மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொடிய நோயான கோவிட்-19 பரவுவதை தடுக்க, அதற்கு ஆளானவர்கள் தனிமைப்படுத்தப்படுவதை இனி பரிந்துரைக்கப் போவதில்லை என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வியாழக்கிழமை அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நோய்க்கு ஆளானவர்களை ‘10 நாட்கள் வரை உயர்தர முகக்கவசம் அணியவும், 5வது நாளில் பரிசோதனை செய்து கொள்ளவும்’ அது கூறுகிறது.
CDC இன் செய்திக்குறிப்பு கோவிட்-19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை அது ஏற்கனவே குறைத்ததை மீண்டும் வலியுறுத்துகிறது, அதாவது நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஐந்து நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஐந்தாவது நாளுக்குப் பின்னர் ‘அறிகுறிகள் குறையத்தொடங்கினால்’, ‘உங்கள் தனிமைப்படுத்தலை நீங்கள் முடித்துக்கொள்ளலாம்’ என்றும் அது வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது. ‘மிதமான’ அல்லது ‘கடுமையான’ நோய் பாதிப்பாளர்களுக்கு மட்டுமே 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த பரிந்துரைக்கிறது, அதேவேளை, நோய்க்கிருமியின் ‘இலேசான’ பாதிப்பு உள்ளவர்களும் அதை மற்றவர்களுக்கு பரப்பலாம் என்பதுடன், அவர்களும் கூட மிகவும் பலவீனமடையலாம் மற்றும் நெடுங்கோவிட் நோய்க்கு ஆளாகலாம் என்ற உண்மையை அது புறக்கணிக்கிறது.
ஓமிக்ரோன் மாறுபாடும் அதன் பல துணைமாறுபாடுகளும், நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கும் இரண்டு அளவு தடுப்பு மருந்துகளின் திறனைக் கடுமையாக அரித்துவிட்டதாகக் காட்டும் பெரும்பாலான தரவுகள் உள்ளபோதிலும், mRNA தடுப்பூசிகளின் இரண்டு அளவுகள் போடப்படுவது ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதைக் குறிக்கும்’ என்ற வரையறைக்கு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எந்த மாற்றத்தையும் வெளியிடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்றுநோயால் ஏற்படும் ஆபத்தின் அளவைப் பற்றிய முக்கிய நடவடிக்கையாக, வைரஸ் பரவல் தொடர்புபட்ட பின்தங்கிய குறிகாட்டியான மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் விகிதங்களைத் தொடர்ந்து தான் பயன்படுத்தப் போவதாகவும் அமைப்பு மீளுறுதி செய்தது.
வியாழனன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், CDC இன் செய்தித் தொடர்பாளர் கிரெட்டா மாசெட்டி, “தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசிகள், மற்றும் சிகிச்சைகள் போன்ற பல கருவிகளுடன் நாம் ஒரு வலுவான இடத்தில் இருக்கிறோம்…” என்று கூறி மாற்றங்களை நியாயப்படுத்த முயன்றார். “தொற்றுநோய் இனி நம் அன்றாட வாழ்க்கையை கடுமையாக சீர்குலைக்காத” வகையிலான ஒரு கட்டத்தில் உள்ளது என்று அவர் கூறியதுடன், “கோவிட்-19 தொடர்ந்து இங்கு தங்கும் என்பதையும் நாங்கள் அறிவோம்” என்று அச்சுறுத்தலாகக் கூறினார்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, கோவிட்-19 நோயால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான நோய்தொற்றுக்களும் மற்றும் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான இறப்புக்களும் நிகழப் போவதற்கான அடிப்படையாக இது இருக்கும், அத்துடன் பொது சுகாதார நடவடிக்கைகள் அதிகரித்தளவில் இல்லாமல் இருக்கும் மற்றும் வெகுஜன மரணம் தினசரி நிகழ்வாக இருக்கும். குரங்கம்மை, போலியோ அல்லது வேறு ஏதேனும் நோய்கள் எதுவானாலும், புதிய மாறுபாடுகள் மற்றும் முழுப் புதிய நோய்தொற்றுக்களாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
புதிய விதிமுறைகள் என்பது, பள்ளிகளில் நோய்தொற்று வெளிப்பட்டதன் பின்னர், குழந்தைகளுக்கு பின்பற்றப்படும் ‘test to stay’ கொள்கை கைவிடப்படுவதாகவும் அமைப்பு வெளிப்படையாகக் குறிப்பிட்டது. அமெரிக்காவில் மட்டும் குறைந்தது 1,736 குழந்தைகளை கோவிட்-19 கொன்றுள்ளது, அதிலும் இது கணிசமாக குறைத்து மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாக இருக்கலாம், மேலும் எண்ணற்ற இளம் குழந்தைகளிடையே அது நெடுங்கோவிட் நோயையும் ஏற்படுத்தியது என்ற உண்மை ஒருபுறமிருக்க, இந்த கொடிய நோய் பரவலைத் தடுக்க பள்ளிகளில் இனி எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது.
எவ்வாறாயினும், குழந்தைகளுக்கான மரண அச்சறுத்தலைப் புறக்கணிப்பது, அதிகமோ அல்லது குறைவோ அது அரசின் கொள்கையாக உள்ளது. CDC வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட அதே நாளில், ஜனநாயகக் கட்சியின் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் பைடென் நிர்வாகத்தின் கோவிட்-19 தொடர்பான நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜாவை பேட்டி கண்டார். குழந்தைகள் மீதான வைரஸின் தாக்கம் என்பது ஒரு தலைப்பாக இருந்தது. பேட்டியின் போது, சாண்டர்ஸ், கோவிட்-19 நோயால் ‘குழந்தைகள் … இறக்கவில்லை’ என்ற அசாதாரண கூற்றை வெளியிட்டார்.
இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், சாண்டர்ஸை திருத்த டாக்டர் ஜா எந்த முயற்சியும் எடுக்கவில்லை! அதற்கு பதிலாக அவர் சாண்டர்ஸின் பொய்யை மேலும் கட்டியெழுப்பியதுடன், பள்ளிகளுக்கான CDC இன் புதிய வழிகாட்டுதல்களை நியாயப்படுத்தியதுடன், “ஒவ்வொரு குழந்தையும் ஆண்டு முழுவதுமாக பள்ளியில் நேரடியாக, முழு நேரம் கல்வி பயிலக்கூடிய ஒரு பள்ளி ஆண்டை நாம் எதிர்நோக்க வேண்டும். அதைச் செய்வதற்கான அனைத்து திறனும் நம்மிடம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன், மேலும் அது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய தரமாக இருக்க வேண்டும்” என்பதையும் அவர் உறுதிபடக் கூறினார். டாக்டர். ஜாவின் செயற்பாட்டாளர்களாக ‘ஆசிரியர்களின் சங்கங்கள்’ இருக்கும், அவர்களிடமிருந்து CDC இன் புதிய வழிகாட்டுதல்கள் பற்றிய ‘சாதகமான மதிப்புரைகளை’ அவர் பெற்றார்.
மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல கட்டாயப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, முதலாளித்துவ அரசின் பெயரளவிலான பொது சுகாதார அதிகாரிகள், முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்களின் இடையிலான சக்திகளின் தெளிவான ஒருங்கிணைப்பு உள்ளது, அப்போதுதான் முதலாளித்துவ உயரடுக்கு, மற்றும் அவர்களின் ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்க அடியாட்களின் செல்வச் செழிப்பிற்காக குழந்தைகளின் பெற்றோர்களை தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும்படி மிக எளிதாக கட்டாயப்படுத்த முடியும்.
CDC இன் புதிய வழிகாட்டுதல்கள், கொள்கை ரீதியான விஞ்ஞானிகள் மற்றும் கோவிட் எதிர்ப்பு ஆதரவாளர்கள் மத்தியில் சமூக ஊடகங்களில் வியாழனன்று எதிர்ப்பின் ஒரு பெரும் வெள்ளத்தைத் தூண்டியது, பலர் உலக சோசலிச வலைத் தளத்தில் நேரடியாக கருத்து தெரிவித்தனர்.
பாஸ்டன் பல்கலைக்கழக பொது சுகாதார பள்ளியின் தொற்றுநோயியல் உதவி பேராசிரியரான டாக்டர். எல்லி முர்ரே, “நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் விகிதங்கள் தொடர்ந்து அதிகமாக இருந்தாலும், அவர்கள் குறைவான பாதுகாப்புக்களை அறிவுறுத்துவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும், அவர்கள் மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திரும்பப்பெறும் அதே நேரத்தில் குறைவான பரிசோதனைகளுக்குப் பரிந்துரைப்பதைக் கண்டு நான் இன்னும் ஏமாற்றமடைந்தேன். குறைவான பரிசோதனைகளைக் கொண்டு இந்த வழிகாட்டுதலின் தாக்கத்தை எங்களால் சரியாக மதிப்பிட முடியாது” என்று உலக சோசலிச வளைத் தளத்திடம் தெரிவித்தார்.
CDC இன் அறிவிப்புக்கு, முன்னணி கோவிட் எதிர்ப்பு ஆர்வலர்களில் ஒருவரான டானா பாரிஷ் கடுமையாக பதிலளித்தார், உலக சோசலிச வலைத் தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார், “புதிய CDC வழிகாட்டுதல் என்பது அதன் சவப்பெட்டியில் உள்ள உருவக ஆணியாகும், மேலும் CDC ஐ நம்பியிருக்கும் எண்ணற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் சவப்பெட்டியில் உண்மையான ஆணியாக இருக்கும். உடலின் அனைத்து உறுப்புகளிலும் பரவி நிலைத்து, பக்கவாதம், மாரடைப்பு, உறுப்பு பாதிப்பு நோய்கள், டிமென்ஷியா மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தை உண்டாக்கும் கொடிய காற்றில் பரவும் வைரஸின் பரவலை அவை நேரடியாக ஊக்குவிக்கின்றன. பொது சுகாதாரத்தின் மிக அடிப்படைக் கோட்பாடு: எந்த தீங்கும் செய்யாதே.'
“தடுப்பூசிகள் மற்றும்/அல்லது குறைவான கடுமையான நோய் அவர்களைப் பாதுகாக்கும் என்று பொதுமக்களை அவர்கள் மீண்டும் தவறாக வழிநடத்துகிறார்கள். ஆனால் அது நீண்டகால சேதத்தைத் தடுக்காது, மேலும் இது பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தியாகும். தெளிவாகச் சொல்வதானால், அறிகுறியற்ற அல்லது இலேசான அறிகுறியுள்ள நோய்தொற்று, நெடுங்கோவிட் நோய் ஏற்படக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத உச்சபட்ச ஆபத்திற்கு அது உங்களை இட்டுச் செல்லும். ஆரம்ப நோய்தொற்று இப்போது பெரும்பாலான மக்களுக்கு பிரச்சினையாக இல்லை; மாறாக நீண்ட கால சேதம் தான் பிரச்சினையாக உள்ளது.”
புதிய வழிகாட்டுதலின் பொறுப்பற்ற மற்றும் சமூக விரோதத் தன்மை பற்றி பல தொற்றுநோயியல் நிபுணர்களும் மற்றும் காற்றுவழி நோய் பரவல் தொடர்பான நிபுணர்களும் பேசியுள்ளனர். முகக்கவசங்கள் மற்றும் சுவாசக் கருவிகள் பற்றிய நிபுணர் நிக்கோலஸ் ஸ்மித் உலக சோசலிச வலைத் தளத்திற்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்தார், “குரங்கம்மை நோயுடன் கோவிட்-19 நோயும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், வழிகாட்டுதல்களை நீக்குவதற்கான முடிவானது, அமெரிக்கர்களின் ஆரோக்கியம் அல்லது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள பொருளாதாரத்தின் மீது இரண்டு வைரஸ்களும் ஏற்படுத்தும் சேதத்தை இனி அரசாங்கத்தின் குறிக்கோள் நிறுத்தாது, அதற்குப் பதிலாக இடைத்தேர்தல்களில் வாக்குகளைப் பெறுவதில் தான் அது கவனம் செலுத்தும் என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும்.”
“2020 தேர்தலின் போது, 220,000 பேர் இறப்பதற்கு காரணமான எவரும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கக்கூடாது என்றும், அந்நிகழ்வு முக்கியமாக முகக்கவசம் அணிவதற்கான முன்மாதிரியாக இருந்தது என்றும் ஜனாதிபதி பைடென் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதி பைடென் இப்போது 600,000 க்கும் மேற்பட்ட இறப்புக்களுக்கு பொறுப்பாளியாக உள்ளார், ஆயினும் கூட, முகக்கவச பயன்பாட்டை தளர்த்த ஊக்கப்படுத்துகிறார். தடுக்கக்கூடிய கொடிய மற்றும் பலவீனப்படுத்தும் இரண்டு வைரஸ்களிலிருந்து தொழிலாளர்கள் அல்லது பொதுமக்களைப் பாதுகாக்க தொடர்ந்து மறுக்கப்படுவதானது, இறப்பு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையே குறிக்கிறது.”
உலக சுகாதார வலையமைப்பின் இணை நிறுவனரான யானீர் பார்-யாம், “நெடுங்கோவிட் காரணமான நோய், இறப்பு மற்றும் இயலாமை ஆகியவற்றைத் தடுக்க உதவும் பாதுகாப்புக்களை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தொடர்ந்து கைவிடுகிறது. இந்த சூழலில், நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும். கோவிட்-19 மற்றும் குரங்கம்மை ஆகிய இரண்டு தொற்றுநோய்களுக்கும் தடுப்பு நடவடிக்கை தான் சிறந்த பதிலாகும்” என எச்சரித்தார்.
கோவிட்-எதிர்ப்பு பிரச்சாரகர் லாசரஸ் லோங் இவ்வாறு எழுதினார், “இது பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் இது நடப்பது முரண்பாடாக உள்ளது. அதிகமான ஆசிரியர்கள் நோய்வாய்ப்படுவார்கள், மேலும் குழந்தைகள் இன்னும் தரமான கல்வியை இழக்க நேரிடும். மாற்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும், கல்லூரி மாணவர்கள் அல்லது இராணுவப் பணியாளர்கள் போன்றவர்கள் அவர்கள் தகுதியற்றவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் அமெரிக்கர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல, மாறாக பைடெனின் அரசியல் ஆரோக்கியத்திற்காக மேற்கொள்ளப்படுகின்றன.”
எவ்வாறாயினும், நாட்டின் தலைமை பொது சுகாதார அமைப்பான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தனது பொறுப்பை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது. அமெரிக்க மற்றும் உலக மக்கள்தொகையில் மிகச்சிறிய பிரிவினருக்கான தனியார் இலாபங்களை பெருக்குவதற்கு என வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை அது தீவிரமாகப் பின்பற்றுகிறது, அதே நேரத்தில் மற்ற மக்கள் ஆபத்தான வைரஸ்களால் பாதிக்கப்பட்ட ஒரு கிரகத்தில் வாழவும் வேலை செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். கோவிட் எதிர்ப்பு ஆர்வலர் தியோ ஆலன், CDC செய்திக்குறிப்பு 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி குறித்த கிரேட் பேரரிங்டன் பிரகடனத்தை CDC செயல்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படையாகக் கூறுகிறது' என்று குறிப்பிட்டபோது இதைத் தெளிவுபடுத்தினார்.