ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கியப்பட்ட போராட்டத்தை கட்டியெழுப்ப போராடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சுகாதாரம், பெருந்தோட்டம், ஆடைத் தொழிற்துறை, துறைமுகம், ஹோட்டல், கறுவாத் தோட்டம் ஆகியவற்றின் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட எமது நடவடிக்கை குழுக்கள், எமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீது விக்கிரமசிங்க அரசாங்கமும் அதன் பெரும் வணிகங்களும் முன்னெடுக்கும் தாக்குதல்களுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றன.

28 ஏப்ரல் 2022 அன்று இலங்கையில் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின் போது சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் சுலோக அட்டைகளை ஏந்திச் செல்லும் கண்டியைச் மருத்துவமனை ஊழியர்கள்.

எமது நடவடிக்கைகள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்டாலும் கூட, தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த ஒரு நாள் மற்றும் அரை நாள் வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் நாங்கள் பங்குபற்றினோம். இந்த நடவடிக்கைகளுக்கு அழைப்பது அல்லது அவற்றை நிறுத்துவது பற்றி எங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை. அல்லது எங்கள் கோரிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று கூட தொழிற்சங்கங்கள் எங்களிடம் ஆலோசனை கேட்கவில்லை.

கடந்த வார நடவடிக்கைகள் முக்கியமாக தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்த தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த முன்னணியில் உள்ள பல தொழிற்சங்கங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உடன் இணைந்தவை ஆகும். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (அ.ம.அ.ச.) மற்றும் சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பும் அழைப்பு விடுத்த ஏனைய தொழிற்சங்கங்களில் அடங்கும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் என்ற மற்றொரு கூட்டணியில் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்காத போதிலும், அவற்றில் சில, தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு முன்வைத்த இதே கோரிக்கைகளுடன் மார்ச் 8 அன்று அதன் சொந்த போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் பல சுகாதார மற்றும் தொழிலறிஞர்களின் சங்கங்களும், அதிக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இவை திங்களன்று தொடங்குவதோடு, தொழிற்சங்க அதிகாரிகள் இது 'பெரிய நடவடிக்கையாக' இருக்கும் என்று கூறுகின்றனர். ஜே.வி.பி.யுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் உட்பட ஏனைய பல தொழிற்சங்கங்களும், அடுத்த வாரம் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

இந்த தொழிற்சங்க முன்னணிகள், ஏன் தனித்தனியாகவும் சிதறியதாகவும் ஒரு நாள் அல்லது அரை நாள் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன என்பதை தங்கள் உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும். சில தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. மற்றவை ஒத்துழையாமை போராட்டம் மற்றும் கறுப்பு ஆடை போராட்டமும் நடத்தி வருகின்றன.

இந்த தொழிற்சங்கங்கள், போராட்டங்களை அரசாங்கத்தின் வருமான வரி உயர்வை எதிர்க்கும் கோரிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்படுத்தியது ஏன்? சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளின் படி அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்படும் ஏனைய கொடூரமான சமூகத் தாக்குதல்களை பற்றி அவை குரல் எழுப்பத் தவறியது ஏன்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

இவற்றில் பிரமாண்டமான எரிபொருள் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பு, அதிகப்படியான வட் (பெறுமதி சேர் வரி) திணிப்பு மற்றும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வெட்டியமையும் அடங்கும். மேலும் சிக்கன நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட உள்ளன: இலட்சக்கணக்கான அரச வேலைகள் அழிப்பு, ஊதியம் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் பொதுக் கல்வி, சுகாதாரம் உட்பட அரசுத் துறை தனியார்மயமாக்கலும் அவற்றில் சிலவாகும். 

தொழிற்சங்கங்கள், கடந்த ஆண்டு ஏறக்குறைய 70 சதவீதத்தை எட்டியிருந்த, இப்போது சுமார் 50 சதவீதமாக இருக்கின்ற, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் வருவாயைக் கடுமையாகக் குறைத்துள்ள பணவீக்கத்தை முற்றிலுமாக அலட்சியம் செய்துள்ளன.

தொழிற்சங்கங்கள் இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுக்கின்றன. ஏனெனில் அவை சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு எதிரான எந்தவொரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க நடவடிக்கைக்கும் விரோதமாக இருப்பதுடன் தொழிலாளர்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் தடம் புரட்டி நசுக்கவும் முயல்கின்றன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆயினும் விக்கிரமசிங்க தனது கொடூரமான சமூகத் தாக்குதல்களில் எந்த மாற்றத்தையும் செய்ய திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

இலங்கையில் கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கு வெளியே புதிதாக அதிகரிக்கப்பட்ட ஊதியத்தை ஒத்த வரிக்கு எதிராக இலங்கை துறைமுக ஊழியர்கள் 1 மார்ச் 2023 புதன்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம். [AP Photo/Eranga Jayawardena]

மார்ச் 1, ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, சுகாதார தொழிலறிஞர்களின் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ், “கூட்டுப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தால், அனைவரும் வீதிக்கு வருவார்கள். நாங்கள் மக்களை அடக்கி வைத்திருப்பதுடன் இந்த வகையான வேலைநிறுத்தங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்க முடியாது என்று அவர்களிடம் கூறி வருகிறோம்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குமுதேஷின் கருத்துக்கள், அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதை தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பதையும், அஞ்சுவதையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்களும், இந்த தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் அரசியல் கட்சிகளும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குவதற்கும் பிளவுபடுத்துவதற்கும் தங்களால் இயன்றதைச் செய்து கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றது.

செவ்வாயன்று பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு உரையாற்றிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் 'பொருளாதார சீர்திருத்தங்கள் முன்னோக்கி நகர்வதற்கு தீர்க்கமானவை' என்று அறிவித்தார். “இந்த திட்டத்தை போராட்டங்கள் மூலம் சீர்குலைத்தால், இந்த அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் எச்சரித்தார்.

விக்கிரமசிங்க, மார்ச் 1 எதிர்ப்புக்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவை விதிமுறைகளை சுமத்தியதும் சமீபத்திய மாணவர் போராட்டங்கள் மீதான வன்முறை பொலிஸ் தாக்குதல்களும், வெகுஜன எதிர்ப்புகள் அனைத்தையும் நசுக்க அவரது தயார்நிலையை நிரூபிக்கின்றது.

சகோதர சகோதரிகளே!

நமது ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை தொழிற்சங்கக் கட்டமைப்பால் அடக்கி வைக்க முடியாது. நமது கோபத்தைக் கலைக்க மட்டுமே தொழிற்சங்கங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புக்களுக்கு அழைக்கின்றன.

இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார சரிவு ஒரு தேசிய பிரச்சினை அல்ல, மாறாக கோவிட்-19 தொற்றுநோயினாலும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினாலும் மோசமடைந்துள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியின் ஒரு பகுதியாகும்.

இந்த நிலையில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து எங்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பது நாளுக்கு நாள் தெளிவாகின்றது. நமது உரிமைகளுக்காக போராட தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட, அரசியல் ரீதியில் நனவுப்பூர்வமான போராட்டம் தேவை. இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பின்வரும் கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம்.

  • வெளிநாட்டு கடனை நிராகரிக்கவும்
  • சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டம் வேண்டாம்
  • தனியார்மயமாக்கலை நிறுத்து
  • வேலைகள் மற்றும் ஊதிய வெட்டுக்களை நிறுத்து
  • பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவையைப் பாதுகாத்திடு
  • வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப அதிகரிக்கும் 75,000 ரூபாய் குறைந்தபட்ச மாத ஊதியம் 
  • தொழிலாளர்கள் மற்றும் தொழிலறிஞர்கள் மீதான வருமான வரி அதிகரிப்பை இரத்து செய்!

இலங்கைத் தொழிலாளர்களின் போராடும் உறுதிப்பாடு, சர்வதேச அளவில் இதேபோன்ற சமூகத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் எழுச்சிமிக்க இயக்கத்தின் ஒரு பகுதியாகும். உலக முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்திற்காக நாம் நமது சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.

கடந்த ஏப்ரல்-ஜூலை மாதங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களை உள்ளடக்கிய வெகுஜன எழுச்சியின் ஒரு பகுதியாக நாங்கள் இருந்தோம். இந்த எழுச்சி ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவை நாட்டை விட்டு வெளியேறவும் இராஜினாமா செய்யவும் நிர்ப்பந்தித்தது. ஆனால் தொழிற்சங்கங்கள் இந்த வெகுஜன இயக்கத்தை எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. க்கு பின்னாலும் ஒரு முதலாளித்துவ இடைக்கால ஆட்சிக்கான அவர்களின் அழைப்புகளுக்கும் பின்னாலும் திசை திருப்பி விட்டன. இதுவே விக்கிரமசிங்க ஆட்சிக்கு வருவதற்கும் அரசாங்கத்தின் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கும் வழி வகுத்தது.

சகோதர சகோதரிகளே!

முதலாளித்துவ அமைப்புடன் ஆயிரம் நூல்களால் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் நமது போராட்டங்கள் நீடித்தால், நிச்சயமாக நாம் காட்டிக்கொடுக்கப்படுவோம். நமது உரிமைக்கான போராட்டத்தை நாம் எங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சாலைகளிலும், பெருந்தோட்டங்களிலும் மற்றும் நமது சுற்றுப்புறங்களிலும், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலும் சுயாதீனமாக தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

நாங்கள் ஏற்கனவே இந்த பிரச்சாரத்தை தொழிலாள வர்க்கம், கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏனைய உழைப்பாளிகள் மத்தியில் தொடங்கி இருப்பதோடு உங்களின் சொந்த நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க எங்களின் முழு ஆதரவை உங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) தொடங்கியுள்ள பிரச்சாரத்திற்கும் உங்கள் கவனத்தை ஈர்க்கின்றோம். சோசலிசக் கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தில், கிராமப்புற ஏழைகளை ஒன்றிணைத்துக்கொண்டு, தொழிலாள வர்க்கம் தனது பலத்தை அணிதிரட்டுவதற்கான அரசியல் வழிவகைகளை அத்தகைய மாநாடு வழங்கும். தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அடிப்படையில் அந்த மாநாடு அமையும்.

இலங்கைத் தொழிலாள வர்க்கத்தின் நண்பர்களும் கூட்டாளிகளுமான உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலகளாவிய மட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான கட்டமைப்பை வழங்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்ட, தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியுடன் இலங்கை தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்கள் இணைந்து கொள்ள வேண்டும். இந்த சக்திவாய்ந்த முன்முயற்சியை எங்கள் நடவடிக்கை குழுக்கள் முழுமையாக அங்கீகரிப்பதுடன் அதற்கு ஆதரவை வழங்குமாறு உங்களையும் ஊக்குவிக்கின்றன.

தயவு செய்து பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:

action.committees.sl@gmail.com

இலங்கையில் முதலாளித்துவக் கட்சி-தொழிற்சங்க கூட்டணிகள் வேண்டாம்! அரசாங்க-ச.நா.நி. சிக்கன நடவடிக்கைகளை தோற்கடி! ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்பு!

இலங்கை தோட்டத் தொழிற்சங்கத் தலைவர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார்

உள்ளூராட்சித் தேர்தலை முடக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்திடு! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! 

Loading