வில் லெஹ்மன் தேர்தலில் வாக்களிக்கும் தொழிலாளர்களின் உரிமையை உறுதிப்படுத்த UAW இன் மீதும், கண்காணிப்பாளர் மீதும் மத்திய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழனன்று, ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் பதவிக்கான வேட்பாளர் வில் லெஹ்மன், UAW தலைமைக்கான முதல்முதலான நேரடித் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறும், ஒரு தேர்தல் நடைபெறுகிறது என்பதை அங்கத்தவர்களுக்கு உண்மையாக அறியப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் UAW மீதும், நீதிமன்றம் நியமித்த கண்காணிப்பாளர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மிச்சிகனில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் லெஹ்மனின் UAW இற்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது உறுப்பினர்களின் விருப்பத்தின் உண்மையான மற்றும் ஜனநாயக வெளிப்பாடான தேர்தலில் வாக்களிக்க அனைத்து சாமானிய உறுப்பினர்களின் உரிமையை பாதுகாக்கிறது.

வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தபாலில் வாக்குப்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை கண்காணிப்பாளர் இன்றுவரை (நவம்பர் 18) வழங்கியுள்ளார். எவ்வாறாயினும், அமெரிக்க தபால் சேவை இதுவரை 9 சதவீத உறுப்பினர்களிடமிருந்து மட்டுமே வாக்குச் சீட்டுகளை பெற்றதாக அறிவித்துள்ளது. பல தொழிலாளர்கள் தங்களுக்கு வாக்குச் சீட்டுகள் கிடைக்கவில்லை என்றும், தங்கள் பணியிடங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தேர்தல் நடப்பது தெரியாது என்றும் தெரிவிக்கின்றனர்.

'இந்த வழக்கு முழு அங்கத்தவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றியது' என்று வில் லெஹ்மன் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். 'UAW இன் தலைமையானது, நான் பிறப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சந்தா தொகை செலுத்தும் தொழிலாளர்களின் கூட்டு உரிமையை பற்றி கூறாமல், கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் தேர்தலைப் பற்றி தொழிலாளர்களிடம் கூறவில்லை. ஏனென்றால் அவர்களை வெளியேற்றுவதற்கான உண்மையான வாய்ப்பு எங்களுக்குக் கிடைப்பதை அவர்கள் விரும்பவில்லை.

'தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்பில் UAW தலைமையை இருத்துவதே வாக்குப்பதிவு 9 சதவீதமாக இருப்பதற்கான காரணமாகும். தொழிலாளர்கள் தமது கருத்தை கூறுவதை தடுப்பதே அவர்களின் குறிக்கோள் ஆகும். அவர்களின் ஒரே கவலை தங்கள் பதவிகளை எந்த விலைகொடுத்தும் பாதுகாப்பதுதான். தொழிலாளர்களின் குரல் கட்டாயமாக கேட்கப்படவேண்டும்”.

லெஹ்மனின் சட்டபூர்வத் தாக்கல் மனு பின்வருமாறு கூறுகிறது, “இந்த நீதிமன்றத்தின் அவசர தலையீடு இல்லாமல், தற்போது நடைபெறும் தேர்தல் இந்த அடிப்படை உத்தரவாதங்களை விட மிகக் குறைவாக இருக்கும். UAW உம் கண்காணிப்பாளர்களும் நூறாயிரக்கணக்கான சாமானிய UAW உறுப்பினர்களுக்கு போதுமான அறிவிப்பை வழங்கத் தவறிவிட்டன. அவர்கள் நேரடித் தேர்தல்களுக்குப் பழக்கமில்லாதவர்களாக இருப்பதுடன், பொதுவாக வாக்குச்சீட்டுகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கவும் மாட்டார்கள்”.

வாக்குச் சீட்டுகளைப் பெறவில்லை என்றும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளரிடம் இருந்து வாக்குச் சீட்டுகளை பெறுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கும் டஜன் கணக்கான தொழிலாளர்களின் அறிக்கைகள் இதில் அடங்கும்.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து லெஹ்மானுடனான கலந்துரையாடலைப் பற்றி டெட்ராய்ட் நியூஸ் பத்திரிகை பின்வருமாறு எழுதியது. லெஹ்மன் 'தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது என்பது பற்றித் தெரியாமல் வேலைக்குச் செல்லும் உறுப்பினர்களுடன் அவர் நடத்திய உரையாடல்களையும், வாக்குச் சீட்டைப் பெறாதது குறித்து தனக்கு வந்த செய்திகளையும் சுட்டிக் காட்டினார். அனைவருக்கும் அதைப் பற்றிய மின்னஞ்சல்கள் வருவதில்லை. மேலும், தனக்கு கிடைத்த செய்திகள்கூட Spam கோப்புக்குள் சென்றிருப்பதை அவதானித்தாக அவர் மேலும் கூறினார்.

டெட்ராய்ட் நியூஸ் பின்னர் ரே கார்ரி, ஷான் ஃபைன் மற்றும் பிற வேட்பாளர்களுடனான வில் லெஹ்மனின் விவாதத்தின் ஒளிப்பதிவையும் பின்னிணைத்திருந்தது. 'ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நடத்தப்பட்ட ஒரு மெய்நிகர் மன்றம் யூடியூப்பில் 20,000க்கும் குறைவான பார்வைகளைப் பெற்றுள்ளது.' மேலும் 'சில உறுப்பினர்கள் இடைக்காலத் தேர்தல்களுக்காக UAW அனுப்பிய வாக்குச்சீட்டுடன் தற்போதயதை தவறாக அடையாளம் கண்டிருக்கலாம்.'

தொழில்துறை Gary பிராந்தியத்தில் பரந்த வாசகர்களைக் கொண்ட ஒரு வெளியீடான டைம்ஸ் ஒஃப் நோர்த்வெஸ்ட் இந்தியானா, லெஹ்மனின் சட்டரீதியான ஆவணத்தை மேற்கோள் காட்டியது.

'UAW வரலாற்றில் இதுவே முதல் நேரடித் தேர்தல்' என்று லெஹ்மனின் வழக்கறிஞர்கள் வழக்கின்போது வாதிட்டனர். “உறுப்பினர்களுக்கு அதன் தலைமையை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் கடந்தகால முறையும் நடைமுறையில் இல்லை. UAW இன் சமீபத்திய தலைமை, தொழிற்சங்க நிதியை திசைதிருப்பியதன் மூலமும், பெருநிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்வதன் மூலமும் அதன் அங்கத்தவர்களின் உரிமைகளை திட்டமிட்டு மீறுவதாக மொத்தமாக குற்றம் சாட்டப்பட்டதால் மட்டுமே நேரடித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த மறுப்பது தற்செயலானதல்ல. ஆனால் UAW இன் வேரூன்றிய தலைமை தன்னை வாக்களிப்பினால் வெளியேற்றப்படுவதை அனுமதிக்க மறுப்பதை பிரதிபலிக்கிறது. இது சட்டத்தினால் மத்திய நீதிமன்றத்தால் மட்டுமே நிராகரிக்கப்படக்கூடிய நிலைமை ஆகும்'.

டைம்ஸ் பின்னர் கட்டுரையை முடிக்கிறது, 'ஒரு UAW செய்தித் தொடர்பாளர் இக்கருத்து பற்றிய கேள்விக்கு பதிலளிக்கவில்லை.'

வில் லெஹ்மனின் ஆதரவாளர்கள் வியாழன் பிற்பகல் ஸ்டெல்லாண்டிஸ் (கிரைஸ்லர்) வாரன் டிரக் பொருத்தும் ஆலைக்கு சென்று UAW மற்றும் மத்திய கண்காணிப்பாளர் மீதான லெஹ்மனின் வழக்கு பற்றி தொழிலாளர்களுக்கு தெரிவித்தனர்.

உறுப்பினர்கள் வாக்களிக்க கூடுதல் மாத அவகாசம் வேண்டும் என்ற சட்ட நடவடிக்கைக்கு பல தொழிலாளர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். 'ஆம், நான் வழக்கை ஆதரிக்கிறேன்,' என்று ஒரு தொழிலாளி கூறினார். 'நிறைய தொழிலாளர்கள் தாங்கள் வாக்குச்சீட்டு பெறவில்லை, மேலும் சில தொழிற்சங்க பிரிதிநிதிகள் தற்காலிக தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறுகிறார்கள். எனது வாக்குச்சீட்டு கிடைத்தது, இன்று இரவு வாக்களிக்கிறேன்.

'இது அபத்தமானது,' என்று லெஹ்மனின் ஆதரவாளர் அவரிடம் கூறியபோது, கண்காணிப்பாளர் இதுவரை தகுதியான வாக்காளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குச்சீட்டுகளைப் பெற்றுள்ளார் என்று தொழிலாளி கூறினார். 'இது ஒரு அங்கத்தவர் மற்றும் ஒரு வாக்கு என்பதற்கான பொதுவாக்கெடுப்பை விட குறைவானதாகும். UAW தலைவர்கள் தேர்தலை மறைத்தும், மக்களை இருட்டில் வைத்திருக்க முடியுமானால் அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும். எனது ஆலையில் உள்ள பலருக்கு தேர்தலைப் பற்றித் தெரிந்த ஒரே காரணம், நீங்கள் கோடைகாலத்திலிருந்து இங்கு தவறாமல் வெளியே வருவதால்தான்” என்றார்.

வில்லின் வழக்குப் பற்றி மற்றொரு தொழிலாளி கருத்து தெரிவிக்கையில், “இது முற்றிலும் நியாயபூர்வமானது. வாக்குச் சீட்டுகளை வினியோகிப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். மற்றொரு தொழிலாளி மேலும் கூறுகையில், “தேர்தல் பற்றி கூட தெரியாத பலரை நான் அறிவேன். ஆலை முழுவதும் அறிவிப்புகள் இருக்க வேண்டும்”.

ஒரு இளம் தொழிலாளி, “வாக்குச்சீட்டினை பெறுவதற்காக நான் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அவர்கள் இனி கொடுக்கமுடியாது என்று சொன்னார்கள். தேர்வு செய்யும் உரிமை நம் அனைவருக்கும் இருக்க வேண்டும். என்னுடையதற்காகவும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிருந்து ஓய்வு பெற்ற என் அப்பாவிற்காகவும் நான் தொடர்புகொண்டேன்” என்று அவர் கூறினார். அவர்களில் ஒருவருக்கும் வாக்குச் சீட்டுகள் இருக்கவில்லை.

தொழிலாளர்கள் தங்கள் வாக்குச்சீட்டுகளைப் பெறவும் வாக்களிக்கவும் கூடுதலாக 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என்ற லெஹ்மனின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த அவர், “அது இருக்க வேண்டும். இது அரசாங்க தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக நடக்கும் ஒன்றாகும். [UAW] தேர்தலானது ஏதோ ஒருவகையில் பின்னணிக்கு சென்றுவிட்டது. நிச்சயமாக, எங்களுக்கு அனுப்பப்பட்ட எல்லாவற்றையும் கொண்டு, வாக்களிப்பதற்காக, ஆளுநருக்கும், நான் பொய் சொல்லப் போவதில்லை, மக்கள் ஒருவேளை தவறாக வாக்குச்சீட்டை எறிந்திருக்கலாம், ஏனெனில் இந்த வாக்குச் சீட்டு வழக்கமான வாசகங்கள் மற்றும் பிரச்சாரம் போல் தெரிகிறது.

'ஒரு வாரத்திற்கு முன்பு வரை, இது UAW தலைவருக்கு வாக்களிப்பதற்காக அல்லாது, வேலைநிறுத்த வாக்களிப்பிற்காக உள்ளூர் கிளைக்குக வருமாறு என்னுடைய சக ஊழியர் ஒருவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வரும்வரை அது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு வாக்குச் சீட்டு வேண்டும். மற்ற எல்லா தேர்தல் விஷயங்களோடும் அதை தூக்கி எறிந்தேனா என்று தெரியவில்லை. இது உங்கள் வீட்டில் இருக்கிறதா என்று பார்த்து பூர்த்தி செய்து அனுப்பவும் என எனது குழுவில் உள்ள அனைவருக்கும் ஒரு செய்தியை அனுப்பினேன். இது நமது எதிர்காலத்திற்கானது. இதைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அறிந்திருக்க வேண்டும்.” என்றார்.

மற்றொரு தொழிலாளி, வழக்கு பற்றி கருத்து தெரிவிக்கையில், 'ஒரு விஷயம் எவ்வளவு உண்மை நான் அதனுடன் உடன்படுகின்றேன். வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் கடவுள் கொடுத்த உரிமையாகும், மேலும் அவர்களின் வாக்குச்சீட்டைப் பெறுவதற்கும் அதை அனுப்புவதற்கும் வேறு யாரும் குறுக்கிடக்கூடாது. எனவே, எங்கள் வாக்களிக்கும் உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வழக்கு அவசியம் என்றால், நான் 100% அதற்கு முற்றாக ஒத்துக்கொள்கின்றேன்”.

UAW தேர்தலில் தங்கள் வாக்குகள் எண்ணப்படுவதை உறுதி செய்வதற்காக தொழிலாளர்கள் இன்று, வெள்ளிக்கிழமை, நவம்பர் 18, தங்கள் வாக்குச்சீட்டுகளை அனுப்பியிருக்க வேண்டும். நீதிக்காக நீதிமன்றங்களை நம்பாதே! உங்கள் வாக்குச்சீட்டை இன்றே அனுப்பி, உங்களுக்கு வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை என்றால் அல்லது வாக்குச் சீட்டை பெறாத தொழிலாளர்களை உங்களுக்குத் தெரிந்தால் WillforUAWpresident@gmail.com ஐ தொடர்பு கொள்ளவும்.

Loading