"ஒழுங்கை மீட்டெடுக்க தேவையானதைச் செய்யுங்கள்" என்று இலங்கையின் பதில் ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிடுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை மக்களுக்கு எதிரான அரசியல் சதியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, நேற்று அதிகாலை இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக நியமித்தார்.

விக்கிரமசிங்க உடனடியாக தீவு முழுவதும் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்த நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் பரந்த அதிகாரங்களைப் பயன்படுத்தினார். அவர் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை விதித்ததுடன் அதைச் செயல்படுத்துவதற்கு இராணுவத்தினரையும் பொலிஸாரையும் அணிதிரட்டினார். இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது போல், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் இறங்கினர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரின் அலுவலகத்தை கைப்பற்றுவதைத் தடுக்கும் தோல்வியுற்ற முயற்சியில், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தியதால் கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததோடு, குறைந்தது 84 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13 ஜூலை 2022 அன்று ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே கூட்டத்தினரின் ஒரு பகுதி (WSWS Media)

ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், விக்கிரமசிங்க இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு 'ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு தேவையானதை' செய்யுமாறு அறிவுறுத்தியதாக அச்சுறுத்தும் வகையில் அறிவித்தார். பாதுகாப்புப் படைகளின் பிரதானி, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் அடங்கிய குழுவொன்றை அவர் நியமித்துள்ளார்.

கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்புப் படைகள் தவறியுள்ள நிலையில், நிராயுதபாணியான பொதுமக்களை சுட்டுக்கொல்லுமாறு பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதையே ஜனாதிபதியின் உத்தரவு சமிக்ஞை செய்கின்றது.

'எங்களால் அரசியலமைப்பை கிழிக்க முடியாது' என்று விக்கிரமசிங்க கூறினார். 'பாசிஸ்டுகள் ஆட்சியைப் பிடிக்க அனுமதிக்க முடியாது. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த பாசிச அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார். எதிர்ப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கட்டிடங்கள், அரச கட்டுப்பாட்டிற்கு திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

என்ன ஒரு கேவலமான அவதூறு! சில நாட்களுக்கு முன்பு, இலட்சக் கணக்கான மக்களின் பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டத்தை அடுத்து, இராஜபக்ஷ நேற்றைய நிலவரப்படி பதவி விலகப் போவதாக அறிவித்தார். சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைந்தவுடன் தானும் பதவி விலகப் போவதாக விக்கிரமசிங்க அறிவித்தார்.

எவ்வாறாயினும், திரைக்குப் பின்னால், இருவரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்காக ஆயுதப்படைகளுடன் இணைந்து செயற்படுகின்றனர். கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் குடியகல்வு அதிகாரிகள் வர்த்தக விமானம் மூலம் செல்வதற்கான அவரது முயற்சிகளை தடுத்து நிறுத்திய பின்னர், இராஜபக்ஷ இராணுவத்தின் உதவியுடன் ஒரு குற்றவாளியின் பாணியில் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் சிங்கப்பூரில் புகலிடம் கோரிக்கொண்டு மாலத்தீவில் இருக்கும் அவர், இன்னும் இராஜினாமா கடிதத்தை அனுப்பவில்லை.

அவரது இணை சதிகாரரான விக்கிரமசிங்கவுக்கு பிரதமரும் இல்லை அமைச்சரவையும் இல்லை. அவர், தனது அழிந்து போன ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான ஆவார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பெரும்பான்மையான நாடாளுமன்றக் கட்சிகளால் ஜனாதிபதியாக ஆவதற்கான அவரது முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க [Source: United National Party Facebook] [Photo: United National Party Facebook]

விக்கிரமசிங்க கடுமையாகப் பாதுகாக்கும் அரசியலமைப்பானது, அமைச்சர்கள் மற்றும் அரசாங்கங்களை நியமித்தல் மற்றும் பதவி நீக்கம் செய்தல், அமைச்சுப் பதவிகளைப் பெறுதல், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் இராணுவத்தை அழைப்பது போன்ற எதேச்சதிகாரத்தின் அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கிய முற்றிலும் ஜனநாயக விரோத ஆவணமாகும்.

வெறுக்கப்படும் இராஜபக்ஷ-விக்கிரமசிங்க குழு, இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கி ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கும் போது, இந்த பதில் ஜனாதிபதி, தான் 'பாசிஸ்டுகளுக்கு' எதிராக 'ஜனநாயகத்தை' பாதுகாப்பதாக அறிவிப்பதற்கு, நாஸிகளால் முன்னர் பயன்படுத்தப்பட்ட பெரும் பொய் நுட்பத்தை பயன்படுத்துகிறார் -உண்மையில் இராஜபக்ஷ இராஜினாமா செய்ய வேண்டும் மற்றும் தாங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கடந்த மூன்று மாதங்களாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர்.

அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட நேர மின்வெட்டு போன்ற சகிக்க முடியாத நிலைமைகளை பெருந்திரளான உழைக்கும் மக்கள் சமாளிக்க வேண்டியுள்ளது -பசி அதிகரித்து காணப்படுவதோடு, பட்டினி பலரின் முகத்தில் வெளிப்படுகின்றது. பொது சுகாதார அமைப்பு சீர்குலைந்த நிலையில் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவசரகால நிதியைப் பெறுவதற்கு ஈடாக சர்வதேச நாணய நிதியம் கோரும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு விக்கிரமசிங்க உறுதிபூண்டுள்ளார். மேலும் தனியார்மயமாக்கல் மற்றும் பொதுச் செலவினங்களில் ஆழமான வெட்டுக்கள் உட்பட, இந்தக் கொள்கைகள், பெரும்பான்மையான மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை வியத்தகு முறையில் மோசமாக்கும்.

ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், நாட்டின் ஆழமான பொருளாதார நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்கான சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலுக்கு ஆதரவளிக்கின்றன. வெகுஜன எழுச்சியைத் தடுத்து நிறுத்துவதற்கும், சர்வகட்சி, இடைக்கால அரசாங்கம் என்ற அரசியல் சாணக்கியத்தின் பின்னால் அதை வழிநடத்துவதற்கும் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், இராஜபக்ஷ-விக்கிரமசிங்கவின் சதி திட்டத்துக்கான கதவைத் திறந்து விட்டன.

விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்போது, எந்தவொரு இடைக்கால அரசாங்கத்தின் வடிவத்தையும் அதன் கொள்கைகளையும் அவர் தீர்மானிப்பார். எதிர்வரும் புதன்கிழமை புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக பாராளுமன்ற சபாநாயகரால் இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், இராஜபக்ஷ தனது இராஜினாமாவை சமர்ப்பிக்காததால் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பிரதமரை நியமிக்குமாறு விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் விக்கிரமசிங்கவை தற்காலிக ஜனாதிபதியாக நியமித்ததற்கு எதிராக பலவீனமான எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ள போதிலும், அவர்களும் அவரைப் போலவே ஒரு புதிய சுற்று பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை கட்டவிழ்த்துவிடக் கூடும் என்பதையிட்டு அச்சமடைந்துள்ளனர். வலதுசாரி ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளதாவது: “ஒரு ஆசனத்தைக் கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பிரதமராக நியமிக்கப்படுகிறார். இப்போது அதே நபர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்... என்ன ஒரு கேலிக்கூத்து. என்ன ஒரு சோகம்.”

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள் 'முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை' தூண்டிவிடும் அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக எச்சரித்தார். “உழைக்கும் மக்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்கு மாறாக, அவர் இராஜபக்ஷ-விக்கிரமசிங்க சதிக்கு உதவிய இராணுவத்திடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்.

'நாங்கள் முப்படைகளிடமும் பொலிஸாரிடமும் மக்களுக்கு செவிமடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்,' என்று திஸாநாயக்க அறிவித்தார். 'பாதுகாப்புப் படைகள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு கும்பலைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மக்களுடன் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,' என அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் புரட்சிகரமானது என்றும் மார்க்சிஸ்ட் என்றும் பொய்யாகக் கூறிக்கொண்டு, சிங்கள இனவாத அரசியலில் மூழ்கிப் போயுள்ள ஒரு கட்சியான ஜே.வி.பி., இப்போது முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க வெறித்தனமாக முயற்சிக்கின்றது. பெரும் வர்த்தகர்கள் மற்றும் நாட்டின் சர்வதேச கடன் வழங்குபவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக திஸாநாயக்க தன்னை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தங்களது போராட்டங்களை காட்டிக் கொடுத்து வரும் தொழிற்சங்கங்களில் இருந்துப் சுயாதீனமாக, தொழிற்சாலைகள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் பெருந்தோட்டங்கள் முழுவதிலும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைத்துக்கொண்டு, தொழிலாள வர்க்கம் பிரச்சினைகளை தனது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஒரு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கான ஆதரவை முற்றாக நிராகரிப்பதுடன், அதனால் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் எந்த அவசர பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என அறிவிப்பதுடன் தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க நலன்களுக்காக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராட தலையிடாவிட்டால், அது சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கே வழி வகுக்கும் என எச்சரிக்கின்றது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல், வங்கிகள் மற்றும் பிரமாண்டமான கூட்டுத்தாபனங்களை தேசியமயமாக்குதல் மற்றும் பில்லியனர்களின் சொத்துக்களைக் கைப்பற்றுதல் உட்பட, அத்தகைய அரசியல் போராட்டத்திற்கான அடிப்படையாக, ஒரு தொடர் கொள்கைகளை கட்சி முன்வைத்துள்ளது.

முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசின் கட்டமைப்பிற்குள் தற்போதைய வேதனையான நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வு கிடையாது என்று அது வலியுறுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை அடித்தளமாகக் கொண்டுள்ளது.

Loading