முன்னோக்கு

2023 மே தினத்தை நோக்கி முன்னேறுவோம்! போருக்கு எதிராகவும் சோசலிசத்திற்காகவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும், உலக சோசலிச வலைத் தளமும் ஏப்ரல் 30, ஞாயிற்றுக்கிழமை, 2023 மே தினத்தைக் கொண்டாடும் வகையில் ஓர் உலகளாவிய இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது.

தொழிலாள வர்க்க சர்வதேச ஒற்றுமையின் இந்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு நிகழ்வுபோக்குகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்று, உக்ரேன் போர், இது ஓர் உலகளாவிய பெரும் மோதலை நோக்கி விரிவடைந்து வருகிறது, மற்றொன்று, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச மறு எழுச்சி ஆகும். இந்த இரண்டு நிகழ்வுப்போக்குகளும் ஆழமாக ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகளை போருக்குரிய பாதையில் உந்தும் அதே பொருளாதார, பூகோள அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகள், தொழிலாள வர்க்கத்தின் தீவிரமயமாதலுக்கும் புரட்சிகர போராட்டங்களின் வெடிப்புக்குமான புறநிலை தூண்டுலை வழங்குகின்றன.

உக்ரேனிய போர் இப்போது அதன் இரண்டாம் ஆண்டில் நடந்துகொண்டிருக்கின்றது. 150,000க்கும் அதிகமான உக்ரேனிய படையினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவின் தரப்பில் 50,000 முதல் 100,000 வரை உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் பாதிப்புகளைப் பற்றிய மிகவும் நம்பகமான அறிக்கைகள் மதிப்பிடுகின்றன. இந்த பயங்கரமான மனித உயிரிழப்பு எண்ணிக்கையால் அதிர்ச்சியடைந்து, போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் உக்ரேனுக்கு ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றன. இந்த பினாமிப் போரில் வெற்றி பெறுவதில் அமெரிக்காவும் நேட்டோவும் அவற்றின் கௌரவத்தை அர்ப்பணித்துள்ள நிலையில், பைடென் நிர்வாகத்தால் அதன் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் நோக்கங்கள் தோல்வி அடைவதன் அரசியல் விளைவுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்தப் போரின் தர்க்கம் அதை முன்பினும் அதிகப் பொறுப்பற்ற கொள்கைகளுக்கு உந்தித் தள்ளுகின்றது.

போர்-சார்பு ஊடகங்களோ வசந்த காலத்தில் நடத்தப்பட உள்ள உக்ரேனிய எதிர்தாக்குதலின் சாத்தியக்கூறுகள் தொடர்பான தமது உற்சாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளன. அந்தக் தாக்குதல் நடத்தப்பட்டால் மற்றும் நடத்தப்படும் போது, அதில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முதலாம் உலகப் போரின் போது சோம் மற்றும் வேர்டோன் (Battles of the Somme and Verdun) போர்க்களத்தில் ஏற்பட்ட பயங்கரங்களை நினைவுபடுத்துவதாக இருக்கும். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிரதிபலிக்கையில், மில்லியன் கணக்கானவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த கொள்கைகளை அமுல்படுத்திய முதலாளித்துவ அரசாங்கங்களும் ஊடகங்களின் பிரச்சார அங்கங்களும், ரஷ்யாவுடனான மோதலில் அவற்றின் போர் நோக்கங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளன. முதலாளித்துவ இலாபம் ஈட்டுதலுக்கும் தனிநபர்கள் செல்வம் சேர்ப்பதற்கும் கொடுக்கும் அழுத்தங்களுக்கு சமூகத் தேவையை அடிபணியச் செய்ததன் விளைவாக, வெகுஜன மரணம் முதலாளித்துவத்தின் கீழ் ஒரு வழக்கமான நிகழ்வாகிவிட்டது. 50,000 முதல் 100,000 பேர் உயிரிழந்த துருக்கி நிலநடுக்கமானது சமகால வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் முடிவில்லாத இரத்தம்தோய்ந்த விபத்துக்கள் பலவற்றில் அதுவும் ஒன்றாக மட்டுமே உள்ளது.

போருக்கான ஆதரவை திரட்டுவதற்காக, பைடென் நிர்வாகம் “தூண்டுதலற்ற போர்” என்ற அபத்தமான கட்டுக்கதையைப் பரப்புகின்றது. விளாடிமிர் புட்டின் ஒருநாள் காலை விழித்தெழுந்து, எந்த வெளிப்படையான காரணமும் இல்லாமல், “உக்ரேனில் போர் நடக்கட்டும்” என்று அறிவித்த போதே அது தொடங்கியதாக மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போர்கள், சிக்கலான பொருளாதார, பூகோள அரசியல் மற்றும் சமூக நிகழ்வுபோக்குகளின் இடைத்தொடர்புகளின் விளைவு என்பதையே வரலாறு காட்டுகிறது. 1914 இல் முதலாம் உலகப் போர் வெடித்து 100 ஆண்டுகளுக்கு மேலாகியும், வரலாற்றாளர்கள், பல்வேறு மட்டங்களில் அந்த மோதலை ஏற்படுத்திய காரணங்களைப் புரிந்து கொள்ள இன்னமும் முயன்று வருகிறார்கள்.

ஜேர்மன் அறிஞர் ஜோர்ன் லியோன்ஹார்ட் சமீபத்தில் எழுதியது போல்:

புராதன கிரேக்க தளபதியான துசீதிதிஸ் காலத்திலிருந்தே, போரின் உருவாக்கத்திற்கும் மற்றும் அதன் உடனடி காரணங்களுக்கு இடையேயான வேறுபாட்டைக் குறித்து வரலாற்றாசிரியர்கள் அறிந்துள்ளனர்; போரை உத்தியோகபூர்வமாக நியாயப்படுத்துவதற்கு பின்னாலுள்ள காரணிகளை கருத்தியல்ரீதியான விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். புரட்சிகளுக்கான காரணங்களைத் தேடுவதில் போலவே, இந்த விஷயத்திலும் வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும்; நீண்ட கால, நடுத்தர கால மற்றும் குறுகிய கால காரணங்களை அடையாளம் காண்பதில், தீர்மானிக்கும் காரணிகள், வினையூக்கிகள் மற்றும் தற்செயலான காரணங்களை அடையாளம் காண்பதும் உள்ளடங்குகிறது. அனைத்திற்கும் மேலாக, குறிப்பாக போர் வெடிப்பைப் பொறுத்த வரை, வெளிப்புறக் காரணிகள் மற்றும் உள்ளார்ந்த காரணிகள் மீதான கேள்வி இன்று வரை முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச உறவுகள் அமைப்புமுறையில் ஒரு போருக்கான மூலக்காரணம் எந்தளவுக்கு உள்ளது மற்றும் அது எந்தளவுக்கு நாடுகள் மற்றும் சமூகங்களின் உள்ளார்ந்த கட்டமைப்பிலும் சம்பந்தப்பட்டுள்ளது என்பதும் முக்கியமாகும்.[1]

“தூண்டுதலற்றப் போர்” என்ற கட்டுக்கதை, இந்தப் போரின் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தோற்றுவாய்கள் குறித்து எதையும் விளக்கவில்லை. 1) ஈராக், சேர்பியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, லிபியா மற்றும் சிரியாவில் அமெரிக்கா கிட்டத்தட்ட முந்தைய 30 ஆண்டுகாலம் நடத்திய இடைவிடாத போர்; 2) 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து நேட்டோவின் இடைவிடாத கிழக்கு நோக்கிய விரிவாக்கம்; 3) அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் அதன் சொந்த மேலாதிக்க உலக அந்தஸ்துக்கு ஓர் ஆபத்தான அச்சுறுத்தலாகக் கருதப்படும் சீனாவுடன் அதிகரித்து வரும் பூகோள அரசியல் மோதல்; 4) அமெரிக்காவின் உலகப் பொருளாதார அந்தஸ்தின் நீடித்த வீழ்ச்சியானது, உலக கையிருப்பு செலாவணியாக டொலரின் மேலாளுமைக்கு எதிராக அதிகரித்து வரும் சவாலில் அதன் அப்பட்டமான வெளிப்பாட்டைக் காண்கிறது; 5) அமெரிக்க நிதி அமைப்புமுறையின் முழுமையான பொறிவைத் தடுக்க, பெரும்பிரயத்தன பிணையெடுப்புகளைக் கோரிய தொடர்ச்சியான பல பொருளாதார அதிர்ச்சிகள்; 6) நவம்பர் 2020 தேசியத் தேர்தல் முடிவைக் கவிழ்ப்பதற்காக, ஜனவரி 6, 2021 அன்று, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சியில் எடுத்துக்காட்டப்பட்டவாறு, முன்பினும் வெளிப்படையான அமெரிக்க அரசியல் அமைப்புமுறையின் முறிவு; 7) அமெரிக்க தொழிலாள வர்க்கத்தைத் தீவிரப்படுத்தி வரும் ஒரு புதிய பணவீக்கச் சுழற்சியாலும் பெருந்தொற்று பாதிப்பாலும் தீவிரப்படுத்தப்பட்ட மலைப்பூட்டும் அளவிலான சமத்துவமின்மை மட்டங்களால் பீதியடைந்துள்ள ஒரு சமூகத்தின் அதிகரித்து வரும் உள்நாட்டு சீர்குலைவு, ஆகியவற்றுக்கும் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போருக்கும் இடையிலான தொடர்பு குறித்த எந்தவித ஆய்வில் இருந்தும், அந்தக் கட்டுக்கதைக் கவனத்தைத் திசைதிருப்புகிறது.

இந்த “தூண்டுதலற்ற போர்” கட்டுக்கதை, மிகவும் பலமானமுறையில் மறுக்கப்பட்டிருப்பதை, உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எண்ணற்ற அறிக்கைகளில் காணலாம். போரின் மூலம் தீர்க்கவியலாத நெருக்கடிகளில் இருந்து வெளிவருவதற்காக அமெரிக்க பெருநிறுவன-நிதிய உயரடுக்குகளின் அவநம்பிக்கையான முயற்சிகளை ஊக்குவிக்கின்ற பொருளாதார, அரசியல் மற்றும் சமூக முரண்பாடுகளை உலக சோசலிச வலை த்தளம் கடந்த கால் நூற்றாண்டாக பகுப்பாய்வு செய்து வந்துள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், புஷ் நிர்வாகம் 2003 மார்ச்சில் ஈராக் படையெடுப்பைத் தொடங்கி வெறும் ஒரு வாரத்திற்குப் பின்னர், அனைத்துலகக் குழுவின் அமெரிக்கப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு விளக்கியது: “அமெரிக்காவின் சவால் செய்ய முடியாத உலகளாவிய மேலாதிக்கத்தை ஸ்தாபிக்கவும் உலகப் பொருளாதாரத்தின் வளங்களை முழுமையாக தனக்காக கீழ்படுத்தவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயம் அதன் மிகப் பெரும் இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதில் தங்கியுள்ளது.”[2]

உலக முதலாளித்துவத்தில் அதன் மையப் பங்கைக் கவனத்தில் கொண்டால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி ஒட்டுமொத்த அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையையும் சீர்குலைத்துள்ளது. அதன் கொள்கைகள், சாராம்சத்தில், வெறுமனே தேசிய நெருக்கடிக்கு அன்றி, மாறாக ஓர் உலகளாவிய நெருக்கடிக்கான விடையிறுப்பாகும். அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்களின் மூர்க்கமான ஆக்கிரோஷக் கொள்கைகள், 

உற்பத்தி சக்திகளின் உலகளாவிய தன்மைக்கும் பண்டைய தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டின் உலக வரலாற்றுப் பிரச்சினையை, ஏகாதிபத்தியத்தின் அடிப்படையில், தீர்ப்பதற்கான முயற்சியாக உள்ளன.

உலகப் பொருளாதார வளங்களில் பெரும் பங்கைத் தனக்காக கைப்பற்றிய பின்னர் அதை எவ்வாறு ஒதுக்குவது என்று முடிவெடுப்பதில் உலகின் தலைவிதியினை தீர்மானிக்கும் அதிகாரத்தை கொண்டிருப்பதாக செயல்பட்டு, அனைத்திற்கும் மேலான ஒரு தேசிய அரசாகத் தன்னை நிறுவுவதன் மூலம் அமெரிக்கா இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நினைக்கிறது. ஆனால் உலக முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகளுக்கு, இதே விதத்தில் 1914 இல் காட்டப்பட்ட முற்றிலும் பிற்போக்கான ஏகாதிபத்திய தீர்வு, காலஓட்டத்தில் முன்னேற்றமடையவில்லை. உண்மையில், இருபதாம் நூற்றாண்டின் போக்கில் நடந்த மிகப் பெருமளவிலான உலகப் பொருளாதார வளர்ச்சி, பைத்தியக்காரத்தனமான அம்சத்துடன் இத்தகைய ஏகாதிபத்தியத் திட்டத்திற்கே கொண்டு செல்கிறது. ஒரு தேசிய அரசின் மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்கான எந்தவொரு முயற்சியும், சர்வதேச பொருளாதார ஒருங்கிணைப்பின் இந்த அசாதாரண மட்டத்துடன் பொருந்தாது. அத்தகைய ஒரு திட்டத்தின் ஆழமான பிற்போக்கு குணாம்சம், அதை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் காட்டுமிராண்டித்தனமான முறைகளில் வெளிப்படுகிறது.[3]

நேட்டோ கூட்டணியில் உள்ள அமெரிக்காவின் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகள் தற்போதைய உலகளாவிய அதிகாரச் சமநிலையால் வாஷிங்டன் அமைத்துள்ள சூழலையே பின்பற்ற நிர்பந்திக்கப்பட்டிருந்தாலும், அவை ரஷ்யாவுடனான மோதலில் எந்த வகையிலும் வெறும் அப்பாவி பார்வையாளர்களாக இல்லை. தனது முன்னாள் காலனிகளில் கொடூரமான குற்றங்களைச் செய்த, சொந்த நாட்டுக்குள்ளேயே பாசிசம் மற்றும் இனப்படுகொலை பரிசோதனைகளைச் செய்துள்ள, கடந்த நூற்றாண்டில் தான் இரண்டு உலகப் போர்களில் பாதிக்கப்பட்ட பழைய சிரேஷ்ட ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தும், அமெரிக்காவைப் பாதித்துள்ள அதே அரசியல் மற்றும் பொருளாதார நோய்களால் சூழப்பட்டுள்ள அதேவேளை, அவற்றைச் சமாளிக்க மிகக் குறைவான நிதி வளங்களையே கொண்டுள்ளன.

பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜேர்மனிக்கோ அல்லது சுவீடன், நோர்வே, டென்மார்க், ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற “சிறிய சக்திகளுக்கோ”, அவற்றின் சுதந்திரமான ஏகாதிபத்திய குறிக்கோள்களை முன்னெடுக்க முடியாமல் இருந்தாலும், பிராந்தியத்தையும் இயற்கை வளங்ளையும் மறுபங்கீடு செய்வதில் இருந்தும், ரஷ்யாவின் இராணுவத் தோல்வியில் இருந்தும் அது பல சிறிய நாடுகளாக துண்டாடப்படுவதில் இருந்தும் கிடைக்குமென அவை எதிர்பார்க்கும் நிதி அனுகூலங்களைப் பெறுவதில் இருந்தும், தாம் ஓரங்கட்டப்பட்டுவிடுவதை அவை ஏற்கத் தயாராக இல்லை.

ஆனால் நேட்டோ கூட்டணி, அதன் நல்லிணக்கப் பிரகடனங்களுக்கு மத்தியிலும் கூட, ஆழ்ந்த உள் பிளவுகளால் சூழப்பட்டுள்ளது. இது, எதிர்வரும் நாட்களில் வெகு விரைவில், திடீரென ஆயுத மோதலாக வெடிக்கலாம். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எழுந்த பிராந்திய முரண்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்பது அதிகம் கலந்துரையாடப்படாத போர் விளைவுகளில் ஒன்றாக உள்ளது. விரொஸ்லாவ் (Wroclaw) என்ற போலந்து நகரம் ஒரு காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் திருப்பத்தில் பிரெஸ்லவ் (Breslau) என்றழைக்கப்பட்ட ஜேர்மன் பேரரசின் ஆறாவது மிகப் பெரிய நகரமாக இருந்தது என்பதை ஜேர்மன் ஆளும் வர்க்கம் மறந்துவிடவில்லை.

அதேபோல், மேற்கு உக்ரேனில் உள்ள லேவிவ் நகரம், இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு முன்னர், போலந்தின் மூன்றாவது பெரிய நகரமான லிவோவ் என அழைக்கப்பட்டது என்பதை நச்சுத்தனமான தேசியவாத பாசிச போலந்து அரசாங்கமும் மறந்துவிடவில்லை.

“தூண்டுதலற்றப் போர்” என்ற கட்டுக்கதையின் நிலைப்பாடுகளுக்குப் பின்னால், உக்ரேனிய போரானது மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கும் இன்னும் பெரிய உலகளாவிய மோதலின் பாகமாக உள்ளது என்ற உண்மை முன்பினும் அதிக வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ளப்படுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்குமா என்பதை விட, அது எப்போது தொடங்கும், அந்த மோதல் எங்கே வெடிக்கும், அதில் தந்திரோபாய ரீதியிலோ மற்றும்/அல்லது மூலோபாய ரீதியிலோ அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா என்பதே மிக முக்கிய கேள்வியாக உள்ளது.

இந்தப் போர் “எதிர்கால உலக ஒழுங்கைப் பற்றியது, 21 ஆம் நூற்றாண்டில் அதன் மாபெரும் திருத்தியமைத்தல் பற்றியது” என்று முன்னாள் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜொஷ்கா பிஷ்ஷர் சமீபத்தில் எழுதினார். “அமெரிக்கா தலைமையிலான மேற்கின் அட்லாண்டிக் கடந்த கூட்டணிக்கும் பசிபிக் கூட்டணிக்கும் எதிராக, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் மேலாதிக்கத்தை உடைக்க ஒரு முறையற்ற கூட்டணியை ஏற்படுத்தி இருப்பதாக” அந்த இரண்டு மாபெரும் யுரேஷிய சக்திகளான சீனாவையும் ரஷ்யாவையும் அவர் கண்டித்தார்.[4]

பைனான்சியல் டைம்ஸின் வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான முன்னணி செய்தியாளர் கிடியோன் ராச்மன், மார்ச் 27 அன்று பின்வருமாறு எழுதினார்:

சீன அதிபரும் ஜப்பான் பிரதமரும் ரஷ்யா மற்றும் உக்ரேனிய தலைநகரங்களுக்கு ஒரே நேரத்தில் போட்டி போட்டுக்கொண்டு பயணித்திருந்தார்கள் என்ற உண்மை, உக்ரேனியப் போரின் உலகளாவிய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. கிழக்கு ஆசியாவில் ஜப்பானும் சீனாவும் கடுமையான போட்டியாளர்கள். ஐரோப்பாவில் இந்த மோதலின் விளைவால் அவற்றின் போட்டி ஆழமாக பாதிக்கப்படும் என்பதை இவ்விரு நாடுகளும் புரிந்து வைத்துள்ளன.

உக்ரேன் சம்பந்தமாக சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையே நடந்து வரும் இந்த மறைமுக குத்துச்சண்டை ஒரு பரந்த போக்கின் பாகமாக உள்ளது. யூரோ அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியங்களின் மூலோபாய போட்டி நாடுகள், அதிகரித்தளவில் ஒன்றையொன்று விஞ்சுவதற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரேயொரு பூகோள அரசியல் போராட்டம் போல தோன்றும் ஏதோவொன்று உருவெடுத்து வருவதாகத் தெரிகிறது.[5]

“தூண்டுதலற்ற போர்” என்ற இந்தக் கட்டுக்கதையின் ஒரு தீவிர ஆதரவாளராக ராச்மன் இருக்கிறார் என்றாலும், அவருடைய சுய-முரண்பாடான பகுப்பாய்வை அவர் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் பின்வருமாறு நிறைவு செய்கிறார்:

ஆனால், உலகளாவிய மோதலை நோக்கி சொல்லும் ஆபத்து இன்னும் முடிந்து விடவில்லை. கிழக்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்திருப்பதுடன் சேர்ந்து, ஐரோப்பாவில் இந்தப் போர் வெடித்திருப்பதும், இவ்விரு அரங்கங்களுக்கும் இடையே அதிகரித்து வரும் தொடர்பும், இப்போதும் 1930 களின் தனித்துவமான எதிரொலிகளை நினைவுகூருகின்றன. இம்முறை, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் ஒன்றோடொன்று தொடர்புடைய போட்டியாளர்கள் ஓர் உலகளாவிய துயரத்தில் சென்று முடிந்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்த எல்லா தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது.[6]

24 பெப்ரவரி 2022 இல் உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு வழிவகுத்த சம்பவங்களைத் தேவையான வரலாற்று மற்றும் அரசியல் உள்ளடக்கத்தில் பார்க்கும்போது, இந்தப் போரானது அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் தூண்டப்பட்டது என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. “முதலில் யார் சுட்டது?” என்ற கேள்வியில் ஒருமுனைப்படுவதன் மூலம் போருக்கான “குற்றச்சாட்டை” மதிப்பீடு செய்யும் எல்லா முயற்சிகளும், ஒரு மிக நீண்ட தொடர்ச்சியான நிகழ்வுகளிலிருந்து, ஒரு மிகச் சிறிய கால இடைவெளியின் ஒரேயொரு அத்தியாயத்தை மட்டும் தனிமைப்படுத்திக் கையாளுகின்றன. 1934 இல் ட்ரொட்ஸ்கி விளக்கியது போல், “போரின் தன்மையானது அது தொடங்கப்பட்ட ஆரம்ப அத்தியாயத்தால் ('நடுநிலை மீறல்,' 'எதிரி படையெடுப்பு,' போன்றவை) தீர்மானிக்கப்படுவதில்லை, மாறாக போரின் பிரதான நகரும் சக்திகளால், அதன் முழு வளர்ச்சி மற்றும் அது இறுதியில் வழிவகுக்கும் விளைவுகளாலேயே தீர்மானிக்கப்படுகிறது.'

“தூண்டுதலற்ற போர்” என்ற திகில் கதைக்கு முரணான வகையில், 2022 பெப்ரவரி படையெடுப்பானது, 2014 இல் சிஐஏ நிதியுதவியோடு திட்டமிட்டு முடுக்கிவிடப்பட்ட மைதான் ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டர் யனுகோவிச்சின் ரஷ்ய-சார்பு அரசாங்கம் தூக்கியெறியப்பட்ட நாட்கள் வரை நீள்வதோடு  மட்டுமன்றி, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் ஒரு விளைவாக உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டு நாடுகளுக்குள்ளும் பிற்போக்கு தேசியவாத போக்குகளைக் கட்டவிழ்த்துவிட்டது வரையில் நீளும், சிக்கலான பல சம்பவங்களின் விளைவாக உள்ளது.[7]

ஆனால், இந்தப் போரை அமெரிக்கா மற்றும் நேட்டோ தூண்டிவிட்டன என்ற உண்மை, உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பின் முற்றிலும் பிற்போக்குத்தன்மையைக் குறைத்து காட்டுகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும், அது எந்த விதத்திலும் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பை நியாயப்படுத்துவதாக ஆகாது. ரஷ்ய எல்லைகள் மீதான நேட்டோ அச்சுறுத்தலுக்கு அது ஒரு நியாயமான விடையிறுப்பு தான் என்ற அடிப்படையில் இந்தப் படையெடுப்பை நியாயப்படுத்துபவர்கள், புட்டின் ஒரு முதலாளித்துவ அரசின் தலைவர் ஆவார் என்ற உண்மையை புறக்கணிக்கிறார்கள். “தேசிய பாதுகாப்பு” பற்றிய அதன் வரையறையானது, சோவியத் ஒன்றியத்தினை கலைத்து அதன் முந்தைய தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களைக் களவெடுத்ததன் அடிப்படையில் செல்வங்களைச் சேர்த்த, தன்னல அதிசெல்வந்த வர்க்கத்தின் பொருளாதார நலன்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது.

போரைத் தொடங்கியது, போரை நடத்துவது இரண்டிலுமே, புட்டினின் அனைத்து தவறான கணக்கீடுகளும் முட்டாள்தனங்களும், அவர் சேவைசெய்யும் உண்மையான வர்க்க நலன்களைப் பிரதிபலிக்கின்றன. போரின் நோக்கம், மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தின் இராணுவ அழுத்தங்களுக்கு எதிர்ச் செயலாற்றுவதும், ரஷ்யாவின் எல்லைகளுக்குள்ளும், இன்னும் அதிகளவில் சாத்தியமானால், கருங்கடல் பிராந்தியத்திலும் மத்திய ஆசியா மற்றும் ககாசஸ் கடந்து அயல் நாடுகளிலும் இயற்கை வளங்களையும் உழைப்பையும் சுரண்டுவதில் ஒரு தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை மேலாதிக்க அந்தஸ்தில் நிலைநிறுத்துவதுமே ஆகும். 

ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருபுறம் இருக்க, இந்த நோக்கங்களில் முற்போக்கான எதுவும் கிடையாது. புடின், ஸாரிச மரபை தூக்கிப் பிடித்து, லெனின், போல்ஷிவிசம் மற்றும் அக்டோபர் புரட்சியையும் கண்டிக்கும் போது, அவர் வரலாற்று ரீதியில் பிற்போக்கான மற்றும் அரசியல் ரீதியில் திவாலான அவரது ஆட்சியின் தன்மைக்குச் சாட்சியமளிக்கிறார்.

அவர்களின் தற்போதைய மோதல் ஒருபுறம் இருக்க, ரஷ்யா மற்றும் உக்ரேனில் சோவியத்துக்கு பிந்தைய புதிய ஆளும் வர்க்கங்கள், அதே குற்றவியல் தோற்றுவாயையே பகிர்ந்து கொள்கின்றன. சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர், இக்கட்டுரையின் ஆசிரியர், 3 அக்டோபர் 1991 இல், அனைத்துலகக் குழுவின் பிரதிநிதியாக கியேவில் உள்ள தொழிலாளர்களின் மன்றத்தில் நடத்தப்பட்ட ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், தேசியவாதிகளின் திட்டநிரலில் இருந்து பெருகும் பேரழிவுகரமான விளைவுகளைக் குறித்து பின்வருமாறு எச்சரித்தார்:

இந்தக் குடியரசுகளில், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு புதிய “சுதந்திர” அரசுகளை உருவாக்குவதில் தங்கியிருப்பதாக எல்லா தேசியவாதிகளும் அறிவிக்கின்றனர். யாருடைய சுதந்திரம்? என்று கேட்க எம்மை அனுமதியுங்கள். மாஸ்கோவில் இருந்து சுதந்திரத்தை அறிவிக்கும் இந்த தேசியவாதிகள், அவர்களின் புதிய அரசுகளின் எதிர்காலம் தொடர்பான எல்லா தீர்க்கமான முடிவுகளையும் எடுப்பதை ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் கரங்களில் ஒப்படைப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது. உக்ரேனிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் சோவியத்துக்குப் பிந்தைய உக்ரேனின் வருங்கால ஜனாதிபதியுமான க்ராவ்சுக் (Kravchuk) வாஷிங்டனுக்குச் செல்வதோடு ஜனாதிபதி புஷ் அவருக்கு விரிவுரை ஆற்றும் போது அவர் பள்ளி மாணவனைப் போல் இருக்கையில் நெளிகின்றார். 

அப்படியானால் சோவியத் ஒன்றியத்தின் உழைக்கும் மக்கள் எந்தப் பாதையைப் பின்பற்ற வேண்டும்? மாற்றீடு தான் என்ன? புரட்சிகர சர்வதேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்வைக் காண முடியும். தேசியவாதிகளின் பேரினவாதக் பிரச்சாரத்திற்கான ஒரே ஒரு முகமூடியாக இருக்கும் முதலாளித்துவத்துக்கு திரும்புதல், ஒரு புதிய ஒடுக்குமுறை வடிவத்திற்கு மட்டுமே இட்டுச் செல்ல முடியும். ஒவ்வொரு சோவியத் தேசிய இனங்களும் தலைகுனிந்து மண்டியிட்டு தனித்தனியாக ஏகாதிபத்தியங்களை அணுகி, கருணைக்காகவும் உதவிக்காகவும் கெஞ்சுவதைக் காட்டிலும், எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த சோவியத் தொழிலாளர்களும், உண்மையான சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு புதிய உறவை உருவாக்குவதோடு இந்த அடிப்படையில் 1917 பாரம்பரியத்தில் தங்கியுள்ள மதிப்புடைய அனைத்தையும் புரட்சிகரமாக பாதுகாக்க முடியும்.

இந்த வேலைத்திட்டத்தின் மையத்தில் உள்ளது புரட்சிகர சர்வதேசியவாத முன்னோக்கு ஆகும். புரட்சிகர சர்வதேசியவாத வேலைத்திட்டத்தைக் கைவிட்டமையே, இன்று சோவியத் மக்களைப் பீடித்துக் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளினதும் தோற்றுவாயாக இருக்கின்றது.[8]

ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்துலகக் குழு விடுத்த எச்சரிக்கைகள், துன்பகரமான வகையில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரேனின் உழைக்கும் மக்கள் ஒரு சகோதர சண்டைக்குள் இழுக்கப்பட்டுள்ளனர். எண்பது ஆண்டுகளுக்கு முன்னர், அவர்கள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாஜி இராணுவத்தை வெளியேற்ற, அக்டோபர் புரட்சியைப் பாதுகாப்பதில் ஒன்றாக நின்று போராடினர். இப்போது, முதலாளித்துவ ஆட்சிகளின் கட்டளைகளுக்கு இணங்க, அவர்கள் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று வருகின்றனர்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான அனைத்துலகக் குழுவின் அழைப்பு, மிகவும் அவசரமானதாக மட்டும் இருக்கவில்லை. புரட்சிகர சர்வதேசியவாத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதை அணிதிரட்டுவதற்ககுப் புறநிலை நிலைமைகள் இப்போது மிகவும் சாதகமாக உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மற்றும் உலகளாவிய முதலாளித்துவ முரண்பாடுகளின் தீவிரமடைதலுடன், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தம் வரை, பாட்டாளி வர்க்கம் மக்கள் தொகையில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே இருந்த நாடுகளில், கோடிக் கணக்கான தொழிலாளர்களால் நிரம்பிய பாரிய நகர்ப்புற மையங்கள் உருவாகி இருப்பதால், அதன் பொருளாதார பலமும் சாத்தியமான ஆற்றலும் மிகப் பெரியளவில் அதிகரித்துள்ளது.

கடந்த தசாப்தத்தில் வர்க்கப் போராட்டம் ஒரேசீராக தீவிரமடைந்துள்ளது. வர்க்கப் போராட்டத்தின் கவனத்தை ஈர்க்கும் சிறப்பியல்பு, அதன் சர்வதேச குணாம்சமாகும். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகர முன்னேற்றங்கள், வெவ்வேறு நாடுகளின் தொழிலாளர்களுக்கு இடையிலான தடைகளை அகற்றியுள்ளன. எங்கிருந்து தொடங்கினாலும், குறிப்பிட்ட ஒரு நாட்டின் சமூக மோதலானது ஏறக்குறைய உடனடியாக சர்வதேச அளவில் அவதானத்தை ஈர்ப்பதுடன், ஒரு உலக நிகழ்வாக ஆகின்றது. ஆவணங்களும் உரைகளும் என்ன மொழிகளில் எழுதப்பட்டாலும் பேசப்பட்டாலும், அவை ஓர் உலகளாவிய வாசகர்களுக்கு எளிதாக புரியும் வகையில், மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு மென்பொருள் நிரல்களைக் கொண்டு முன்பிருந்த மொழி தடைகளையும் கூட கடந்து வர முடிகிறது.

இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அனைத்து நாடுகளின் தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஓர் உலகளாவிய புரட்சிகர பிரதிபலிப்பை எளிதாக்குகின்றன. 2022 இன் இறுதியில் சீனா அதன் பூஜ்ஜிய-கோவிட் கொள்கையைத் திடீரென கைவிட்டதனால் இரண்டு மாதங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டமை, ஓர் உலகளாவிய நெருக்கடிக்கு ஒரு தேசிய தீர்வை உருவாக்குவது சாத்தியமில்லை என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. இந்த அடிப்படை உண்மை, ஆழமடைந்து வரும் சமூக நெருக்கடியின் யதார்த்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

உக்ரேன் போரும் இராணுவ வரவு செலவுத் திட்டங்களில் பாரியளவிலான அதிகரிப்பும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் சமூக நிலைமைகளுக்கு எதிரான ஒரு போராக வடிவெடுத்துள்ளன. பணவீக்கம், வேலையின்மை மற்றும் சமூக சேவைகளுக்கான செலவு வெட்டுக்களும் உலகெங்கிலும் வேலைநிறுத்த நடவடிக்கைகளில் ஓர் எழுச்சியைத் தூண்டியுள்ளன. ஒவ்வொரு கண்டத்திலும் மிகப்பெரும் சமூகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

நாடுகளுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா நாடுகளிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் நிலைமைகளில் சில பொதுவான அம்சங்கள் வெளிப்படுகின்றன. தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வளவு தான் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், அவர்கள் முதலாளிகளிடம் இருந்தும் அரசிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர்.

முதலாளித்துவ அரசு இன்னும் அதிகளவில் மற்றும் அதிக தீவிரத்துடன், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான போரில், ஆளும் வர்க்கத்தின் சார்பாக நேரடி தலைமையை ஏற்று வருகிறது. இலங்கை மற்றும் பிரான்ஸ் போன்று பொருளாதார வளர்ச்சியில் வேறுபட்ட நாடுகளாக இருந்தாலும், இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரான்சில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் என தொழிலாள வர்க்கம் அரசின் தலைவரை அதன் பிரதான எதிரியாக முகங்கொடுக்கின்றது. அரசியல்ரீதியில் பயனுள்ளதாக இருக்கும் போதெல்லாம் அவர்கள் ஜனநாயக வாய்வீச்சுக்களைப் பயன்படுத்தினாலும், தங்களின் முடிவுகளை அமுலாக்குவதற்கு அவர்கள் பொலிஸ் மற்றும் இராணுவத்தையே நம்பி இருப்பதுடன், அப்பட்டமாக சர்வாதிகாரத் தன்மையை எடுக்கின்றன.முதலாளித்துவ ஜனநாயகத்தின் தற்போதைய உலகளாவிய முறிவு, லெனினின் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகிறது: 'அரசியல் எதிர்ப்போக்கானது எப்போதும் ஏகாதிபத்தியத்தின் தனிப்பண்பான அம்சமாகும்.'[9]

இதனால், வர்க்கப் போராட்டத்தின் தர்க்கம் அரசுக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்தின் தன்மையை எடுப்பதுடன், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான சுயாதீன அமைப்புகளை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எழுப்புகிறது. ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவின் அழைப்பும், மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து இறக்குவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சுப் பிரிவு எழுப்பியுள்ள கோரிக்கையும், தொழிலாள வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அரசுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கான ஓர் அவசியமான பிரதிபலிப்பாகும்.

சமரசமற்ற முதலாளித்துவ-விரோத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தப்பட முடியும் என்பதே இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் படிப்பினையாகும். தேசிய அரசு அமைப்புமுறை மற்றும் முதலாளித்துவ இலாப அமைப்புமுறையிலும் வேரூன்றியுள்ள போரின் காரணங்களைப் புறக்கணித்தும் மூடிமறைத்துவிட்டும், போரை எதிர்ப்பதற்காக முன்வைக்கப்படும் அனைத்து பரிந்துரைகளும் தோல்வி அடைந்துள்ளன.

முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், பிற்போக்கு தொழிற்கட்சி மற்றும் போலி சோசலிச கட்சிகள், வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகளின் ஒரு பரந்த வட்டாரம் ஆகியவற்றின் அரசியல் செல்வாக்கே, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு மிகப் பெரும் தடையாக உள்ளது. அவற்றின் நயவஞ்சக செல்வாக்கு முறியடிக்கப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர மாற்றீட்டுத் தலைமையை அபிவிருத்தி செய்வதில் அனைத்துலகக் குழு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), தொழிற்சாலைக் குழுக்களை அமைப்பதற்காக இடைமருவு வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த முன்னோக்கை உறுதிப்படுத்துவதாகும். 'முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் பணிகளுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய சுயாதீனமான போர்க்குணமிக்க அமைப்புகளை அனைத்து சாத்தியமான நிகழ்வுகளிலும் உருவாக்க வேண்டும்; மேலும் தேவைப்பட்டால், தொழிற்சங்கங்களின் பழமைவாத கருவியுடன் நேரடியாக முறித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது,”[10] என்று அவர் நான்காம் அகிலத்தின் பிரிவுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் வளர்ச்சிக்கு அனைத்துலகக் குழுவால் கொடுக்கப்பட்ட உந்துதல், ஏகாதிபத்திய சகாப்தத்தில் தொழிற்சங்கங்களின் தலைவிதியைப் பற்றிய ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. அவரது படுகொலைக்குப் பிறகு ட்ரொட்ஸ்கியின் மேசையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முடிக்கப்படாத கையெழுத்துப் பிரதியில், “உலகம் முழுவதிலும் உள்ள நவீன தொழிற்சங்க அமைப்புகளின் வளர்ச்சியில் ஒரு பொதுவான அம்சம் உள்ளது, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால் சீரழிவில் உள்ளது: அது அவை அரச அதிகாரத்துடன் கூட்டுச் சேர நெருங்குவதாகும்.' என அவர் எழுதினார்.

எனவே, 'முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக மட்டுமன்றி, தொழிற்சங்கங்களுக்குள்ளேயே இருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவும், இந்த ஆட்சியை அமல்படுத்தும் தலைவர்களுக்கு எதிராகவும் மக்களை அணிதிரட்டுவது' அவசியமாக இருந்தது.[11]

ஆளும் வர்க்கத்தின் குட்டி-முதலாளித்துவ போலி-இடது முகவர்கள் தொழிற்சங்கங்களை எதிர்ப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கண்டிக்கும் போது, அவர்கள் உண்மையில் தாக்குவது, ஏகாதிபத்திய சார்பு மற்றும் கூட்டுத்தாபனவாத தொழிலாள அதிகாரத்துவ சர்வாதிகாரத்திற்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைப்பதை அனைத்துலகக் குழு ஏற்க மறுப்பதையே ஆகும். பெருநிறுவன தொழிலாளர் அதிகாரத்துவங்கள். அமெரிக்காவில் AFL-CIO, ஜேர்மனியில் ஐ.ஜி.மெட்டால், பிரான்சில் சி.ஜி.டி. மற்றும் உலகெங்கிலும் உள்ள அவற்றிற்கு நிகரான நிறுவனங்களின் பொலிஸ் காவலர்களால் நிர்வகிக்கப்படும் சிறைச் சுவர்களுக்குள் இருக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களில் இருந்து விலகியிருப்பதற்குப் பதிலாக, சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது தொழிற்சங்கங்களுக்குள் எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்டு, அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சியை ஊக்குவிக்கவும் வலுப்படுத்தவும் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது. 2022 அக்டோபரில், வாகனத் தொழிற்துறையில் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும் தொழிற்சங்க எந்திரத்தை அழித்தொழிக்கவும் அழைப்பு விடுத்து UAW இன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சோசலிச வேட்பாளரான வில் லெஹ்மனுக்கு 5,000 வாகனத் தொழிலாளர்கள் அளித்த வாக்குகள், சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணிக்கு வளர்ந்து வரும் செல்வாக்குக்கும் அமைப்பு மற்றும் அரசியல் ரீதியான சாத்தியத்துக்கும் சாட்சியமளிக்கிறது.

சாமானியத் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி, உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்குவதற்கும், பெருநிறுவன சக்தி மற்றும் முதலாளித்துவ ஆட்சிக்கும் எதிரான வர்க்கப் போராட்டத்தின் தந்திரோபாய ஒருங்கிணைப்புக்கும் உதவ உலகளாவிய வலையமைப்பை உருவாக்குகிறது. அதன் நோக்கம் பிற்போக்கு அதிகாரத்துவங்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் சீர்திருத்துவதும் அல்ல, மாறாக அனைத்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் சாமானிய உறுப்பினர்களின் கைக்கு மாற்றுவதாகும்.

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE), இளைஞர்களை மார்க்சிஸ்டுகளாகப் பயிற்றுவிப்பதற்கும், ஸ்ராலினிசம் மற்றும் அனைத்து வகையான தேசிய சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராக ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் நடத்திய போராட்டத்தைக் குறித்த அவர்களின் புரிதலை வளர்ப்பதற்கும், அவர்களின் எல்லையற்ற ஆற்றலை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக போராடுவதை நோக்கி திருப்பவும் அதன் பணியை விரிவாக்கி வருகிறது.

உலக சோசலிச வலைத் தளம் அதன் தினசரி வெளியீட்டின் 25 ஆவது ஆண்டைக் கொண்டாடி வரும் நிலையில், அது அதன் அரசியல் ஆய்வுகளதும் வர்க்கப் போராட்டம் பற்றிய பகுப்பாய்வுகளதும் ஆழத்தையும் வீச்சையும் தொடர்ந்து அபிவிருத்தி செய்து வருவதுடன், இந்த இன்றியமையாத தத்துவார்த்த வேலையின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களில் ட்ரொட்ஸ்கிசத்தின் செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. 

இந்த மே தினக் கூட்டம், இந்த சாதனைகளின் மீது கட்டியெழுப்பப்படுவதோடு, போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், தொழிலாள வர்க்கத்தின் கைகளுக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கும், உலகம் முழுவதும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொழிலாள வர்க்க ஒற்றுமையின் கொண்டாட்டத்தை அர்ப்பணிக்கின்றது.

[1]

Jörn Leonhard, Pandora’s Box: A History of the First World War, translated by Patrick Camiller (Cambridge, MA: The Belknap Press of Harvard University Press, 2018), pp. 62-63

[2]

“Into the Maelstrom,” in David North, A Quarter Century of War: The U.S. Drive for Global Hegemony 1990-2016, (Oak Park: Mehring Books, 2016), p. 277.

[3]

Ibid

[4]

“Former German foreign minister Joschka Fischer declares Ukraine war is ‘Global power struggle for future world order’”, by Peter Schwarz, World Socialist Web Site, 4 April 2023, https://www.wsws.org/en/articles/2023/04/05/ijhm-a05.html

[5]

“China, Japan and the Ukraine war,” by Gideon Rachman, Financial Times, March 27, 2023, https://www.ft.com/content/9aa4df57-b457-4f2d-a660-1e646f96c8cb

[6]

Ibid

[7]

“War and the Fourth International” by Leon Trotsky, Writings of Leon Trotsky, 1933-34, (New York: Pathfinder, 1975), p. 308

[8]

“After the August Putsch: Soviet Union at the Crossroads,” by David North, Fourth International, Fall-Winter 1992, Volume 19, Number 1, p. 110

[9]

“Imperialism and the Split in Socialism,” V.I. Lenin, Collected Works, Vol. 23.

[10]

“The Death Agony of Capitalism and the Tasks of the Fourth International,” (New York, 1981), p. 8

[11]

“Trade unions in the epoch of imperialist decay,” in Marxism and the Trade Unions (New York: 1973), pp. 9-10

Loading