மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சீனா அதன் ‘சக்திவாய்ந்த பூஜ்ஜிய-கோவிட்’ கொள்கையை நீக்குவதை மிக வெளிப்படையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொள்ளும் விதத்தில், தேசிய சுகாதார ஆணையத்தில் (NHC) புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, சீன துணைப் பிரதமர் சன் சுன்லன் இவ்வாறு குறிப்பிட்டார், “நாடு ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொள்கிறது, மற்றும், ஓமிக்ரோன் வைரஸின் நோய்க்கிருமித்தன்மை மக்களை பலவீனப்படுத்துகிறது, பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிப் போடப்படுகிறது, மற்றும் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அனுபவங்கள் பெருகி வருகின்றன என்ற நிலையில், தொற்றுநோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக புதிய பணிகள் உருவாகின்றன.”
தொற்றுநோய் தடுப்பு முயற்சிகளை மேற்பார்வையிடும் சன், மேலும், “கட்சியின் மத்திய குழுவும் மாநில குழுவும் எப்போதும் மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுத்து வந்துள்ளன, மற்றும் நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மிகச் சிறந்த மற்றும் மேம்பட்ட தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அவை எடுக்கின்றன … தொடர்ந்து சிறிய அளவிலான நடவடிக்கைகளையாவது அவை எடுத்து வருகின்றன” என்றும் குறிப்பிட்டார்.
கடந்த மார்ச் மாதம் ஷாங்காயில் நடந்த பகுதியளவிலான பூட்டுதல்களின் ஆரம்ப கட்டத்தின் போது உடனிருந்த சன், ஓமிக்ரோனுக்கு எதிராக கூட பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை தொடர்வது குறித்து அந்த நேரத்தில் வலியுறுத்தியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. புதனன்று அவரது அறிக்கையில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கையின் சக்திவாய்ந்த பயன்பாடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
அதற்கு பதிலாக, ‘தொற்றுநோயைத் தடுப்பது” தடுப்பூசி போடுவது மூலம், குறிப்பாக வயோதிபர்களுக்கு தடுப்பூசி போடுவது மூலம் நடைபெறும், அனைவருக்கும் மருத்துவ ஆதாரங்களை கிடைக்கச் செய்வது, மற்றும் சிகிச்சை முறைகளுக்கு தயார் செய்வது, எல்லா நேரத்திலும் ‘பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது’ ஆகியவையும் மேற்கொள்ளப்படும்” என்று சன் தெரிவித்தார். தொந்தரவு தரும் வகையில், கோவிட் நோய்க்கான புதிய அணுகுமுறையின் முக்கியமான கூறு, ‘பாரம்பரிய சீன மருத்துவமாக’ இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இவை அனைத்தின் சாராம்சமும், வைரஸ் பரவலைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான ஒழிப்பு மூலோபாயத்தில் இருந்து ஒரு தணிப்பு மூலோபாயத்திற்கு திரும்புவதாகும், இது குறிப்பிடப்படாத கோவிட்-19 பரவல் மட்டத்தை ஏற்றுக்கொள்கிறது. நியூசிலாந்து, ஹாங்காங், வியட்நாம் மற்றும் பல நாடுகள் உட்பட, ஒழிப்பு நடவடிக்கைகளிலிருந்து தணிப்பு நடவடிக்கைகளுக்கு மாறிய ஒவ்வொரு நாடும் அல்லது பிராந்தியமும் விரைவான, பாரிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் கடும் அதிகரிப்பை எதிர்கொண்டுள்ளன.
சீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, புதன்கிழமை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் 36,000 க்கும் அதிகமான கோவிட்-19 நோய்தொற்றுக்கள் இருந்தன, இது சமீபத்திய நாட்களுடன் ஒப்பிடும்போது கடுமையாக அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், தலைநகர் பெய்ஜிங்கில் 5,000 க்கும் அதிகமான நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் குவாங்ஜோவு மற்றும் சோங்கிங் ஆகிய இரு நகரங்களும் தொடர்ந்து 6,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்களைப் பதிவு செய்துள்ளன.
இந்த அளவிற்கு உச்சபட்ச நோய்தொற்று எண்ணிக்கைகளை கொண்டிருந்தாலும், பெய்ஜிங், செங்டு, சோங்கிங் மற்றும் குவாங்ஜோவு நகரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பூட்டுதல் நடவடிக்கைகளைக் கூட நீக்கிவிட்டதுடன், உட்புற உணவு சேவைகள் உட்பட வணிக வளாகங்களில் மீண்டும் வணிகங்களை தொடங்க அனுமதித்துள்ளன. சில நகரங்கள் கோவிட் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்கின்றன, மேலும் சில குழுக்களுக்கு பரிசோதனைகளை கைவிடுகின்றன. தொற்றுநோயியல் விளக்கப்படம் முன்னர் கூர்மையாகவும் துல்லியமாகவும் இருந்த இங்கு நடக்கும் இந்த மாற்றங்கள் புதிய நோய்தொற்றுக்களின் எழுச்சியை மட்டுமே மறைக்கக்கூடும்.
சன் இன் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, வெளிநாட்டு உறவுகள் கவுன்சிலில் உலக சுகாதாரத்திற்காக சேவையாற்றும் ஒரு மூத்த சக உறுப்பினரான யோன்ஜோங் ஹூவாங் இவ்வாறு எச்சரித்தார், “ஒரு ஒழுங்கு அடிப்படையிலான மாற்றத்திற்கான ஒரு வழிமுறை இல்லாத நிலையில், அவரது கருத்துக்கள் உள்ளூர் மட்டத்தில் திட்டமிடப்படாத விளைவுகளை தூண்டக்கூடும், அது விரைவான, தேசிய அளவிலான நோய்தொற்றுக்களின் எழுச்சியை உருவாக்கும்.”
தொற்றுநோய் தொடர்புபட்ட தவறான தகவல்களை வெளியிடும் முன்னணி பத்திரிகையான அட்லாண்டிக் கூட, நடவடிக்கைகள் விரைவாகத் தளர்த்தப்பட்டு, கிட்டத்தட்ட அனைவரும் வீட்டிற்குள் அடைந்திருக்கும் குளிர்ந்த குளிர்கால மாதங்களில், நோயெதிர்ப்பு சக்தி இல்லாமல் இருக்கும் மக்களை நோய் எளிதில் பீடிக்கும் வகையில் வைரஸ் பரவுவதற்கு அனுமதிக்கப்பட்டால், சீனாவில் மிகப்பெரிய அளவில் பொது சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நிதானமாக ஒப்புக்கொண்டுள்ளது. கட்டுரை “புதிய ஓமிக்ரோன் நோய்தொற்றுக்களின் பாரிய அலையானது முக்கியமான-பராமரிப்பு பிரிவுகளை மூழ்கடித்து, 1.55 மில்லியன் மக்கள் இறக்கும் நிலையை உருவாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது.
ஓமிக்ரோன் ‘இலேசானது’ மற்றும், அதனால், தொற்றுநோய் நடவடிக்கைகளை முற்றிலும் தளர்த்தலாம் என்று கூறப்படுவது, தொற்றுநோயின் ஆல்பா மற்றும் டெல்டா கட்டங்களுடன் ஒப்பிடக்கூடிய விஷயமாகும். ஆனால், நோயெதிர்ப்பு-தவிர்க்கும் மற்றும் மிகவும் தொற்றும் தன்மை கொண்ட நோய்க்கிருமியை எதிர்கொள்கையில் இது ஒரு ஆபத்தான கருத்தாகும், இது மிகவும் ஆபத்தானது மற்றும் உலகளவில் காசநோயை விட அதிக மக்களை தொடர்ந்து கொல்லக்கூடியது.
முதல் ஓமிக்ரோன் அலை பிப்ரவரி பிற்பகுதியில் முடிவடைந்ததில் இருந்து, கடந்த ஒன்பது மாதங்களில் அமெரிக்காவில் மேலும் 120,000 கோவிட்-19 இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன, இது முந்தைய இரண்டு தசாப்தங்களில் கொடிய காய்ச்சல் பருவகாலத்தில் நிகழ்ந்த இறப்புக்களை விட மிக அதிகமாகும். பிப்ரவரி பிற்பகுதியில், முந்தைய SARS-CoV-2 நோய்தொற்றின் காரணமாக மக்கள் தொகையில் நோய்க்கிருமியின் நிலை (seroprevalence) கிட்டத்தட்ட 60 சதவீதத்தை எட்டியுள்ளது, மற்றும் மக்கள் தொகையில் அதிகபட்ச சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டு, mRNA பூஸ்டர் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.
ஓமிக்ரோனின் நோய்க்கிருமித்தன்மை மிகவும் குறைவானது என்ற சன் சுன்லானின் கூற்று சீன தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ளக் கூடாத ஒரு சூழ்ச்சியாகும். நோய்தொற்று பாதிப்புக்கு எளிதில் ஆளாகக்கூடிய மக்களை, மற்றும் வயோதிபர்களை வெளிப்படையாக ஊக்குவித்துள்ளது ஆபத்தான பொது சுகாதார அச்சுறுத்தலை உருவாக்குகிறது, குறிப்பாக, ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் பிற பொருட்கள் விடுமுறை கால கொள்முதல் பருவத்தில் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தொழிற்சாலைகளில் தீவிரமாக பணிபுரியவுள்ள ஏராளமான தொழிலாளர்களுக்கு இது பொருந்தும்.
பூஜ்ஜிய-கோவிட் கொள்கை முடிவுக்கு வருவதை அதிகரித்தளவில் ஒப்புக்கொள்ளும் விதத்திலான சன் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொனியில் தெரியும் மாற்றம் கூட, வார இறுதியில் சீனா முழுவதும் நடந்த தொடர் போராட்டங்களுக்கு அவர்களின் பிரதிபலிப்பாக உள்ளது. இந்த எதிர்ப்புக்கள், பூட்டுதல்களையும் பாரிய பரிசோதனைகளையும் முடிவுக்குக் கொண்டுவர கோருகின்ற, மற்றும் தங்கள் வாழ்க்கை முறைக்கு தடையாக இருப்பதாக கருதுகின்ற வசதி படைத்த நடுத்தர வர்க்க அடுக்குகளின் மத்தியில் முக்கியமாக எழுந்துள்ளன.
இந்த போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மேற்கத்திய ஊடகங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட பிரச்சாரப் பெருவெள்ளம், இந்த வாரம் குவாங்ஜோவுவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் கடந்த வாரம் ஜெங்ஜோவுவில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களால் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு எதிர்ப்புகளுடன் அவற்றை ஒன்றிணைக்க முயற்சித்துள்ளது.
குவாங்ஜோவுவில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த சமீபத்திய எதிர்ப்புகளானது, கோவிட்-19 நோய்தொற்றுக்கு வெளிப்பட்ட அல்லது நோய்தொற்று பாதிப்புக்குள்ளான ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அகற்றப்பட்டு, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டதன் பின்னர் எழுந்தன. இதற்கு, நவம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட ‘இருபது நிபந்தனைகள்’ மூலம் நியாயப்படுத்தப்பட்ட செலவுக் குறைப்பு முயற்சிகளால் உந்துதல் அளிக்கப்பட்டது, இது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை நீக்கத் தொடங்கியது, உள்ளூர் அரசாங்கம் புதிய குறைக்கப்பட்ட காலக்கெடுவின் அடிப்படையில் தொழிலாளர்களை மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றியது.
இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பின்னர் கடுமையான கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ள, அவர்களின் தொலைதூர கிராமங்களுக்கும் பழைய நகரங்களுக்கும் திருப்பி அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களின் சமூகங்களுக்கு நோய்தொற்று பரவுக்கூடும் என்ற அச்சத்தில் அவர்களுக்கு பயண அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறாக இந்த தொழிலாளர்கள் வீட்டிற்கும் திரும்ப முடியாமல், தொழிற்சாலைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் அங்கும் செல்ல முடியாமல் நிர்கதியாக உள்ளனர், அதேவேளை அவர்களுக்கு தேவையான பயண அனுமதியும் இல்லாத நிலையில் பாலங்களுக்கு அடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் மூத்தவர்களுக்கு தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற அக்கறையில், தங்கள் ‘வீட்டிற்கு,’ செல்ல விரும்பவில்லை, அதேவேளை அவர்களுக்கு பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடமும் வழங்கப்படவில்லை.
அவர்களின் கோபமான ஆர்ப்பாட்டங்களில், ‘பூட்டுதல்கள் வேண்டாம்!’ என்று அவ்வப்போது அவர்கள் பயன்படுத்தும் கோஷமானது, நடுத்தர வர்க்க மாணவர்களின் ‘சுதந்திரம்’ குறித்த கோஷங்களின் அர்த்தத்தை ஒத்தவை அல்ல. உண்மையில், பூஜ்ஜிய-கோவிட் கொள்கை நீக்கப்படுவதால் சீனாவில் சமூக நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் இந்த ஆர்ப்பாட்டங்கள் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறைக்கான முதன்மை இலக்குகளாக இருக்கும்.