1.8 மில்லியன் மகாராஷ்டிர மாநில அரசாங்க  ஊழியர்கள் ஓய்வூதிய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மாநில அரசாங்க ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய உரிமைகள் மீதான தாக்குதலை எதிர்த்து மார்ச் 14 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் செய்பவர்களின் முக்கிய கோரிக்கை  அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீட்டெடுப்பதாகும். அவர்கள் பங்களிப்பு அடிப்படையிலான புதிய ஓய்வூதியத் திட்டத்தை (NPS) எதிர்க்கிறார்கள், இது தொழிலாளர்களே தங்கள் ஓய்வூதியத்தைப் பராமரிக்கும்படியாக நிதிச் சுமையை அவர்கள் மீது திணிக்கிறது.

மகாராஷ்டிரா அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில், மார்ச் 14, 2023. [Photo: Ritvick Arun Bhalekar @ritvick_ab]

ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பணிநிலை முன்னேற்றத் திட்டத்தின் பலன்களை நீட்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வேலைநிறுத்தப் பணியாளர்கள் எழுப்பியுள்ளனர். இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் உள்ள ஆட்சி நிர்வாகிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆக்ரோஷமான பதிலடி கொடுத்துள்ளனர், அதில் வேலைநிறுத்தத்தை உடைப்பவர்களாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பது, அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது மற்றும் பணி சார்ந்த நடவடிக்கையை குற்றச் செயலாக்கி  அச்சுறுத்தவது  ஆகியவை அடங்கும்.

பூனேவில் சுமார் 68,000 பேர், கோலாப்பூரில் 80,000 பேர் மற்றும் சத்ரபதி சம்பாஜியில் 17,000 பேர் உட்பட, மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்டங்களில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் போராட்டங்களில் கலந்து கொண்டனர். அவர்களின் முக்கிய முழக்கம், 'ஒரே ஒரு குறிக்கோள் தான், பழைய ஓய்வூதியத்தை திருப்பிக்கொடு' என்பதாகும். அரசாங்கம்  நடத்தும் மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் உட்பட பல்வேறு மாநில அரசாங்க சேவைகளை வேலைநிறுத்தம் கடுமையாக பாதித்துள்ளது. 

மாநில அரசாங்க ஊழியர்கள், அரை அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இயங்கும் கிட்டத்தட்ட 35 தொழிற்சங்கங்களின் ஒரு குழுவின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வாஸ் கட்கர் கூறுகையில், மகாராஷ்டிராவின் 36 மாவட்டங்களிலும் உள்ள அவர்களின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அவர் கூறியதாவது: மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள், வரி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கூட முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

NPSக்கு எதிரான காலவரையற்ற வேலைநிறுத்தம், கடுமையான சிக்கன நடவடிக்கைகள் உட்பட அரசாங்கங்களின் முதலீட்டாளர்-சார்பு பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இந்தியத் தொழிலாளர்களின் தயார்நிலையின் சக்திவாய்ந்த அறிகுறியாகும். மையத்தில், மோடி அரசாங்கம் இந்தியாவின் இராணுவத்தை நவீனமயமாக்க பெரும் தொகையைச் செலவழிக்கிறது, எனவே அது சீனாவுடனான போருக்கான அதன் பொறுப்பற்ற தயாரிப்புகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக செயல்பட முடியும். புதிய ஆயுதங்களை வாங்குவதற்காக மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஊக்குவிப்புகளுக்கு பல பில்லியன்களை வழங்குவதற்காக  பொது சேவைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மீது பிரமாண்டமான தாக்குதலை நடத்துவது  அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களில் இருந்தும் அவசியமாக்குகிறது.

தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக தொழிற்சங்கங்கள் தயக்கத்துடன் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP)- சிவசேனா மாநில அரசாங்கத்துடன் தொடர்ந்து விவாதங்களை நடத்தி, ஒரு வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் முகத்தைக் காப்பாற்றும் 'தீர்வை' அடைவதற்கான அவநம்பிக்கையான முயற்சியில் தோல்வியடைந்தனர்.

முதலீட்டாளர்களுக்கு ஆதரவான பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2003 ஆம் ஆண்டு மத்திய அரசாங்க ஊழியர்களுக்காக  NPS  முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய முறையின் கீழ், ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து மத்திய  அரசாங்க  ஊழியர்களும் OPS இன் கீழிருந்த சலுகைகளை இழந்து  NPS இல் சேர வேண்டியிருந்தது. அவர்களின் சம்பளத்தில் பத்து சதவீதம் ஓய்வூதிய நிதிக்காக கழிக்கப்பட்டது, அதே நேரத்தில் அரசாங்கம் 14 சதவீதம் பங்களிப்பு செய்தது. ஓய்வூதிய நிதியானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) எனப்படும் மத்திய அரசு அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு பணியாளரும் தங்கள் பங்கை PFRDA மூலம் எவ்வாறு முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்யலாம். ஓய்வூதிய பலன்கள் முதலீட்டில் இருந்து வரும் வருமானத்தைப் பொறுத்தது. அது பழைய திட்டத்தின்படி அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுவதாக இருக்காது.  

தற்போதைய BJP தலைமையிலான பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கள் பெருவணிகத்திற்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் சமயத்தில் தொழிலாளர்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகையில் பங்களிப்பு இல்லாத OPS-ஐ மீட்டெடுப்பதற்கான கோரிக்கை உத்வேகம் எடுத்துள்ளது. 

NPS முதன்முதலில் பாஜக வால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது அரசியல் ஸ்தாபனத்தின் அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஜக்கிய முற்பாக்கு கூட்டணி (என்டிஏ) அரசாங்கங்கம் மத்திய அரசாங்க ஊழியர்களுக்கான NPS உடன் தொடர்ந்தது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநில அரசாங்கங்கள் அவை பிஜேபி, காங்கிரஸ் அல்லது பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளால் வழிநடத்தப்பட்டாலும் மாநில அளவில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன. இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM ஐப் பொறுத்தவரை, அது NPS ஐ தொடர்ச்சியாக எதிர்க்கத் தவறிவிட்டது. CPM தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கேரளாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, NPS ஐ அறிமுகப்படுத்திய  முந்தைய அரசாங்கத்தின் முடிவை திரும்பப் பெற மறுத்தது. தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்பின் கீழ் மட்டுமே ஐந்து மாநில அரசாங்கங்கள் - பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் - சமீபத்தில் OPS ஐ மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பெரும் மக்கள் ஆதரவை வென்றெடுப்பதற்காக  எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் ((AAP),  OPS ஐ மீட்டெடுப்பதை ஆதரிப்பதாகக் கூறின. இருப்பினும், இது ஒரு மோசடியான பாசாங்கை தவிர வேறில்லை, இந்தக் கட்சிகள் தலைமையிலான மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களும் அல்லது இந்தக் கட்சிகளும் உட்பட NPSஐ அமல்படுத்தியது குறித்த பதிவுகளை பார்க்க முடியும்.

வளர்ந்து வரும் தொழிலாளர் எதிர்ப்பிற்கு மத்தியில்  NPS-ஐ ஏதாவது ஒரு மாற்றம் செய்வது குறித்து பெருவணிகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்,  முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் ஊடகத்திடம் கூறினார்: 'அது [OPS-ஐ மீட்டெடுப்பது] நிதிப் பொறுப்பு மற்றும் இன்னும் பரந்த அளவில் எங்கள் சீர்திருத்தங்களின் நம்பகத்தன்மை  ஆகிய இரண்டுக்குமான நமது உறுதிப்பாட்டிலிருந்து தீர்க்கமான ஒரு பின்னோக்கிய நகர்வாக இருக்கும்.’’  

பிஜேபி-சிவசேனா அரசாங்கம்  இந்த இயக்கத்தை  தொழிற்சங்கங்கள் காட்டிக் கொடுப்பதற்கு அவற்றுக்குள்ள திறனை கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு செய்தியை அனுப்புவதற்காக வேலைநிறுத்தத்தை இரக்கமின்றி நசுக்க அடக்குமுறை அரச அதிகாரங்களை அது கைவசம் வைத்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை, மகாராஷ்டிர மாநில சட்டமன்றம் கடுமையான மகாராஷ்டிரா அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம், 2023 (MESMA) ஐ நிறைவேற்றியது. இந்தச் சட்டம், முன்பு காலாவதியான, அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை புதுப்பிக்கிறது. அரசாங்கம் அவ்வாறு செய்ய முடிவெடுத்தால், வேலைநிறுத்தத்தை தடை செய்வதற்கான புதிய சட்டத்தை இப்போது செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இந்திய அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தம், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலையின் ஒரு பகுதியாகும். தொழிலாளர்களின் அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகளின் தீவிரமான தாக்குதலுக்கு எதிராக இந்தப் போராட்டங்கள் சர்வதேச அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றன. கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போருக்கான செலவு  ஆகியவற்றினால் உக்கிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் முழுச் சுமையையும் ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்குகள் தொழிலாள வர்க்கத்தின் மீது இறக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான பொது மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அரசாங்கத்தின்  அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறி மார்ச் 15 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். 

ஐரோப்பா முழுவதும் ஒரு பெரிய போர்க்குணமிக்க வேலைநிறுத்த இயக்கம் உருவாகி வருகிறது. இங்கிலாந்தில், இந்த வாரம் 400,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பிரான்சில், ஜனாதிபதி மக்ரோன் பிரெஞ்சு இராணுவ மறுசீரமைப்பு மற்றும் செல்வந்தர்களை மேலும் செழுமைப்படுத்துவதற்காக ஓய்வூதிய முறையை கொடூரமான முறையில் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜேர்மனியில், பொதுத்துறை ஊழியர்கள், மோசமான வேலை நிலைமைகள் மற்றும் குறைந்த ஊதியங்களுக்கு எதிராக தொடர்ச்சியான போர்க்குணமிக்க எச்சரிக்கை வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளைப் போலவே, வேலைநிறுத்தம் செய்யும் மகாராஷ்டிர தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய தடையாக இருப்பது தொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரமாகும். தொழிலாளர்களின் பெரும் அழுத்தத்தின் பேரில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்கள், முதலில் கிடைக்கும் வாய்ப்பிலேயே அவர்களை மீண்டும் வேலைக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டுகின்றன. மார்ச் 14 மாலை, தொடக்க ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்கள் புதன்கிழமை முதல் வேலை நடவடிக்கையிலிருந்து விலக முடிவு செய்தன. 350,000 உறுப்பினர்களைக் கொண்ட பிரதமிக் ஷிக்ஷக் சங்கத்தின் தலைவர் சம்பாஜி தோரட், வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள மாநில ஊழியர்களின் மத்திய தொழிற்சங்கம் தனது பிடிவாதப் போக்கைக் கைவிட்டு, பிரச்சினையை அரசாங்கத்துடன் விவாதித்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறார்.

இந்த அடிப்படையில், தோரட்டும் அவரது தொழிற்சங்கமும் 'ஒரு தீர்வைக் காண அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் கொடுக்கத் தயாராக உள்ளன...' வெகுஐனங்களின் கோபத்தைத் தணிக்கும் முயற்சியில் மூத்த மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மாநில சட்டமன்றத்தில் தனது அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை என்று கூறினார். இப்பிரச்னைக்கு தகுந்த தீர்வு காண ஓய்வு பெற்ற அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க முயற்சிப்பதாக கூறினார். 

வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் ஓய்வூதிய உரிமைகளுக்காக ஒரு உண்மையான போராட்டத்தை நடத்தும் திறன் தொழிற்சங்கங்களுக்கு உள்ளதா என்பது குறித்து மாயைகளுடன்  இருக்கக்கூடாது. ஏற்கனவே இரண்டு தொழிற்சங்கங்கள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டபடி, மகாராஷ்டிர தொழிலாளர்களின் போராட்டம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தால் அது மிகப்பெரிய ஆபத்தில் இருக்கும். 70,000 மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் அதே அச்சுறுத்தலைத்தான் வேலைநிறுத்தக்காரர்களும் எதிர்கொள்கின்றனர், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர்களின் தைரியமான ஐந்து மாத வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களால் வேண்டுமென்றே தனிமைப்படுத்தப்பட்டது மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப்படாத நிலையில் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கடுமையான  தீர்ப்பினால் வேலைநிறுத்தம் உடைக்கப்பட்டது. 

தொழிலாளர்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும் அதற்காக தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான வேலைநிறுத்தக் குழுக்களை அமைக்க வேண்டும். இத்தகைய குழுக்கள் வேலைநிறுத்தம் செய்பவர்கள் தங்கள் போராட்டத்தை இந்தியா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் இதே போன்ற தாக்குதல்களுக்கு எதிராக போராடும் தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த உதவும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடங்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC ) முதலாளித்துவ சிக்கன நடவடிக்கை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாளர்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டுவதற்கான அமைப்புக்கான கட்டமைப்பையும் அரசியல் தலைமையையும் வழங்குகிறது.

Loading