மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட ஏழு நாள் சராசரி புதிய கோவிட் நோய்தொற்றுக்கள் சமீபத்தில் கடுமையாக குறைந்து வருகின்ற போதிலும், ஆசியாவில் உள்ள பத்திரிகைகள், பிரதான நகர்ப்புற மையங்களில் உள்ள பொது மருத்துவமனைகள் காய்ச்சல் மற்றும் சுவாச நோயறிகுறிகளுடன் கூடிய கோவிட் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன என்று செய்திகள் வெளியிடுகின்றன. பூஜ்ஜிய கோவிட் கொள்கை முற்றிலும் கைவிடப்பட்ட சில நாட்களுக்குப் பின்னரே இவை அனைத்தும் நடக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களாக, மையப்படுத்தப்பட்ட பரிசோதனைகள் அகற்றப்பட்டு, பயண வரலாற்றைக் கண்காணிக்கும் கைத்தொலைபேசிகளில் ‘கைபேசி பிரயாண வழிகாட்டி அட்டைகள்’ செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. கோவிட் நோய்தொற்றுக்களின் உண்மையான அளவும் அவற்றின் இருப்பிடங்களும் தொற்றுநோயின் வரைபடத்தில் விரைவாக இருட்டாகிவிட்டன. இப்போது, நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே சீனாவின் வளர்ந்து வரும் பொது சுகாதார நெருக்கடியின் அளவைக் குறிக்கும்.
பெய்ஜிங்கில் உள்ள சுகாதார அதிகாரிகள் திங்களன்று ஒரு சுருக்கச் செய்தியாளர் கூட்டத்தில் முந்தைய நாளில் 22,000 நோயாளிகள் காய்ச்சல் மருத்துவமனைகளுக்கு வந்ததாக தெரிவித்தனர், இது முந்தைய வாரத்தை விட 16 மடங்கு அதிகமாகும். வாஷிங்டன் போஸ்ட்டுடன் அநாமதேய நிலைமைகள் குறித்து பேசிய ஒரு கண் அறுவை சிகிச்சை நிபுணர், அவர் பணிபுரிந்த மருத்துவமனை ஊழியர்களில் பாதி பேருக்கு சமீபத்தில் கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், “காய்ச்சல் மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகரித்துள்ளது, மேலும் இது வாரங்கள் அல்லது மாதங்கள் கூட அதிகமாக இருக்கக்கூடும்” என்றும் கூறினார்.
நோயாளிகளின் திடீர் அதிகரிப்பு சுகாதார அமைப்புக்களில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதும், மற்றும் உத்தியோகபூர்வ நடவடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் பெரும் பீதியும் சுகாதார ஊழியர்கள் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது.
மருத்துவமனைகள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதிக மருத்துவ வளங்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பொருட்களை சேமித்து வைக்கவும் உத்தரவிட்டுள்ள போதிலும், மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சைப் பிரிவின் (ICU) திறனும் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் எதிர்பார்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாது. காய்ச்சல் மருந்துகளின் விநியோகம் பற்றாக்குறையாக இருப்பதால், அத்தகைய பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் இலேசான நோயறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களும் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு கூறப்படுகிறது, இதனால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய வீட்டில் உள்ள பெரியவர்கள் உட்பட அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
கடுமையான நோய் பாதிப்பு இல்லாவிட்டால் அவசரகால தொலைபேசி எண்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சீன அரசு ஊடகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பெய்ஜிங் அவசர மருத்துவ மையத்தில், ஒரு நாளைக்கு 30,000 அழைப்புக்கள் பதிவாகும் நிலையில் அழைப்புகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. முன்பு மக்கள் நீண்ட வரிசைகளில் பரிசோதனைக்காகக் காத்திருந்த இடத்தில், இப்போது அவர்கள் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள்.
மருத்துவ ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதானது, சுகாதார மற்றும் அடிப்படை சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதற்கான தொடக்கமாகும். அதாவது மருத்துவ சேவைகளில் தாமதங்களும் மற்றும் பணியாளர் பற்றாக்குறையும் ஏற்படுவதை இது குறிக்கிறது, இது மாற்றுப்பணிகளை ஒழுங்கமைப்பதிலும் மற்றும் நோயாளிகளை பராமரிக்கும் பாதுகாப்பான நிர்வாகத்திற்கு தேவையான சுமூகமான மாற்றங்களிலும் கடும் சிக்கலை ஏற்படுத்துகிறது. சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் அவர்களின் விடுப்பு மற்றும் விடுமுறை நாட்களில் நோய்வாய்பட்ட சக பணியாளர்களின் பணிகளை செய்ய வரவழைக்கப்படுகின்றனர்.
கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சோதனைத் தேவைகளும் கைவிடப்படும் நிலையில், மருத்துவமனைகள் குறிப்பாக பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு புதிதாக நோய்தொற்றுக்களை ஏற்படுத்தும் மையங்களாக மாறக்கூடும். ஒரு மருத்துவ ஊழியர், பெய்ஜிங்கில் உள்ள தனது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம், மருத்துவமனையில் சேர்வதால் அவர்களுக்கு கோவிட் நோய்தொற்று ஏற்படலாம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு உத்தரவாத அறிக்கையில் கையொப்பமிட கேட்டுக் கொள்ளப்படுவதாகக் கூறினார். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக, அவசர நடைமுறைகளையும் சிகிச்சைகளையும் நிறுத்த வேண்டியிருக்கும் என்ற நிலையில், சிகிச்சையளிக்கக்கூடிய வியாதிகள் கூட உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும்.
பெய்ஜிங் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு மருத்துவ ஊழியர் தனது பெயரைக் குறிப்பிடாமல், தங்கள் மருத்துவமனையில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் செவிலியர்/நோயாளி விகிதம் 10 பேருக்கு ஒருவர் வீதம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் அதிகமான படுக்கைகள் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் காரணமாக, மருத்துவ உதவியை நாடி வரும் பல குடும்பங்கள் திருப்பியனுப்பப்படுகின்றன.
தேசிய சுகாதார ஆணையத்தால் அறிவிக்கப்படும் எண்ணிக்கைகள் இனி யதார்த்தத்தைப் பிரதிபலிக்காது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வூஹானில் தொற்றுநோய் முதன்முதலில் வெடித்தபோது நெருக்கடியை நிர்வகிப்பதில் முன்னணி ஆலோசகராக இருந்த பிரபல நுரையீரல் நிபுணரும் தொற்றுநோயியல் நிபுணருமான டாக்டர். ஜோங் நன்ஷன், “பல முக்கிய நகரங்களில் நூறாயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்படுவதை நாம் காணலாம்” என்று அரசு ஊடகத்திடம் கூறினார்.
முன்னர் காய்ச்சல் சிகிச்சைக்காக பாரம்பரிய சீன மருத்துவமான லியான்ஹூவா கிங்வெனை (Lianhua Qingwen) முன்னரே ஊக்குவித்த ஜோங், தொற்றுநோயின் இறப்பு விகிதத்தை காய்ச்சலுடன் ஒப்பிட்டு, கோவிட் தொற்றின் ஆபத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். அதாவது, “ஓமிக்ரோன் தொற்றின் இறப்பு விகிதம் 0.1 சதவீதம் ஆகும், இது பொதுவான காய்ச்சலைப் போன்றது, மேலும் தொற்று அரிதாகவே நுரையீரலை அடைகிறது. பெரும்பாலான மக்கள் 7 முதல் 10 நாட்களுக்குள் மாறுபாட்டின் பாதிப்பிலிருந்து குணமடைகிறார்கள்” என்று கூறுகிறார்.
அவரது மேற்கத்திய சகாக்களைப் போலவே, ஜோங் தொற்றுநோயின் தவிர்க்க முடியாத பரவலின் தாக்கத்தைத் தணிக்கும் வழிமுறையாக பூஸ்டர் தடுப்பூசிகளை முன்வைக்கிறார். '2023 சந்திர புத்தாண்டு விடுமுறையின் போது மக்கள் தங்கியிருக்க வாய்ப்பில்லை, எனவே வீடு திரும்புபவர்களுக்கு நினைவூட்டல்களைச் செய்ய நான் அறிவுறுத்துகிறேன், இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அறிகுறிகள் லேசானவை.' என்கிறார். விடுமுறையின் போது, நூற்றுக்கணக்கான மில்லியன் சீனர்கள் தங்கள் குடும்பங்களுடன் இணைந்திருக்க தங்கள் மாகாணங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள் என்ற நிலையில், அது கொரோனா வைரஸின் பரவலை மட்டுமே அதிகப்படுத்தும்.
இந்த நிகழ்வுகளுக்கு பதிலளித்த ஷாங்காயின் ஹூவாஷன் மருத்துவமனையின் தொற்றுநோய்கள் பிரிவின் தலைவரான டாக்டர் ஜாங் வென்ஹாங், வரும் மாதங்கள் கடினமாக இருக்கும் என்று தனது ஊழியர்களிடம் கூறினார். சீன கம்யூனிஸ்ட் கட்சி வைரஸை பாரியளவில் வெடித்து பரவுவதான அதன் போக்கில் இயங்க அனுமதித்தால், சுகாதார அமைப்பின் மீதான தொற்றுநோய்களின் பேரழிவுகர தாக்கம், தீவிரமான சூழ்நிலையாக முன்வைக்கப்பட்ட போது நிகழ்ந்ததை விட இறப்பு விகிதங்களை அதிகமாக உயர்த்தும் என்று அவர் கூறினார். மேலும், ஓமிக்ரோன் மேல் சுவாசக் குழாயை மட்டுமே தாக்குகிறது என்ற ஜோங்கின் கூற்றுடன் தான் உடன்படவில்லை என்று அவர் மேலும் கூறினார், அத்துடன் நிமோனியா நிகழ்வுகளையும் தான் பார்ப்பதாக தெரிவித்தார்.
சீனாவின் 1.412 பில்லியன் மக்கள்தொகையில் 200 மில்லியன் மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40 மில்லியன் மக்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். சீன கோவிட் தடுப்பூசிகளின் தற்போதைய தடுப்பு மருந்துகளை குறைவாக பெற்றவர்களாக இவர்கள் உள்ளனர், மற்றும் அதிகபட்ச ஆபத்தில் உள்ளனர். ஓமிக்ரோன் பாதிப்பால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ள கோவிட் இறப்புக்களின் அளவானது, அடுத்த சில மாதங்களில் சீனாவில் வயோதிபர்களிடையே 500,000 க்கும் அதிகமான இறப்புக்கள் எளிதில் ஏற்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
இருப்பினும், சுகாதாரப் பாதுகாப்புக்கான அணுகல் கடுமையாக சமரசம் செய்யப்பட்டு, வளங்கள் தீர்ந்துவிட்டால், சீனாவில் 1.5 முதல் 2 மில்லியன் மக்கள் கோவிட் நோயால் இறக்கக்கூடும் என பல முக்கிய ஆய்வுகள் செய்த மதிப்பீடுகள் நியாயமானவை மற்றும் வேதனையானவை. சீன வயோதிபர்களுக்கு தடுப்பூசிகளை கிடைக்கச் செய்ய தடுப்பூசி பிரச்சாரம் மீண்டும் தொடங்கப்பட்டாலும், தற்போதைய நோய்தொற்று எழுச்சியால் ஏற்பட்ட உச்சநிலை, நிச்சயமாக வளங்களை உடனடி கவனிப்புக்கு திருப்பிவிடும் மற்றும் தடுப்பூசி பிரச்சாரம் வாக்குறுதி அளிக்கப்பட்டதை விட மிகவும் குறைவாக நடைபெறலாம். தற்போது கோவிட் தடுப்பூசிகளின் ஏழு நாள் சராசரி, அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு நாளைக்கு மிகக் குறைவாக 700,000 ஐ மட்டுமே எட்டியுள்ளது.
சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தில் உள்ள பேராசிரியரும் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் ஆரோக்கியத்திற்கான தலைமை மூலோபாய அதிகாரியுமான அலி மொக்தாத், ஜப்பான் டைம்ஸின் ஒரு அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார், “இது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நாடு முழுவதும் இருக்கும், ஆனால் மக்கள் நெரிசல் காரணமாக முதலில் நகர்ப்புறங்களிலும், பின்னர் கிராமப்புறங்களிலும் இது இருக்கும். இப்போதிருந்து இன்னும் ஒரு மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையிலான நோய்தொற்றுக்களை நாம் காண்போம், மற்றும் இறப்புக்கள் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நிகழத் தொடங்கும். மேலும் இப்போது இருக்கும் நிலைக்கு அது ஒருபோதும் திரும்பி வராது.”
இந்த நிலைமைக்கு விடையிறுக்கும் வகையில், மக்கள் 'சுதந்திரம்' மற்றும் பூஜ்ஜிய கோவிட் கொள்கை மற்றும் பூட்டுதல்களின் முடிவைக் கொண்டாடும் விதமாக மகிழ்ச்சியான ஆரவாரத்துடன் பதிலளிக்கவில்லை. ஒரு அச்ச உணர்வு நாட்டைப் பற்றிக் கொண்டுள்ளது. நோய்தொற்றுக்களும் உடல்நலக் கோளாறுகளும் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் வீட்டிலேயே தங்கி, பொது இடங்கள் மற்றும் செலவுகளைத் தவிர்த்து வருகின்றனர். பலர் பயணங்களை இரத்து செய்துள்ளனர் மற்றும் தொற்றுநோயைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என அஞ்சுகின்றனர்.
கலிபோர்னியாவின் லா ஜொல்லாவில் உள்ள ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி மொழி பெயர்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எரிக் டோபோல், ப்ளூம்பேர்க் ஊடகத்திடம் இவ்வாறு தெரிவித்தார், “ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் சிறந்த தடுப்பூசிகளையும் பூஸ்டர் தடுப்பூசிகளையும் விரைவாக வழங்காவிட்டால், பூட்டுதல்கள் இனி நீடிக்காது மற்றும் ஒரு பெரிய நோய்தொற்று எழுச்சி எதிர்பார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிகிறது. மேலும், பெரிய பிரச்சினைகள் உருவாகி வருவது போல் தெரிகிறது.”