மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
UAW தலைவருக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு உலக சோசலிச வலைத் தளம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கும் ஈடுபடவும் WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.
அன்பான சகோதர சகோதரிகளே,
அமெரிக்காவில் உள்ள ஐக்கிய வாகன தொழிலாளர் (United Auto Workers – UAW) தொழிற்சங்கங்கத்தின் தலைமைக்கான வேட்பாளராக, மெக்சிகோவில் உள்ள ஒவ்வொரு வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் பொருத்தும் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை எனது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதுவும் உங்கள் போராட்டம்தான்.
பென்சில்வேனியாவில் உள்ள மாக் ட்ரக்ஸ் பொருத்தும் ஆலையில் சாமானிய தொழிலாளியும் ஒரு சோசலிஸ்டும் என்ற முறையில், எனது பிரச்சாரம் UAW எந்திரத்தை சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மெக்சிகோவில் உள்ள ஊழல் நிறைந்த, கும்பல்-சூழ்ந்த சார்ரோ தொழிற்சங்கங்களைப் (charro unions) போலவே, UAW உம் எங்கள் சந்தா தொகையைத் திருடி, ஒரு விற்பனையான ஒப்பந்தத்தை ஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்தும்போது இலஞ்சம் வாங்கிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது.
எனது பிரச்சாரம் ஒரு செல்வந்த தொழிற்சங்க நிர்வாகியை இன்னொருவரால் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அதிகாரத்துவத்தை ஒழிப்பதும், ஒவ்வொரு பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம் அதிகாரத்தை மீண்டும் நம் கைகளில் எடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும், எல்லையின் இருபுறமும் உள்ள ஊழல் நிறைந்த கும்பல்களுக்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றியானது, சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணி (IWA-RFC) மூலம் நமது ஒருங்கிணைந்த சக்திகளை அணிதிரட்டுவதில் தங்கியுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய், ஒரு நிகழ்வு உடனடியாக பல கண்டங்களில் உள்ள தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும் என்பதை காட்டியது மட்டுமல்லாமல், முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் எவ்வாறு தொழிலாளர்களுக்கு எதிராக உலகளவில் சதி செய்து தங்கள் இலாபங்களைப் பாதுகாக்கின்றன என்பதையும் இது அம்பலப்படுத்தியுள்ளது - இந்த விஷயத்தில், பாதுகாப்பற்ற ஆலைகளுக்கு நம்மை திருப்பி அனுப்புவதன் மூலம். ஆனால் மிக முக்கியமாக, இந்த உலகளாவிய தொற்றுநோய், ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே நமது வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் பாதுகாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது.
மார்ச் 2020 இல் மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகள் நிரம்பத் தொடங்கியதால், ஐரோப்பாவில் வாகன ஆலைகளில் திடீர் வேலைநிறுத்தங்கள் (wildcat strikes) வெடித்தன. பின்னர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் 'கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாகனத் துறையை மூடு!' என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (US), அறிக்கையைப் படித்த சில நாட்களுக்கு பின்னர்தான் வேலைநிறுத்தங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு பரவின.
சிறிது நாட்களுக்குப் பின்னர், வடக்கு மெக்சிகோவின் முழு தொழில்துறை இணைப்பில் உள்ள வாகன உதிரிப்பாக ஆலைகளில் தொழிலாளர்கள் தங்கள் கருவிகளைக் கீழே போட்டனர். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும் வாகனத் தொழிலை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியதன் மூலம், இந்த தன்னியல்பான இயக்கம் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது. எவ்வாறாயினும், அது ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தது, அரசாங்கங்களும் தொழிற்சங்கங்களும் இறுதியில் எதிர்ப்பைக் கடந்து எங்களை மீண்டும் தொழிற்சாலைகளுக்கு திருப்பி அனுப்ப முடிந்தது, இதன் விளைவாக பிராந்தியம் முழுவதும் நூறாயிரக்கணக்கான மக்கள் இறந்தனர்.
அமெரிக்க ஆலைகளை மீண்டும் திறக்க ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்ட சில வாரங்களுக்குப் பின்னர், மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரும் அவரது கூட்டாளிகளும் 'சுயாதீன' மற்றும் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படுபவர்களும் இதையே பின்பற்றினர். இருப்பினும், அந்த குறுகிய கால இடைவெளியில், Detroit Free Press கூறியது போல், 'மெக்சிகோவில் உதிரிப்பாகங்கள் வழங்குபவர்கள் குறைந்திருந்தால் அமெரிக்க வாகன ஆலைகளை மீண்டும் தொடங்க முடியாது' என்பதை தெளிவாக்கியது.
பெருநிறுவன இயக்குனர் ஒருவர் செய்தித்தாளிடம், வாகன தொழில் போன்ற வட அமெரிக்காவில் உள்ள சில தொழில்கள், “கடந்த சில தசாப்தங்களாக சங்கிலியின் முக்கிய இணைப்புகளை ஒன்றாக இணைத்துள்ளன, அவை இனி சங்கிலியில் உள்ள இணைப்புகள் அல்ல, ஆனால் உடைக்க முடியாத கம்பி” எனக் கூறினார்.
தெளிவாகச் சொன்னால், தொழிலாளர்கள் சர்வதேச அளவில் எதிர்க்கும் பட்சத்தில், இந்த மாபெரும் நாடுகடந்த கூட்டு நிறுவனங்கள், பாதுகாப்பற்ற நிலைமைகள், வெகுஜன பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள், தீவிர மறுசீரமைப்புக்கள் அல்லது அதிக வேகப்படுத்துதல்களை சுமத்த முடியாது என்பது தெளிவாகிறது. எவ்வாறாயினும் நிர்வாகம், அரசு எந்திரத்தைப் பயன்படுத்துவதையும், தொழிற்சங்கங்களின் துரோகம் மற்றும் அரிக்கும் தேசியவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு, தொழிலாளர்கள் எல்லைகளைத் தாண்டி சுயாதீனமான இணைப்புகளை ஏற்படுத்தி, 'உடைக்க முடியாத ஒரு கம்பியாக' நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.
தொழிற்சங்கங்களும் ஒவ்வொரு உத்தியோகபூர்வ நிறுவனங்களும் இன்று தனியார் சொத்து மற்றும் முதலாளித்துவ சுரண்டலை மிகவும் புனிதமான 'உரிமைகளாக' பாதுகாக்கின்றன. மற்றவர்களைப் பொருட்படுத்தாத தனிப்பட்ட இலாபம் என்பது 'ஜனநாயகம்' மற்றும் 'சுதந்திரம்' பற்றிய அவர்களின் வரையறையை சுருக்கமாகக் கூறுகிறது. ஆனால் இன்று நவீன வாழ்வின் அத்தியாவசியமான கூறுகள் எதையும், ஒவ்வொரு மனிதனின் சொந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ அல்லது ஒவ்வொரு தொழிற்சாலை, தொழில்துறை அல்லது நாடும் கூட அதன் சொந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ பாதுகாக்க முடியாது.
பல தசாப்தங்களாக, அமெரிக்க மற்றும் கனேடிய தொழிற்சங்கங்கள் பூகோளமயமாக்கலுக்கு விடையிறுப்பதன் மூலம் தங்களை முழுவதுமாக பெருநிறுவனங்களுக்கு அடிபணிந்து, முடிவில்லா வெட்டுக்களை ஏற்க வேண்டும் அல்லது எங்கள் வேலைகள் குறைந்த ஊதியம் உள்ள நாடுகளுக்குச் செல்லும் என்று தொழிலாளர்களை அச்சுறுத்தி எதிர்வினையாற்றி வருகின்றன. இதற்கிடையில், மெக்சிகன் தொழிற்சங்கங்கள் வாகன தொழிற்சாலைகளில் உண்மையான ஊதியங்களைத் தொடர்ந்து குறைத்து வருகின்றன, அவை 'போட்டித்தன்மையுடன்” இருக்க வேண்டும் என்ற கூற்றின் அடிப்படையில் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 2.50 டாலர்களாக இருக்கிறது.
மிக சமீபத்தில், அமெரிக்க அரசாங்கத்துடன் பணிபுரியும் UAW மற்றும் AFL-CIO ஆகியவை, மெக்சிகன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை நிலைமைகள் குறித்து போலியாக அக்கறை காட்ட நிர்பந்திக்கப்பட்டுள்ளன. ஆனால் இது சார்ரோ (charro) தொழிற்சங்கங்களுக்கு எதிரான உங்கள் கிளர்ச்சியானது எல்லையில் பரவி, வட அமெரிக்கா முழுவதிலும் உள்ள பெருநிறுவன சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிரான கிளர்ச்சியாக மாறும் என்ற அச்சத்தில் மட்டுமே இருந்தது.
இந்த அச்சங்கள் 2019 இல் மத்தாமோரோஸ் இல் நடந்த மாபெரும் திடீர் வேலைநிறுத்தங்களால் (wildcat strikes) உறுதி செய்யப்பட்டன, அங்கு தொழிலாளர்கள் சுயாதீன வேலைநிறுத்தக் குழுக்களை ஏற்பாடு செய்தனர், ஜனநாயக வெகுஜனக் கூட்டங்களை நடத்தினர், டெக்சாஸ் எல்லைக்கு அணிவகுத்து அமெரிக்க தொழிலாளர்களை 'எழுந்திருங்கள்' என அழைப்பு விடுத்தனர் மற்றும் ஒரு சர்வதேச போராட்டத்திற்காக உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் முறையீடுகளை அனுப்பினர்.
2019 இலையுதிர்காலத்தில் ஜெனரல் மோட்டார்ஸில் அமெரிக்கா நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் போது, மத்திய மெக்சிகோவில் உள்ள சிலாவோவில் (Silao) உள்ள GM ஆலையில் தொழிலாளர்கள், அமெரிக்க வாகனத் தொழிலாளர்களுடன் பல இணையவழி அழைப்புகளில் இணைந்தனர். அவர்கள் அமெரிக்காவில் தங்கள் சகோதரர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதற்காக வேகத்தை அதிகரிப்பதற்கு எதிராகவும் கூடுதல் நேர வேலைக்கு எதிராகவும் ஒரு எதிர்ப்பை ஏற்பாடு செய்து கட்டுப்படுத்தினர்.
ஒப்பிடுகையில், ஒவ்வொரு திருப்பத்திலும், மெக்சிகோவில் 'சுயாதீனமான' மற்றும் 'ஜனநாயக' தொழிற்சங்கங்களை ஊக்குவிக்கும் AFL-CIO இன் அதே நிர்வாகிகள் 'மெக்சிகோவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு' எதிராக மற்றும் அமெரிக்காவில் விற்கப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் மெக்சிகன் தொழிலாளர்களை பலிகடாக்களாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்த முதலாளித்துவ சார்பு மற்றும் தேசியவாத அமைப்புகளுக்கு வெளியே ஒழுங்கமைப்பதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களாகிய நமது சுயாதீன நலன்களை நாம் பாதுகாக்க முடியும் — பெருநிறுவனங்களின் அடிமட்ட நிலை மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு அவர்கள் கொடுக்கும் துணுக்குகள் எதுவாக இருந்தாலும்.
அமெரிக்காவில் உள்ள பல வாகனத் தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்களில் நாங்கள் செய்தது போல், மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்களும் வேலைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாகக் கட்டுப்படுத்தப்படும் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தை விட சக்திவாய்ந்த சமூக சக்தி எதுவும் இல்லை. மேலும் நாம் அனைவரும் அடிப்படையில், தொற்றுநோய்கள் முதல் போர், சர்வாதிகார அச்சுறுத்தல், பணவீக்கம், குறிப்பிடத்தக்க சமூக சமத்துவமின்மை, வெகுஜன வறுமை மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவு வரை ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறோம். IWA-RFC ஐ நனவுபூர்வமாகவும் தீவிரமாகவும் உருவாக்குவதன் மூலம், இந்த உலகளாவிய பிரச்சினைகள் அனைத்திற்குமான மூலகாரணமான முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பை அகற்றுவதற்கான அமைப்புரீதியான அடிப்படையை நாம் அமைக்க முடியும்.
மேலும் படிக்க
- UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லெஹ்மன் அமெரிக்க வாகன ஆலைகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை இணையவழி சந்திப்புடன் முடித்தார்
- UAW தலைவர் வேட்பாளர் வில் லெஹ்மன்: இரயில் தொழிலாளர்கள் மீதான பைடென் நிர்வாகத்தின் தாக்குதலுக்கு எதிராக முழு தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டவும்!
- UAW தலைவருக்கான சோசலிச வேட்பாளர் வில் லெஹ்மன், வாகனத் தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்