மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நோர்வேயின் சமூக ஜனநாயக தொழிற்கட்சி அரசாங்கம் செவ்வாயன்று எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் முதல் நாளிலேயே தலையிட்டு வேலைநிறுத்த நடவடிக்கையை தடை செய்தது. ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து போரை நடத்தும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கங்கள், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை எவ்வாறு சட்டவிரோதமாக்குகின்றன என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.
குட்ரூன், ஓஸபேர்க் தெற்கு மற்றும் ஓஸபேர்க் கிழக்கு ஆகிய வடக்கு கடல் தளங்களில் உள்ள 74 மூத்த எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் ஹெட்ரூன், ஆஸ்டா ஹென்ஸ் ரீன் மற்றும் கிறிஸ்ரின் தளங்களில் உள்ள 117 தொழிலாளர்களும் புதன்கிழமை இணையவுள்ளனர். 5 சதவீதத்திற்கும் மேலான பணவீக்கம் மற்றும் அதிக எரிசக்தி விலைகள் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கு அபரிமிதமான இலாபம் கிடைக்கும் நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகளைக் கோருகின்றனர்.
ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தாலும், நோர்வேயின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அவர்களின் மூலோபாய நிலையின் காரணமாக வார இறுதியில் மொத்த எரிவாயு வெளியீடு 25 சதவிகிதம் மற்றும் எண்ணெய் 15 சதவிகிதம் குறைந்திருக்கும். இந்த விளைவு நோர்வே அரசாங்கத்திற்கும் மற்றும் பேர்லின், பாரிஸ் மற்றும் இலண்டனில் உள்ள முக்கிய ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் சகிக்க முடியாததாக இருந்தது. இவை ரஷ்யாவிலிருந்து வரும் விநியோகங்களுக்கு பதிலாக நோர்வேயின் இயற்கை எரிவாயுவை அதிகளவில் நம்பியுள்ளன.
எனவே வேலைநிறுத்தம் ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே வேலை நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நிலுவையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் கட்டாய ஊதிய வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இது ஊதிய முரண்பாடு குறித்து இறுதி நிர்ணயம் செய்ய அரசால் நியமிக்கப்பட்ட அமைப்பாகும்.
'முழு ஐரோப்பாவிற்கும் இத்தகைய பெரும் சமூக விளைவுகளை இந்த பிரச்சனை ஏற்படுத்தும்போது, எனக்கு பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லை' என்று தொழில்துறை மந்திரி Marte Mjøs Persen ஒரு அறிக்கையில் அறிவித்தார். 'எரிவாயு உற்பத்தியை இந்த அளவிற்கு நிறுத்த அனுமதிப்பது நியாயமற்றது' என்றார்.
இந்த முடிவின் வெளிப்படையான அரசியல் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டி, வெளியுறவு அமைச்சகம் அதன் சொந்த அறிக்கையை வெளியிட்டது. இது நோர்வே 'ஐரோப்பிய எரிசக்திக்கான பாதுகாப்பையும் ரஷ்யாவின் போருக்கு எதிராக ஐரோப்பிய ஒற்றுமையையும் பராமரிக்க அதன் சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும்' என்று கோரியது.
ஏகாதிபத்திய சக்திகளின் போரை அச்சுறுத்தும் தொழிலாளர்களின் எந்தவொரு தொழிற்துறை நடவடிக்கையும் அல்லது எதிர்ப்பும் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு, அரசு எந்திரத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தி தடைசெய்யப்படும் என்பது அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மற்றும் இந்த அச்சுறுத்தும் அறிக்கையிலிருந்து பெறப்படும் தர்க்கரீதியான முடிவாகும். மக்கள் எதிர்ப்பை நசுக்குவதற்கும், '... ஒற்றுமையை பேணுவதற்கும்' 'தன் சக்திக்குட்பட்ட அனைத்தையும்' நாடும் ஒரு ஆட்சியை ஒரு சர்வாதிகாரம் என்று அழைக்கப்பதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு.
அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைக்கு தனது ஒப்புதலின் முத்திரையை வழங்க எண்ணெய் தொழிலாளர்கள் சங்கம் விரைந்துள்ளது. Lederne தொழிற்சங்கத்தின் தலைவர் Audun Ingvartsen, தொழிலாளர்கள் கூடிய விரைவில் தங்கள் பணிகளுக்குத் திரும்புவார்கள் என்று உறுதியளித்தார். வேலைநிறுத்தம் முடிந்ததா என்று கேட்டதற்கு, 'ஆம்' என்று ராய்ட்டர்ஸிடம் கூறினார்.
நோர்வேயின் தொழிற்சங்கங்கள், தொழிற்கட்சியின் மிக முக்கியமான ஆதரவாளர்களில் ஒன்றாகும். அவர்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட, பெரிதும் ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் மத்தியப்படுத்தப்பட்ட கூட்டு பேரம் பேசும் முறைக்கு தலைமை தாங்குகின்றனர். நோர்வேயின் தொழிற்சங்க கூட்டமைப்பு LO (Landesorganisasjonen), 5 மில்லியனுக்கும் அதிகமான மொத்த மக்கள் தொகையிலும் மற்றும் சுமார் 3.5 மில்லியன் உழைக்கும் மக்களில் அண்ணளவாக 1 மில்லியன் உறுப்பினர்களை கொண்டுள்ளது.
சமூக சமத்துவமின்மையின் முன்னோடியில்லாத மட்டங்களில் ஆழ்ந்த செல்வாக்கற்ற அரசாங்கங்கள் பதவியிலிருந்து, உள்நாட்டில் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை மிதித்து மற்றும் வெளிநாடுகளில் போரை நடத்துகையில், நோர்வேயில் செவ்வாய்கிழமை நிகழ்வுகள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் அதிகரித்தளவில் வழக்கமானதொன்றாகி வருகின்றன. கடந்த மாத இறுதியில், லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் 20,000 க்கும் மேற்பட்ட கப்பல் தொழிலாளர்களினால் அச்சுறுத்தப்பட்ட வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்படுவதை உறுதிசெய்ய பைடென் நிர்வாகம் தலையிட்டது. தொழிலாளர்கள் ஊதிய உயர்வுக்காகவும், ஒரு பணி மாற்றத்தையாவது (shift) பெறுவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் பல தொழிலாளர்களை தங்கள் கார்களில் தூங்கச் செய்த ஒரு மிருகத்தனமான தற்காலிக தொழிலாளர் முறையை முடிவுகட்டவும் போராடுவதில் உறுதியாக இருந்தனர். ஆனால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, முக்கிய வர்த்தகப் பாதையில் ஏற்படும் எந்த இடையூறும் நினைத்துப் பார்க்க முடியாதது. ஏனெனில் அது ரஷ்யாவை ஒரு அரை-காலனி நிலைக்குக் குறைக்கும் நோக்கத்திற்கான அதன் போரை இது சீர்குலைக்கும்.
ஸ்பெயினின் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் கடந்த வாரம் Ryanair விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் ஊதியங்கள் மற்றும் நிலைமைகளை மேம்படுத்துவதற்காக நடத்திய வேலைநிறுத்தத்தை குற்றமானதாக்க தலையிட்டது.
ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசாங்கம் போர் முயற்சிகளுக்கு நிதியளிக்க தொழிலாளர்களின் ஊதியக் கோரிக்கைகளை எவ்வாறு நசுக்குவது என்பதைத் தீர்மானிக்க திங்களன்று தொழிற்சங்கம் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கூட்டுழைப்புவாத கலந்துரையாடலின் முதல் அமர்வில் சந்தித்தது. சான்சிலர் ஓலாப் ஷோல்ஸால் அழைக்கப்பட்ட 'ஒருங்கிணைந்த நடவடிக்கை' ஜேர்மனியின் பாரிய 100 பில்லியன் யூரோ மறுஆயுதமயமாக்கல் திட்டத்தின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்களின் முதுகில் சுமத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரிட்டனுக்கும் ஐரோப்பாவிற்கும் நோர்வே ஒரு முக்கிய எரிவாயு வினியோகஸ்தர் ஆகும். மேலும் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோவால் தூண்டிய ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து அதன் பங்கு இன்னும் அதிகரித்துள்ளது. 2021 இல், பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தில் நான்கில் ஒரு பங்கை நோர்வே கொண்டிருந்தது. மார்ச் மாதத்தில், அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான Equinor, செப்டம்பர் 2021 க்குள் Oseberg மற்றும் Heidrun வயல்களில் முறையே 1 பில்லியன் கன மீட்டர் மற்றும் 0.4 பில்லியன் கன மீட்டர் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க நோர்வே அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற்றதாக உறுதிப்படுத்தியது. இயற்கை எரிவாயு தேவைகளில் 30 சதவீதத்திற்கு ஏற்கனவே நோர்வேயை நம்பியிருக்கும் ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதற்காக நோர்வே அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஜேர்மன் துணை சான்சிலர் றொபேர்ட் ஹாபெக் ஒஸ்லோவிற்கு விஜயம் செய்தபோது இந்த அறிவிப்பு வந்தது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல.
ஜேர்மன் செய்தி இதழ் Der Spiegel அப்போது ஜேர்மனிய அரசாங்கம் ஜேர்மன் கடற்கரையில் திரவ இயற்கை வாயுவை, எரிவாயுவாக மாற்றும் திறன் கொண்ட சிறப்புக் கப்பல்களை நோர்வேயின் கூடுதலான 1.4 பில்லியன் கனமீட்டர் இயற்கை வாயுவை இந்த கோடையில் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக வழங்கும் என்று அறிவித்தது. ஜேர்மனிக்கும் நோர்வேக்கும் இடையே எரிவாயு குழாய் அமைப்பது குறித்து பரிசீலிக்க இருதரப்பு பணிக்குழுவை உருவாக்குவதாகவும் ஹாபெக் தனது விஜயத்தின் போது அறிவித்தார்.
ஏகாதிபத்திய சக்திகளின் போர் முயற்சிகளுக்கு எரிசக்தியை வழங்குவதோடு, ரஷ்யாவிற்கு எதிரான பாரிய இராணுவக் கட்டமைப்பில் நோர்வே அரசாங்கம் விருப்பமான பங்காளியாக உள்ளது. ரஷ்யாவுடன் ஒரு குறுகிய ஆர்க்டிக் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நோர்வே, சமீபத்திய ஆண்டுகளில் முக்கிய நேட்டோ பயிற்சிகளை பல சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பு இராணுவக் கூட்டணியின் பிரசன்னத்தின் பரந்த விரிவாக்கத்தை மேற்பார்வையிட்டவரும் மற்றும் 300,00 ஆட்பலமான விரைவு எதிர்த்தாக்கல் படையை உருவாக்கத் தொடங்கியுள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், 1990 களின் பிற்பகுதியிலிருந்து 2013 வரை இருமுறை நோர்வேயின் பிரதம மந்திரியாக பணியாற்றியவராவார். ஸ்டோல்டன்பேர்க்கின் இரண்டாவது முறை பதவிக்காலத்தில், நோர்வேயின் தற்போதைய பிரதம மந்திரியும், தொழிற்கட்சியின் தலைவருமான ஜோனாஸ் கார் ஸ்டோர் அவரது வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார்.
'இடது' என்று கூறிக்கொள்ளும் அரசாங்கம் நோர்வே எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை தடை செய்தது, நோர்வே தொழிலாளர்கள் இறுதியில் ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொற்றுநோய் அச்சுறுத்தல் உட்பட, வாழ்க்கைச் செலவு மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளில் தாங்க முடியாத அதிகரிப்புக்கு எதிராக போராடும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இது பொருந்தும்.
மக்களின் முதுகுக்குப் பின்னால், பெரும் வல்லரசுகள், தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் உட்பட அனைத்தும், ரஷ்யாவை உடைத்து அதன் செழிப்பான இயற்கை வளங்களின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் நோக்கில் ஒரு போருக்கு தியாகம் செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்துள்ளன.
ஆனால் இந்த பைத்தியக்காரத்தனமான திட்டத்தில் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். எண்ணெய் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் சுருக்கமாக இருந்தாலும், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக சக்தியையும் வெளிப்படுத்தியது. 200க்கும் குறைவான நோர்வே எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் சில நாட்களில் ஐரோப்பாவிற்கான எரிசக்தி ஏற்றுமதியை நான்கில் ஒரு பங்காகக் குறைக்க முடியும் என்றால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய அணிதிரட்டல் ஏகாதிபத்தியங்களின் போர் எந்திரத்தை விரைவாக நிறுத்தும். உலக சோசலிச வலைத் தளம் போராடுவது தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் இத்தகைய உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கத்தினை அபிவிருத்தி செய்வதற்காகவாகும்.