனென்றால் இப்போது ஊடகங்கள் மூடிமறைக்கும் ஆயிரக்கணக்கான உண்மையான ஆவணங்களை அவர் வெளியிட்டவராவார்” என்று கூறினார்.
மேலும் அவர், “அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது, அசான்ஜ் மேலும் துன்புறுத்தப்படுவதை தடுக்கவேண்டும், ஏனெனில் இது ஒரு அரசியல் துன்புறுத்தல். எல்லா வகையிலும் இது தவறானது. உண்மை என்னவென்றால், இந்த வழக்கை இவ்வளவு தூரம் இழுத்தடிப்பது மிகவும் வெறுக்கத்தக்கது” என்றும் கூறினார்.
மேலும் படிக்க
- உள்துறை செயலர் பட்டேலின் முடிவின்படி, ஜூலியன் அசான்ஜை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது
- ஜூலியன் அசான்ஜ் இலண்டனின் பெல்மார்ஷ் சிறையில் ஸ்டெலா மோரிஸை மணந்தார்
- அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து ஜூலியன் அசான்ஜ் செய்த மேல்முறையீட்டை இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்தது