ஜேர்மனிய அரசாங்கமும் எதிர்க்கட்சியும் போருக்கான 100 பில்லியன் யூரோ சிறப்பு நிதிக்கு உடன்படுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று, வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் ஒரு பகுதியாக, கூட்டாட்சி அரசாங்கம் ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கான (Bundeswehr) சிறப்பு நிதி என்று அழைக்கப்படுவதை 100 பில்லியன் யூரோக்களுக்கு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. 77 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரின் மூன்றாம் ரைஹ்ஹின் வீழ்ச்சிக்குப் பின்னர் இது மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் ஆகும். இது ஜேர்மனியை ஐரோப்பாவில் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ தேசமாக மாற்றுகிறது.

Bundeswehr Eurofighter Typhoon

'இப்போது சிறப்பு நிதி மூலம் ஜேர்மன் ஆயுதப்படைகளை சிறப்பாக சித்தப்படுத்துவதற்கான முடிவு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஜேர்மனி விரைவில் நேட்டோவின் கட்டமைப்பிற்குள் ஐரோப்பாவில் மிகப்பெரிய மரபுவழி இராணுவத்தைக் கொண்டிருக்கும்' என்று திங்களன்று Stuttgarter Zeitung க்கு அளித்த பேட்டியில் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) மகிழ்ச்சி தெரிவித்தார்.

முந்தைய நாள் பின்கதவு பேச்சுக்களில், ஆளும் கட்சிகளான SPD, FDP மற்றும் பசுமைக் கட்சிகள், மிகப்பெரிய எதிர்க்கட்சி பிரிவான கிறிஸ்துவ ஜனநாயக (CDU/CSU) கட்சிகளுடன் சிறப்பு நிதியைத் தொடங்க ஒப்புக்கொண்டன.

கட்சிகள் கூட்டறிக்கையில், 'கூட்டணி மற்றும் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கு ஒரு சிறப்பு நிதியை உருவாக்குவதற்கான அரசியலமைப்பின் திருத்தம் குறித்தும், ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கு நிதியளிப்பதற்கான சட்டம் மற்றும் இந்த சிறப்பு நிதியை நிறுவுவது குறித்தும் இன்று மாலை நாங்கள் எங்கள் பேச்சுக்களை வெற்றிகரமாக முடித்துள்ளோம்' என அறிவித்துள்ளன.

'வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் யூரோக்கள் கூடுதல் முதலீடுகளுடன் ஜேர்மன் ஆயுதப்படைகள் பலப்படுத்தப்படும்' என அவர்கள் கூட்டாக உறுதியளிக்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், 'நேட்டோவின் இரண்டு சதவீத இலக்கு என அழைக்கப்படுவது பல ஆண்டுகளில் சராசரியாக அடையப்படும்.' அதே நேரத்தில், 'கொள்முதலை விரைவுபடுத்துவதற்கான முயற்சி உடனடியாகவும், நாடாளுமன்ற கோடை விடுமுறைக்கு முன்னதாகவும் தொடங்கப்படும்'.

'சைபர் மற்றும் தகவல் துறையில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தையும்' அரசாங்கம் முன்வைக்கும். கூடுதல் நடவடிக்கைகள் 'சைபர் பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் கூட்டாளர்களை வலுப்படுத்துதல் மற்றும் உறுதிப்படுத்துதல்' ஆகியவற்றிற்கு கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து நிதியளிக்கப்படும். மேலும் 'சிறப்பு நிதி பயன்படுத்தப்பட்ட பின்னரும்,' 'அப்போது நடைமுறையில் இருக்கும் நேட்டோ செயல் வல்லமை இலக்குகளை அடைய தேவையான நிதி தொடர்ந்து வழங்கப்படும்.'

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மறுசீரமைப்பு திட்டங்கள் சிறப்பு நிதி மற்றும் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் நிரந்தர பலூன்களுக்கு அப்பால் செல்கின்றன. இரண்டு சதவீத இலக்கை அடைவது கூட, பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம் ஆண்டுக்கு 50 பில்லியன் யூரோக்களில் இருந்து 70 பில்லியன் யூரோக்களுக்கு மேல் உயரும். ஷோல்ஸ் ஏற்கனவே பிப்ரவரி 27 அன்று ஒரு உரையில் பாரிய மறுஆயுதமயத் திட்டத்தை அறிவித்திருந்தார். மேலும் கூட்டாட்சி அரசாங்கத்தில் ஆயுதத் திட்டங்களின் நீண்ட பட்டியலை வழங்கினார்.

இது 'அடுத்த தலைமுறை போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள்', 'யூரோட்ரோன்' (“Eurodrone”) மற்றும் 'ஆயுதமேந்திய ஹெரான் ட்ரோனை (Heron drone) கொள்முதல் செய்தல்' ஆகியவற்றைப் பற்றியது என்று சான்சிலர் விளக்கினார். மேலும், 'அணுசக்தி பங்கேற்பிற்காக,' காலாவதியான டொர்னாடோ ஜெட் விமானங்களுக்கு நவீன மாற்று சரியான நேரத்தில் வாங்கப்படும்' என்றார். எவ்வாறாயினும், ஜேர்மனிக்கு 'பறக்கும் விமானங்கள், பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் அவர்களின் பணிகளுக்கு உகந்ததாக இருக்கும் வீரர்கள்' தேவை என்றார்.

மறுஆயுதமயமாக்கல் முன்னெடுப்பு என்பது ஒவ்வொரு வகையிலும் தொழிலாள வர்க்கத்தின் மீதான போர்ப் பிரகடனமாகும். செலவுகள் பிரத்தியேகமாக தொழிலாளர்களால் ஏற்கப்படும். திங்களன்று நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர், 'கடன் தடையை பாதுகாக்கவும், வரி அதிகரிப்பைத் தவிர்க்கவும், ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கு இன்னும் வலுவாக நிதியளிக்கவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்' என்று ZDF தொலைக்காட்சியில் கூறினார். போர் மற்றும் நெருக்கடியின் ஒரு வருடத்தில், இது 'வரவு-செலவுத் திட்டத்தைத் தொடர ஒரு நல்ல தொடக்கமாகும்'. 2023 இல், அவரைப் பொறுத்தவரை, 'கடன் தடை பேச்சுவார்த்தைக்குட்பட்டதல்ல.'

இதன் பொருள் என்ன என்பது வெளிப்படையானது. மறுஆயுதமாக்கல் மற்றும் போரில் பாயும் ஒவ்வொரு சதமும் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எடுக்கப்படும். இந்த ஆண்டு, தொழில், சமூக விவகாரங்கள் மற்றும் கல்வித் துறைகளில் மொத்தம் ஐந்து பில்லியன் யூரோக்களுக்கு மேல் குறைக்கப்படும். மேலும் அது ஆரம்பம் மட்டுமே. வரவிருக்கும் அழிவுகர பரிமாணத்தை நன்றாகப் புரிந்து கொள்ள, தற்போதைய கல்வி வரவு-செலவுத் திட்டம், சுமார் 20 பில்லியன் யூரோக்கள், திட்டமிடப்பட்ட ஜேர்மன் ஆயுதப்படைகளுக்கான சிறப்பு நிதியில் ஐந்தில் ஒரு பங்காகும்.

மிக நேரடியாக, மறுஆயுதமயமாக்கல் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரின் உடனடி விரிவாக்கத்திற்கு உதவுகிறது. Stuttgarter Zeitung உடனான தனது நேர்காணலில், ஷோல்ஸ் உக்ரேனை ஆயுதமாக்குவதில் ஜேர்மனியின் முக்கிய பங்கைப் பற்றி பெருமையாகக் கூறினார். ஜேர்மனி ஏற்கனவே 'Bundeswehr கையிருப்பில் இருந்து பெரிய அளவில் ஆயுதங்களை வழங்கியுள்ளது, உதாரணமாக நூற்றுக்கணக்கான டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் கைக்குண்டுகள், பல மில்லியன் சுற்று வெடிமருந்துகள்' என்று அவர் கூறினார்.

கூடுதலாக, அவரது அரசாங்கம் 'உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் ஜேர்மன் ஆயுதத் துறையிடம் கேட்கக்கூடிய இராணுவ உபகரணங்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது.' இதில் கெபார்ட் (Gepard) விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களும் அடங்கும். சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் 2000 வழங்கப்பட்டது மற்றும் உக்ரேனிய இராணுவத்தினர்களுக்கு ஆயுத அமைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது 'இதனால் அவர்களும் இந்த உபகரணங்களை இயக்க முடியும்.' கூடுதலாக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், 'ரஷ்யா தயாரித்த ஆயுதங்களை' —போர் டாங்கிகள் உட்பட— 'உக்ரேனுக்கு மாற்றியது' அவை அங்கு 'உக்ரேனில் உடனடியாகப் பயன்படுத்தப்படலாம்,' பின்னர் மீண்டும் நிரப்புவதன் மூலம் ஆதரிக்கப்படும்.

புதன் கிழமையன்று, ஷோல்ஸ், கூட்டாட்சி அரசாங்கத்தில் நடந்த பொது விவாதத்தில் மேலும் ஆயுத விநியோகத்தை அறிவித்தார் மற்றும் உக்ரேனுக்கு ஒரு நவீன Iris-T வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கண்காணிப்பு ராடர் வழங்குவதாக உறுதியளித்தார்.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக அழிப்புப் போரை நடத்திய அதே ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள், இன்று ஜேர்மனியின் போர் நோக்கம் ரஷ்யாவின் இராணுவத் தோல்வி என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றனர்.

'எந்தச் சூழ்நிலையிலும் ரஷ்யா இந்தப் போரை வெல்லக் கூடாது, இதன் பொருள் ரஷ்யாவிற்கு ஒரு மூலோபாய தோல்வி தேவை' என்று பசுமைக் கட்சியின் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக் திங்களன்று Deutschlandfunk வானொலியில் கோரினார். 'உக்ரேன் வெற்றிபெற வேண்டும்,' அதனால்தான் 'இந்த சூழ்நிலையில் உக்ரேனை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக டொன்பாஸில் ரஷ்ய துருப்புக்களை அவர்கள் பின்னுக்குத் தள்ள முடியும் என்பதை தொடர்ந்து உறுதிசெய்வோம்.'

உத்தியோகபூர்வமாக, ஷோல்ஸ், பெயர்பொக் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் உக்ரேன் மீதான புட்டினின் படையெடுப்புடன் தங்கள் 'வெளிநாட்டு கொள்கையில் திருப்பத்தை' நியாயப்படுத்துகின்றனர். உண்மையில், 100 பில்லியன் யூரோக்கள் 'சிறப்பு நிதி' உட்பட திட்டங்கள் நீண்ட காலத்திற்கு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டது.

ரஷ்யாவை திட்டமிட்ட இராணுவச் சுற்றி வளைப்புடன், நேட்டோவே உக்ரேன் போரைத் தூண்டியது. இப்போது, ஏகாதிபத்திய சக்திகள் வளங்கள் நிறைந்த ரஷ்யாவை அடிபணியச் செய்வதற்காக மோதலை அதிகரிக்கின்றன. இந்த செயல்பாட்டில், பேர்லின் தன்னை முன்னணி ஐரோப்பிய சக்தியாக நிலைநிறுத்திக் கொள்ளும் இலக்கைத் தொடர்கிறது மற்றும் அதன் உலகளாவிய நலன்களைப் பின்தொடர்வதற்காக சுதந்திரமான ஜேர்மன்-ஐரோப்பிய இராணுவக் கட்டமைப்புகளை உருவாக்குகிறது - பெருகிய முறையில் அமெரிக்காவிற்கு எதிராகவும்.

'ஐரோப்பிய ஒன்றியம் இறுதியாக ஒரு வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதில் கூட்டு இணையம் மற்றும் ஏவுகணை பாதுகாப்பும் அடங்கும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்காப்புக்காகவோ அல்லது உலகெங்கிலும் உள்ள நெருக்கடியான பகுதிகளில் செயல்படுவதற்காகவோ கூட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களைப் பெறலாம்' என்று ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) தலைவர் Manfred Weber சமீபத்திய பேட்டியில் Der Spiegel க்கு தெரிவித்தார்.

அமெரிக்காவைப் பற்றி அவர் மேலும் கூறினார், “அமெரிக்காவின் பங்கு இந்த நேரத்தில் ஆரம்பக்கட்டமானது. ஆனால் நீண்ட காலத்திற்கு அவர்கள் நமது பாதுகாப்பு சக்தியாக இருக்க முடியாமல் போகலாம் ஆனால் ஆசியா பக்கம் திரும்ப வேண்டியிருக்கும். எனவே, ஐரோப்பிய ஒன்றியம் அதன் சொந்த வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையை நடத்த வேண்டும் மற்றும் நடைமுறை விவகாரங்களில் இறங்க வேண்டும். அணுசக்தி பாதுகாப்பு பற்றிய கேள்வியும் இதில் அடங்கும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei - SGP) உலக சோசலிச வலைத் தளமும் ஆரம்பத்திலிருந்தே ஆளும் வர்க்க போர்ச் சதியை வன்மையாக கண்டித்துள்ளன. ஒரு சக்திவாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஒழுங்கமைப்பது மற்றும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்துடன் அதை ஆயுதபாணியாக்குவதே இப்போதைய பணியாகும் என விளக்கியது. SGP இன் “மூன்றாம் உலகப் போர் வேண்டாம்! ஆயுதங்கள் மற்றும் போருக்கு பதிலாக உடல்நலம் மற்றும் வேலைக்காக பில்லியன்கள்! என்ற நிகழ்வு இதில் ஒரு முக்கியமான படியாக இருந்தது.

Loading