மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
ஒரு பேராபத்து அமெரிக்க பாராளுமன்றத்தை ஆட்டிப் படைத்து வருகிறது: அது தான் சோசலிச பேராபத்து.
கடந்த வாரம், அமெரிக்கப் பாராளுமன்றம் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு இன்னும் பில்லியன் கணக்கான டொலர் மதிப்புடைய ஆயுதங்கள் வழங்குவது குறித்து விவாதித்ததுடன், கடன் உச்சவரம்பு காலாவதியாகும் முன்னரே சமூக திட்டங்களில் வெட்டுக்களைக் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நிலையில், பிரதிநிதிகள் சபை சோசலிசத்தைக் குறித்து விவாதிக்கவும் மற்றும் அதைக் கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றவும் மூன்று நாட்களை செலவிட்டது. 1917 ரஷ்யப் புரட்சிக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் உலகளவில் தொழிலாள வர்க்கம் பெற்ற அனைத்து சமூக வெற்றிகளை மாற்றவும் அது சூளுரைத்தது.
ஊடகங்களோ அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அதிவலது குடியரசுக் கட்சியினரின் ஒரு பிரச்சார தந்திரம் என்பதற்கு மேலதிகமாக வேறொன்றுமில்லை என்று சித்தரிக்கின்றன. ஆனால், அது அதை விட இது பெரியதாகும். அமெரிக்கப் பாராளுமன்றம் அதன் நிகழ்ச்சிநிரலில் கணிசமான பகுதியைச் சோசலிசத்தைக் கண்டிப்பதற்கு அர்ப்பணித்தது. இதன்மூலம், தொழிலாள வர்க்கத்தில் ஒரு சக்திவாய்ந்த சோசலிச இயக்கம் வேரூன்றி, வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூகப் போராட்டங்களினால் மேலெழுந்து வரும் அலையை ஒரு புரட்சிகர திசையில் திருப்பி விடும் என்று ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் அச்சத்தைக் காங்கிரஸ் சபை வெளிப்படுத்துகிறது.
'சோசலிசத்தின் பயங்கரங்களை கண்டித்தல்' என்ற தலைப்பில் அந்த மூன்று பக்கத் தீர்மானம், பாசிச வெள்ளையின ரஷ்ய குடியேறிகள், ஹிட்லர் மற்றும் ஜோன் பிர்ச் சமூகத்தால் (John Birch society என்பது ஒரு அமெரிக்க பழமைவாத சங்கமாகும்) பரப்பப்பட்ட சோசலிசம் பற்றிய ஒரு நூற்றாண்டு கால பொய்களையே மீண்டும் உச்சரிக்கிறது.
வாக்குகள் பெருமளவில் இருந்தன, 328 வாக்குகள் ஆதரவாகவும் 86 வாக்குகள் எதிராகவும் பதிவாயின. அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 219-0 என்று குடியரசுக் கட்சியினர் வாக்களித்தனர், அவர்களுடன் பெரும்பான்மையான ஜனநாயகக் கட்சியினர் இணைந்து கொண்டனர், அவர்களில் 109 பேர் ஆதரவாகவும் 86 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
அத்தீர்மானம் பின்வருமாறு தொடங்குகிறது: 'சோசலிச சித்தாந்தம் அதிகாரக் குவிப்பை அவசியப்படுத்துகிறது, அது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் கம்யூனிஸ்ட் ஆட்சிகளிலும், சர்வாதிபத்திய ஆட்சிகள் மற்றும் கொடூரமான சர்வாதிகாரங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.”
ரஷ்யப் புரட்சி தான் முதல் உலகப் போரின் ஏகாதிபத்திய மனிதப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வந்தது என்ற உண்மையையும், இந்தப் புரட்சியைத் தலைகீழாக மாற்ற 14 முதலாளித்துவ சக்திகள்தான் ரஷ்யா மீது படையெடுத்தன, அது தான் ஒரு நீண்ட இரத்தக்களரியான உள்நாட்டு போரைத் தூண்டியது என்ற உண்மையையும் விட்டு விட்டு, “போல்ஷிவிக் புரட்சியில் பத்து மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்” என்று அது அபத்தமாகக் குறிப்பிடுகிறது.
'உலகளவில் 100,000,000 மக்கள் கொல்லப்பட்டதற்கு' சோசலிசம் தான் பொறுப்பு என்று அத்தீர்மானம் கூறுகிறது, இந்த இட்டுக்கட்டப்பட்ட புள்ளிவிபரம் சோவியத் ஒன்றியம் மீதான நாஜி படையெடுப்பில் ஏற்பட்ட ஜேர்மன் உயிரிழப்புகளையும் நம்பும் வகையில் உள்ளடக்கி குறிப்பிடுகிறது.
யதார்த்தம் என்னவென்றால், இந்த முதலாளித்துவ அமைப்புமுறை தான் அந்த மரணங்களுக்கும் மற்றும் பாரியளவிலான சமூக துன்பங்களுக்கும் பொறுப்பாகும். 20 ஆம் நூற்றாண்டு மட்டும் இரண்டு ஏகாதிபத்திய உலகப் போர்களைக் கண்டது, அதில் தலா 20 மற்றும் 60 மில்லியன் பேர்கள் இறந்தார்கள், யூத இனப்படுகொலையில் 10 மில்லியன் பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கொரியா, வியட்நாம், அல்ஜீரியா, அங்கோலா, ஈராக், கொசோவோ, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் பிற இடங்களில் நடந்த ஏகாதிபத்தியப் போர்களில் இன்னும் பல மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள்.
COVID-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட 20 மில்லியன் இறப்புகளுக்கு இந்த முதலாளித்துவ அமைப்புமுறையே பொறுப்பாகும், அதேவேளையில் நூறு மில்லியன் கணக்கானவர்கள் ஒவ்வொரு நாளும் பட்டினியின் நிஜமான அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்கிறார்கள். இதற்கும் மேல், அணுஆயுதமேந்திய ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான போர் விரிவாக்கப்படுவதால் பில்லியன் கணக்கானவர்களின் உயிர்கள் மிவும் ஆபத்தில் உள்ளன.
சோசலிசம் மீது மக்களிடையே ஆர்வம் வளர்ந்து வருவது மீதான ஒரு தற்காப்பு ஒப்புதலாக உள்ள அந்தத் தீர்மானம், சோசலிசத்தை 1936-39 ஸ்ராலினிசம் மேற்கொண்ட பெரும் பயங்கரவாதத்துடனும், வட கொரியா மற்றும் கம்போடியாவின் ஸ்ராலினிச பொலிஸ் அரசுகளுடனும், அத்துடன் கியூபா, வெனிசுவேலா மற்றும் நிக்குராகுவா போன்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முதலாளித்துவ தேசியவாத இலக்குகளுடனும் தொடர்புபடுத்திக் காட்ட முயற்சிக்கிறது.
மிகவும் மிதமான சமூக சீர்திருத்தங்களையும் கூட தவறுக்கிடமின்றி சோசலிசத்துடன் தொடர்புபடுத்தி அத்தீர்மானம் நிறைவு செய்கிறது: 'இந்த அமெரிக்க அரசுகளின் ஒன்றியம் [அமெரிக்கா] தனிநபர்களின் புனிதத்தன்மையில் நம்பிக்கை வைத்து நிறுவப்பட்டது, சோசலிசத்திற்கான கூட்டுமுறை அமைப்பு (collectivistic system of socialism) அதன் அனைத்து வடிவங்களிலும் அடிப்படையாகவும் நிச்சயமாகவும் அதற்கு எதிரானதாகும்: ஆகவே இப்போது இது தீர்மானமாக்கப்படுகிறது… இந்தப் பாராளுமன்றம் அதன் அனைத்து வடிவங்களிலும் சோசலிசத்தைக் கண்டிப்பதுடன் இந்த அமெரிக்க அரசுகளின் ஒன்றியத்தில் சோசலிச கொள்கைகள் நடைமுறைப்படுத்துவதை எதிர்க்கிறது.”
இது தொழிலாள வர்க்கம் மீதும் மற்றும் ஒரு நூற்றாண்டு கால சமூகப் போராட்டங்களினால் வென்றெடுக்கப்பட்ட சமூக திட்டங்கள் மீதுமான ஓர் அரசியல் போர்ப் பிரகடனமாகும்.
கடந்த வியாழக்கிழமை அத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர், ஜனநாயகக் கட்சியினர் அறிமுகப்படுத்திய ஓர் அரசியலமைப்பு திருத்த முன்மொழிவை பிரதிநிதிகள் சபையின் விதிமுறைகள் குழு நிராகரித்திருந்தது, 'அமெரிக்காவில் சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்ப்பில் மருத்துவக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பெடரல் திட்டங்கள் உள்ளடங்காது,' என்று இருந்திருக்கலாம் என்று Hill பத்திரிகை குறிப்பிட்டது.
இது, ஜனநாயகக் கட்சியினர் அவர்களின் அதிவலது குடியரசுக் கட்சி 'சகாக்களுடன்' இணைவதில் இருந்தும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்தும் அவர்களைத் தடுத்துவிடவில்லை. அவ்வாறு செய்ததன் மூலம், ஜனநாயகக் கட்சியினர் 50 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் செய்ததைப் போல, 'கடனை' குறைக்கும் பெயரில் சமூகத் திட்டங்களை வெட்டுவதற்காகக் கொண்டு வரவிருக்கும் குடியரசுக் கட்சியின் நடவடிக்கைகளுக்கு அடியிலுள்ள மூலக்கூற்றுடன் உடன்படுகிறார்கள்.
பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை அணியின் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் மற்றும் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட முன்னணி ஜனநாயகக் கட்சியினர் இந்த நடவடிக்கைக்கு அழுத்தமளிப்பதில் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஜனநாயகக் கட்சியின் ஒரு கன்னையாக இருக்கும் தற்போது காங்கிரஸ் சபையின் ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளுக்கு (DSA) அவர்கள் ஒருபோதும் எந்த விட்டுக்கொடுப்பும் வழங்கப் போவதில்லை என்பதை இவ்விருவரும் முன்னரே அறிவித்துள்ளனர்.
ஜனநாயகக் கட்சியைச் சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக மாற்ற முடியும் என்ற DSA இன் கூற்று, இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் சிதறடிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில் உள்ள ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சி தலைமையாலும் மற்றும் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக் குழுவின் பெரும்பான்மையினராலும் இத்தீர்மானம் ஆதரிக்கப்பட்டுள்ளது. செல்வவளத்தைக் கீழ்நோக்கிப் பகிர்ந்தளிக்கும் அல்லது செல்வந்தர்களின் செல்வத்தை எந்த வகையிலும் மீறும் எந்தவொரு கொள்கையையும் எதிர்ப்பதாக அக்கட்சியின் உறுதிமொழியாக அமைகிறது.
சோசலிசத்திற்கு எதிரான இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களை அங்கீகரிப்பதிலும் சட்டப்பூர்வமாக்குவதிலும் தான் ஜனநாயக சேசலிஸ்டுக்கள், 118 வது காங்கிரஸின் முதல் வாரங்களைச் செலவிட்டுள்ளது.
கடந்த மாதம் சபாநாயகர் பதவிக்கான பிரதிதிநிதிகள் சபைத் தேர்தலில் ஹக்கீம் ஜெஃப்ரிஸை ஆதரிப்பதற்காக DSA இன் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களும் 15 முறை வாக்களித்தனர். பாராளுமன்ற உறுப்பினராக உள்ள DSA உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், அவர் ஜெஃப்ரிஸை ஆதரித்ததையும், அவர் வாக்கு மூலமாக 'ஜனநாயகக் கட்சியினர் ஒற்றுமையாக இருப்பதை' காட்ட அவர் உத்தேசித்திருந்ததையும் விளக்கினார். குடியரசுக் கட்சியினரை எதிர்கொள்ள இந்த வாதம் அவசியம் என்பதாக முன்வைக்கப்பட்டது, ஆனால் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் சோசலிசத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளனர் என்பதே உண்மையான விளைவாக உள்ளது.
'பாசிசத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஒரு நம்பகமான கூட்டாளி' ஆகவும் மற்றும் 'கார்ப்பரேட் பணத்திற்கு' ஓர் எதிர்ப்பாளராகவும் விவரித்து, 'வாக்காளர்கள் அவரை மீண்டும் தேர்வு செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்' என்று DSA சமீபத்தில் ஒரு வாக்களிப்பு வழிகாட்டியில் விவரித்த ரோ கன்னா (Ro Khanna) உட்பட, DSA-ஆமோதிக்கும் சில அரசியல்வாதிகளும் கூட அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். DSA உறுப்பினர்கள் தற்போது தலைமை கொடுத்து வரும் நெவாடா மாநில ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளும் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சோசலிசத்திற்கு எதிரான அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஜனநாயகக் கட்சித் தலைமை கொண்டாடிய நிலையில், அது காங்கிரஸ் சபையில் உள்ள DSA உறுப்பினர்களை உயர்மட்ட தலைமை பதவிகளுக்கும் மேலுயர்த்தியுள்ளது.
திங்கட்கிழமை, ஒகாசியோ-கோர்டெஸ் அறிவிக்கையில், ஜனநாயகக் கட்சித் தலைமையால் பிரதிநிதிகள் குழுவின் மேற்பார்வைக் குழுவில் இரண்டாவது இடத்திற்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவர் 'சிலிர்ப்பும்' மற்றும் 'உற்சாகமும்' அடைந்ததாக அறிவித்தார். DSA ஆமோதிக்கும் இல்ஹான் ஓமரை வெளியுறவுக் குழுவில் இருந்து குடியரசுக் கட்சியினர் நீக்குவதற்கு ஒரு பின்புல வேட்டை நடத்திய பின்னர், அவரை பிரதிநிதிகள் சபையின் வரவுசெலவு திட்டக்கணக்கு குழுவின் தலைமை பதவியில் நியமிப்பதைக் குறித்து வியாழக்கிழமை ஜெஃப்ரிஸ் அவரே அறிவித்தார்.
சோசலிசத்தைக் கண்டிக்கும் அதேவேளையில் ஜனநாயக சோசலிசக் கட்சியின் பிரபலங்களை அதேநேரத்தில் பதவி உயர்த்துவதற்கான அரசியல் ஸ்தாபகத்தின் முடிவில் எதிர்முரணான எதுவும் இல்லை. சோசலிசத்தின் அச்சுறுத்தல், முதலாளித்துவ-சார்பு DSA மற்றும் அதன் செல்வசெழிப்பான நடுத்தர வர்க்க அரசியல் வட்டாரங்களில் இருந்து வரவில்லை. மாறாக, ஆளும் வர்க்கம் சமூக எதிர்ப்பை சிக்க வைத்து அதன் வலதுசாரிக் கொள்கைகளுக்கு தவறான 'இடது' முத்திரையைக் கொடுக்க DSA ஆற்றிய முக்கியமான சேவைகளை நம்பியுள்ளது.
அமெரிக்காவில் தொடர்ச்சியான பல சக்தி வாய்ந்த வேலைநிறுத்தங்களிலும் உலகளவில் வேலைநிறுத்தங்கள் மற்றும் சமூகப் போராட்டங்களின் அதிகரிப்பிலும் எழுச்சி பெற்றுவரும் தொழிலாள வர்க்க இயக்கம் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் மேலாதிக்கத்திலிருந்து முறித்துக் கொண்டு வருகின்றது. இந்தப் போராட்டங்கள் ஒரு நனவுப்பூர்வமான சோசலிச தன்மையை அடைந்து, ரஷ்யாவுக்கு எதிரான போர் விரிவாக்க திட்டங்களையும் வாழ்க்கை நிலைமைகளை வெட்டித் தள்ளுவதன் மூலம் போருக்குப் பணம் ஒதுக்குவதையும் தடுத்து விடுமோ என்பதைக் குறித்தே ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.
இது தன்னியல்பாக நடந்துவிடாது. அதற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மற்றும் உலகெங்கிலுமான சோசலிச சமத்துவக் கட்சிகளால் (SEP) மட்டுமே இன்று பிரதிநிதித்துவம் செய்யப்படும் உலக சோசலிச இயக்கத்தின் நனவான தலையீடு தேவைப்படுகிறது.