இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் பெறும் வாட்டுகளை உருவாக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பிரச்சாரத்தை மேற்கொள்ள சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழுவினராகிய நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இலங்கையின் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட அடிப்படை உரிமையான பொது சுகாதார அமைப்பை துடைத்தழிப்பதை இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் சிக்கன வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக, சுகாதாரப் ஊழியர்கள் மற்றும் உழைக்கும் மக்களையும் தொழிலாள வர்க்கத்தின் வலிமையை ஒழுங்கமைக்க முன்வருமாறு சுகாதாரப் ஊழியர்கள் நடவடிக்கைக் குழு அழைப்பு விடுக்கின்றது. இந்த அறிக்கையின் முடிவில் உள்ள தொலைபேசி எண்கள் அல்லது மின்னஞ்சலில் எங்களைத் தொடர்புகொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, “அரசு மருத்துவமனைகளில் கட்டண வாட்டு முறையை மீள அமுல்படுத்த பிரேரிப்பதாகவும்” “இந்த முறையின் முதல் கட்டமாக தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகளில் நிறுவப்படும்” என்றும் தெரிவித்தார்.
இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதானது இருமுனை தாக்குதலாக மாறும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். இந்தத் தாக்குதல் ஒரு புறம் தனியார்மயமாக்கல் திட்டத்தின் மூலம் சுகாதார ஊழியர்களின் உரிமைகளைக் வெட்டுவதுடன், மறுபுறம், மருத்துவமனைகள் மூலம் உழைக்கும் மற்றும் ஏழை மக்கள் தங்கள் சுகாதார வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பறிப்பதும் முன்னெடுக்கப்படும். இது மிகப் பாரதூரமான இலவச மருத்துவ சேவையை அழிப்பதன் ஆரம்பம் ஆகும்.
இப்போதே அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பாரிய பற்றாக்குறை மற்றும் அறுவை சிகிச்சை அறைகள உட்பட பிரதான வசதிகள் பராமரிப்பு இன்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள, பொது வைத்தியசாலைகள் உட்பட இலங்கையின் பொது சுகாதார அமைப்பை இல்லாமல் ஆக்குவதை இலக்காகக் கொண்டே, பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் தனியார் வார்டுகளை நிறுவுவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பெரும் தட்டுப்பாடு, அறுவை சிகிச்சை அறைகள் உட்பட பிரதான வசதிகளை பராமரிக்காதது, சுகாதாரத்துறையில் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட ஏராளமான வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலான பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தத்தால் நோயாளர்கள் ஆவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமையிலேயே இந்த அரிப்பு நடைபெறுகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, சுமார் மூன்று மில்லியன் மக்கள் தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை பெறுவதுடன் சுமார் ஒரு மில்லியன் மக்கள் குணப்படுத்தக்கூடிய குருட்டுத்தன்மையால் துன்பப்படுகின்றனர். மேலும் 10,000 பேர் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பதுடன் 10,000 புற்றுநோயாளிகள் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, கோவிட்-19 தொற்றுநோய் அரசாங்க புள்ளிவிவரங்களால் குறைவாகக் காட்டப்பட்டுள்ளதால், அதனாலும் டெங்கு போன்ற தொற்றுநோய்களாலும் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அரசாங்கம் பொது சேவைகளுக்கான ஒதுக்கீடுகளை குறைத்து தற்போதைய கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பணத்தை திரட்ட வேண்டும் என்பது அரசாங்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள பிரதான நிபந்தனைகளில் ஒன்றாகும். வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவைகளுக்காக 322 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட அதேவேளையில் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு 539 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இலவச மருத்துவம் என்பது பொது உரிமை. பொது சுகாதார அமைப்பைப் பராமரித்து முறையாகப் பராமரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வக சேவைகளை உருவாக்கியதன் மூலம், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு அரசாங்கத்தின் செலவில் 1-2 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், பொது சுகாதார சேவையை குறைந்தபட்ச மட்டத்திற்கு குறைத்ததன் விளைவுகளை ஒட்டுமொத்த சுகாதார அமைப்பும் இப்போது எதிர்கொண்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் ஆதரவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ சக்திகள் உக்ரைனில் நடத்திவரும் போரினால் உக்கிரமடைந்துள்ள உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கையில் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முதலாளித்துவ பொருளாதார வீழ்ச்சியின் அனைத்து சுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தி, பெருநிறுவனங்கள் மற்றும் சர்வதேச மூலதனத்தின் இலாபவெறியை முன்னெடுக்க அனுமதிக்கின்ற, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதே ரணில் விக்கிரமசிங்க மற்றும் இராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கம் ஆகும்.
இந்த தனியார் வார்டு திட்டத்தின் இறுதி இலக்கு, இந்த வீழ்ச்சியடைந்து வரும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் சுமையை சுகாதார ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் மீது சுமத்தி ஒட்டுமொத்த பொது சுகாதார அமைப்பை துடைத்து ஒழிப்பதே ஆகும். இந்த சுமையை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களும் அதன் ஒரு அங்கமாக இலங்கை அரசாங்கமும் எதிர்கொள்ளும் பொருளாதார வீழ்ச்சிக்கு நாமோ சுகாதார ஊழியர்களோ அல்லது ஏனைய உழைக்கும் மக்களோ பொறுப்பாளிகள் அல்ல.
அரசாங்கம் எதிர்கொள்ளும் ஆழமான பொருளாதார நெருக்கடியின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய இருப்புக்கள் குறைந்து வருவதற்கான தீர்வாக, கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையை அதிகரித்துள்ள நிலையில், டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பின் கடுமையான வீழ்ச்சி, அதே போல் ஏனைய இறக்குமதிகளின் வீழ்ச்சியும் ஏனைய வரி அதிகரிப்புகளும் சந்தையில் மருந்துகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்கச் செய்துள்ளன.
இந்தப் பற்றாக்குறைகள் விரிவடைந்து வருவதோடு, மருத்துவமனைகளின் பராமரிப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டதால் நாட்டின் பிரதான குழந்தைகள் மருத்துவமனை, அபேக்ஷா (புற்றுநோய்) மருத்துவமனை, கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல மருத்துவமனைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக வைத்தியசாலை ஊழியர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தற்போது, இந்த மருத்துவமனைகள் பல்வேறு அமைப்புகள் அல்லது தனிநபர்களின் உதவியுடன் ஓரளவிற்கு பராமரிக்கப்படுகின்றன. இது பொது சுகாதார அமைப்பை பராமரிக்க எந்த வகையிலும் நிலையான வழி அல்ல.
எரிபொருள் தட்டுப்பாடுகளும் மின் வெட்டுகளும் பொது சுகாதார அமைப்பில் ஏற்படுத்திய தாக்கம் கொஞ்ச நஞ்சமானதாக இல்லாத அதே வேளை, தற்காலிகமாக ஒட்டுப்போடப்பட்டுள்ள இந்தப் பிரச்சினைகள் இன்னும் கடுமையாக தலைதூக்கவுள்ளன. இவற்றின் அனைத்து சுமைகளும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொது சுகாதார அமைப்பிலிருந்து சேவைகளைப் பெறும் உழைக்கும் மக்கள் மீதுமே சுமத்தப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களைப் போலவே, நாமும் பொருட்களின் விலைகள் வானளவு அதிகரிப்பது, ஊதியத் தேக்கம் மற்றும் சலுகை வெட்டுக்களால் பாதிக்கப்படுகிறோம். அதுமட்டுமன்றி, ஊழியர் பற்றாக்குறையால் அதிகரித்து வரும் வேலைச்சுமை மற்றும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே கடினமாகப் போராடிக்கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு சேவைகளை வழங்குவதில் முகங்கொடுக்க நேரும் மன உளைச்சலுக்கும் நாம் ஆளாகியுள்ளோம்.
பொது சுகாதார அமைப்பின் மிக அடிப்படைத் தேவைகளான பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து விக்கிரமசிங்க-இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான எமது போராட்டத்தை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.
சுகாதார அமைப்புக்கு தேவையான அனைத்து ஒதுக்கீடுகளையும் பில்லியன் கணக்கில் வழங்கு!
கட்டண வார்டு முறையை நிறுத்து! அனைத்து மருத்துவ வசதிகளையும் இலவசமாக கொடு!
தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஏற்கனவே போராடி வரும் தொலைத்தொடர்பு, காப்புறுதி, பெட்ரோலியம், மின்சாரம் போன்ற துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இந்த அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுடனும் நாம் ஒன்றிணையவேண்டி இருப்பதோடு, அந்த வேலைத் தளங்களிலும் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பு கொடுத்து, போராட்டத்தை சமரசம் இன்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
கொரோனா தொற்றுநோயுடன் வேலைச் சுமை அதிகரிக்கப்பட்டு, போதிய பாதுகாப்பு இல்லாமல் பெரும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதற்கு எதிராக போராட்டத்துக்கு வந்துகொண்டிருக்கும் உலகெங்கிலும் உள்ள சுகாதார ஊழியர்களுடன் சர்வதேச அளவில் நாம் ஒன்றிணைந்து கொள்ள வேண்டும். எங்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு பரந்த ஆதரவை வழங்குமாறு உழைக்கும் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது உங்களது போராட்டம் ஆகும்.
அழைப்பின் மூலம் அல்லது குறுஞ்செய்தி மூலம் எங்களை தொடர்புகொள்ளுங்கள்: தொ.பே. இலக்கம்: 0773562327
மின்னஞ்சல் முகவரி: healthworkers-sl@wsws.org