இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் பொது நிர்வாக அமைச்சு, மே 25 அன்று, அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு 'பொதுச் சேவைகளை பேணுவதற்கு அத்தியாவசியமான' கடமை உத்தியோகத்தர்களை மட்டுமே பணியில் அமர்த்துமாறு அறிவுறுத்தும் சுற்றறிக்கையை வெளியிட்டது. அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு, மே 26 முதல் அமலுக்கு வந்தது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 'பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் சரியாக இயங்கவில்லை' என்பதாலும், எரிபொருள், மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான அரசு செலவினங்கள் 'இந்த நெருக்கடியின் போது கட்டுப்படுத்தப்பட வேண்டும்' என்பதாலும் இந்த நடவடிக்கை அவசியமானது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தற்காலிக நடவடிக்கை அல்ல. இலங்கை முதலாளித்துவப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளதால் அரசாங்கத்தின் 'வளப் பற்றாக்குறைக்கு' முடிவே கிடையாது.
இது அரசாங்கத் துறையை வெட்டிக் குறைப்பதற்கான முதல் படி என்று நாம் எச்சரிக்கின்றோம். இதன் கீழ் இலட்சக் கணக்கான வேலைகள் அழிக்கப்பட்டு, ஊதியம் வெட்டப்படுவதோடு மீதமுள்ள ஊழியர்கள் மீது வேலைச் சுமை அதிகரிக்கப்படுவதை காண முடியும். ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இப்போது அமுல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்தத் தாக்குதல் ஆகும்.
மனிதவள மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் ஏப்ரல் 25 அன்று வெளியிடப்பட்ட முந்தைய 'கொள்கைத் திட்டம் 'அரசு துறை செலவினங்கள் மற்றும் வேலைகளை பாரியளவு வெட்டித் தள்ள உள்ளதை கோடிட்டுக் காட்டியது. 1.7 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்க வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்படுவதாக அது அறிவித்தது. இந்த செலவுகள் இப்போது 'தாங்க முடியாதவை' என்று அது கூறியது.
கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகளின் போது, சுமார் 30 முதல் 50 சதவீத ஊழியர்களே வேலைக்கு அழைக்கப்பட்டதாகவும், அதன் 1.7 மில்லியன் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பொதுச் சேவைகளைப் பராமரிக்கத் தேவைப்படுவதாகவும், அந்த திட்டம் கூறியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 850,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மேலதிகமானவர்களாகக் கருதப்படும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியம் இன்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைத் தேட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. இதன் மூலம், அரசாங்கம் பொதுத்துறை செலவினங்களை வருடாந்தம் 300 பில்லியன் ரூபாவினால் குறைக்க முடியும் என்றும் இலங்கையின் வருடாந்த வெளிநாட்டு நாணய வருகையை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களால் அதிகரிக்க முடியும் என்றும் அந்த திட்டம் கூறுகிறது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களின் ஆரம்ப கோரிக்கைகளை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த 'கொள்கைத் திட்டம்' அரசாங்கத்தை வலியுறுத்தியது.
சர்வதேச நாணய நிதியம், கடந்த தசாப்தங்களில் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அரசாங்க துறையின் அளவைக் குறைக்குமாறும் ஓய்வூதியங்களைக் குறைக்குமாறும் இலங்கை அரசாங்கங்களுக்கு தொடர்ச்சியாக பலமுறை கட்டளையிட்டுள்ளது. அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் அல்லது வணிகமயமாக்குதல் மற்றும் வரிகளை அதிகரிப்பதும் முன்மொழியப்பட்டுள்ள ஏனைய நடவடிக்கைகளில் அடங்கும்.
இப்போது இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த தவனை தவறுவதாக அறிவித்துள்ள நிலையில், சர்வதேச நிதி மூலதனம் எந்தவொரு ஒத்திவைப்பையும் பொறுத்துக்கொள்ளாது. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நேட்டோ பினாமி போரினாலும் தூண்டிவிடப்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை அத்துடன் தற்போதைய மின்வெட்டுடன் தொழிலாளர்களும் ஏழைகளும் தொடரும் தாங்க முடியாத பணவீக்கத்தை எதிர்கொள்கின்றனர். ஜனாதிபதி இராஜபக்ஷவின் முன்னைய ஆட்சியைப் போலவே, அவரது தற்போதைய அரசாங்கமும் பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்தி, அவர்களை வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்த நிர்ப்பந்தித்துள்ளதோடு இலாப நோக்கு அமைப்பு முறையை பாதுகாக்கின்றது.
கடந்த வாரம் பிரதமர் விக்கிரமசிங்க தான் விரைவில் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை அறிவிப்பேன் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். 'இது சாத்திமான இடங்களில் செலவினங்களை எலும்புவரை சுரண்டி எடுப்பது தொடர்பானதும், முடிந்தவரை அவற்றை சமூகநல திட்டங்களுக்கு திருப்புவதாகும்' என்று அவர் அறிவித்தார். சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவினங்களைக் குறைப்பது கடினம் என்று அவர் கூறிய போதிலும், 'ஆனால் நாங்கள் குறைக்கக்கூடிய பல அமைச்சுக்கள் உள்ளன,' என்று மேலும் தெரிவித்தார்.
இடைக்கால வரவு-செலவுத் திட்டம் சுகாதாரம் மற்றும் கல்வி மீது கைவைக்காது மற்றும் நிதியை நலன்புரி சேவைக்காக ஒதுக்கும் என்ற விக்கிரமசிங்கவின் கூற்று பொய்யானதாகும். சுகாதாரம் மற்றும் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களின் இழப்பில் அரசாங்கம் அரசு செலவினங்களை 'எலும்பு வரை' குறைக்கும். உண்மையில், மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகள் ஏற்கனவே வெட்டித் தள்ளப்பட்டுள்ளன.
வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள் அரசாங்க நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல. இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் பல தனியார் நிறுவனங்களை மூடுவதற்கு வழிவகுத்தது. கட்டுமானத் துறையில் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்துள்ள அதே நேரம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சுமார் 4.5 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
எந்த வேண்டுகோளும் அல்லது அழுத்தம் கொடுக்கும் தந்திரங்களும் அரசாங்கத்தின் திட்ட நிரலை மாற்றாது அல்லது வேலைகள், ஊதியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் கைகளில் விட்டு வைக்க முடியாது.
ஏப்ரல் மாதத்தில் உங்கள் சொந்த அனுபவங்களை மதிப்பாய்வு செய்து, கடந்த ஆண்டில் தொழிற்சங்கங்கள் என்ன செய்தன என்பதைப் பற்றி சிந்தியுங்கள்!
ஜனாதிபதி இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் இராஜினாமா செய்து பேரழிவுகரமான மற்றும் மோசமான சமூக நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி, குறிப்பாக ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து பரந்த அளவிலான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று நடந்த பொது வேலைநிறுத்தங்களுக்கு தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் அனைத்து பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்தும் பரந்த ஆதரவு கிடைத்தது.
தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களின் போது நமது சமூக உரிமைகளைப் பாதுகாக்க எந்த ஒரு கோரிக்கையையும் எழுப்பவில்லை, அவற்றுக்காக போராடுவதற்கான ஒரு கொள்கையை கூட வெளியிடவில்லை. மாறாக, இடைக்கால ஆட்சிக்கான அவற்றின் கோரிக்கைகளை ஆதரித்து, எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை மூன்னணி (ஜேவிபி) அரசியல் ஆதரவாக எங்கள் போராட்டங்களை திசை திருப்பிவிட்டனர். இந்த கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை தாமும் நடைமுறைப்படுத்துவதாக தெளிவுபடுத்தியுள்ளன.
மே 6 பொது வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து இராஜபக்ஷ அவசரகாலச் சட்டத்தை விதித்ததுடன் ஆளும் கட்சி குண்டர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய பின்னர் மே 10 அன்று இராணுவத்தை வீதிக்கு அணிதிரட்டினார். தொழிற்சங்கங்கள் எங்கள் வேலைநிறுத்தங்களை முறையாக முடித்துவைத்து, அதற்கு பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தன.
கடந்த ஆண்டு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களின் 100 நாள் இணையவழி கற்பித்தல் பகிஷ்கரிப்பை காட்டிக்கொடுத்து, அரசாங்கம் வழங்கிய அசல் சம்பளக் கோரிக்கையில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே ஏற்றுக்கொண்டன.
போராட வேண்டும் என்ற சுகாதார ஊழியர்களின் எழுச்சி கோரிக்கைகளுக்கு பிரதிபலிப்பாக, சுகாதார சேவைகளின் கூட்டமைப்பின் தலைவர்களான ரவி குமுதேஷ், சமன் ரத்னப்ரிய ஆகியோர் தொழிலாளர்களின் போராட்டங்களை தணிக்க மற்றும் கட்டுப்படுத்துவதன் பேரில், 'தங்கள் உறுப்பினர்களின் கோபத்தை நிர்வகிப்பதாக' பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.
அரசு ஊழியர்கள் ஏற்கனவே அரசாங்கத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடத் தங்கள் தயார்நிலையைக் காட்டியுள்ளனர். கடந்த வாரம் கண்டி, அனுராதபுரம் மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளிலும் அரசாங்க அச்சகங்களிலும் தொழிலாளர்கள் வெளிநடப்புச் செய்து மேலதிக நேரம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளில் வெட்டுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
அரசு ஊழியர்கள், ஏனைய துறைகளில் உள்ள அவர்களது சக ஊழியர்களைப் போலவே, முடிவெடுப்பதையும் தங்களின் போராட்டங்களை ஒழுங்கமைப்பதையும் தங்கள் கட்டுப்பாட்டின் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அதனால்தான், ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பெருந்தோட்டங்களிலும், பெரிய நிறுவனங்களிலும், தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும், ஜனநாயக முறையில் தொழிலாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும் என நாங்கள் முன்மொழிகிறோம். இவை தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமானவையாக இருக்க வேண்டும்.
- முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல, அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை என்று நாங்கள் கூறுகிறோம். வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் கைவைக்காதே!
- மிகை பணவீக்கத்தை சமாளிப்பதற்கு, வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதிய வேண்டும் என்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நாம் கோருகிறோம்!
நடவடிக்கை குழுக்களின் கூட்டணி (Alliance of Action Committees - AAC) என்பது சோசலிச சமத்துவக் கட்சியால் தொடங்கப்பட்டு ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், ஆடை மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கலை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகப் போராடுபவர்கள் மத்தியில் ஸ்தாபிக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் கூட்டு ஆகும்.
இந்தக் குழுக்களை விரிவுபடுத்துவதற்கு நாங்கள் போராடி வருவதுடன், எங்கள் வர்க்க சகோதர சகோதரிகள் அந்தந்த வேலைத் தளங்களில் நடவடிக்கை குழுக்களை ஒழுங்கமைக்க அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம், அதேபோல் சர்வதேச அளவில் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுடன் கூட்டணியை உருவாக்குகிறோம்.
மோசமடைந்து வரும் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளை எதிர்த்துப் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சி (SEP) முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தை எங்கள் நடவடிக்கைக் குழுக்கள் ஆதரிக்கின்றன. அதன் வேலைத்திட்டத்தில் பின்வருவன அடங்கும்:
- அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய இன்றியமையாத சமூக வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்! வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்க வேண்டும்!
- அனைத்து வெளிநாட்டு கடன்களையும் தள்ளுபடி செய்! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகள் வேண்டாம்!
- கோடீஸ்வரர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்ட செல்வத்தை கைப்பற்றுங்கள்!
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஒடுக்கப்பட்டோர், ஏழை விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! உர மானியம் உட்பட அனைத்து விவசாயிகளுக்கான மானியங்களையும் மீண்டும் வழங்கு!
- இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைக்காக பில்லியன் கணக்கான ரூபாய்களை ஒதுக்குவதன் மூலம் தேவைப்படும் அனைவருக்கும் உயர்தர சேவைகளை உறுதி செய்யுங்கள்!
முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு தீர்வு இல்லை என்பதை சோசலிச சமத்துவக் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. மேற்கூறிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டம் அவசியமாகும். இந்த போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறும் மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை: காலிமுகத்திடல் எதிர்ப்புகளின் 'கட்சி சார்பின்மை' சாக்குப்போக்கின் பின்னால் இயங்கும் முதலாளித்துவ அரசியல்
கொடூரமான அவசரகால நிலையை எதிர்த்திடு! ஜனாதிபதி சர்வாதிகாரம் வேண்டாம்! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு!
நேற்றைய பொது வேலைநிறுத்தத்தை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்தார்
மேலும் படிக்க
- இலங்கை: காலிமுகத்திடல் எதிர்ப்புகளின் "கட்சி சார்பின்மை" சாக்குப்போக்கின் பின்னால் இயங்கும் முதலாளித்துவ அரசியல்
- கொடூரமான அவசரகால நிலையை எதிர்த்திடு! ஜனாதிபதி சர்வாதிகாரம் வேண்டாம்! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு!
- நேற்றைய பொது வேலைநிறுத்தத்தை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனம் செய்தார்