இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை பாராளுமன்றம் நேற்று வாக்களித்த 223 பாராளுமன்ற உறுப்பினர்களில் 134 பேரின் வாக்குகளுடன் ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாக நியமித்தது. ஏனைய வேட்பாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முறையே 82 மற்றும் 3 வாக்குகளைப் பெற்றனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை அதன் எதேச்சதிகார பலத்துடன் ஏற்றுக்கொண்டார். ஜூலை 9 அன்று நடந்த பாரிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி பின்னர் இராஜினாமா செய்த கோட்டாபய இராஜபக்ஷவின் எஞ்சிய இரண்டு வருட பதவிக் காலத்தை அவர் நிறைவேற்றுவார்.
இது முற்றுகையிடப்பட்ட ஆளும் வர்க்கமாகும். உழைக்கும் மக்களுக்கு ஜனாதிபதியை தெரிவு செய்வதில் எந்த கருத்தும் இல்லை என்பது மட்டுமல்லாமல் முற்றாக ஒதுக்கப்பட்டுள்ளனர். பலத்த ஆயுதம் ஏந்திய படையினர், பொலீஸ் மற்றும் தடுப்புகளால் சூழப்பட்ட கோட்டையாக மாற்றப்பட்ட பாராளுமன்றத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
விக்கிரமசிங்கவிற்கு எந்த மக்கள் ஆதரவும் இல்லாத மக்கள் மத்தியில் பரவலாக வெறுக்கப்படுகிறார். 2020 தேர்தலில் முற்றிலும் அழிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரே பாராளுமன்றப் பிரதிநிதி அவர் மட்டுமே. இருந்தபோதிலும், மே மாதம் மஹிந்த இராஜபக்ஷ பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்ட போது விக்கிரமசிங்க பிரதமராகவும், கோட்டாபய இராஜபக்ஷ தப்பியோடிய போது பதில் ஜனாதிபதியாகவும், தற்போது ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். ஏற்கனவே கொழும்பு மற்றும் பிராந்திய நகரங்களில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு தளங்களில் அவர் பதவி விலகக் கோரப்படுகின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன ஆணைகளை இரக்கமின்றி சுமத்துவதற்கும் கடந்த மூன்று மாதங்களாக வெடித்துள்ள மக்கள் எழுச்சியின் கழுத்தை நெரிப்பதற்கும் விக்கிரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி பதவிக்கு முயன்றது உழைக்கும் மக்களின் துயரங்களை போக்குவதற்கான வாக்குறுதிகளுடன் அல்ல, மாறாக இலங்கை ஆளும் வர்க்கம், சர்வதேச நிதி மூலதனம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்பில் முதலாளித்துவ 'ஒழுங்கை' மீண்டும் நிலைநிறுத்தக்கூடிய வேட்பாளராக முன்வந்தார்.
அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தல், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துதல் மற்றும் எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு சுதந்திரம் வழங்குதல் ஆகியவையே ஜனாதிபதியாக விக்கிரமசிங்கவின் முதல் நடவடிக்கைகளாகும். எதிர்பாபளர்களை அவர் “பாசிஸ்டுகள்” என்று கண்டனம் செய்தார். நேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, மக்கள் எழுச்சிக்கு எதிராக அவர் ஒரு போரை அறிவித்தார். 'நீங்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமித்தால், அது ஜனநாயகம் அல்ல, சட்டத்திற்கு எதிரானது,' என்று அவர் அறிவித்தார். அந்த அறிவித்தலை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, பாராளுமன்றக் கட்டிடத்தில் காவலில் இருந்த பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்கச் சென்றார்.
விக்கிரமசிங்க, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிராக தன்னைச் சுழ அணிதிரளுமாறு அனைத்து ஸ்தாபனக் கட்சிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார். 'இலங்கை மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளது... முன்னால் பெரிய சவால்கள் உள்ளன,' என்று அவர் அறிவித்தார் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த இராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு தன்னுடன் ஒன்றாக இணைந்து செயல்படுமாறு ஒரு சிறப்பு வேண்டுகோளும் விடுத்தார். முதலாளித்துவ வர்க்கம் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறைக்கு தயாராகும் அதே வேளை, எதிர்க்கட்சிகளோ அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஜனாதிபதி பதவிக்கு அழகப்பெருமாவை ஆதரித்த பிரேமதாச, 'பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வந்து இந்த நாட்டைக் காப்பாற்ற… எதிர்க்கட்சிகள் எங்களின் உச்சபட்ச ஆதரவை வழங்கும்...' என்று கூறி, ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக உடனடியாகத் தெரிவித்தார். அழகப்பெருமவும் அவருடன் சேர்ந்துகொண்டார். 'ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான கருத்தொற்றுமை அடிப்படையிலான கொள்கை வகுப்பிற்கு ஆதரவளிப்பதே எனது முயற்சியாகும்,' என்று அழகப்பெரும இழிந்த முறையில் அறிவித்தார்:
சர்வதேச நாணய நதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பொலிஸ்-அரசு அடக்குமுறையை மக்களுக்கு எதிராக செயல்படுத்துவதில் முழு ஜனநாயக விரோத பாராளுமன்ற கும்பலும் உறுதிபூண்டுள்ளது. விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை அமல்படுத்துபவராகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகவும், தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு எதிரான இரத்தம் தோய்ந்த அரச வன்முறைக்கு ஆதரவாகவும் இருந்த, அவரது பல தசாப்த கால அரசியல் சாதனையின் காரணமாக ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விக்கிரமசிங்க 1977 இல் முதன்முதலில் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வலதுசாரி ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மருமகன் என்ற முறையில், ஐ.தே.க. அரசாங்கத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் அமைச்சு அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இந்த நாட்களிலேயே, விரிவான எதேச்சதிகாரத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஸ்தாபிப்பதற்காகவும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை பேரழிவிற்குள் தள்ளிய, பரந்தளவிலான திறந்த சந்தை பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்தவும் ஐ.தே.க. அரசாங்கம் அரசியலமைப்பை மீண்டும் எழுதுவதில் ஈடுபட்டிருந்தது.
வெகுஜன எதிர்ப்பு வெடித்தபோது, 1980இல் வேலைநிறுத்தம் செய்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அரச ஊழியர்களை பதவி நீக்கம் செய்த ஜயவர்த்தனவின் அமைச்சரவையில் அவர் அங்கம் வகித்தார். கல்வி அமைச்சராக அவர், 1981ல் பொதுக் கல்விக்கான அரசாங்க செலவை வெட்டிக் குறைக்கும் இழிவான கல்வி வெள்ளை அறிக்கையை கொண்டு வந்தார்.
அதன் சந்தை சார்பு கொள்கைகளின் தாக்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான வெகுஜன எதிர்ப்பிற்கு ஆப்பு வைப்பதற்காக, ஐ.தே.க. 1983 ஜூலையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தமிழ்-விரோத படுகொலைகளில் உச்சக்கட்டத்தை அடைந்த, தமிழ்-விரோத பிரச்சாரம் மற்றும் ஆத்திரமூட்டல்களை நாடியது. ஐ.தே.க. ஏற்பாடு செய்த குண்டர்களால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் எரிக்கப்பட்டன மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.தே.க. மற்றும் அதைத் தொடர்ந்து வந்த கொழும்பு அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட பிற்போக்கு இனவாதப் போரின் தொடக்கத்தை இந்தப் படுகொலை குறித்தது.
1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரின் தந்தையான ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் கீழ் இருந்த ஐ.தே.க. அரசாங்கம், தீவின் தெற்கில் உள்ள வேலையற்ற கிராமப்புற இளைஞர்களிடையே அதிகரித்து வந்த அதிருப்தியை நசுக்குவதற்காக, கட்டுப்பாடற்ற வன்முறை அலையை கட்டவிழ்த்து விட்டது. ஆயுதப் படைகளும் அவர்களுடன் தொடர்புடைய கொலைப் படைகளும் குறைந்தது 60,000 இளைஞர்களைக் கண்மூடித்தனமாக கொன்றன.
அந்த நேரத்தில், இப்போது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் பாதுகாவலராகக் காட்டிக் கொள்ளும் விக்கிரமசிங்க, பேர்போன படலந்த சித்திரவதைக் கூடங்களில் இளைஞர்கள் சித்திரவதை மற்றும் கொலைகளை மேற்பார்வையிட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் ஆளும் வர்க்கத்திற்காக இழிந்த வேலையைச் செய்வதில் மிக நெருக்கமாக தொடர்புடையவர் என்பதால்தான், மற்றொரு இரத்தக்களரி ஒடுக்குமுறை உட்பட எல்லா வழிகளிலும் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தனவைப் போலவே, விக்கிரமசிங்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட கால அடியாளே. 2015ல் மகிந்த இராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றி மைத்திரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்த அமெரிக்காவினால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையில் அவர் முக்கிய பங்கு வகித்தார். வாஷிங்டன் மகிந்த இராஜபக்ஷவுக்கு விரோதமாக இருந்தது, 2009ல் புலிகளை நசுக்கிய போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு அவர் பொறுப்பு என்பதால் அல்ல, மாறாக பெய்ஜிங்குடனான அவரது நெருங்கிய உறவுகளின் காரணமாகவே ஆகும். சிறிசேனவின் கீழ் பிரதமராக இருந்த விக்கிரமசிங்க, அமெரிக்காவிற்கான வெளியுறவுக் கொள்கையை வியத்தகு முறையில் மறுசீரமைப்பதிலும், சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர்த் திட்டத்தில் இலங்கையை ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
விக்கிரமசிங்க ஏற்கனவே பரந்த அளவில் வெறுக்கப்பட்டவர். அரசாங்கத்தின் சரியான அமைப்பு என்னவாக இருந்தாலும், அதன் நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது: அது, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களின் இழப்பில் செல்வந்த பெருநிறுவன உயரடுக்கு மற்றும் சர்வதேச நிதியாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே ஆகும். எந்தவொரு பொருளுக்கும் எந்த சலுகையும் வழங்க ஆளும் வர்க்கத்திடம் பணம் இல்லை. ஏற்கனவே பரவலான துயரத்தை உருவாக்கியுள்ள நீண்டகால தட்டுப்பாடு மற்றும் விண்ணைத் தொடும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் மேல் அடுத்த அரசாங்கம் அதிக கஷ்டங்களையும் துன்பங்களையும் குவிக்கும்.
முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) போன்ற போலி-இடது அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை மதிப்பிழந்த பாராளுமன்றம் மற்றும் முதலாளித்துவக் கட்சிகள் மூலம் தீர்க்க முடியும் என்ற மாயையை தொடர்ந்து பரப்பி வருவதாக சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கிறது. விக்கிரமசிங்கவின் இராஜினாமாவைக் கோரும் அதேவேளை, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கான எதிர்க்கட்சிகளின் அழைப்பை அவர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர் – இந்தக் கட்சிகள், நேற்றைய தினம் விக்கிரமசிங்கவுடன் 'நாட்டைக் காப்பாற்ற', வேறுவிதமாகக் கூறினால், முதலாளித்துவத்தைக் காப்பாற்றுவதற்குத் தங்கள் விருப்பத்தை அறிவித்த அதே கட்சிகளே ஆகும்.
சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் எதிரான அரசியல் பாதையை எடுக்கவும், அவர்களின் சொந்த சுயாதீனமான போராட்ட அமைப்புகளை நிறுவவும் அழைப்பு விடுக்கிறது. அனைத்து மதிப்பிழந்த முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க அடியாட்களிடமிருந்து முற்றிலும் சுயாதீனமாக, தங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களால் நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இளைஞர்களையும் கிராமப்புற ஏழைகளையும் தன் பக்கம் அணிதிரட்டுவதன் மூலம், தொழிலாள வர்க்கம் சோசலிசக் கொள்கைகளுக்கு உறுதிபூண்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைக்கும். இது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.