தைவான் அதிபரின் ஆத்திரமூட்டும் அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து சீன ராணுவப் பயிற்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும் மத்திய அமெரிக்காவிற்கும் மேற்கொண்ட ஆத்திரமூட்டும் பயணத்திற்கு, சீனா கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியான இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. சாய் தைவானுக்குத் திரும்பவிருந்தபோது, ​​அவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி மற்றும் கலிபோர்னியாவில் உள்ள மூத்த சட்டமியற்றுபவர்களுடன் ஒரு உயர்மட்ட மற்றும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

ஏப்ரல் 10, 2023 அன்று பெய்ஜிங்கில் மாலை செய்திகளை வெளிப்புறத் திரை ஒளிபரப்புகிறது. தைவானைச் சுற்றி சமீபத்தில் முடிவடைந்த கூட்டு வான் பயிற்சியின் போது சீன போர் விமான பைலட்டைக் காட்டுகிறது. [AP Photo/Ng Han Guan]

1979ல் தைபேயுடனான இராஜதந்திர உறவுகளை வாஷிங்டன் முறையாக முறித்து, பெய்ஜிங்குடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியதில் இருந்து, அமெரிக்க துணை அதிபருக்குப் பிறகு இரண்டாவது வரிசையில் இருக்கும் மெக்கார்த்தி உடனான தைவான் அதிபரின் சந்திப்பு, அமெரிக்க மண்ணில் நடந்த மிக உயர்ந்த சந்திப்பாகும். அந்த நேரத்தில், தைவான் உட்பட அனைத்து சீனாவின் சட்டபூர்வமான அரசாங்கமாக பெய்ஜிங்கை அங்கீகரிக்கும் ஒரே சீனா கொள்கையை அமெரிக்க நடைமுறையில் ஏற்றுக்கொண்டது.

உயர்மட்ட இராஜதந்திர பரிமாற்றங்களை ஊக்குவித்தல், தைவானுக்கு ஆயுத விற்பனையை விரைவுபடுத்துதல் மற்றும் குறுகிய தைவான் ஜலசந்தி மற்றும் தென்சீனக் கடலில், கடற்படை ஆத்திரமூட்டல்களை நடத்துவதன் மூலம், நான்கு தசாப்தங்களாக அமெரிக்க-சீனா உறவுகளுக்கு அடித்தளமிட்ட ஒரே சீனா கொள்கையை இப்போது பைடென் நிர்வாகம் கிழித்தெறிகிறது. 

தைவானை ஒரு துரோகி மாகாணமாக கருதும் பெய்ஜிங், தீவை அமைதியான முறையில் மீண்டும் ஒருங்கிணைக்க விரும்புவதாகவும், குறிப்பாக தைபேயில் இருந்து முறையான சுதந்திரம் அறிவிக்கப்படுமாக இருந்தால், தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்துவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

பெய்ஜிங்கின் எச்சரிக்கைகளை மீறி கடந்த ஆகஸ்டில் அப்போதைய   சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்குச் சென்றபோது, சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA), தீவைச் சுற்றியுள்ள வான்வெளி மற்றும் கடல்பகுதிகளில் ஒரு வாரம் பாரிய பயிற்சிகளை மேற்கொண்டது. சமீபத்திய பயிற்சிகள் அதே அளவில் இல்லை என்றாலும், அது தைவான் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை வழங்குவதாக இருந்தது.

'தைவான் சுதந்திர பிரிவினைவாதிகள், வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செய்யும் ஆத்திரமூட்டல்களுக்கு எதிரான இது ஒரு தீவிர எச்சரிக்கை என்றும் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை இது' என்றும் மக்கள் விடுதலை இராணுவத்தின் கிழக்கு அரங்க கட்டளை மையம் கூறியது. ஜனாதிபதி சாய் மற்றும் அவரது தைவான் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியினர் (DPP) பெய்ஜிங்கில் இருந்து அதிக சுதந்திரத்திற்காக வாதிடுகின்றனர்.

சீனாவின் கிழக்கு அரங்க கட்டளை மையம், 'ஒரு முழு அளவிலான தடுப்பு அணுகுமுறையை உருவாக்க' பல்வேறு படைப்பிரிவுகளை அணிதிரட்டியதாகக் கூறியுள்ளது. இதில், இராணுவத்தின் நீண்ட தூர ஆயுதங்கள், நாசகாரி கப்பல்கள், ஏவுகணை கப்பல்கள், போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள், மின்னணு போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை அலகுகள் ஆகியவை அடங்கும். தைவான் மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் உள்ள முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை இந்த அலகுகள் உருவகப்படுத்தியதாக அது மேலும் தெரிவித்தது.

கப்பல்கள் மற்றும் விமானங்களில் இருந்து தைவானுக்குள் இருக்கும் இலக்குகள் மீது ஏவப்படும் தாக்குதல்கள் மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளைக் காட்டும் வீடியோ அனிமேஷனை கட்டளை மையம் வெளியிட்டது, சீனப் போர்க்கப்பல்களுடன் பல இராணுவ விமானங்கள், போர் நடவடிக்கைகளை ஒத்திகை பார்க்க ஒவ்வொரு நாளும் இதற்கு அணிதிரட்டப்பட்டன, அவற்றில் பல தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் மற்றும் தைவான் ஜலசந்தியின் இடைநிலைக் கோட்டைக் கடந்தன. இவை இரண்டு தொடர்பாகவும் சர்வதேச சட்டத்தில் எந்த நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.

சீனாவின் இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களில் ஒன்றான ஷான்டாங், தைவானின் கிழக்குப் பகுதியிலும், ஜப்பானின் தென்கோடி தீவுகளில் ஒன்றான மியாகோவின் தெற்கிலும் உள்ள சர்வதேச கடல் பகுதியிலும் பயிற்சிகளை மேற்கொண்டது. சீனாவின் கிழக்கு அரங்க கட்டளை மையம், உள்நாட்டில் கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்படும் வீடியோவை வெளியிட்டது. ஜப்பானிய இராணுவம் அதன் சொந்த போர் விமானத்தை துரத்துவதன் மூலம் இதற்கு பதிலடி கொடுத்தது.

சீனாவின் பதில் ஒப்பீட்டளவில் மெளனமாக இருந்தாலும், அமெரிக்கா இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியாக அதன் ஆத்திரமூட்டல்களைத் தொடர்ந்தது. திங்களன்று, தேடித்தாக்கும்-ஏவுகணை நாசகாரி கப்பலான மிலியஸ் தென் சீனக் கடலில் உள்ள ஸ்ப்ராட்லி தீவுகளில் உள்ள சீனக் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளுக்கு அருகே 'சுதந்திர கடல் போக்குவரத்து' என்ற போர்வையில் பயணித்ததாக, அமெரிக்காவினுடைய ஏழாவது கடற்படை அறிவித்தது.

பல தசாப்தங்களாக, தென்சீனக் கடலில் சீனாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அண்டை நாடுகளுக்கும் இடையிலான பிராந்தியப் போட்டிகளை அமெரிக்கா கிட்டத்தட்ட புறக்கணித்து வந்தது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ஒபாமா, பின்னர் டிரம்ப் மற்றும் பைடன் தொடங்கி, அமெரிக்க இராணுவம் பெய்ஜிங்குடனான அதன் ஆக்கிரோஷ மோதலின் ஒரு பகுதியாக, இந்த போட்டியிடும் கடல்பகுதியில் சீனாவிற்கு எதிரான அதன் 'கடல் போக்குவரத்து சுதந்திரம்' என்பதின் கீழ், ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

சீன மக்கள் இராணுவத்தின் தெற்கு அரங்க கட்டளை மையம், இந்த நடவடிக்கையை 'சட்டவிரோதமானது' என்று கண்டனம் செய்ததோடு, அதன் கடற்படை கப்பல்கள் 'அமெரிக்க கப்பலை கண்காணிக்க, கடற்படை மற்றும் விமானப்படைகளுடன் எல்லா வழிகளிலும் விழிப்புடன் இருந்தன' என்று கூறியது.

அதே நேரத்தில், மற்றொரு அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினர், அதிபர் சாய் மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடலுக்காக தைபே வந்தடைந்தனர். கடந்த சனிக்கிழமை தைவான் ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாஷிங்டனின் ஒரே சீனா கொள்கையின் கீழ், பொதுவாக குறைந்த மட்டத்தில் இருக்கும் தைவானுடனான எந்த தொடர்பையும் அமெரிக்கா வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டது. ட்ரம்ப் மற்றும் இப்போது பைடனின் கீழ், இராணுவ அதிகாரிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும், தைவானுக்கு கட்டுப்பாடற்ற வருகைகளை அனுமதிக்க, அதன் இராஜதந்திர விதி புத்தகம் கிழிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆத்திரமூட்டும் ஒரு அறிக்கையில், இக் குழுவின் தலைவர் மைக்கேல் மெக்கூல் (Michael McCaul), தைவான் இராணுவத்திற்கு அமெரிக்காவின் பயிற்சியை ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். 1979 இல், தைவானுடனான இராஜதந்திர உறவுகளை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்ததால், அத் தீவுடனான அதன் இராணுவக் கூட்டணியை ரத்து செய்து அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற்றது. தற்போது தைவானில் அமெரிக்க பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

“உங்கள் தேசத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு” சீனாவை கண்டனம் செய்த மெக்கால், “நமது இரு நாடுகளின், அமைதி மற்றும் செழுமை கொண்ட ஒரு சிறந்த எதிர்காலத்தை நான் எதிர்நோக்குகிறேன். நாங்கள் தைவானுடன் நிற்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்கள் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துகின்றன. அதன் உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, வட ஆபிரிக்கா மற்றும் பால்கன் நாடுகளில் கடந்த மூன்று தசாப்தங்களாக தொடர்ந்து ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி வருகிறது. இப்போது அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் அணு ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுடன் ஈவிரக்கமற்ற முறையில் ஒரு பினாமிப் போரில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போரை சீனாவுடனான போருக்கு ஒரு முன்னோடியாக கருதுகின்ற வாஷிங்டனே, பூகோள நிலைப்பாட்டிற்கு முக்கிய அச்சுறுத்தலாகும்.

சீனாவிற்கு எதிரான பைடென் நிர்வாகத்தின் செயல்பாடு, ரஷ்யாவிற்கு எதிரானதைப் போன்றுள்ளது: அது, தைவானைத் தாக்க பெய்ஜிங்கைத் தூண்டிவிட்டு, சீனாவை பலவீனப்படுத்தி, துண்டு துண்டாக சிதைக்கும் போருக்கு இழுக்கிறது. தைவானை பாதுகாப்பதாக வாஷிங்டனின் கூற்றுக்கள் உக்ரேனுக்கான அதன் ஆதரவு அறிவிப்புகளைப் போலவே போலித்தனமானவை. யூரேசிய நிலப்பரப்பு மற்றும் அதன் அபரிதமான இயற்கை மற்றும் மனித வளங்களின் மேலாதிக்கம் என்பன அதன் முக்கிய மூலோபாய நோக்கமாக இருக்கிறது.

காலாவதியான, போட்டி தேசிய-அரசுகளாக பிளவுண்டள்ள உலக முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமானது. இதுவே, அணு ஆயுத சக்திகளுக்கு இடையிலான உலகப் போரை நோக்கிய அழிவை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.

Loading