முன்னோக்கு

உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ விரிவாக்கம் அணுஆயுதப் போர் அபாயத்தை ஏற்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஆளும் வர்க்கம் அதிர்ச்சியூட்டும் அளவுக்குப் பொறுப்பற்றத்தன்மையில் மூழ்கி உள்ளது. அணு ஆயுதப் போர் என்பது மில்லியன் கணக்கானவர்களின் மரணத்தையும் அனேகமாக இப்புவியின் உயிர்களே அழிந்து போகலாம் என்பதை அர்த்தப்படுத்தினாலும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போரில் அணு ஆயுதப் போர் அதன் புவிசார் அரசியல் நோக்கங்களைத் தடுக்க அனுமதிக்க முடியாது எனும் அளவுக்கு, அணு ஆயுதப் போரின் சாத்தியக்கூறை ஒரு நிஜமான வாய்ப்பாக அது கையாண்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட CBS இன் '60 நிமிடங்கள்' நிகழ்ச்சி நேர்காணலில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனிடம் நேர்காணல் செய்த ஸ்காட் பெல்லி பின்வருமாறு வினவினார், 'போர்க்களத்தில் உக்ரேன் வெற்றி பெற்று வரும் நிலையில், விளாடிமிர் புட்டின் வெட்கக்கேடாக ஒரு மூலையில் தள்ளப்பட்டு வருகிறார். எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே, அவர் இரசாயன அல்லது தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கருதினால் நீங்கள் அவருக்கு என்ன கூறுவீர்கள்?'

அதற்கு, ஜனாதிபதி கூறினார், “வேண்டாம். வேண்டாம். வேண்டாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எப்போதும் இல்லாத வகையில், நீங்கள் போரின் முகத்தையே மாற்றி விடுவீர்கள்,” என்றார். இரண்டாம் உலகப் போர் பற்றிய குறிப்பு திட்டவட்டமாக இருக்கிறது. பைடென் அதைக் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த போரின் முடிவில் ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை வீச அமெரிக்கா முடிவெடுத்தது, அதில் மில்லியனில் ஒரு கால் பங்குக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். அவ்விதத்தில் அமெரிக்கா தான் போரில் இதுவரை அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய ஒரே நாடாக இருக்கிறது.

இந்த வரலாற்று உண்மையைத் தவிர்த்து விட்டு, அணு ஆயுதப் போரின் சாத்தியக்கூறு அமெரிக்காவின் போர் நோக்கங்களை மாற்றி விடாது என்பதைப் பைடென் தெளிவுபடுத்த நகர்ந்தார். 'உக்ரேன் போரில் ஜெயிப்பது என்பது ரஷ்யாவை உக்ரேனில் இருந்து முழுமையாக வெளியேற்றுவது ஆகும்,' என்றார். 'அவர்கள் ரஷ்யாவைத் தோற்கடித்து வருகிறார்கள். பலர் நினைத்ததைப் போல ரஷ்யா போட்டியிடும் வகையிலும் திறமையாகவும் இல்லை.”

'ரஷ்யாவை உக்ரேனில் இருந்து முழுமையாக வெளியேற்றுவது' என்பதன் மூலம், ரஷ்யா அதன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக கருதும் மற்றும் ரஷ்ய கோட்பாட்டின்படி அணு ஆயுதங்களுடன் அதைப் பாதுகாக்கலாம் என்று இருக்கின்ற கிரிமியாவை இராணுவ ரீதியில் மீட்டெடுப்பதே உக்ரேனின் குறிக்கோள் என்று பைடென் குறிப்பிடுகிறார்.

ஆனால் உண்மையில் அமெரிக்காவின் குறிக்கோள்கள் இன்னும் அதிகமாக செல்கின்றன. வடக்கு உக்ரேனில் ரஷ்யப் படைகள் தோல்வி அடைந்ததை அடுத்து, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில் பரவசமும் வெற்றிப் பிரவாக உணர்வும் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் தாக்குதலுக்கு இன்னும் அழுத்தமளிக்க உறுதியாக உள்ளது.

அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் அறிக்கைகளுக்குப் பகுதியளவில் அதிகாரபூர்வ வடிகாலாக சேவை ஆற்றி வரும் நியூ யோர்க் டைம்ஸின் தேசிய பாதுகாப்புத் துறை நிருபர் டேவிட் சாங்கரின் முதல் பக்க கட்டுரையில் இது வெளிப்பட்டது.

“அமெரிக்கா அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை அனுப்ப வேண்டுமென உக்ரேன் விரும்புகிறது. பைடென் அவ்வளவு உறுதியாக இல்லை,” என்ற தலைப்பில், சாங்கரும் அவரது மூன்று இணை ஆசிரியர்களும் பின்வருமாறு எழுதுகிறார்கள்:

அமெரிக்க அதிகாரிகள், இதுவரை, 'தவளையை வேக வைப்பதில்' — மாஸ்கோ எந்த விதமான ஒரு பெரிய நகர்வைக் கொண்டு பதிலடி கொடுக்கும் வகையில் அதை ஆத்திரமூட்டாமல், உக்ரேனுக்கு அவர்களின் இராணுவ, உளவுத்துறை மற்றும் பொருளாதார உதவிகளை படிப்படியாக அதிகரிப்பதில் — வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறார்கள்.

உக்ரேனுக்கு இப்போது என்ன உதவிகள் கிடைத்து வருகிறதோ, அதை வாஷிங்டன், போரின் தொடக்கத்தில் இருந்தே, வழங்கியிருந்தால், அதாவது ரஷ்யத் தளபதிகளை கொல்லவும் துல்லியமாக வழிநடத்தப்படும் ராக்கெட் தாக்குதல்களைக் கொண்டு ரஷ்ய விமானப் பாதுகாப்புகள், டாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைக்கவும் உக்ரேனுக்கு உதவி உள்ள உளவுத் தகவல்கள் போன்றதைக் கொடுத்திருந்தால், திரு. புட்டின் ஏறக்குறைய நிச்சயமாக பின்னால் தள்ளப்பட்டிருப்பார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

டைம்ஸ் கட்டுரை பல விதத்திலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. முதலாவதாக, ஆரம்பத்தில் இருந்தே, உண்மையில் சொல்லப் போனால் இந்தப் போர் தொடங்குவதற்கு முன்னர் இருந்தே, அமெரிக்கா இந்தப் போரை வழி நடத்தி வந்துள்ளது என்பதற்கு இது மற்றொரு ஒப்புதலாக உள்ளது. அது உக்ரேனுக்கு முறையாக ஆயுதங்கள் வழங்கியும், இராணுவ வழிவகைகள் மூலமாக கிரிமியாவை மீட்பதற்காக உத்தியோகபூர்வமாக கடந்தாண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அதன் திட்டங்களை ஊக்கப்படுத்தியும், பெப்ரவரியில் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க அதை வாஷிங்டன் தூண்டிவிட்டது.

அண்மித்து ஏழு மாத கால மோதலின் ஒவ்வொரு கட்டத்திலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா எதிர்த்துள்ளது, அதேவேளையில் இந்த மோதலில் இன்னும் அதிநவீன ஆயுதங்களை உட்புகுத்தியது. உக்ரேனிய இராணுவத்தை பென்டகனுக்கே சொந்தமான ஒரு துணை அமைப்பாக மாற்றியமை, எந்தவொரு புள்ளியை எட்டியது என்றால், அமெரிக்க இராணுவத்தின் ஆற்றல்கள் குறைந்து வருவதாக அமெரிக்க இராணுவ மூலோபாயவாதிகள் கவலைப் படத் தொடங்கும் அளவுக்குச் சென்றது.

இதைத் தான் 'தவளையை வேக வைப்பது' என்று சாங்கர் அர்த்தப்படுத்துகிறார். இதுவரை ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான ஒரு நேரடி மோதலுக்கு வழி வகுக்காத வகையில், ரஷ்யாவுக்கு எதிரான அதன் போரை நடத்த, அமெரிக்க ஏகாதிபத்தியம், உக்ரேன் முறையாக நேட்டோவின் பாகமாக இல்லை என்ற உண்மையைச் சாதகமாக்கிக் கொண்டுள்ளது.

ஆனால் ரஷ்யாவுடன் அமெரிக்கா போரில் ஈடுபட்டு இல்லை என்ற வாதம் ஒரு சட்டபூர்வக் கட்டுக்கதையாகும். உக்ரேனிய இராணுவம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான ஒரு கூலிப் படைக்கு நிகரான ஒன்றாக மாற்றப்பட்டு உள்ளது, அமெரிக்க இராணுவ ஜெனரல்கள் அதற்கு ஆயுதங்கள் வழங்கி, பயிற்சி அளித்து, போர்க் களத்தில் வழங்கி நடத்துகிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில், இந்தக் இரத்தக்களரியான மோதலில் ஒவ்வொரு நாளும் 1,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு வந்தாலும், கடைசி உக்ரேனியர் வரை சண்டை இடுவதற்கு அது விரும்புகிறது. அவர்கள் பீரங்கிக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இரண்டாவதாக, எவ்வாறிருப்பினும், கார்கிவில் ரஷ்ய இராணுவத்தின் படுதோல்வி இன்னும் அதிகமாக விரிவுபடுத்தக் கைப்பற்றப்பட்டு வருகிறது என்பதைச் சாங்கர் தெளிவுபடுத்துகிறார். தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 'மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள்' என்பது ரஷ்ய எல்லைக்குள் 100 மைல்கள் வரை சென்று தாக்கக் கூடிய ATACMS ஏவுகணைகள் ஆகும். இந்த ஆயுதங்களை வழங்குவது ஒரு 'எச்சரிக்கைக் கோட்டை' தாண்டுவதாக இருக்கும் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர், அதாவது இந்த மோதலில் அமெரிக்காவை ஒரு கட்சியாக இது இணைக்கும்.

அதிகாரபூர்வமாக ATACMS ஐ வழங்குவதற்காக இராணுவம், உளவுத்துறை மற்றும் காங்கிரஸ் சபையின் முறையீடுகளை பைடென் 'எதிர்க்கிறார்' என்று இந்தக் கட்டுரை அறிவிக்கிறது. இது, அமெரிக்க அரசியல் மொழியில் சொன்னால், ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்று அர்த்தமாகும், தவிர்க்கவியலாமல் இந்த 'எதிர்ப்பை' கடந்து வருவதற்காக பொதுக் கருத்தை நிலைநிறுத்துவதற்கு டைம்ஸ் ஓர் இயங்குமுறையாக சேவையாற்றி வருகிறது.

கடுமையான பொருளாதாரத் தடைகளுடன் சேர்ந்து, இந்த மோதலை இன்னும் அதிக ஆக்ரோஷமாகத் தீவிரப்படுத்துவது, ரஷ்ய வளங்கள் மீது மேலாதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதன் மூலம் தனது நலன்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று ரஷ்ய தன்னலக் குழுவின் ஒரு பிரிவினர் தீர்மானிக்க நிர்பந்திக்கும் என்று அமெரிக்க ஆளும் வர்க்கம் நம்புவதாகத் தெரிகிறது.

ஆனால் இந்த நெருக்கடியானது ரஷ்ய அரசியல் ஸ்தாபகத்தின் அதிதீவிர தேசியவாத கூறுபாடுகளை வலுப்படுத்தவும் வழி வகுக்கும், அவர்கள் அமெரிக்க தாக்குதலுக்குக் கட்டாய இராணுவச் சேவையைக் கொண்டு வருவதன் மூலமாகவோ, உக்ரேனுக்கு வெளியே உள்ள நேட்டோ ஆயுத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்துவதன் மூலமாகவோ அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியோ கூட ரஷ்யா முழு பலத்துடன் விடையிறுக்க வேண்டுமென கோரி வருகின்றனர்.

ரஷ்யாவையே உடைப்பது தான் உக்ரேன் மீதான போரின் இறுதி நோக்கம் என்று அமெரிக்க ஆளும் வட்டாரங்களில் இருந்து வரும் அறிக்கைகளால் கடைசி சாத்தியக்கூறுக்கு அதிக வாய்ப்புள்ளது.

கடந்த வாரம் ஐரோப்பாவுக்கான முன்னாள் அமெரிக்க இராணுவ கமாண்டர் பென் ஹோட்ஜஸ் டெலிகிராப் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகையில், அமெரிக்கா '[புட்டினின்] ஆட்சியினது மட்டுமல்ல, மாறாக ரஷ்ய கூட்டமைப்பினது — முடிவின் தொடக்கத்தைப் பார்த்து வருகிறது' என்றார். ரஷ்யாவை உடைத்து அதன் பரந்த இயற்கை வளங்களை அமெரிக்க பெருநிறுவனங்கள் நேரடியாக சுரண்டி கொள்ளையடிக்க அதைத் திறந்து விடுவதுமே, உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இறுதி குறிக்கோளாக இருக்கிறது.

அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கைகள், ரஷ்ய தன்னலக்குழுவின் தரப்பில் இருந்து அவநம்பிக்கையான விடையிறுப்புகளுக்கு வழி வகுக்கும். இதன் விளைவுகள் பேரழிவுகரமாக இருக்கும், ஏற்கனவே இந்த மோதலில் உயிரிழந்துள்ள எண்ணற்ற ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களையும் விஞ்சி, இது இன்னும் அதிகமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, ரஷ்யா வேக வைக்கப்பட்டு வரும் ஒரு 'தவளை' இல்லை. அது உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணு ஆயுதக் கையிருப்புகளைக் கொண்டுள்ளது.

பனிப் போர் காலத்தின் போது, 'உறுதியான பரஸ்பர அழிவு' (Mutually Assured Destruction) கோட்பாடு என்பது, இரண்டு தரப்பிலும் மற்றும் சொல்லப் போனால் மொத்த மனிதகுலத்தையுமே நிர்மூலமாக்குவதில் உச்சமடையும் ஒரு பழிவாங்கும் அணு ஆயுதத் தாக்குதலின் சாத்தியக்கூறு இருந்ததால், அமெரிக்கா சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போர் தொடுப்பதில் இருந்து தடுக்கப்பட்டிருந்தது. பனிப் போர் நாட்களின் போது, அணு ஆயுதப் போரை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் குடியரசுக் கட்சியின் தீவிர வலதில் மட்டுமே இருந்தனர் — பேரி கோல்ட்வாட்டர் மற்றும் கர்டிஸ் லெமே போன்ற பிரமுகர்கள்.

ஆனால் இப்போதோ, நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஓர் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலால் அமெரிக்கா அதன் புவிசார் அரசியல் அபிலாஷைகளில் இருந்து 'தடுக்கப்படக் கூடாது' என்ற கருத்து, ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் என இரண்டு தரப்பின் பல்லவியாக மாறியுள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் அணு ஆயுத நிர்மூலமாக்கல் அச்சுறுத்தலால் 'தடுக்கப்படவில்லை' என்றால், புட்டின் தடுக்கப்பட்டிருப்பார் என்று அவர்களுக்கு எது உறுதிப்படுத்துகிறது?

பின்விளைவுகளை கருத்தில் கொள்ளாமல் கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. ஆளும் வர்க்கம், உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலும் மற்றும் அமெரிக்காவிலும் உள்ள நூறு மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களை வைத்து பேரழிவுக்கான விளையாட்டு விளையாடி வருகிறது.

ஒருபுறம், புவிசார் அரசியல் கட்டாயங்களாலும், மறுபுறம், அமெரிக்கா மற்றும் நேட்டோவில் உள்ள ஐரோப்பிய சக்திகளுக்குள் அதிகரித்து வரும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியாலும் இந்த அதிர்ச்சியூட்டும் அளவிலான பொறுப்பற்றத் தன்மை உந்தப்படுகிறது.

தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த போர்-எதிர்ப்பு இயக்கத்தை அபிவிருத்தி செய்வதே அவசர தேவையாகும்.

இந்தத் தீவிரமடைந்து வரும் மோதலை எதிர்க்க, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் ஒரேயொரு கன்னை கூட இல்லை, காங்கிரஸ் சபை அல்லது செனட்டில் ஒரேயொரு உறுப்பினர் கூட இல்லை என்ற உண்மை, ஆளும் வர்க்கத்திற்குள் என்ன விதமான கன்னைப் பிரிவினைகள் இருந்தாலும், போருக்கு அவர்களுக்குள் ஒற்றுமை உள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஓர் இயக்கம் ஏகாதிபத்திய சக்திகளின், அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவின், எல்லா பொய்களையும் நிராகரிக்க வேண்டும், இவை புவிசார் அரசியல் அபிலாஷைகள் மற்றும் உலக மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்காக போரைத் தூண்டி விட்டுள்ளன. அதே நேரத்தில், ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான விடையிறுப்புக்கும் எந்த ஆதரவும் கொடுத்து விட முடியாது, ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாத அச்சுறுத்தல்களுடன் ஓர் ஏற்பாடு செய்வதற்காக அது பெரும்பிரயத்தன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

ஏகாதிபத்திய போரை எதிர்க்க ஆற்றல் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த சமூக சக்தி இருக்கிறது என்றால் அது சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். கடந்த ஆண்டில் தொழிலாளர்களின் கூலிகள் நிஜமான அர்த்தத்தில் 3 சதவீதம் சரிந்துள்ளன, தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான கடுமையான தாக்குதல்களுடன் இந்தப் போர் நடவடிக்கை சேர்ந்து வருகிறது.

வாழ்க்கைத் தரங்களின் சரிவால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நெருக்கடியானது வர்க்கப் போராட்டத்தின் ஓர் உலகளாவிய எழுச்சிக்கு வழி வகுத்துள்ளது, இது அமெரிக்காவில் இரயில்வே தொழிலாளர்களின் இயக்கத்திலும், ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பிலும் பலமாக எடுத்துக் காட்டப்படுகிறது.

உலகெங்கிலுமான தொழிலாளர்கள் போராட்டத்தில் நுழையும் போது, அவர்கள் போரை நிறுத்துவதற்கான கோரிக்கையை எழுப்ப வேண்டும். உலகப் போருக்கான ஆளும் வர்க்கத்தின் கொள்கைக்கு, வர்க்கப் போர் மூலோபாயம் மற்றும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தை எதிர் நிறுத்த வேண்டும்.

Loading