இலங்கை தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணாலம்.

மார்ச் 24 அன்று, வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுவர்கள் மற்றும் அதன் கொழும்பு நடவடிக்கைக்கான அலுவலர்களும், இலங்கையில் உள்ள தொழிலறிஞர்களின் தொழிற்சங்கக் கூட்டணியுடன் (PTUA) இணைந்த பல தொழிற்சங்கங்களுடன் இணையவழி 'வட்டமேசை' கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம், மத்திய வங்கியின் நிறைவேற்று அதிகாரிகள் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், நீர் வழங்கல் தொழிலறிஞர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இவற்றில் அடங்கும்.

இந்த தொழிற்சங்கங்கள் மிகவும் பழமைவாத தொழில்சார் சங்கங்களாக இருக்கும் அதேவேளை, அவற்றின் உறுப்பினர்களிடையே அதிகரித்து வரும் கோபத்தின் காரணமாக, அவை சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வேலைநிறுத்தங்களிலும் பங்கேற்கின்றன. 

1 செப்டம்பர் 2022, வியாழன், இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டின் போது உலக வங்கியின் சிரேஷ்ட நடவடிக்கைத் தலைவர் பீட்டர் ப்ரூயர், (வலது) மற்றும் இலங்கைக்கான நடவடிக்கைத் தலைவர் மசாஹிரோ நோசாகி. [AP Photo/Eranga Jayawardena]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படும் கொடூரமான சிக்கன திட்டத்திற்கு எதிரான தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் எழுச்சி அலையின் மத்தியில் சர்வதேச நாணய நிதியம் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை, சர்வதேச நாணய நிதியத்தின் சமூகத் தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதில் தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டது என்பதில் சந்தேகமில்லை. இலங்கை தொழிற்சங்க அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது ஆதரவை முன்னர் இருந்தே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அதே வேளை, தமது உறுப்பினர்களை ஏமாற்றுவதற்காக பாசாங்கு விமர்சனங்களையும் செய்கின்றன.

மார்ச் 26 அன்று, சண்டே டைம்ஸ் பத்திரிகை, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இலங்கைக்கான அதன் முகவரமைப்பின் பொருளாதார வேலைத்திட்டம் குறித்து தொழிற்சங்கங்களுக்கு 'விளக்கம்' அளித்திருப்பதாக தெரிவித்திருந்தது. தொழிற்சங்கங்கள் வரிச் சீர்திருத்தங்களை, குறிப்பாக மாதத்திற்கு 100,000 ரூபாய் ($US308) அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள, ஊதியத்தை ஒத்த வரி (PAYE) முறைமையைத் திருத்துமாறு மட்டுமே கேட்டுக் கொண்டதாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய தூதர்கள், திட்டத்தின் ஆறு மாத 'மதிப்பாய்வுக்குப்” பிறகு, சில வரிகளை மறுபரிசீலனை செய்வதற்கான 'சாத்தியம்' இருப்பதாக பரிந்துரைத்தனர். தொழிலறிஞர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த சங்கங்களுடனான முந்தைய சந்திப்பிலும், ஜனாதிபதி விக்கிரமசிங்க இதே பதிலை அளித்தார். இலங்கை தொழிற்சங்கங்களுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மார்ச் 20 அன்று, சர்வதேச நாணய நிதியம் கொழும்புக்கான 3 பில்லியன் டொலர் பிணை எடுப்பு கடனுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், விக்கிரமசிங்க ஆட்சியானது தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகள் மீது பரந்த அளவிலான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட வேண்டும். அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார்மயமாக்குதல், இலட்சக் கணக்கான அரச வேலைகளை அழித்தல் மற்றும் ஊதியங்கள் மற்றும் சமூக மானியங்களில் ஆழமான வெட்டுக்களை முன்னெடுப்பதும் இவற்றில் அடங்கும். அதிக வருமான மற்றும் பெறுமதி சேர் வரிகள், ரூபாயின் மதிப்புக் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்கள் உட்பட இறக்குமதியில் வெட்டுக்கள் மற்றும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் பெரும் உயர்வு உட்பட சமீபத்திய மாதங்களில் செயல்படுத்தப்பட்ட ஏனைய நடவடிக்கைகளுக்கும் மேலாக இந்த தாக்குதல்கள் வருகின்றன.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைக்கான தலைவர் பீட்டர் ப்ரூயர் இது இலங்கைக்கு 'ஒரு கொடூரமான பரிசோதனை', இது 'சர்வதேச நாணய நிதியத்தால் ஆளுகையை அவதானிக்கும் பயிற்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும்' என்று அப்பட்டமாக விவரித்தார்

இது, ஏற்கனவே தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் பட்டினியாலும் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிராக இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடுவதை அர்த்தப்படுத்துகிறது.

இந்த சமூக எதிர்ப்புரட்சிக்கு தொழிற்சங்கங்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான அவற்றின் சந்திப்பு, அவர்கள் விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினது மட்டுமன்றி, சர்வதேச நிதி மூலதனத்தினதும் வெளிப்படையான முகவர்களாக மாறியிருப்பதை மேலும் அம்பலப்படுத்துகிறது.

அரசாங்க மருத்துவ அதிகாரகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, டைம்ஸ் பத்திரிகையிடம் பேசும் போது, 'நாங்கள் வரி செலுத்தத் தயாராக இருக்கிறோம், ஆனால் இந்த வரி முறை மிகவும் நியாயமற்றது என்பதை [சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கு] தொழிற்சங்கங்கள் தெளிவுபடுத்தியுள்ளன” என்றார். தொழிலறிஞர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சமர்ப்பித்த வரி திட்டங்களை ஆய்வு செய்வதாக சரவதேச நாணய நிதிய தூதர்கள் தொழிற்சங்க அதிகாரிகளுக்கு 'உறுதி' அளித்ததாக அவர் செய்தித்தாளிடம் கூறினார்.

மார்ச் 23 அன்று, ஜனாதிபதி விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதிய தலைவர்களுக்கு, தனது அரசாங்கம் அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை காப்புறுதி கட்டுத்தாபனம், கிராண்ட் ஹயாட் மற்றும் ஹில்டன் ஹோட்டல்கள், லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லங்கா ஹொஸ்பிடல் கோர்ப்பரேஷன் ஆகியவற்றை விரைவில் விற்கும் என்று உறுதியளித்தார். அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம் பார்க்ஸ், ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் சில்லறை எண்ணெய் சந்தையில் நுழைய முடியும் என கடந்த வாரம் அமைச்சரவை அமைச்சர்கள் அறிவித்தனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்குவது தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் கோபத்தின் மத்தியில், அத்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டன. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, உடனடியாக 20 தொழிற்சங்க தலைவர்களை கட்டாய விடுமுறையில் வைக்க உத்தரவிட்டார். போராட்டத்தை கலைக்கவும், வேலைநிறுத்தம் செய்பவர்களை மீண்டும் வேலையைத் தொடர அச்சுறுத்தவும் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்குள் அனுப்பப்பட்டனர்.

பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கொழும்பு கோட்டையில் 8 பெப்ரவரி 2023 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத் தலைவர்கள் உடனடியாக செய்தியாளர் மாநாடுகளை நடத்தி, வேலைநிறுத்தத்தை தடுத்தமை தொடர்பாக பாரிய கூட்டு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்தல்களை விடுத்தனர். சுகாதார தொழிலறிஞர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் ரவி குமுதேஷ், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை 'மக்களை படுகுழியில் இருந்து காப்பாற்றுவதற்காக அன்றி, மாறாக தொண்டையை நெரிப்பதற்காக' பயன்படுத்துகிறது என்று வாய்ச்சவடாலாக குற்றம் சாட்டினார்.

இதே தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், ஆளும் வர்க்கத்திற்கு எல்லா உதவிகளையும் வழங்குவதற்கு சூழ்ச்சி செய்யும் அதே வேளையில், இப்போது காது கேளாத மௌனத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதிய தூதர்கள், இலங்கை ஆசிரியர் சங்க அதிகாரத்துவத்தை அதன் இணையவழி கூட்டத்திற்கு அழைத்தனர், ஆனால் அவர்கள் பங்கேற்க வேண்டியதில்லை என்று முடிவு செய்தனர்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேரடியாக பேச முடியாத தயக்கத்துடன் எழுதிய கடிதத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்கு 'மக்கள் ஆணை' இல்லாததால் தனது தொழிற்சங்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்காது என்றும் இலங்கை பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பிரச்சினைகள் அரசாங்கத்துடன் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சர்வதேச நாணய நிதிய கூட்டம் பற்றிய அதன் மார்ச் 25 கட்டுரையில், ஸ்டாலினின் கடிதத்தை பற்றி தி மார்னிங் ஊடகம் குறிப்பிட்டது. இந்த கடிதத்தில், இணையவழி கூட்டத்தில் 'பரந்த தொழிற்சங்க பிரதிநிதித்துவத்தை' விரும்புவதாக அது தெரிவித்திருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கை ஆசிரியர் சங்கமானது அரசாங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் பரந்த கூட்டணியை கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்பதாகும்.

அரசாங்கத்தின் அதிகரித்து வரும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்கள் முன்வருகையில், அவர்கள் தேவையான சில அரசியல் படிப்பினைகளைப் பெற வேண்டும்.

தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஒரு பாரிய ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க இயக்கத்தை எதிர்ப்பதோடு அதையிட்டு அச்சத்தில் வாழ்வதுடன், ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தங்கள் மற்றும் வீண் எதிர்ப்புகள் மூலம் தொழிலாளர்களின் கோபத்தைக் கலைத்து அவர்களை மனச்சோர்வடையச் செய்ய முயற்சிக்கின்றன. தொழிற்சங்கங்கள், இப்போது சர்வதேச மூலதனத்தின் வெளிப்படையான மற்றும் செயலூக்கமான முகவர்களாக இருக்குமளவுக்கு மாற்றமடைந்தும் சீரழிந்தும் போயுள்ளன. 

அதனால்தான் தொழிலாள வர்க்கம் ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், பெருந்தோட்டங்களிலும், நகர்ப்புறங்களிலும் மற்றும் கிராமப்புற சமூகங்களிலும், உண்மையான போராட்ட அமைப்புகளாக நடவடிக்கை குழுக்களை அவசரமாக உருவாக்க வேண்டும். இவை தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக அமைக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், இந்தக் குழுக்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைந்து, அவர்களின் உரிமைகளுக்காக எவ்வாறு போராடுவது என்பதை ஜனநாயக ரீதியாக கலந்துரையாடப்படும்.

இந்த பணிக்கு இணங்க, சோசலிச சமத்துவக் கட்சி, சோசலிச கொள்கைகளுக்காக அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர்-விவசாயிகளின் அரசாங்கத்துக்கான அடித்தளமாக இந்த நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கின்றது.

மேலும் வாசிக்க

வேலைநிறுத்தம் செய்யும் இலங்கை ஆசிரியர்களின் உரிமையைப் பாதுகாத்திடு!

இலங்கை அரசாங்கம் பெட்ரோலிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக இராணுவத்தையும் பொலிஸாரையும் நிலைநிறுத்தியுள்ளது

இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு மசோதா: ஜனநாயக உரிமைகளை துடைத்துக் கட்டும் தாக்குதல்

Loading