மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது. கிஷோர் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளராக உள்ளார். அனைத்து உரைகளையும் படிக்கவும், கேட்கவும் wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

Joe Kishore, National Secretary of the Socialist Equality Party (US)

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் போர்க் கொள்கையானது உலகை ஒரு பேரழிவின் விளிம்பிற்கு கொண்டுவந்திருக்கும் நிலையில் இந்த மேதினப் பேரணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது முதலாகவே, அமெரிக்க ஏகாதிபத்தியமானது, ஒரு நாட்டிற்கடுத்து இன்னொன்றின் மீது படையெடுப்பது மற்றும் ஆக்கிரமிப்பது என, தொடர்ச்சியான மற்றும் விரிந்து செல்லும் போரை முன்னெடுத்திருக்கிறது. வாஷிங்டனின் கண்கள் அதன் மேலாதிக்கத்திற்கு பிரதான புவிமூலோபாய முட்டுக்கட்டைகளாக இருக்கும் ரஷ்யா மற்றும் சீனா மீது இப்போது பதிந்திருக்கிறது. பிராந்தியப் போர் ஒரு உலகப் போராக விரிவு கண்டு கொண்டிருக்கிறது, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்குமான ஆபத்து மிகத் தீவிரமானதாக இருக்கிறது.

எனினும், அமெரிக்காவிற்குள்ளாக மிக சக்திவாய்ந்த சமூக சக்தியாக இருக்கும் தொழிலாள வர்க்கத்தை கணக்கிலெடுக்கத் தவறுகின்ற பட்சத்தில், உலக நிலைமை குறித்த மற்றும் நிகழ்வுகளின் பயணப்பாதையில் பொதிந்திருக்கிற சாத்தியவளங்கள் குறித்த எந்த மதிப்பீடும் தவறானதாகவே இருக்கும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மையமான பாத்திரத்தை மட்டுமல்ல, அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் என்ற பிரம்மாண்டமான சமூக மற்றும் அரசியல் சக்தியின் மையமான பாத்திரத்தையும் புரிந்து வைத்திருப்பது தான் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை எப்போதும் தனித்துவமாய் காட்டி வந்திருப்பதாகும்.

உலகெங்குமான தொழிலாளர்களுக்கு நாங்கள் சொல்லுவது: இங்கே இரண்டு அமெரிக்காக்கள் உள்ளன. வோல் ஸ்ட்ரீட், பென்டகன், சிஐஏ, மற்றும் அதிகார அடுக்கின் அமெரிக்கா, இது பொய்சொல்லும், மிரட்டும், வம்பிழுக்கும். தொழிலாள வர்க்கத்தின் அமெரிக்காவும் இருக்கிறது. வெளிநாடுகளில் போர் நடத்தும் அதே வர்க்கம் தான் உள்நாட்டிலும் போரை நடத்திக் கொண்டிருக்கிறது, தொழிலாளர்கள் எதிர்த்துப் போராடுவார்கள்.

அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நிதர்சனத்தை பெருந்தொற்றுக்கான பதிலிறுப்பைக் காட்டிலும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்துவது வேறொன்றில்லை. ஆளும் உயரடுக்கானது, உலகில் இணைகாணமுடியாத அலட்சியத்துடன், பெருந்தொற்றை தடுத்துநிறுத்துவதற்கு அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்தது. வோல் ஸ்ட்ரீட்டை பிணையெடுத்ததன் பின்னர், அது அமெரிக்கர்களை மீண்டும் வேலைக்குத் துரத்தியது. ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்திருக்கின்றனர், எதிர்பார்ப்பு ஆயுட்காலம் கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் வரை வீழ்ச்சி கண்டிருக்கிறது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்தனர், மேலும் பணக்காரர்கள் பணக்காரர் ஆனார்கள். அமெரிக்கர்களின் ஆயுட்காலம் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் சரிந்தது, பங்குச் சந்தையும் கல்லறைகளும் உயர்ந்தது. இரண்டு அமெரிக்காக்கள்.

அமெரிக்காவின் அளவுக்கு சமத்துவமின்மை வேறெந்த பெரிய முதலாளித்துவ நாட்டிலும் கிடையாது. ரஷ்யாவுடனான மோதலின் பாதையில், அமெரிக்க ஆளும் வர்க்கமானது ரஷ்ய சிலவராட்சியின் பெருஞ்செல்வம் குறித்து பேசத் தொடங்கியிருக்கிறது. “அவர்களது சொகுசுப் படகுகளை, ஆடம்பர வீடுகளை, முறைகேடாய் - சேர்த்த ஆதாயங்களை நாங்கள் பறிமுதல் செய்யவிருக்கிறோம்” என்று பைடென் வியாழனன்று அறிவித்தார்.

ஆளும் வர்க்கம் நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க சிலவராட்சியின் செல்வத்தைக் காட்டிலும் அதிக “முறைகேடாய்-சேர்த்த” செல்வம் வேறொன்று கிடையாது.

கடந்த இரண்டாண்டு காலத்தில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வம் 70 சதவீதத்திற்கும் அதிகமாய் அதிகரித்து ஐந்து டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமானதாய் வளர்ந்து நிற்கிறது. ஐந்து டிரில்லியன் டாலர்கள். பெடரல் ரிசர்வின் பண அச்சடிப்பு நடவடிக்கையால் உந்தப்பட்டு, பெரும் நிறுவனங்களில் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கான சராசரி சம்பளம் சென்ற ஆண்டில் 14.2 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

கால் டிரில்லியன் டாலர்களை தனிநபர் செல்வமாகக் கொண்டிருக்கும், உலகின் பணக்கார மனிதரான, எலான் மஸ்க், சென்ற வாரத்தில் “போனஸ்” தொகையாக 23 டிரில்லியன் டாலர்களைப் பெற்றார். பெருந்தொற்றின் போது டெஸ்லாவின் ஆலைகளைப் பலவந்தமாகத் திறப்பதற்காக இவர் சட்டத்தை மீறினார். இப்போது அவர் 43 பில்லியன் டாலர்கள் செலவில் ட்விட்டரை வாங்குகிறார். விண்ணைமுட்டும் தொகைகள்.

100 ஆண்டுகளுக்கும் சற்று முன்பாக, 1919 இல், அமெரிக்காவின் சோசலிச தலைவரான யூஜின் டெப்ஸ் வழங்கிய ஒரு மே தின உரை, 1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சியின் பெரும் தாக்கங்களைத் தாங்கியதாய் இருந்தது.

”உங்களிடம் ஒரு சோசலிஸ்டாக, ஒரு புரட்சியாளராக, ஒரு போல்ஷிவிக்காக பேசவிருக்கிறேன்” என டெப்ஸ் பிரகடனம் செய்தார். “மொத்த உலகமும் எந்த விடயத்தை பேசிக் கொண்டிருக்கிறது? ஆளும் வர்க்க அதிகாரம் எதனைக் கண்டித்துக் கொண்டிருக்கிறது, எதன் மீது அது கொடுநோக்குடன் பொய்களின் வெள்ளத்தை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது - எது அது? தொழிலாளர்களின் எழுச்சி தான் அது... அவர்கள் வரலாற்றில் முதன்முறையாக ’அங்கே இருப்பது நாங்கள் செய்ததாகும், நாங்களே செல்வத்தை உருவாக்குகிறோம்; இப்போது நாங்கள் உருவாக்கியதை நாங்கள் எடுத்துக் கொள்ளவிருக்கிறோம், ஏனென்றால் அது எங்களுடையது..’ என்று ஒன்றுபட்ட குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.”

தொழிலாளர்கள் இந்தக் குரலை மீண்டும் மேலுயர்த்துவார்கள்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒருதரப்பான வர்க்கப் போரை நடத்தியது. தொழிற்சங்கங்கள் அவை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்வோரை சுரண்டி இலாபமடையும் வசதியான நிர்வாகிகளால் நடத்தப்படுகிற நிர்வாகத்தின் சார்பில் தொழிலாளர்களை கண்காணிக்கும் போலிஸ் படையாக தங்களை மாற்றிக் கொண்டன.

கோவிட் பரவிய நிலையில் ஆலைகளைத் திறந்து வைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்கள் அறிவிப்பில்லாத போராட்ட நடவடிக்கைகளைத் தொடக்கினர். பள்ளிகள் பாதுகாப்பற்ற வகையில் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக கல்வியாளர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெருந்தொற்றின் தாக்கமானது ஒரு போர்க்குண மற்றும் எதிர்ப்பு மனோநிலைக்கு எரியூட்டியிருக்கிறது, இது கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் நடந்து வரும் 5,000 செவிலியர் பங்குபெறும் வேலைநிறுத்தத்திற்கும் தாண்டி வெகுதூரம் வரை நீண்டுசெல்கிறது.

எவ்வாறெனினும், அமெரிக்காவில் தொழிலாள வர்க்கம் தனது பதிலடியை ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வேர்ஜினியாவில் வோல்வோ டிரக்; Kellogg’s; John Deere; Dana Auto Parts; King Soopers Grocery stores என பல துறைகளில் வரிசையான வேலைநிறுத்தப் போராட்டங்கள் அல்லது தொழிலாளர் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

கோவிட் பரவிய நிலையில் ஆலைகளைத் திறந்து வைக்கும் முயற்சிகளை எதிர்த்து வாகன உற்பத்தித் தொழிலாளர்கள் முன்னறிவிப்பற்ற வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொடக்கினர்.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெருந்தொற்றின் தாக்கமானது ஒரு போர்க்குண மற்றும் எதிர்ப்பு மனோநிலைக்கு எரியூட்டியிருக்கிறது, இது கலிஃபோர்னியாவின் ஸ்டான்ஃபோர்டில் நடந்து வரும் 5,000 செவிலியர் பங்குபெறும் வேலைநிறுத்தத்திற்கும் தாண்டி வெகுதூரம் வரை நீண்டுசெல்கிறது.

உலகெங்குமான மற்ற தொழிலாளர்களைப் போலவே, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களும் உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களிலான விலையேற்றத்தால் -ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் முனைப்பின் பொருளாதாரத் தாக்கத்தினால் இதன் தீவிரம் கூடுகிறது- பாதிக்கப்பட்டுள்ளனர். முன்கண்டிராத பணவீக்கத்தின் ஒரு விளைவாய், வெறும் ஒரு ஆண்டுக்குள்ளாக 10 முதல் 15 சதவீதம் வரை உண்மையான ஊதியங்களிலான வீழ்ச்சிக்கு தொழிலாளர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏப்ரல் 20-21 இல் ஹாரிஸ் வாக்கெடுப்பின் படி, அமெரிக்க வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் பொருளாதாரம் பலவீனமாய் உள்ளதாகக் கூறினர், அத்துடன் கிட்டத்தட்ட பாதிப்பேர் தமது சொந்த நிதி நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதாக தெரிவித்தனர். பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே நாடு “சரியான பாதையில் செல்கிறது” என்று கூறினர், சுமார் 60 சதவீதம் பேர் “தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தனர். பணவீக்கமும் அணு ஆயுதங்களது பயன்பாடுமே அமெரிக்க வாக்காளர்களின் பிரதான இரண்டு அச்சங்களாக இருந்ததாக அந்த வாக்கெடுப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் நோக்கிய ஒரு ஆழமான குரோதமும் ஐயுறவுவாதமும் இருக்கிறது. உத்தியோகபூர்வ ஊடகங்களில் இருந்து வருகின்ற மூளை-மரக்கச் செய்யும் பிரச்சாரத்திற்கும், ஒரேயொரு உண்மையான வார்த்தையையும் கூட பேசுவதற்கு அரசியல் அதிகாரிகள் திறனற்று இருப்பதற்குமான விளக்கமாக இருப்பது இதுவேயாகும். ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டதைப் போல, அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் தான் உலகில் மிகவும் அச்சமுடையதாகும்.

அமெரிக்க முதலாளித்துவம் அதன் வேர் வரை இற்றுப்போய் கிடக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பாகத் தான், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அரசியலமைப்பை தூக்கிவீசி விட்டு சர்வாதிகாரியாக ஆட்சி செய்வதற்கு ஒரு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை நடத்தினார். அந்த முன்னாள் ஜனாதிபதியால் சோசலிச அபாயம் குறித்த ஆவேச கண்டனங்கள் இல்லாமல் ஒரு உரை வழங்க முடியாதிருந்தது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பேசுகையில் பைடென், அமெரிக்க ஜனநாயகத்தின் ஸ்தாபகங்கள் இன்னுமொரு தசாப்தம் தாக்குப்பிடிக்குமா என்று தெரியாது என அறிவித்தார். ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரத்தில், அமெரிக்காவின் ஜனாதிபதி ஆட்சிக்கவிழ்ப்பு சதியாளர்களுடன் கரம்கோர்க்கிறார், போரின் அடிப்படையிலான “தேச ஒற்றுமை”யை பிரகடனம் செய்கிறார்.

எனினும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஐக்கியப்பட்ட நிலையில் இல்லை. அது ஆழமாகப் பிளவுபட்டிருக்கிறது ஜனநாயகக் கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் கொண்டு உரம்போட்டு வளர்க்கின்ற நிறம், பாலினம் போன்ற பொய்யான பிளவுகளின் வரிசையில் அல்ல- மாறாக வர்க்க வரிசையில் ஆகும். அமெரிக்க முதலாளித்துவமானது ஒவ்வொரு ஆண்டும் 1,000 பேரைக் கொல்கின்ற ஒரு போலிஸ் படை உள்ளிட்ட ஒரு தீவிரமான ஒடுக்குமுறை எந்திரத்தால் மேற்பார்வை செய்யப்படுகிறது.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் வர்க்கப் போராட்டத்தின் ஒரு நெடிய மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தைக் கொண்டதாகும். இன்று நாம், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான தினமான மே தினத்தைக் கொண்டாடுகிறோம். உண்மையில் மேதினத்தின் மூலங்கள், 1886 மே மாதத்தில் சிக்காகோவில் ஹேமார்க்கெட் படுகொலை மற்றும் ஜோடிப்பு வழக்குகளில் தொழிலாளர்கள் இரத்தக்களரியாக ஒடுக்கப்பட்ட வேளையில், 8 மணிநேர வேலைதினத்திற்காக அமெரிக்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் அமைந்திருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வரலாறு என்பது போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டத்தின் வரலாறாக இருந்திருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு புரட்சிகர இயக்கம் அபிவிருத்தி காண்பதை முறியடிப்பதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் கொண்டிருந்த திறன் என்பது, இறுதிப் பகுப்பாய்வில், அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமையில் தங்கியிருந்ததாக இருந்தது. ஆனால், இந்த புறநிலைமைகள் எல்லாம் பழைய காலம் என்னும் நிலைக்கு இப்போது வந்திருக்கிறது.

2010 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தில், நாங்கள் குறிப்பிட்டோம், “புறநிலைமைகளிலான மாற்றங்கள்...அமெரிக்க தொழிலாளர்கள் மனதை மாற்றிக் கொள்ள கொண்டுசெல்லும். முதலாளித்துவத்தின் யதார்த்த நிலையானது சமூகத்தின் பொருளாதார ஒழுங்கமைப்பில் ஒரு அடிப்படையான மற்றும் புரட்சிகரமான மாற்றத்திற்காகப் போராடுவதற்கு ஏராளமான காரணங்களை தொழிலாளர்களுக்கு வழங்கும்.”

இந்த கணிப்பு நிதர்சனமாகி இருக்கிறது. தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற கேள்வி: எந்த அடிப்படையில் எந்த மூலோபாயத்தைக் கொண்டு அவர்களது போராட்டங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்?

வர்க்கப் போராட்ட அபிவிருத்தியானது பெருநிறுவனவாத தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனப்பட்ட, தொழிலாளர்களைக் கொண்டதும் அவர்களால் கட்டுப்படுத்தப்படுவதுமாய் இருக்கின்ற அமைப்புகள் உருவாக்கப்படுவதை அவசியமாக்குகிறது.

சாமானியத் தொழிலாளர்’ குழுக்களின் சர்வதேசக் கூட்டணியின் பாகமாக, சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்கும் முன்முயற்சியை சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக முக்கிய போராட்டங்கள் பலவற்றிலும் இந்த குழுக்கள் ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்திருக்கின்றன. அவை ஒவ்வொரு தொழிற்துறைக்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி மற்றும் விரிவுபடுத்தலானது தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதுடன் இணைக்கப்பட வேண்டும். ட்ரம்ப்பின் பாசிச தேசியவாதம் முதல் ஜனநாயகக் கட்சி மற்றும் ஏகாதிபத்திய-ஆதரவு போலி-இடதுகளது பிற்போக்குத்தனமான இனவாத மற்றும் பாலினரீதி அரசியல் வரையில், ஆளும் வர்க்கத்தின் அத்தனை ஸ்தாபகங்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கும் எதிரான ஒரு போராட்டம் என்பதே இது அர்த்தமளிப்பதாகும்.

அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களுக்கும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களுக்கும் இடையில் வலிமையான பிணைப்புகளை உருவாக்குவது என்பதே இதன் அர்த்தமாயிருக்கும். உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கின் வாயிலாகவும் தகவல்தொடர்பிலான புரட்சிகர முன்னேற்றங்களின் வாயிலாகவும், அமெரிக்கத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இணைப்பு கொண்டுள்ளனர். உலகளாவிய பெருந்தொற்று, நூறுமில்லியன்கணக்கான மக்களை வறுமையில் தள்ளியபடி அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், உலக வெப்பமாதல் மற்றும் இப்போது உலகப் போர் என மனிதகுலம் முகம்கொடுக்கும் பெரும் பிரச்சினைகளில் எதுவொன்றுக்கும் தேசியளவிலான தீர்வு ஏதும் கிடையாது.

சோசலிசத்தை நோக்கி நனவுடன் செலுத்தப்படுகின்ற ஒரு இயக்கத்தை அபிவிருத்தி செய்வது என்பதே இதன் அர்த்தமாகும். ஆளும் வர்க்கம் ஆட்சி செய்வதற்கான அதன் உரிமையைத் தொலைத்திருக்கிறது, தனக்கு அடித்தளமாகக் கொண்டிருக்கும் இலாப நோக்கு அமைப்புமுறையின் திவால்நிலையை விளங்கப்படுத்தியிருக்கிறது.

புரட்சிகரத் தலைமை குறித்த பிரச்சினையே அமெரிக்காவிலும் மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற அடிப்படையான பிரச்சினையாகும். புறநிலைமைகள் சோசலிசப் புரட்சிக்கான சாத்தியத்தை உருவாக்கித் தருகின்றன. எனினும் இந்த புறநிலை சாத்தியம் அரசியல் யதார்த்தமாக மாற்றம் காண்பதென்பது தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிசத் தலைமையைக் கட்டியெழுப்புவதை அவசியமாக்குகிறது.

இந்த அரசியல் தலைமையே உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகும். சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவதே இந்த மே தின பேரணியில் இருந்து பிறக்கின்ற அடிப்படைக் கடமையாக உள்ளது.

Loading