இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
இலங்கையின் வெறுக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷவை அதிகாரத்தில் இருந்து துரத்திய வெகுஜன எழுச்சிக்கு எட்டு மாதங்களுக்குப் பின்னர், அவரை அடுத்து பதவிக்கு வந்தவரும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையை அமுலாக்கும் இழிபெயரெடுத்த அமெரிக்க-ஆதரவு ஏகாதிபத்திய கைப்பாவையுமான ரணில் விக்கிரமசிங்கவுடன் தொழிலாள வர்க்கம் நேருக்கு நேர் மோதலுக்கு வந்து கொண்டிருக்கிறது.
பெட்ரோலியத்துறை தொழிலாளர்கள், மின்துறை தொழிலாளர்கள், குடிநீர் வினியோக மற்றும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள் உட்பட அரை மில்லியன் தொழிலாளர்கள் இன்று, விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான சிக்கனத் திட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்களுக்கு எதிராகவும் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் ஒன்றிணைவார்கள். இதற்கும் கூடுதலாக, நூறாயிரக்கணக்கான ஆசிரியர்களும் பிற அரசு பணியாளர்களும் மற்றும் பொதுத்துறை தொழிலாளர்கள் மதிய உணவு நேர மறியல் போராட்டம் மற்றும் பிற போராட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கொள்கைகளுக்கு அவர்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள்.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் (EPSA) கடுமையான வேலைநிறுத்த-தடை சட்டங்களைத் தொழிலாள வர்க்கத்தின் புதிய பிரிவுகளுக்கு விரிவுபடுத்தும் விக்கிரமசிங்கவின் திங்கட்கிழமை இரவு உத்தரவை முகங்கொடுத்து, துறைமுக தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள் உட்பட பல தொழிற்சங்கங்கள் இன்று திட்டமிடப்பட்டிருந்த வெளிநடப்பில் பங்கெடுப்பதைக் கடைசி நிமிடத்தில் இரத்து செய்தன. இருப்பினும் பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் EPSA இன் கீழ் அரசாங்கம் வேலை நிறுத்த நடவடிக்கையைக் குற்றமயமாக்குவதையும், அபராதம் விதிப்பதையும், இரண்டில் இருந்து ஐந்தாண்டு வரை சிறை தண்டனை மற்றும் தொழில் அந்தஸ்தைப் பறிப்பது போன்ற அதன் அச்சுறுத்தல்களையும் நேரடியாக மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
ஆளும் வர்க்க சதியின் விளைவாக ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ள விக்கிரமசிங்க, பொதுச் சேவைகளில் பெரும் வெட்டுக்கள், பாரிய பொதுத்துறை வேலை வெட்டுக்கள், கடுமையான மின் கட்டண உயர்வுகள் மற்றும் வரி அதிகரிப்புகள் மற்றும் மொத்த தனியார்மயமாக்கல் ஆகியவற்றைத் திணிக்க முன்பினும் அதிகமாக ஆணவத்துடன் எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த வாரம் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில், விக்கிரமசிங்க மார்ச் 9 இல் நடத்தப்பட இருந்த நாடு தழுவிய உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்தார். இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சட்டப்பூர்வ நாடாளுமன்ற நிலைத்தன்மைக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. ஆனால் அந்தத் தேர்தல்களில் பெருந்திரளான மக்கள் அரசாங்கத்தை நிராகரித்தால், அவரது அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதோடு அது முற்றிலும் சட்டவிரோதமானதாக இருப்பதை அது எடுத்துக் காட்டிவிடும் என்றவர் சரியாகவே கணக்கிட்டிருந்தார்.
உள்ளாட்சி தேர்தல்களை விக்கிரமசிங்க இரத்து செய்ததை எதிர்த்து போராட மக்கள் விடுதலை முன்னணி (JVP) ஏற்பாடு செய்த ஓர் ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஞாயிற்றுக்கிழமை அந்த அரசாங்கம் ஆயிரக் கணக்கில் கனரக ஆயுதமேந்திய பொலிஸை அணிதிரட்டியது. அந்த பொலிஸ் வன்முறையில் ஜே.வி.பி. வேட்பாளர் ஒருவர் மரணமடைந்தார். இன்னும் ஒரு டஜனுக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் நடத்த பொருளாதாரா மீட்சி வரை காத்திருக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க ஆணவத்துடன் அறிவித்துள்ளார் — உலக மூலதன கழுகுகளுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கட்டத்திற்கு வரும் வரையில், இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மீதான சுரண்டலைத் தீவிரப்படுத்துவதையும், “பொருளாதார மீட்சி' “பொது ஒழுக்கத்தை' கோருகிறது என்பதையும் இதன் மூலம் அவர் அர்த்தப்படுத்துகிறார். கடந்த ஆண்டு மக்கள் எழுச்சியை அவர் பலமுறை கண்டித்துள்ளதுடன், பயங்கரவாத-தடை சட்டங்களின் கீழ் போராட்டத் தலைவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். நாட்டை 'அராஜகத்திற்கு' அடிபணிய விடமாட்டேன் என்றவர் சூளுரைத்தார்.
சிறகொடிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் கூட வெகுஜன எதிர்ப்பு எழுவதற்கு அபாயகரமான பாதையை வழங்கி விடும் சாத்தியக்கூறு கொண்டிருப்பதாக அவரும் இலங்கை முதலாளித்துவ வர்க்கமும் தெளிவாக பார்க்கின்றார்கள். இலங்கையில் புதிதாக வெடிக்கவுள்ள தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நசுக்க, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் எதேச்சதிகார அதிகாரம் முதல் நீதிமன்றங்கள். பொலிஸ் மற்றும் இராணுவம் வரை, முதலாளித்துவ அரசின் முழுப் பலத்தையும் பயன்படுத்த தங்களைத் தாங்களே பலப்படுத்திக்கொள்கின்றனர்.)
பணவீக்கம் தொடர்ந்து 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வருவதால், தொழிலாள வர்க்கத்தாலும் கிராமப்புற மக்களாலும் அவர்கள் தரப்பில் முடிவின்றி சுமைகள் சுமத்தப்படுவதைத் தாங்க முடியவில்லை. இலங்கை மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் ஒவ்வொரு வேளை உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பசி, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் முழுமையான பட்டினி அந்தத் தீவை வாட்டி வதைக்கின்றன.
கடந்தாண்டின் நான்கு மாத கால வெகுஜன மக்கள் எழுச்சியின் போர்க்குணமும் பரந்த தன்மையும் இருந்தாலும் கூட, எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் கொண்டுவர முடியாமல் போன அதன் தோல்வி குறித்து உழைக்கும் மக்களின் பரந்த பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் விக்கிரமசிங்கவால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. எதிர்கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் உடந்தையாக இருந்த நிலையில், மீண்டும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் ஆணையிட்டுள்ள நடவடிக்கைகளை ஏற்கனவே இழப்பதற்கு ஒன்றும் இல்லாத மக்கள் மீது திணிக்க செயற்படுகின்றது.
ஆனால் அரசாங்கம் அதிகரித்தளவில் எதேச்சதிகார நடவடிக்கைகளைச் சார்ந்திருப்பது உள்ளடங்கலாக, இப்போது அனைத்துமே பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பின் மீளெழுச்சியைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த எதிர்ப்பு அவர்களின் கட்டுப்பாட்டை மீறும் என்ற அச்சத்தில், அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கத்தின் தலைவரும் ஜே.வி.பி.யின் தலைவருமான வசந்த சமரசிங்க உட்பட சில தொழிற்சங்கத் தலைவர்கள், காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கான சாத்தியக்கூறு குறித்து உணர்ச்சிகரமாக வாய் திறந்துள்ளனர்.
இத்தகைய தீவிர வர்க்கப் பதட்ட நிலைமைகளின் கீழ், இலங்கை முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகள், எது தங்களால் 'கொடுக்கக்கூடியது' என்று கூறுவதை நிராகரித்து, பெருந்திரளான மக்களின் தேவைகளுக்காக ஜனநாயக மற்றும் சோசலிச கோரிக்கைகள் அடிப்படையிலான ஒரு வேலைத்திட்டத்திற்காக தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாகவும், அதற்குப் பின்னால் கிராமப்புற மக்களை அணிதிரட்டுவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இலங்கைப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) போராட்டம், அனைத்தினும் மிகவும் அவசரமானதாக மாறி உள்ளது.
கடந்தாண்டு வெகுஜன எழுச்சியின் தொடக்கத்தில் இருந்தே, சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து தொழிலாள வர்க்கத்தை விடுவிப்பதற்காகப் போராடியது. ஆரம்பத்தில் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்ட நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக தலையிடுவதைத் தடுப்பதற்கு செயற்பட்ட இந்த தொழிற்சங்கங்கள், பின்னர் ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தங்களுக்கு அனுமதித்த அதே வேளை, மறுபக்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்த தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கின்ற ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க் கட்சிகள் விடுத்த அழைப்பை ஊக்குவித்தன.
சோசலிச சமத்துவக் கட்சியானது இன பாகுபாடுகளுக்கு அப்பால் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்தும் சுயாதீனமாக, நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்புவதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன முன்முயற்சியை அபிவிருத்தி செய்யவும் போராடுகிறது. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களை எதிர்ப்பதற்கும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் பரந்த பிரிவுகளை அணிதிரட்டுவதற்கான வழிமுறையாக இந்தக் குழுக்கள் இருக்க வேண்டும்.
2022 ஜூலையில், இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர், ஆளும் வர்க்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதற்கும் அதன் பரந்த செல்வத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் மிகவும் பயனுள்ள கருவியை உருவாக்குவதன் பேரில் அரசாங்கத்தை மறுவடிவமைக்கும் சூழ்ச்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியானது ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாடு ஒன்றிற்கான போராட்டத்தைத் தொடங்கியது. உழைப்பாளர்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த மாநாடானது 'கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவருக்குப் பின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவும் எதேச்சதிகாரராகவும் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவினதும் மதிப்பிழந்த பாராளுமன்றக் கூட்டாளிகளால் அமைக்கப்படும் பிற்போக்கு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு ஒரு புரட்சிகர அரசியல் மாற்றீட்டை' தன்னகத்தே கொண்டதாக இருக்கும் என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.
சோசலிச சமத்துவக் கட்சி இந்த மூலோபாயத்துடன் தான் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க இன்றைய பாரிய வேலைநிறுத்தத்தில் தைரியமாக தலையிடுகிறது. “அரசாங்கங்களின் சிக்கன நடவடிக்கை தாக்குதல்களுக்கு எதிரான வேலைநிறுத்தத்தை ஆதரிப்போம்! கடுமையான அத்தியாவசிய சேவை உத்தரவுகளைத் திரும்பப் பெறு! சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவோம்!” என்ற தலைப்பில் சிங்களத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், சோ.ச.கட்சி பின்வருமாறு அறிவிக்கிறது,
“முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எந்தத் தீர்வும் இல்லை. ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தின் அவசரம், வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டம் மற்றும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வர்க்கப் போர் தயாரிப்புகளுக்கு மத்தியில் சக்திவாய்ந்த முறையில் வெளிப்பட்டுள்ளது.
விக்கிரமசிங்கவை நியாயமான முறையில் நடக்க முறையீடு செய்வதன் மூலமோ அல்லது ஓர் அரசாங்க மாற்றத்தின் மூலமோ சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்களை மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக ஆக்க முடியும் என்ற வாதங்களோடு தொழிற்சங்கங்களும், மக்கள் விடுதலை முன்னணி, போலி-இடது அமைப்புகளும் திவாலான இலங்கை முதலாளித்துவத்துடனும் அதன் சிதைந்த ஜனநாயக அமைப்புகளுடனும் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப் போடுவதை அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
உள்ளாட்சித் தேர்தல்களை விக்கிரமசிங்க இரத்து செய்ததற்கு விடையிறுப்பாக, பிற முதலாளித்துவ எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து மக்கள் விடுதலை முன்னணி மேற்கத்திய சக்திகள் தலையீடு செய்யுமாறு முறையிட்டுள்ளது. அதாவது, ரஷ்யா மீதான போரை இடைவிடாமல் தீவிரப்படுத்தி வருகின்ற, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு மிகப் பெருமளவில் வக்காலத்து வாங்கி வருகின்ற மற்றும் மூன்று தசாப்த காலமாக தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக சிங்கள மேலாதிக்க இலங்கை அரசு முன்னெடுத்த உள்நாட்டுப் போருக்கு ஆதரவளித்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். சீனாவுக்கு எதிராக போர் தொடுக்கும் அதன் தயாரிப்புகளில் இலங்கையை இன்னும் முழுவதுமாக இணைத்துக் கொள்ள அமெரிக்கா இத்தீவின் நிதி நெருக்கடியை ஈவிரக்கமின்றி சாதகமாக்கி வருகிறது என்பதையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கையானது, பெருந்திரளான மக்களின் தேவைகளை வெளிப்படுத்தும் வகையில், அவர்களின் சுயாதீனமான அணித்திரள்விற்கான மையமாக சேவையாற்றும் விதத்தில், பல்வேறு சோசலிச மற்றும் ஜனநாயகக் கோரிக்கைகளை விவரிக்கிறது. நிறைவேற்று அதிகாரங்களை கொண்ட ஜனாதிபதி பதவியை அகற்றுவது, உற்பத்தி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் மீது தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவுவது; சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை நிராகரிப்பது மற்றும் இலங்கை முதலாளித்துவம் பெற்றுள்ள வெளிநாட்டு கடன்களை தள்ளுபடி செய்தலும், இவற்றில் அடங்கும்.
'நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன், ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாடு, மேற்கூறிய கோரிக்கைகளுக்காக போராடுவதற்கான நடவடிக்கையின் போக்கைத் தீர்மானிக்கும். அவ்விதத்தில், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்குப் பொறுப்பேற்ற ஒரு தொழிலாளர்கள்-விவசாயிகள் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைக்கும்,” என்று அது தொடர்ந்து விளக்குகிறது.
இலங்கையில் புரட்சிக்கும் எதிர்ப்புரட்சிக்கும் இடையே வளர்ந்து வரும் மோதல், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு முன்னறிவிப்பாகவும், எச்சரிக்கையாகவும் உள்ளது.
உலகில் எல்லா இடங்களிலும் ஆளும் வர்க்கம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விருப்பமின்றி உள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் ஏகாதிபத்திய மையங்களிலுள்ள ஆளும் வர்க்கங்கள் ரஷ்யாவிற்கு எதிரான அதன் போருக்கும் சீனாவுக்கு எதிரான ஏற்கனவே மிக முன்னேறியுள்ள போர் தயாரிப்புகளுக்கும் நிதியளிப்பதற்காக, தொழிலாள வர்க்கத்தின் எஞ்சியுள்ள சமூக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களின் ஒரு புதிய அலையைத் தொடங்கியுள்ளது. அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பை முகங்கொடுத்து, அது வேலைநிறுத்த தடைச் சட்டங்களைக் கொண்டும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பிற தாக்குதல்களுடனும் மற்றும் பொலிஸ் அரசு ஒடுக்குமுறையின் துணைப்படைகளாக சேவையாற்ற பாசிச சக்திகளை வளர்த்தெடுத்தும் தொழிலாள வர்க்க எதிர்ப்பைக் குற்றகரமாக்க நகர்ந்து வருகிறது.
தொழிலாள வர்க்கம் அதன் வர்க்க நலன்களை உறுதிப்படுத்தவும், அதன் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், ஏகாதிபத்தியப் போரை எதிர்க்கவும், நாட்டின் எல்லைகள் மற்றும் கண்டங்களைக் கடந்து அதன் போராட்டங்களை ஒன்றிணைக்கவும், அது போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, அதனை இதுவரையில் அடைத்து வைத்திருக்கும் தேசியவாத-பெருநிறுவனவாத தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிடியில் இருந்து வெளி வர வேண்டும்.
ஒரு புதிய சமூக ஒழுங்கின் கதாநாயகனான தொழிலாள வர்க்கத்தை ஒரு அரசியல் சக்தியாக மாற்றுவதற்கும் அதன் போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக வரலாற்றின் படிப்பினைகளில் வேரூன்றிய ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். அது, லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இலங்கையிலும் உலகம் முழுவதிலும் உள்ள அதன் தேசியப் பிரிவுகளுமாகும்.