இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அதன் மூன்றாவது தேசிய மாநாட்டை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் மூன்றாவது தேசிய மாநாட்டை மே 14-16 திகதிகளில் நடத்தியது. நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் நிலைமை காரணமாக இணையவழியில் நடைபெற்ற இந்த முக்கியமான நிகழ்வில் தீவு முழுவதும் உள்ள கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

தொற்றுநோய், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி யுத்தம் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியினாலும் உக்கிரமடைந்த முதலாளித்துவத்தின் பிரமாண்டமான உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், சோ.ச.க. மாநாடு, ஒரு அசாதாரணமான அரசியல் நிலைமைகளின் கீழ் நடைபெற்றது.

4 ஏப்ரல் 2022 திங்கட்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை பதவி விலகக் கோரி, இலங்கையின் கொழும்பில் இலங்கையர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். (AP Photo/Eranga Jayawardena)

முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளன ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கமும் இலங்கையில் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஆட்சியும், பல வாரங்களாக இராஜபக்ஷவின் இராஜினாமாவைக் கோரி தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் வெகுஜன எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை எதிர்கொண்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்க சோ.ச.க. இன் தேசியத் தலைவருமான டேவிட் நோர்த், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அமெரிக்க சோ.ச.க. சார்பாக வாழ்த்துக்களை வழங்கி, மாநாட்டில் உரையாற்றினார். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய புகதிகளும் மாநாட்டுக்கு அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்திகளும் வாசிக்கப்பட்டன.

மாநாடு நடத்தப்பட்ட 'மிகவும் அசாதாரண சூழ்நிலைகளை' சுட்டிக்காட்டிய நோர்த் கூறியதாவது: 'எங்கள் பார்வையில், இலங்கைக்குள் நீங்கள் முன்னெப்போதும் இல்லாத பரிமாணங்களுடன் ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கின்றீர்கள். இலங்கையின் இந்த நெருக்கடியே, இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின்னர் உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய உலகளாவிய நெருக்கடிக்குள் விரிவடைந்து வருகிறது.

அவர் தொடர்ந்தார்: “இந்த மாநாடு எதிர்கொள்ளும் அடிப்படை சவால், நிகழ்வுகள் மற்றும் நிச்சயமாக இலங்கைக்குள்ளேயே வளர்ந்து வரும் புரட்சிகர நெருக்கடிக்கு, அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் அணுகுமுறையை தெளிவாக வரையறுப்பதே ஆகும். மற்றொரு வகையில், நீங்கள் தற்போது நடத்தி வரும் மாநாடு, புரட்சிகர நெருக்கடியின் மத்தியில் லெனின் ரஷ்யாவுக்குத் திரும்பிய பிறகு நடைபெற்ற முதலாவது 1917 ஏப்ரலில் நடந்த போல்ஷிவிக் கட்சியின் மாநாட்டுடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. ஒரு பூகோளப் போரின் மத்தியில், தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான தலைமையை வழங்கிய அரசியல் வேலைத்திட்டம் மற்றும் முன்நோக்கு வரையறுப்பது [போல்ஷிவிக்] கட்சிக்கு சவாலாக இருந்தது.

போல்ஷிவிக் கட்சியின் அந்த மாநாட்டில் லெனினின் போராட்டம் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் கட்சியை மறுசீரமைத்து, கட்சியை புரட்சிப் பாதையில் இருத்துவது, அதாவது அதை அதிகாரத்துக்கு கொண்டுவருவதே ஆகும் என்று நோர்த் சுட்டிக்காட்டினார்.

நோர்த் விளக்கினார்: 'விதிவிலக்கான நெருக்கடி நிலைமைகளின் கீழ், இலங்கையில் கட்சியின் கொள்கையை நிர்ணயிப்பதில், இந்த நெருக்கடியை அதன் சர்வதேச சூழலுக்குள் வைப்பது மிகவும் அவசியமானது என்பதை நாங்கள் முதலில் புரிந்துகொள்கிறோம்... நமது தொடக்கப் புள்ளி தேசியம் அல்ல, மாறாக சர்வதேச கட்டமைப்பாகும்... அந்த அடிப்படையில் மட்டுமே, இலங்கையிலான நெருக்கடி விரிவடைந்து கொண்டிருக்கும் சர்வதேச சூழலில் மட்டுமே, தொழிலாள வர்க்கத்திற்கு தேவையான புரட்சிகர நோக்குநிலையை அடைய முடியும்.'

விரிவான கலந்துரையாடலுக்குப் பின்னர், 'தொற்றுநோய், முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடி, வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சி மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) பணிகள்' என்ற பிரதான முன்னோக்குத் தீர்மானத்தையும், 'இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்” என்ற அவசரத் தீர்மானத்தையும் மாநாடு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

'கோவிட்-19 தொற்றுநோயை ஒழிப்பதற்கான அறிவியல் மூலோபாயம் மற்றும் ஏகாதிபத்திய போர் தயாரிப்புக்கு எதிரான வேலைத்திட்டம் மற்றும் அனைத்துலகக் குழுவால் தொடக்கிவைக்கப்பட்ட, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணி கட்டியெழுப்புவதற்கு' சோ.ச.க. பிரதான தீர்மானம் உறுதியளித்தது.

அனைத்துலகக் குழுவானது தொற்றுநோயை முதலாம் உலகப் போருடன் ஒப்பிட்டதை சுட்டிக் காட்டிய பின்னர், தீர்மானமானது, பேச்சுவார்த்தை மூலமான எந்த தீர்வும் அவர்களின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை கீழறுக்கும் என்பதால், போரின் பயங்கரங்கள் இருந்தபோதிலும், போரிடும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆளும் வர்க்கங்கள் எவ்வாறு அதைத் தொடர்ந்தன என்பதை விளக்கியது. போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் தலையீடும், அது அதிகாரத்தைக் கைப்பற்றி உலகின் சோசலிச மாற்றத்தை ஆரம்பித்து வைத்தமையுமே போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

ஆவணம் தொடர்ந்தது: “இன்று, உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் கீழ் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் சர்வதேசமயமாக்கபட்ட தொழிலாளர் வர்க்கம், ஏகாதிபத்திய நாடுகளில் அதே போல் இந்தியா மற்றும் இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலதாமதமான நாடுகளிலும், முதலாளித்துவத்தின் மிகவும் முற்றிப்போன அமைப்புரீதியான நெருக்கடியில், போராட்டங்களில் இணைந்துகொண்டுள்ளதுடன் முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலகத்தின் சோசலிச மாற்றத்திற்கான பாதையை எடுக்கின்ற அதே பணியையே எதிர்கொள்கின்றது.”

தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வகையான கொள்கைகளை இந்த தீர்மானம் அம்பலப்படுத்தியது: அவை, வைரஸ் கட்டுப்படுத்தப்படாமல் பரவினால் அது இறுதியில் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறும் “சமூகத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை பரப்புதல்” என்பதும் மற்றும் அதையே திருத்திக் கூறுகின்ற தடுப்பூசி மற்றும் முகக் கவசம் அணித்து “கட்டுப்படுத்தல்” என்பதுமாகும். இரண்டுமே வைரஸின் பரவலைத் தடுக்கத் தவறிவிட்டன, அதற்குப் பதிலாக ஆபத்தான புதிய மாறுபாடுகளுடன் கோவிட்-19 இன் உலகளாவிய எழுச்சிக்கு வழிவகுத்தன.

'சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பரப்புதல் மற்றும் கட்டுப்படுத்தல் என்ற உத்திகளுக்கு மாறாக, தொற்றுநோயை முற்றாக முடிவுக்குக் கொண்டுவரும் விஞ்ஞான மூலோபாயத்தை அனைத்துலகக் குழு ஆதரிக்கிறது. இது முதன்மையான தொற்றுநோயியல் நிபுணர்கள், வைராலஜிஸ்ட்கள் மற்றும் பிற விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்ட கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதுடன், கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகளாவிய ரீதியில் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதையும் உள்ளடக்கியதாகும்' என்று தீர்மானம் கூறியது.

அமெரிக்கா தலைமையிலான பிரதான ஏகாதிபத்திய சக்திகள், கொடிய தொற்றுநோய்களின் போதும் தங்கள் பிற்போக்கு புவிசார் அரசியல் நலன்களை ஆக்ரோஷமாக முன்னெடுத்து உலகப் போர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன, என்று ஆவணம் விளக்கியது. 'ஒரு மூன்றாம் உலகப் போரின் ஆபத்து, உலகளாவிய தொற்றுநோய் மற்றும் சமூகப் பேரழிவையும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும், அதாவது, அனைத்துலகக் குழு சோலசிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அதனது அறிக்கையில் கூறியவாறு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே போரைத் தடுக்க முடியும். அந்த அறிக்கை 18 பெப்ரவரி 2016 அன்று வெளியிடப்பட்டது.

கடந்த டிசம்பரில் 'ஆளும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தன' என்று சுட்டிக் காட்டிய தீர்மானம், “இப்போது, சர்வதேச அளவில் முதலாளித்துவத்திற்கு எதிரான தீர்க்கமான மோதல்களுக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு, இது பரந்த தாக்கங்களையும் படிப்பினைகளையும் கொண்டுள்ளது. இவையின்றி, தொழிலாள வர்க்கத்தால் அதன் சோசலிசப் புரட்சி வரலாற்று கடமையை இட்டு நிரப்ப முடியாது,” என்று தெரிவித்தது.

ஏகாதிபத்தியம் மற்றும் ஸ்ராலினிசம் இரண்டின் அனைத்து முகவர்களுக்கும் மாறாக, ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் எதிர்ப்புரட்சிகர பாத்திரம் பற்றிய லியோன் ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வின் அடிப்படையில் நின்றதால், சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மட்டுமே முன்கணிக்க முடிந்தது, என்று பிரேரணை விளக்கியது. சோவியத் தொழிலாள வர்க்கம் ஒரு அரசியல் புரட்சியில் மாஸ்கோ அதிகாரத்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக அதன் அதிகாரத்தை மீண்டும் நிறுவாவிட்டால், அதிகாரத்துவம் சோவியத் யூனியனை கலைத்து முதலாளித்துவத்தை மீட்டெடுக்கும் என்று ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அரசாங்கங்களின் பிற்போக்கு கொள்கைகளால் பெரிதும் தீவிரமடைந்த முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாக தெற்காசியாவில் முதலாளித்துவ ஆட்சி எதிர்கொண்டுள்ள மாபெரும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை இந்தத் தீர்மானம் விரிவாகக் கையாண்டது. தொற்றுநோய், கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு அவற்றின் குற்றவியல் பிரதிபலிப்பு, ஏகாதிபத்திய போர் உந்துதலுக்குப் பின்னால் அணிதிரண்டமை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய நகர்வுகளும் இதில் அடங்கும். இவை அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள எழுச்சியின் பாகமாக இந்தப் பிராந்தியத்தில் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சிக்கு எண்ணெய் வார்த்தன.

இந்த ஆவணம் அரசியல் முடிவுகளை எடுத்தது: “தொற்று நோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள நெருக்கடியானது சுதந்திரம் என்றழைக்கப்பட்ட்டதன் கீழ் தெற்காசியாவில் 1947-1948 இல் உருவாக்கப்பட்ட அரசுகளின் வரலாற்று பொருத்தமின்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இந்த அரச முறைமையானது தேசிய முதலாளித்துவத்தின் உதவியுடன் ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஸ்ராலினிச சோவியத் அதிகாரதுவத்துக்கு இடையிலான போருக்குப்-பிந்திய தீர்வின் பாகமாக உருவாக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்டமானது இந்து-மேலாதிக்க இந்தியா மற்றும் முஸ்லீம் பாகிஸ்தானாக வகுப்பு வாத வழியில் பிரிக்கப்பட்டது. இலங்கை ஒரு தனி அரசாக ஸ்தாபிக்கப்பட்டது. பிற்போக்கு அரசுகளையும் முதலாளித்துவ ஆட்சியையும் துக்கி வீசி, உலக சோசலிச ஒன்றியத்தின் பாகமாக, தெற்காசிய சோசலிக குடியசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதே தெற்காசியாவில் உள்ள பல மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கான ஒரே வழியாகும்.”

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கத்தினதும் முதலாளித்துவ ஆட்சியினதும் நெருக்கடி, எதேச்சதிகார ஆட்சியை நோக்கிய நகர்வு மற்றும் வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சியை விரிவாக ஆராய்ந்த தீர்மானம், அவற்றை ஒரு சர்வதேச சூழலில் வைத்து.

'சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்' என்ற அதன் இறுதிப் பகுதியில், ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சி கோட்பாட்டின் அடிப்படையில், இலங்கை மற்றும் தெற்காசியாவில் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான புரட்சிகர வேலைத்திட்டத்தை ஆவணம் விவரித்துள்ளது: “இந்தியா, இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலங்கடந்த நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தால், ஜனநாயக கடமைகளை அணுகவோ வெகுஜனங்களின் சமூக பிரச்சினைகளை தீர்க்கவோ முடியாது, என முன்கணித்தது. இந்த நாடுகளில் உள்ள முதலாளித்துவம் ஒருபுறம் ஏகாதிபத்தியத்துடன் கட்டுண்டுள்ளதுடன் மறுபுறம் புரட்சிகர தொழிலாளர் வர்க்கத்தைப் பற்றிய அச்சத்தில் உள்ளது. உலக சோசலிச புரட்சியின் பாகமாக, ஏழை விவசாயிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்கி, பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை நிறுவுகின்ற ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டுமே அந்த வரலாற்றுப் பணிகளை நிறைவேற்ற முடியும்.”

அவசரகாலத் தீர்மானம் பிரகடனம் செய்ததாவது: “கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் மிகவும் தீவிரமடைந்துள்ள உலக முதலாளித்துவத்தின் பெரும் நெருக்கடியின் சூழ்நிலையில் இலங்கையின் தற்போதைய அசாதாரண அரசியல் சூழ்நிலையை வைப்பதன் மூலம் மட்டுமே அதை சரியாக புரிந்து கொள்ள முடியும். இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் வளர்ந்து வரும் வெகுஜன இயக்கத்தை நோக்கிய கட்சியின் சரியான அரசியல் நோக்குநிலையை அத்தகைய சர்வதேச அணுகுமுறையின் மூலம் மட்டுமே அபிவிருத்தி செய்ய முடியும்.”

தொழிலாள வர்க்கம் ஒரு முக்கிய வகிபாகம் ஆற்றத் தொடங்கியுள்ள, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின் முக்கியத்துவத்தை விளக்கிய இந்த தீர்மானம், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக போராடுவதற்கு ஒரு சுயாதீனமான புரட்சிகர வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தியது. அத்தகைய அரசாங்கம் தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொள்ளும்.

மாநாட்டு கலந்துரையாடலின் முடிவில், பதவி விலகிய பொதுச் செயலாளர் விஜே டயஸ், மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட இரண்டு தீர்மானங்களும், அறிக்கைகளும் மற்றும் டேவிட் நோர்த்தின் உரை உட்பட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளின் எல்லா வாழ்த்துச் செய்திகளும், சோ.ச.க. அடிப்படையாகக் கொண்டுள்ள அனைத்துலக சோசலிச முன்னோக்கின் மீது வெளிச்சம் பாய்ச்சியது என்று குறிப்பிட்டார்..

இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து டயஸ் கூறியதாவது: புதிய பிரதமராக [ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்] ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு வரலாற்று நியமனமாகும். தேர்தலில் வாக்களில் வெற்றிபெற முடியாமல் தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த தனிநபரை பாராளுமன்றத்தின் ஆதிக்கப் பதவியான பிரதமர் பதவிக்கு நியமிக்கும் அரசியல் ஆபத்து தற்போது வெளிப்பட்டுள்ளது”.

விக்கிரமசிங்க அமெரிக்கா மற்றும் ஏனைய பெரும் வல்லரசு சக்திகளின் கொழும்புத் தூதுவர்களுடன் நடத்திய தொடர் கூட்டங்களை டயஸ் சுட்டிக்காட்டினார். பகிரங்கமாக கூறுவது போல் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையைச் சமாளிக்க அந்த நாடுகளிடம் நிதி உதவிகளை கோருவதற்காக அந்த கூட்டங்களில் கவனம் செலுத்தப்படவில்லை, மாறாக, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான இராணுவ-மூலோபாயத் தாக்குதலில் இலங்கையை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது பற்றிய பேச்சுக்களிலேயே கவனம் செலுத்தியதாக அவர் விளக்கினார். விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த அமெரிக்க இராஜதந்திர கடிதங்களை மேற்கோள் காட்டிய டயஸ், விக்ரமசிங்கவை அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே அதன் நலன்களுக்காக சேவை செய்யக்கூடிய முன்னணி முகவராக அங்கீகரித்தது என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) உட்பட முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் ஏனைய கட்சிகள், விக்கிரமசிங்கவின் பின்னால் அணிசேர்நு வருகின்றன என்று டயஸ் விளக்கினார். தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுக்கு அரசியல்ரீதியாக அடிபணியச் செய்ய செயற்படும் பல்வேறு போலி-இடது குழுக்களுக்கு எதிராக கட்சியானது அதன் அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தொழிற்சாலை, வேலைத் தளங்கள், பெருந் தோட்டங்கள் மற்றும் தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களில், தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கான போராட்டத்தையும், மற்றும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை நிறுவுவதற்கு தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான கட்சியின் போராட்டத்துடனான அதன் தொடர்பையும் சுருக்கமாக விவரித்தார். குறித்த அரசாங்கம், தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொள்ளும்.

மாநாட்டு பிரதிநிதிகள் புதிய மத்தியக் குழுவைத் தேர்ந்தெடுத்தனர். அந்தக் குழு கட்சியின் தலைவராக முந்தைய பொதுச் செயலாளர் விஜே டயஸை தேர்வு செய்துகொண்டதுடன், பொதுச் செயலாளராக முந்தைய துணைச் செயலாளர் தீபால் ஜயசேகரவையும், புதிய உதவிச் செயலாளராக சமன் குணதாசவையும் தேர்ந்தெடுத்துக்கொண்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியராக கே. ரத்நாயக்க, உதவி ஆசிரியராக வசந்த ரூபசிங்க, ஆகியோரும் பொருளாளராக விலானி பீரிசும் தெரிவு செய்யப்பட்டனர்.

Loading