மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கீத் ஜோன்ஸ் வழங்கிய அறிக்கை இது. ஜோன்ஸ் கனடாவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.
கனடாவின் சோசலிச சமத்துவக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள அதன் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து, ரஷ்யா மீதான பொறுப்பற்ற, தொடர்ந்து அதிகரித்து வரும் அமெரிக்க-நேட்டோ போரை எதிர்க்க தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்புவிடுகின்றது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலையீடு இல்லாவிட்டால், ஏகாதிபத்திய சக்திகள் கடந்த நூற்றாண்டில் இரண்டு முறை செய்ததைப் போல, மனிதகுலத்தை ஒரு உலகளாவிய பெரும்மோதலுள் மூழ்கடிக்கும்.
உக்ரேன் போரில் கனேடிய ஏகாதிபத்தியம் குறிப்பாக ஆத்திரமூட்டும் மற்றும் போர்க்குணமிக்க பாத்திரத்தை வகிக்கிறது. அது போரினை தயாரிப்பு செய்து தூண்டியுள்ளது. கடந்த கால் நூற்றாண்டில், தாராளவாத மற்றும் பழைமைவாத அரசாங்கங்களின் கீழ், ரஷ்யாவை சுற்றி வளைப்பதற்கும், உக்ரேனை நேட்டோவுடனும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கும் அமெரிக்கா தலைமையிலான உந்துதலை கனடா ஆர்வத்துடன் ஆதரித்துள்ளது. 2015 முதல், நூற்றுக்கணக்கான கனேடிய ஆயுதப் படைகளின் பயிற்சியாளர்கள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு, அங்கு அவர்கள் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைந்து பணியாற்றினர். இதில் பாசிச அசோவ் படைப்பிரிவினை ஒன்றிணைத்து பயிற்சியளித்ததும் உள்ளடங்கும்.
ட்ரூடோவின் தாராளவாத அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரப் போரை முழுவதுமாக நடத்தியது. பிரிட்டனின் டோரி ஆட்சியுடன் இணைந்து SWIFT வங்கி அமைப்பில் இருந்து ரஷ்யாவை விலக்கவும், ரஷ்யாவின் மத்திய வங்கியின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அழுத்தம் கொடுக்க செயற்பட்டது. ஜனவரி முதல், கனடா அடுத்த மார்ச் மாதத்திற்குள் உக்ரேனுக்கு 618 டாலர் மில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. கனரக ஆயுதங்களின் முதல் கப்பல் கடந்த வாரம் உக்ரேனை சென்றடைந்தது.
கனேடிய ஆளும் வர்க்கம் நச்சுப் போர் பிரச்சாரத்தின் திரைக்குப் பின்னால், மிகவும் கொள்ளையடிக்கும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்களை தொடர்கிறது. அமைப்புரீதியான முதலாளித்துவ நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், வாஷிங்டனுடன் அதன் எட்டு தசாப்தங்கள் பழமையான இராணுவ-பாதுகாப்பு கூட்டணியை வலுப்படுத்த அது உறுதியாக உள்ளது. இது அதன் விரிவான உலகளாவிய ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் முக்கியமானது என கருதுகிறது. ரஷ்யாவுடன் கனடா தனது சொந்த மூலோபாய போட்டியையும் கொண்டுள்ளது. குறிப்பாக காலநிலை மாற்றம் இயற்கை வளங்களையும் கடற்பாதைகளையும் இன்னும் சாத்தியமானதாக்கும் ஆர்க்டிக்கில் இது உண்மையாக காணப்படுகின்றது.
ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் கனடாவின் அளப்பரிய பங்கை தூண்டும் மூன்றாவது முக்கியமான காரணியாக இருப்பது உக்ரேனிய தீவிர வலதுசாரிகளுடன் கனேடிய அரசின் நீண்டகால கூட்டணியாகும்.
ஹிட்லரின் மூன்றாம் குடியரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இனரீதியான 'தூய' உக்ரேனிய அரசு என்பதை பின்தொடர யூதர்களின் மீதும் போலந்து மக்களின் மீதும் தமது சொந்த படுகொலைகளை நடத்திய 20 ஆம் நூற்றாண்டின் சில கொடூரமான குற்றங்களில் நாஜிகளுடன் ஒத்துழைத்த பல்லாயிரக்கணக்கான உக்ரேனிய பாசிஸ்டுகளுக்கு கனடா அடைக்கலம் கொடுத்தது.
கனேடிய ஏகாதிபத்தியம் தனது பனிப்போர் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கையில் இந்த சக்திகளை கருவிகளாக பயன்படுத்தியது. இது அவர்களின் குற்றங்களை மறைப்பதற்கும் மூடிமறைப்பதற்கும் உதவியது. 1980களின் பிற்பகுதியிலும் 1990களிலும், உக்ரேனிய-கனேடிய தீவிர வலதுசாரிகள் முதலாளித்துவ மறுசீரமைப்பு, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் அதைத் தொடர்ந்து 'சுதந்திரமான' எனக் கூறப்பட்ட உக்ரேனை மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு அடிமையாக மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க அனுப்பப்பட்டனர்.
உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் (Ukrainian Canadian Congress - UCC) நீண்ட காலமாக கனேடிய அரசுக்கும் தீவிர வலதுசாரி உக்ரேனிய தேசியவாதிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் இணைப்பாக செயல்பட்டு வருகிறது. உக்ரேனிய கனேடிய காங்கிரஸ் பற்றி ஒரு பிரபலமான உக்ரேனிய-கனேடிய வரலாற்றாசிரியர், உக்ரேனிய பாசிச ஒத்துழைப்பாளர்கள் நாஜிகளை 'புகழ்ந்துரைப்பதை' 'உக்ரேனிய தேசிய அடையாள திட்டத்தின் மையத்தில்' வைத்துள்ளார் என எழுதுகிறார்.
கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய தீவிர வலதுசாரிக்கும் இடையிலான கூட்டணி, கனடாவின் துணைப் பிரதம மந்திரி, நிதி அமைச்சர் மற்றும் அதன் பெண்ணிய வெளியுறவுக் கொள்கையின் தலைமை வடிவமைப்பாளரான கிறிஸ்டியா பிரீலாண்ட் (Chrystia Freeland) என்ற நபரில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பொதிந்துள்ளது. பிரீலாண்ட் அடிக்கடி உக்ரேனிய தேசியவாதம் தனது அன்பான தாத்தாவால் தனக்கு கற்பிக்கப்பட்டதாக பேசியுள்ளார். பிரீலாண்டின் தாய்வழி தாத்தாவான மைக்கல் சோமியாக் ஐ நாஜி ஒத்துழைப்பாளர் என விவரிப்பது, அவருக்கு மன்னிப்பு கொடுப்பதாகிவிடும். ஜனவரி 1940 முதல் 1945 முதல் மாதங்கள் வரை நாஜிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் ஒரே உக்ரேனிய மொழி செய்தித்தாளின் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். க்ராக்கோ செய்தி (Krakivs'ki Visti) என்ற அப் பத்திரிகை அடோல்ஃப் ஹிட்லரை மகிமைப்படுத்தி, சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான நாஜி அழிப்பு போரைக் கொண்டாடியது. அது யூதர்கள் மீதான வெறுப்பைத் தூண்டி, மேலும் நாஜிகளின் படையான Waffen SS இன் உக்ரேனியப் பிரிவை உருவாக்க ஊக்குவித்தது.
கனேடிய அரசாங்கத்தில் முன்னணி ரஷ்ய-எதிர்ப்பு போர்-பருந்தான பிரீலாண்ட் உக்ரேனிய உள்நாட்டு அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு மாலையும் அவர் உக்ரேனின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் தொலைபேசியில் பேசுகிறார். உக்ரேனிய-கனேடிய கூட்டாளிகளின் கூட்டங்களில், பிரீலாண்ட் வழக்கமாக இரண்டாம் உலகப் போரின் உக்ரேனிய பாசிஸ்டுகளுடன் தொடர்புடைய சின்னங்களையும் சடங்குகளையும் தவறாமல் பயன்படுத்துகிறார்.
2017 இல் அவரது அரசியல் வம்சாவளி அம்பலப்படுத்தப்பட்டபோது, முழு அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் பிரீலாண்டுடன் இணைந்து அதை 'ரஷ்ய தவறான தகவல்' என்று திட்டவட்டமாக நிராகரித்தன. வலதுசாரி தீவிரவாதிகளுக்கு கனேடிய அரசின் ஆதரவு பற்றிய உண்மை வெளிவர அவர்கள் அனுமதிக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக அதன் சமகால மறுநடவடிக்கைகளான 2014 ஆம் ஆண்டு உக்ரேனிய பாசிஸ்டுகளை அதிர்ச்சித் துருப்புக்களாக பயன்படுத்தி, கனேடிய-உதவியுடன் அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட உக்ரேனின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய சார்பு ஜனாதிபதியை தூக்கியெறிந்தது பற்றியோ மற்றும் கனேடிய அல்லது உக்ரேனிய தீவிர வலதுசாரிகள் மற்றும் அதன் பிரத்தியேகவாத, தீவிரமான கம்யூனிச எதிர்ப்பு தேசியவாதத்தை கருத்தியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஊக்குவிப்பதில் உக்ரேனிய கனேடிய காங்கிரஸிற்கான அரசு நிதியுதவி பற்றியோ எவ்வித விசாரணையும் இல்லை.
பிரீலாண்ட் விவகாரத்தில் 'ரஷ்ய தவறான தகவல்' பற்றிய ஒருமித்த கண்டனங்கள் இப்போது வலமிருந்து வெளித்தோற்றத்திற்கு இடதுகளையும் கூட்டாட்சி மற்றும் கியூபெக் சுதந்திர சார்பு கனடாவின் முழு அரசியல் ஸ்தாபகத்தையும் ஒன்றிணைக்கும் ரஷ்யாவிற்கு எதிரான போர் வெறியின் ஒரு சிறிய முன்னுதாரணமாகும்.
தேசிய ஜனநாயகக் கட்சியின் (NDP) சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கங்களின் முழு ஆதரவுடன், ட்ரூடோ மற்றும் பிரீலாண்டுடன் அரசாங்கக் கூட்டணியை உருவாக்குவதன் மூலம் போர் வெடித்ததற்கு தமது பிரதிபலிப்பை காட்டினர். 'அரசியல் ஸ்திரத்தன்மை' என்ற பெயரில் போரை நடத்தும், இராணுவ செலவினங்களை வியத்தகு முறையில் உயர்த்தும் மற்றும் சிக்கன நடவடிக்கையாலும் பணவீக்கத்தாலும் உந்தப்பட்ட உண்மையான ஊதிய வெட்டுக்களை சுமத்தும் சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்தை ஜூன் 2025 வரை ஆட்சியில் வைத்திருப்பதாக தேசிய ஜனநாயகக் கட்சி (NDP) உறுதியளித்துள்ளது.
இது, தொற்றுநோய் முழுவதும் தொழிற்சங்கங்களும் தேசிய ஜனநாயகக் கட்சியும் ஆற்றிய பங்கின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும். மார்ச்-ஏப்ரல் 2020 இல், நிதியச் சந்தைகள் மற்றும் வங்கிகள் மற்றும் பெருநிறுவன கருவூலங்களுக்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை ட்ரூடோ அரசாங்கம் செலுத்துவதை அவர்கள் ஆதரித்தனர். பின்னர் தொடர்ந்து அழிவுமிக்க வேலைக்கு திரும்புதல் மற்றும் பள்ளிக்குச் செல்லும் கொள்கையைக் கட்டுப்படுத்தினர். இது ஆறு தொடர்ச்சியான பாரிய தொற்று மற்றும் இறப்பு அலைகளை உருவாக்கி உத்தியோகபூர்வமாக 39,000 கனேடியர்களைக் கொன்றது.
இடைமருவு வேலைத்திட்டத்தில் எழுதுகையில், லியோன் ட்ரொட்ஸ்கி, போர் போன்ற தீவிர நெருக்கடி காலங்களில், தொழிற்சங்கத் தலைவர்கள் முதலாளித்துவ அமைச்சர்களாக மாறுகிறார்கள் என்று எழுதினார். தொழிற்சங்க-தேசிய ஜனநாயகக் கட்சி-தாராளவாத கூட்டணி வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் கனேடிய ஆளும் வர்க்கம் வெளிநாட்டில் ஏகாதிபத்திய போரை நடத்துவதற்கும் உள்நாட்டில் வர்க்கப் போரை நடத்துவதற்கும் சுதந்திரமாக இயங்க வகை செய்கின்றது.
இவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். தொற்றுநோய், போர், அவற்றின் அழிவுகரமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் பல தசாப்தங்களாக சிக்கன நடவடிக்கைகள் மற்றும் எப்போதும் விரிவடைந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவை கனடாவில் உள்ள தொழிலாளர்களை உலகெங்கிலும் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளைப் போலவே போராட்டத்திற்குத் தூண்டுகின்றன. மேலும், இந்த போராட்டங்கள் அதிகரித்தளவில் பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபனரீதியான போலி இடது கட்சிகளுக்கு எதிராகவும் அவற்றின் கட்டுப்பாட்டிற்கு வெளியேயும் வெடித்து வருகின்றன.
இந்தப் போராட்டங்களுக்கு ஒரு தெளிவான சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை வழங்குவதே பெரும் சவாலாகும். அதுவே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் சோசலிச சமத்துவக் கட்சிகளின் பணியாகும். இந்த போராட்டத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.